Search This Blog

25.8.14

இதுதான் வால்மீகி இராமாயணம் - 22



இதுதான் வால்மீகி இராமாயணம்

(இதிகாசங்கள் என்றும் புராணங்கள் என்றும்  மக்களிடையே உலவ விடுகிறார்கள். இவற்றிற்குத் தெய்வீக முத்திரைகள் குத்துகின்றனர் இவற்றைப் படித்தால், இவற்றின்படி ஒழுகினால் நல்லது நடக்கும் - நற்கதி கிடைக்கும் என்றெல்லாம் இன்றுவரை கூடப் பிரச்சாரம் செய்கிறார்கள். உண்மையில் அவை என்ன? இவற்றின் தன்மை என்ன? ஒழுக்கத்திற்கு இடம் இருக்கிறதா? பகுத்தறிவுக்கு வழி இருக்கிறது? ஒன்றும் இல்லை. வால்மீகி இராமாயணம் பற்றி சைவப் பெரும் புலவரான பண்டித இ.மு.சுப்பிரமணிய பிள்ளை  (சந்திரகேகரப் பாவலர்) குடிஅரசில் எழுதிய பகுதிகள் (நூலாகவும் வெளிவந்துள்ளன). இங்கே வாரம் இருமுறை வெளியிடப்படுகிறது. படியுங்கள் - பகுத்தறிந்து பாருங்கள் - தெளிவு பிறக்கும்.)



அயோத்தியா காண்டம்

ஆறாம் அத்தியாயம் தொடர்ச்சி
-என்று பிதற்றிக் காலை நீட்டிக்கொண்டு உட்கார்ந்தி ருக்கும் கைகேயியின் பாதங்களைப் பிடிக்கக் கீழே குனிந்து வேரற்ற மரம்போல் அவளைத் தொட முடியாமல் கீழே விழுந்தான்.

கைகேயி திரும்பவும் அவனைப்பார்த்து, நீ மிகவும் யோக்கியனைப் போலப் பேசிக்கொள்கிறாய். எனக்குக் கொடுத்திருக்கிற இரண்டு வரங்களுக்கு என்னிடத்தில் ஏன்கடன்பட விரும்புகிறாய் என்றாள். அதைக் கேட்ட தசரதன் மூர்ச்சையடைந்தான்.

பின் அவன் தெளிந்து கடுங்கோபத்தோடு, கொடி யவளே! விண்ணுலகத்தில் தேவர்கள் என்னைப்பார்த்து பெண்ணுக்காக மகனை எப்படிக் காட்டுக்கனுப்பினீ ரென்று கேட்டால்,
நான் எப்படி உயிரை வைத்துக் கொள்வேன்? இராமனுக்கு முடி சூட்டுகிறேனென்று கூறிய வாக்குப்பொய்யாகுமே. அறுபதினாயிரம் ஆண்டுகளுக்கப்பால் பெற்ற பிள்ளையாயிற்றே. இப்பிடிவாதத்தை விட்டுவிடு என்று புலம்பினான்.

சூரியன் மறைந்தான், இரவு ஆரம்பித்தது. மூன்று யாம நிலவுள்ள அவ்விரவு அவனுக்கு ஒரு யுகம்போலிருந்தது - இரவே விரைவில் மடிய மாட்டாயா என்று அவன் ஏங்கினான்; பிறகு வேறு கதியில்லையென்று கண்டு கைகுவித்து வணங்கி, அவளைச் சமாதானஞ்செய்ய முயன்றான். அவன், பெண்ணே! நீ நல்லவளாயிற்றே, தயவுசெய்; நான் உனக்குச் செய்த வாக்குறுதியோ ஒருவருக்கும் தெரியாது; இராமனுக்கே பலரறியச் செய்தது. நாளை முடிசூட்டு என்று பலரறியச் சொல்லிவிட்டேன். அது நடைபெறவிலைலையென்றால், என்னை எல்லோரும் இகழ்வார்கள். ஆகையால், நீ விட்டுக்கொடுக்க வேண்டும். நான் உணக்குச் சொன்னபடி இந்த நாடு உன்னதே. நீ இந்த நாட்டை அவனுக்குத் தானங்கொடு; அதனால் உனக்கு மிகவும் புகழுண்டாகும். பருத்த தொடைகளை உடையவளே! பரதனும் மகிழ்ச்சியடைவான். அவன் மிகவும் நல்லவனா யிற்றே என்று வேண்டினான். இவ்வேண்டுதலாலும் கைகேயி மனம் இளகவில்லை. உடனே அவன் மூர்ச்சித் தான். இவ்வாறு அவன் துக்கத்தோடு அன்றிரவைக் கழித்தான். பொழுதும் விடிந்தது, எழுப்ப வந்தவர்களை வேண்டா மென்று தடுத்துவிட்டான்.

கைகேயி அவனைப் பார்த்து, சொன்ன வார்த்தை தாண்டாதேயும். ஏன் தரையிற்கிடந்து புரளுகிறீர். சத்தியமே சிறந்தது;  இராமனைக் காட்டிற்கனுப்பும்; உம்மை மும்முறை எச்சரிக்கிறேன். இல்லையானால் என் உயிரை விடுகிறேன் என்றாள். அதைக்கேட்ட தசரதன், பாவி; இந்த முடிசூட்டு விழாவைத் தடுத்தால், நீயும் உன் மகனும் எனக்கு உத்திரகிரியைகளைச் செய்ய வேண்டாம் என்றான். கைகேயி திரும்பவும் உமது வார்த்தைகள் என் மனத்தை வருத்துகின்றன. இராமனை இப்போதே வரவழைத்துக் காட்டுக்கனுப்பிப் பரதனை அரசனாக்கி உமது வாக்கை நிறைவேற்றும் என்று கூறினான். தசரதன், தர்ம பாசத்தால் நான் கட்டுப்பட்டி ருக்கிறேன், ஆனாலும் என் மகனை இன்னுமொரு முறை பார்க்க விரும்புகிறேன் என்று கதறினான்.
பொழுது விடிந்தது. வசிட்டமுனி முடிசூட்டுக்குத் தயாராக வந்தவன், அந்தப்புரத்தருகே சுமந்திரனைக் கண்டான். உடனே வசிட்டன் தான் வந்திருப்பதையும், முகூர்த்தம் நெருங்குவதையும் தசரதனிடம் போய்க் கூற அவனை அனுப்பினான்.

சுமந்திரன் உள்ளேபோய்த் தசரதனிருக்குமிடத்தை அடைந்து அவனருகே சென்று அவனிலையை அறியாமல் பலவிதமாகப் புகழத்தொடங்கினான். தசரதன் அச்சொற்களால் இன்னும் மனம் நொந்து, சுமந்திரரே! சொல்லமுடியாத துக்கத்தை அடைந்து கொண்டிருக்கும் என் மனத்தை உம் சொற்கள் இன்னும் அதிகமாகப் புண்படுத்துகின்றன என்று பரிதாபகரமான குரலுடன் சொன்னான். அதைக்கேட்டுச் சுமந்திரன் திடுக்கிட்டுத் துக்கத்தால் சோர்ந்திருக்கும் மன்னனை உற்றுப்பார்த்து, ஒன்றும் பேசாமல் கை கூப்பிக் கொண்டு அங்கிருந்து போகப் புறப்பட்டான். அரசன் துக்கமேலீட்டால் ஒன்றும் கூறமுடியாது தவித்ததைக் கண்ட கைகேயி, அரச நீதியை அனுசரித்து இராமனுக்கு முடிசூட்டும் பேச்சைப்பேசி இரவு முழுவதும் மகிழ்ச்சியால் தூக்கமில்லாமல் சோர்ந்திருக்கிறார் மன்னர். இராமனை இப்பொழுதே போய் அழைத்து வாரும், சீக்கிரம் என்று கட்டளையிட்டாள். சுமந்திரனும் இராமனுக்கு நன்மை வருமென மகிழ்ந்து அழைத்து வரச்சென்றான்.
வாசலில் மன்னர் பலர் கூடியிருந்தனர். அவர்களைக் கண்ட சுமந்திரன் நீங்கள் காத்திருப்பதை அரசனிடம் தெரிவிக்கிறேன், என்று கூறி, மறுபடியும் தசரதனி ருக்குமிடம் சென்றான். மன்னனிருந்த இடத்தினருகே சென்று, அங்கே போடப்பட்டிருந்த திரைக்கு எதிரே நின்று கொண்டு, அவன் விடிந்து நெடுநேரமாயிற்று, உத்தரவுப்படி எல்லாம் தயாராயிருக்கிறது, தயவு செய்து மேலே நடக்க வேண்டியதைக் கட்டளையிட வேண்டும். எல்லோரும் காத்திருக்கிறார்கள் என்று கூறினான். இச்சொற்கள் தசரதனுடைய காதில் விழ அவன் விழித்துக்கொண்டு, சுமந்திரரே! உம்மிடம் இராமனை அழைத்துவரும்படி கைகேயி சொன்னாளல்லவா? இன்னும் ஏன் என் கட்டளைப்படி அழைத்து வரவில்லை. தூங்குகிறேனென்று நினைக்க வேண்டாம், சீக்கிரமாய்ப் போய் இராமனை அழைத்து வாரும் என்று மறுபடியும் உத்தரவு செய்தான். சுமந்திரன் தலைவணங்கி இராமனுக்கு ஏதோ நன்மை உண்டாகப் போகிறதென்று மகிழ்ந்து இராமனை அழைத்துவரப் புறப்பட்டான். இவ்வரலாற்றை ஆய்வோம்.

மேற்கண்ட வரலாற்றிலே தசரதன் மிகவும் அற்ப அறிவும், அற்பக்குணமுமுள்ளவன் என்பது தெரிய வருகிறது. அவன் கைகேயியை மணஞ்செய்யும்பேது, அவள் வயிற்றிற் பிறக்கும் பிள்ளைக்கே அரசைத் தருவதாக வாக்குறுதி செய்தான். பின் அவ்வாக்குறுதிக்கு மாறாக இராமனுக்கு முடிசூட்ட நினைத்துப் பலவாறு முயல்கிறான். அதனால் பரதனை வஞ்சித்து, அவன் பாட்டனுடைய ஊருக்குத் தந்திரமாக அனுப்பி விடுகிறான். எல்லோருக்கும் நல்லவனாக நடந்து எல்லோருடைய அன்பையும் பெறவேண்டும்; அப்படியானாலே அரசைப் பெறலாம் என இராமனிடம் கூறி எல்லோரிடமும், முக்கியமாகக் கைகேயியிடத்தில் மிகவும் நல்லவனாக நடந்து கொள்ளுமாறு தூண்டு கிறான். கிரமமாக அரசாட்சி பரதனுக்கே உரியதாகும். அதனால் அதைப்பெறுவதற்குத் தன் தந்தையினுடைய சூழ்ச்சிகளின்படி தான் நடந்து கொண்டாலே நினைத்தது கைகூடுமெனத் துணிந்து இராமன் அவ்வாறே நடக்கிறான். தசரதன், வசிட்டன், சுமந்திரன் முதலிய அமைச்சரையும் தன் வசப்படுத்திக் குடிகளையும், குறுநில மன்னரையும் அழைத்துப் பாசாங்கு பண்ணி உண்மையறியாத அவர்களையும் இராமனுக்கு முடி சூட்டச் சம்மதிக்கச் செய்து, அம்முடிசூட்டும் மறுநாளே நடைபெற வேண்டுமெனவும் முடிவு செய்கிறான். யாவரும் இசைகின்றனர். அரசனுடைய வஞ்சனையை வசிட்டனும் சுமந்திரனும் உணர்த்தும் அவனுக்கு உடந்தையாயிருக்கின்றனர். இராமனை வரவழைத்து அரசனிடம் உண்மை தெரிந்து, பரதனுக்கு வேண்டியவர் களாக யாராவது இருந்தால், அவர்கள் அவனுக்குக் கேடு சூழக்கூடும். ஆகையால் மிகவும் வேண்டிய நண்பர்களின் பாதுகாவலிலிருக்க வேண்டுமென்று சொல்லுகிறான். பரதனுக்குத் தெரிவதன் முன்னரே முடிசூட்டல் நடைபெற வேண்டுமெனவும் தசரதன் விரைகிறான். இராமனும் அரசாட்சிப் பேராசையால் இவ்வளவு வஞ்சனைகளுக்கும் இசைந்திருக்கிறான். அரசன் திரும்பவும் கூப்பிடுகிறானெனச் சுமந்திரன் கூறியபோது, முடிசூட்டுக்கு இடையூறோ என நடுங் கினான்.

இவ்விவரங்களெல்லாம் நாம் முன் கட்டுரை களில் விவரமாக ஆராய்ந்தவை.
ஒன்றை நினைக்கின் அது ஒழிந்திட்டொன்றாகு மல்லவா! தற்செயலாக இராமனுடைய முடிசூட்டை அறிந்த கூனி கைகேயிக்கு வரும் ஆபத்துகளை எடுத்துக்கூறி வசப்படுத்தித் தசரதனிடம் இரண்டு வரங்களையும் கேட்கத் தூண்டுகிறாள். தசரதன் கைகேயிக்கு இவ்விவரம் தெரியாதென முற்றும் நம்பி, இதை எதிர்பார்க்காமலும் காமவசப்பட்டும் முன்னைய வரங்களைக் கொடுக்க இசைந்து விட்டான்.

மேற்கண்ட வரலாற்றில் தசரதன் தன்னை மிகவும் வயதானவனென்றும், சாவை எதிர்பார்த்துக் கொண்டி ருக்கிறதாகவும் கூறுவதைக் காணலாம். இவ்வளவு தாழ்ந்த நிலையிலிருப்பவன் விடியத் தன் மகனுக்கு முடிசூட்டை வைத்துவிட்டு அந்த அவசரத்திலும் காமப்பித்தேறி கைகேயியைத் தேடி வருகிறான். இவ்வரலாற்றில் அவன் இராமனை மிகவும் அழகுள்ள வனாகப் புகழ்கிறான. அவனுடைய அழகை விவரிக் கிறான்! அவனைப் பிரிய முடியாமல் வருந்துகிறான். கடைசிவரை அவனுக்கு எப்படியாவது முடிசூட்ட வேண்டுமென்று முயல்கிறான். மத்தியில் அரசைப் பரதனுக்குக் கொடுப்பதாகவும் ஆனால் இராமனைக் காட்டுக்கனுப்பாமல் கிழவனாகிய தன் பக்கத்திலே வைத்துப் பார்க்க அனுமதி கொடுக்கவேண்டுமென்றும் மன்றாடுகிறான்; மற்றைய பிள்ளைகளைக் காட்டிலும் இராமனிடமே மிகவும், அளவிலடங்காத ஆசை தனக்கிருப்பதாகக் கூறுகிறான்; அதனால், தன் ஆசைக் கிருப்பிட மானவளாகிய கைகேயியின் மகனாகிய பரதனை வஞ்சிக்கப்பலவாறு முயல்கிறான். இவ்வாறு மற்றைய மக்களைக் காட்டிலும் இராமனிடம் அதிக ஆசைவைப்பதற்கும், அதற்காக ஒரு மகனைத் துணிந்து வஞ்சிப்பதற்கும், மகனாகிய பரதனை வேண்டுமென்று வேறு நாட்டுக்கு அனுப்பியவனே, மற்றொரு மகனாகிய இராமனைப் பிரியமாட்டாமல் தவிப்பதற்கும் தகுந்த காரணமிருத்தல் வேண்டும்.

ஒரு பெண்ணாகிய கைகேயியிடத்திலிருந்த ஆசை யைக் காட்டிலும் ஓர் ஆணாகிய இராமனிடத்தில் தசரதன் கொண்டிருந்த ஆசைக்கோர் அளவில்லை போலும். உலகத்துச் சிலரைப்போல இத்தசரதன் ஆண்பித்துக் கொண்டவன் போலும்! கிழவனாகிய இவன் தன்னருகிலேயே இராமனை வைத்துப் பார்க்க வேண்டுமென்று பித்து நிரம்பக் கொண்டு புலம்புகிறான். இப்பித்தே இராமனுக்கு உண்மையில் உரிமையில்லாத அரசாட்சியையும் கள்ளத்தனமாக வஞ்சித்து, அவனுக்குக் கொடுக்குமாறு தசரதனைத் தூண்டியது போலும்!

இவ்வளவு கேவலமான பித்தேறிய புத்தியுடைமை யாலேயே தசரதன் தனக்குக் கேடாதல்பற்றிக் கைகேயி யின் வேண்டுதலுக்கு ஒரு நாளும் இசையேனெனக் கூறுகிறான். தகாத காரியமாகிய அவள் காலைத்தொட்டு பணிந்து பலமுறை வேண்டுதலைச் செய்கிறான்; பலவாறு அவளை இகழ்கிறான்; பலவாறு அவளையும் பரதனையும் புகழ்கிறான்; காட்டுக்குப் போகமாட்டேனென்று சொல்லி இராமன் மறுத்துவிட மாட்டானா எனக்கூறுகிறான். கடைசியாகத் தன் ஆசைக்கிருப்பிடமான இராமன் தன்முன் அப்போது இல்லாமையாலும், தன் ஆசைக் கிருப்பிடமான கைகேயி தன் முன் இருந்தமையினாலும் கைகேயி புறமே சாய்கிறான்.

பலரறியக் கூறாத வாக்கானதால், அதனை வற்புறுத்தாமல் விட்டுவிடுமாறு தசரதன் கைகேயியை வேண்டுகிறான். அவள் எதற்கும் அசையவில்லை. புத்தி மயக்கத்தால் தசரதன் விண்ணுலகத்தில் தேவர்கள் பெண்ணுக்காக மகனைத் துரத்தலாமா என்று கேட்டால், எவ்வாறு உயிர் தரிப்பேனென்று புலம்புகிறான். விண்ணுலகம் போனபின் உயிர் இம்மண்ணுடலில் தரிப்பதெப்படி? இவ்வுயிர் போயன்றோ விண்ணுலக மடைதல் வேண்டும்?

                            -------------------------”விடுதலை” 22-8-2014


Read more: http://viduthalai.in/page1/86324.html#ixzz3BEEtmDCc

0 comments: