Search This Blog

27.8.14

ஈழத் தமிழர்கள் விரும்பும் அரசியல் தீர்வு தேவை!



டெசோ  சார்பில் நான்கு முக்கிய தீர்மானங்கள்:
அய்.நா. அமைத்த விசாரணைக் குழுவை இலங்கையில் அனுமதிக்காத ராஜபக்சேவையோ, பிரதிநிதிகளையோ அய்.நா.வில் பேச அனுமதிக்கக்கூடாது!
தீர்மானங்களை வலியுறுத்தி செப்.3 ஆம் தேதி
டெசோ சார்பில் பெருந்திரள் ஆர்ப்பாட்டம்! ஆர்ப்பாட்டம்!!
டெசோ கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்



சென்னை, ஆக.26- அய்.நா.வால் நியமிக்கப்பட்ட விசார ணைக் குழுவை இலங்கையில் அனுமதிக்காத ராஜபக்சே மற்றும் இலங்கை அரசின் பிரதிநிதிகளை அய்.நா. பேரவை யில் உரையாற்றிட அனுமதிக்கக்கூடாது என்ற தீர்மானம் உள்பட நான்கு தீர்மானங்களை வலியுறுத்தி டெசோ சார்பில் வரும் செப்டம்பர் 3 ஆம் தேதி பெருந்திரள் ஆர்ப்பாட்டம் சென்னையில் நடைபெறும் என்று இன்று (26.8.2014) சென்னை அண்ணா அறிவாலயத்தில் டெசோ தலைவர் கலைஞர் அவர்களின் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


தமிழ் ஈழம் ஆதரவாளர் அமைப்பின் (டெசோ) தலைவர், தி.மு. கழகத் தலைவர் கலைஞர் அவர்கள் தலைமையில், இன்று (26.8.2014,  செவ்வாய்க்கிழமை) காலை 10.30 மணியளவில் சென்னை அண்ணா அறிவாலயத்தில், தமிழ் ஈழம் ஆதரவாளர்கள் அமைப்பின் (டெசோ) அவசரக் கூட்டம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் டெசோ அமைப்பின் உறுப்பினர் களான தி.மு. கழகப் பொதுச்செயலாளர் பேராசிரியர் க.அன்பழகன், திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், பேராசிரியர் சுப.வீரபாண்டியன், திருமதி சுப்புலட்சுமி ஜெகதீசன் மற்றும் சிறப்பு அழைப் பாளர்களாக தி.மு. கழகப் பொருளாளர் தளபதி மு.க.ஸ்டா லின், தி.மு.கழகத் துணைப் பொதுச்செயலாளர் துரை முருகன், அமைப்புச் செயலாளர் டி.கே.எஸ்.இளங்கோவன், ரவிக்குமார், வழக்குரைஞர்கள் கே.எஸ்.ராதாகிருஷ்ணன், அசன் முகமது ஜின்னா, திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் ஆகியோர் கலந்துகொண்டனர்.


கூட்டத்தில் விரிவான விவாதத்திற்குப் பிறகு பின்வரும் தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.


தீர்மானம் 1:


ஈழத் தமிழர்கள் விரும்பும் அரசியல் தீர்வு தேவை!


இலங்கைத் தமிழர் பிரச்சினை குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்காக இலங்கை தமிழ்த் தேசிய கூட்டமைப்பைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு 23.8.2014 அன்று டில்லியில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களைச் சந்தித்து உரையாடியதன் தொடர்ச்சியாக, மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், பிரதமர் நரேந்திர மோடி யைச் சந்தித்துப் பேசிய தமிழ்த் தேசிய கூட்டமைப்பைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள், இலங்கையில் உள்ள நிலவரம் குறித்தும், அதிகாரப் பகிர்வு தொடர்பான தங் களுடைய எதிர்பார்ப்புகள் குறித்தும் விளக்கிக் கூறினார் கள். இலங்கையில் தமிழர்கள் சம உரிமை, நீதி, கவுரவம், சுயமரியாதையுடன் வாழ்வதை உறுதி செய்யவேண்டும் என்று இலங்கை அரசை பிரதமர் நரேந்திர மோடி வற்புறுத்தியுள்ளார். இலங்கை அரசு உள்ளிட்ட அங்குள்ள அனைத்துத் தரப்பினரும் ஒருங்கிணைந்து பரஸ்பர ஒத்துழைப்புடன் செயல்பட்டு, ஒன்றுபட்ட இலங்கை என்ற அடிப்படையில் தமிழர்கள் பிரச்சினைக்கு அரசியல் ரீதியில் ஆக்கபூர்வமான தீர்வு காணவேண்டும் என்றும் அவர் வற்புறுத்தியிருக்கிறார். இவையெல்லாம் இலங்கை அரசியல் சாசனத்தின் 13 ஆவது சட்டத் திருத்தத்தின்படி நடைபெறவேண்டும் என்றும், அவர் கேட்டுக்கொண்டுள் ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


ஈழத் தமிழர்கள் தாங்கள் விரும்பும் அரசியல் தீர்வை அவர்களே தேர்ந்தெடுத்துக் கொள்வதற்கு ஏதுவுக அவர்களிடையே பொது வாக்கெடுப்பு நடத்தி முடிவு செய்யப்படவேண்டுமென்று டெசோ ஏற்கெனவே பலமுறை தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பியிருக்கிறது.
பிரதமர், நரேந்திர மோடி அவர்களின் தலைமையிலான தற்போதைய மத்திய அரசு இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண முன்வந்திருப்பது ஆறுதல் அளிப்பதாக அமைந்திருக்கிறது. இதனைத் தொடர்ந்து முன்னெடுத்துச் சென்று ஈழத் தமிழர்கள் விரும்பும் அரசியல் தீர்வு கனியும் காலகட்டத்தை விரைவுபடுத்திடத் தேவையான நடவடிக்கைகளை மத்திய அரசு உடனடியாக மேற்கொள்ளவேண்டுமென்று டெசோ அமைப்பின் இந்த அவசரக் கூட்டம் வலியுறுத்துகிறது.


தீர்மானம் 2:


தமிழக மீனவர்களின் படகுகளை மீட்டுத் தருக!


இந்தியாவின் விடுதலை நாளை முன்னிட்டு, இலங்கையிலே சிறைப்பட்டிருந்த மீனவர்களை யெல்லாம் விடுவிக்க அதிபர் ராஜபக்சே உத்தரவு பிறப்பித்த போதிலும், இலங்கை கடற்தொழில் அமைச்சர், தமிழக மீனவர் படகுகளை விடுவிக்க முடியாது என்று அறிவித்தார். இலங்கை அரசு இப்படியெல்லாம் மாற்றி மாற்றிப் பேசி தமிழக மீனவர்கள் பிரச்சினையிலும், ஈழத் தமிழர்கள் பிரச்சினையிலும் தொடர்ந்து இந்திய அரசுக்கு விளையாட்டுக் காட்டிக் கொண்டிருக்கிறது. ஏதோ தமிழக மீனவர்கள்பால் அக்கறை உள்ளவரைப் போலவும் இந்திய சுதந்திரத்தின்மீது மிகுந்த மரியாதை கொண்டிருப்பவரைப் போலவும் காட்டிக் கொள்ள, இலங்கை அதிபர் மீனவர்களை விடுவிப்பதாக அறிவிக்கிறார். ஆனால், அந்நாட்டின் கடற்தொழில் அமைச்சர் திட்டவட்ட மாக தமிழக மீனவர்களின் படகுகளை விடுவிக்க முடியாது என்று அறிவிக்கிறார். இலங்கையிடம் இவ்வாறு தமிழக மீனவர்களின் 62 படகுகள் சிக்கியிருக்கின்றன. அந்தப் படகுகள் இல்லாமல் தமிழக மீனவர்கள் வாழ்வாதாரத்திற்கு அடிப்படையான தங்கள் தொழிலினை நடத்த முடியாது. செய்தியாளர்கள், இலங்கை அமைச்சரிடம் இந்திய மீனவர்களின் விசைப்படகுகள் விடுவிக்கப்படுமா என்று கேட்டதற்கு இந்திய மீனவர்களிடம் பறிமுதல் செய்யப்பட்ட 62 படகுகளை விடுவிக்கும் பேச்சுக்கே இடமில்லை என்று ஆணவத்தோடு தெரிவித்திருக்கிறார். அந்த விசைப் படகுகளை விடுவிக்கக் கோரி ராமேஸ்வரம் மீனவர்கள் 31 ஆவது நாளாக தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள். தமிழக மீனவர்களின் விசைப்படகுகளை விடுவிப்பதில் இலங்கை அமைச்சர் ஒருவர் இவ்வாறு திட்டவட்டமாக பதில் கூறியிருப்பது இந்திய அரசையே ஏமாற்றுகின்ற செயலாகத் தெரிகிறது. தமிழக மீனவர்கள் பிரச்சினையில் அவர்களுடைய விசைப் படகுகளை மீட்டுத் தருவதோடு, தமிழக மீனவர்கள் நெடுங்காலமாக சந்தித்துவரும் துயரங்களுக்கு முடிவு கட்டும் வகையில் அவர்களுக்கு நிரந்தரத் தீர்வு ஒன்றும் காணும் வகையில், மத்திய - மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளவேண்டு மென்று டெசோவின் இந்தக் கூட்டம் வலியுறுத்துகிறது.


தீர்மானம் 3:


அய்.நா.குழுவின் விசாரணையை இந்தியாவிலும் நடத்த அனுமதிக்கவேண்டும்!

இந்த ஆண்டு மார்ச் மாதம் ஜெனீவாவில் நடந்த அய்.நா. மனித உரிமை ஆணையத்தின் கூட்டத்தில் இலங்கையின் மனித உரிமை மீறல்கள் குறித்து அய்.நா. குழு விசாரணை நடத்துவதென்று தீர்மானம் நிறை வேற்றப்பட்டது. இந்தியா மற்றும் இதர நான்கு தெற்காசிய நாடுகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தன. குறிப்பாக இந்தியா, இலங்கைக்கு அய்.நா. விசாரணைக் குழுவை அனுப்புவதற்கு எதிராக வாக்க ளித்தது. அய்.நா. மனித உரிமைகள் ஆணையக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில், அய்.நா. மனித உரிமை ஆணையர் நவநீதம் பிள்ளை, கடந்த ஏழு ஆண்டுகளாக இலங்கையில் நடந்த மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரணை நடத்துவதற்காக, அய்.நா. விசாரணைக் குழுவை நியமித்தார். இந்த அய்.நா. விசாரணைக் குழு இந்தியாவுக்குள் வந்து விசாரணை நடத்த எதிர்ப்பு தெரிவித்து இந்திய அரசு அவர்களுக்கு விசா வழங்க மறுத்திருக்கிறது. இந்த விசாரணைக்கு இலங்கை ஒத்துழைக்க மறுத்ததால், இலங்கையின் நெருங்கிய நாடுகளிலே இருந்து விசாரணையைத் தொடங்க அய்.நா. குழு முடிவு செய்தது. அந்த அளவில் இந்தியா மிகவும் முக்கியமான நாடு. ஆனால், இந்தியா விசாரணைக் குழுவையே அனுமதிக்கவில்லை. இதனால், அய்.நா. விசாரணைக் குழு தெற்காசிய நாடுகளுக்கு வெளியிலே விசாரணையை நடத்த முடிவு செய்துள்ளது. இலங்கை மீதான மனித உரிமை மீறல்கள் குறித்த அய்.நா. குழுவின் விசாரணையை இந்தியாவில் நடத்துவதற்கும், அந்தக் குழுவிற்கு அதற்கான விசாவினை வழங்குவதற்கும் இந்திய அரசு முன்வரவேண்டுமென்று டெசோ அமைப்பின் இந்த அவசரக் கூட்டம் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.


தீர்மானம் 4:


செப்டம்பர் 3 ஆம் தேதி பெருந்திரள் ஆர்ப்பாட்டம்!

இலங்கையில் தமிழர்கள் மீது நடத்தப்பட்ட மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரணை செய்ய அய்.நா. மனித உரிமை ஆணையத்தால் அமைக்கப்பட்ட விசாரணைக் குழுவினரை, இலங்கைக்குள் அனுமதிக்க முடியாதென்று அறிவித்த இலங்கை அதிபர் ராஜபக்சேவை 25.9.2014 அன்று தொடங்கும் அய்.நா. பொது உறுப்பினர் கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது. அய்.நா.வின் மனித உரிமை ஆணையத்தால் அமைக்கப் பட்ட விசாரணைக் குழுவினரையே அனுமதிக்க மறுத்த ராஜபக்சேவையோ, அந்த நாட்டின் வேறு எந்தப் பிரதிநிதியையோ அய்.நா.வின் பொது உறுப்பினர் கூட்டத்தில் கலந்துகொள்ள அனுமதிக்கக் கூடாது என்று டெசோ அமைப்பின் இந்த அவசரக் கூட்டம் அய்.நா.வை கேட்டுக்கொள்கிறது.

இந்த நான்கு தீர்மானங்களையும் வலியுறுத்தும் வகையில், செப்டம்பர் 3 ஆம் தேதி காலையில் சென்னையில் டெசோ அமைப்பின் சார்பில் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் ஒன்றினை நடத்துவதென்று இந்தக் கூட்டம் தீர்மானிக்கிறது.

                     -----------------------"விடுதலை” 26-08-2014

0 comments: