
பெரியாரின் பகுத்தறிவுச் சிந்தனைகள்
1. சுதந்திர மனிதன் என்பதன் பொருள்
மற்றவர்கள் தன்னைப்பற்றி என்ன சொல்கிறார்கள் என்பதை லட்சியம் செய்யாமல் தனக்குச் சரி என்று பட்டதைத் தன் இச்சைப்படி நடப்பவர் என்பதாகும்.
2. தலைவன் என்பதன் பொருள்
தன்னிச்சைப்படி மக்களை நடத்துகின்றவன்! மக்கள் இச்சைக்காக மாறாதவன் என்பதாகும்.
3. சமுதாய இழிவை நீக்கும் தகுதியுடையவன் என்பதன் பொருள்
எதிர்ப்பைச் சமாளிக்கும் சக்தியுடையவன் என்பதாகும்.
4. சரியான மனிதன் என்பதன் பொருள்
எதிர்ப்புக்காகத் தனது போக்கை மாற்றிக்கொள்ளாதவன் என்பதாகும்.
5. சரியான சீர்திருத்தக்காரன் என்பதன் பொருள்
பொதுமக்களின் வெறுப்பை அதிகமாகக் கொண்டவன் என்பதாகும்.
6. புரட்சிக்காரன் என்பதன் பொருள்
அத்துறையில் பொதுமக்களின் எதிர்ப்பை அதிகமாகக் கொண்டவன் என்பதாகும்.
7. பிடிவாதக்காரன்
தன் முயற்சிக்கு தன்னையே பொறுப்புக்காரனாக்கிக் கொண்டு வேறு யாரையும்பற்றி லட்சியம் செய்யாதவன் என்பதாகும்.
8. லட்சியத்தில் பூர்ண நம்பிக்கையும் உறுதியுமுள்ளவன் என்பதன் பொருள்
லட்சியம், உறுதிக்கு ஆகத் தன்னை ஒப்படைத்துவிட்டவன் என்பதாகும்.
9. உண்மைப் பொதுநலத் தொண்டு என்பதன் பொருள்
மக்களுக்கு இருக்கும் கஷ்டங்களையும், குறைகளையும் காரியங்களில் ஈடுபட்டு இருப்பது என்பதாகும்.
10. உல்லாசப் பொதுநலத் தொண்டு என்பதன் பொருள்
சங்கீதம், நடனம், சிற்பம், இலக்கியம், நாடகம், சினிமா, பாட்டுக்குப் பண்பொருத்தல், சாகித்தியத்திற்குச் சங்கதி பொருத்தல் முதலாகிய வயிறு நிறைந்த பெருந்திண்டி அஜீரணக்காரர்களின் வேலை என்பதாகும்.
11. குறிப்பிடத் தகுந்த மனிதன் என்பதன் பொருள்
மற்றவர்கள் யாரும் செய்யாததை - செய்ய நினைக்காததைச் செய்கிறவன் என்பதாகும்.
12. பெரிய மனிதன் என்பதன் பொருள்
மற்றவர்களால் செய்ய முடியாததை மற்றவர்களால் செய்யப் பயப்படுவதைச் செய்கிறவன் என்பதாகும்.
----------- தந்தைபெரியார் - "விடுதலை" 3-1-1950
0 comments:
Post a Comment