Search This Blog

7.7.08

"விபீஷணப் பரம்பரை"

விபீஷணர்கள் சாகவில்லை

அண்ணன் இராவணனைக் காட்டிக் கொடுத்து ஆழ்வார்பட்டம் பெற்ற விபீஷணர்கள் இன்னும் உயிரோடு இருந்துகொண்டுதான் இருக்கிறார்கள் - அதுவும் அந்த இலங்கைத் தீவிலேயே!
விடுதலைப்புலிகள் அமைப்பில் இருந்த கருணா என்ற விநாயகமூர்த்தி போலிச் சான்றுகளுடன் இலண்டன் நகரில் கைது செய்யப்பட்டார் (2.11.2007).

விசாரணையில் இலங்கை அரசாங்கமே அப்படி ஒரு செய்கையில் ஈடுபடுமாறு பணித்ததாகத் தெரிய வந்தது.

இங்கிலாந்தில் 9 மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட கருணா தண்டனைக்காலம் முடியும் முன்பே விடுதலை செய்யப்பட்டார்.

இங்கிலாந்து அரசின் இந்த நடவடிக்கையை மனித உரிமையின் கண்காணிப்புக் குழுவின் ஆசியப் பிரிவு இயக்குநர் பிராட் ஆடம்ஸ் குறை கூறியுள்ளார்.


சித்திரவதை, விசாரணையின்றி சாவுத் தண்டனை வழங்குவது உள்ளிட்ட பல குற்றங்கள் புரிந்ததற்காக கருணாமீது இலங்கை அரசு தண்டனை விதிக்கவேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

ஈழத் தமிழர்களுக்கு எதிராகச் செயல்படுபவர்களுக்கெல்லாம் சட்டம், விதிகளைக் கடந்து உதவும் கரங்கள் இலங்கைக்குள் மட்டுமல்ல; வெளியிலும் தாராளமாகவே இருக்கின்றன.
சட்ட விரோத செயல்களில் ஈடுபட இலங்கை அரசால் தூண்டிவிடப்பட்டு - சட்ட விரோத செயலுக்காக இங்கிலாந்து அரசால் தண்டிக்கப்பட்டு, சட்ட விரோதமாக தண்டனை காலத்திற்குமுன் விடுவிக்கப்பட்ட அந்த ஆசாமி இப்பொழுது இலங்கைக்குச் சென்று சட்ட விரோதமான, நியாய விரோதமான வேலைகளில் ஈடுபட்டும் வருகிறார்.
பி.பி.சி.யின் சிங்கள மொழிப் பிரிவுக்கு அவர் அளித்த பேட்டி விபீஷணன் இன்னும் சாகவில்லை என்பதை பட்டாங்கமாய் வெளிப்படுத்துகிறது!

விடுதலைப்புலிகள் தற்போது தற்காப்பு நடவடிக்கைகளைத்தான் மேற்கொண்டு வருகின்றனர்.
புதிதாக எந்தத் தாக்குதல்களையும் அவர்களால் நடத்த முடியாது. எனினும் விடுதலைப்புலிகளை இலங்கை இராணுவம் தோற்கடிப்பது என்பது சில மாதங்களில் நடந்துவிடும் காரியம் அல்ல.
விடுதலைப்புலிகளுக்கு எதிரான போரில் வெற்றி பெற இலங்கை இராணுவத்துடன் இணைந்து போராடுவோம் (தினமணி, 6.7.2008, பக்கம் 10) என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்தப் பேட்டிக்கு விளக்கமும், வியாக்கியானமும் ஒரு
"கேடா!"

தந்தை பெரியார் சொன்ன ஒன்றுதான் நினைவிற்கு வருகிறது.

"இன்று எனக்குள்ள குறையெல்லாம் தமிழர் சமுதாயத்தில் "விபீஷணப் பரம்பரை" வளர்ந்து வருவதுதான்." (17.9.1969).

தந்தை பெரியார் தமிழர்களிடத்தில் கண்ட அந்தக் குறை கறையாகவே தொடர்ந்து கொண்டு இருக்கிறதே, என்ன செய்வது!


- "கருஞ்சட்டை" அவர்கள் எழுதிய கட்டுரை - "விடுதலை" 7-7-2008

0 comments: