Search This Blog

7.6.08

சோதிட மூடத்தனம் சூரியனை நிலவு முந்தி விடுமா?

வானவெளியை 12 பகுதிகளாகப் பிரித்து ஒவ்வொரு பகுதிக்கும் மேஷம், ரிஷபம், மிதுனம் என்று 12 பெயர்களை சூட்டி இருக்கிறார்கள். சூரியன் ஒவ்வொரு ராசியிலும் ஒரு மாதம் சஞ்சரிக்கிறது. ஒரு ஆண்டில் 12 ராசிகளைக் கடந்து வருகிறது. சந்திரன் ஒரு ராசியை இரண்டரை நாள்களில் கடந்து விடுகிறது. சோதிடத்தில் இந்த ராசியும், பிறந்த லக்கனமும், கிரகங்களும் நட்சத்திரங்களும் முக்கிய பங்கு வகிக்கிறது. இவைகள்தான் சோதிடத்திற்கு அடிப்படை என்று சோதிட நூலில் சொல்லப்பட்டிருக்கிறது. இதில் நமக்கு மிகப் பெரிய சந்தேகம்! சூரியன் வினாடிக்கு 230 கி.மீ. வேகத்தில் விண்வெளியில் ஒரு ராசி வட்டத்தைக் கடக்க ஒரு மாதம் ஆகிறது. பூமியோடு செல்லும் நிலவு வினாடிக்கு 30 கி.மீ. வேகத்தில் சென்று ஒரு ராசி வட்டத்தில் இரண்டரை நாள் சஞ்சரித்து விட்டு அடுத்த ராசிக்குக் கடந்து செல்வதாக சோதிட நூல் கூறுவது 230 கி.மீ., வேகத்தில் செல்லும் சூரியனை 30 கி.மீ. வேகத்தில் செல்லும் நிலவு முந்தி விடுமாம்!

வேகமாக ஓடும் முயலை ஆமை முந்தி விட்டது என்று சொல்வதுபோல் இருக்கிறது. இப்படிக் கூறும் சோதிடத்தை நம்ப முடியுமா? ஏற்றுக் கொள்ளக் கூடியதா!

வானவெளி வட்டத்தை 27 பகுதிகளாகப் பிரித்து, அதில் ஒளியோடு புலப்படும் ஒரு நட்சத்திரத்திற்குப் பெயரைச் சூட்டினார்கள் இந்த நட்சத்திரங்கள் ராசி வட்டத்தைக் கடந்து செல்லும் பாதையை கணக்கிலெடுத்து இருபத்தேழு நட்சத்திரங் களின் ஆதிக்கத்தில்தான் மனிதர்கள் பிறக்கிறார்கள் என்று சோதிடம் கூறுகிறது.

ஒரு குழந்தை பிறந்த நேரத்தில் பூமி இருக்கும் ராசிக் கூட்டத்தில் கண்ணுக்குத் தெளிவாகப் புலப்படும் நட்சத்திரமே அவர் பிறந்த நட்சத்திரமாகக் கொள்ளப்படுகிறது. அந்த நட்சத்திரத்தில் பிறந்த குழந்தை இன்னின்ன குணாதிசயங்களைப் பெற்றிருப்பார்கள். அவர்கள் வாழ்க்கை எப்படிப்பட்டதாக யிருக்கும் என்று சோதிடத்தில் கணித்துக் கூற முடியும் என்று சோதிடர்கள் கூறுகிறார்கள்.

கிருத்திகை நட்சத்திரம்

ஒரு குழந்தை ரிஷப ராசியில் கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தது என்றால் அந்த நட்சத்திரத்திற்கும் அக்குழந்தைக்கும் உள்ள தொடர்பு என்ன என்பதை ஆராய்வோம்!
அக்குழந்தை பிறந்த நேரத்தில் கிருத்திகை நட்சத்திரம் பூமியிலிருந்து 410 ஒளியாண்டுத் தொலைவில் இருக்கும். அந்த நட்சத்திரத்தின் ஒளியாற்றல் வினாடிக்கு 3 இலட்சம் கி.மீ. வேகத்தில் பூமிக்கு வந்த சேர 410 ஆண்டுகள் ஆகும்! அக்குழந்தை 100 ஆண்டுகளுக்கு மேல் வாழ்ந்தால்கூட அந்த நட்சத்திரத்தின் ஒளியாற்றல் பூமிக்கு வந்து சேர வாய்ப்பில்லை! குழந்தை பிறந்தபோது பூமியில் கிருத்திகை நட்சத்திரத்தின் ஒளியாற்றல் இருந்ததென்றால் அக்குழந்தை அணுவாகவோ கருவாகவோ உண்டாகாத காலத்திற்கு 410 ஆண்டுகளுக்கு முற்பட்டது! அந்த ஒளியாற்றலை அக்குழந்தைக்குரியதாக ஏற்றுக் கொள்ள முடியுமா? அந்த ஒளியாற்றலை வைத்து சோதிடம் கணிக்கப் படுவதாகக் கூறுவது எப்படிச் சரியாகும்! எப்படிப் பொருந்தும்.

கிருத்திகை 500 நட்சத்திரங்களைக் கொண்டது

கிருத்திகை நட்சத்திரம் பல நட்சத்திரங்களைக் கொண்ட கூட்டமாகும்! வானியல் மேதை கலிலியோ தொலை நோக்கி மூலமாக 36 நட்சத்திரங்களைக் கண்டார். 500-க்கு மேற்பட்ட நட்சத்திரக் கூட்டம் அது! அதன் வயது 25 இலட்சம் ஆண்டுகள். கிருத்திகை நட்சத்திரக் கூட்டத்திலுள்ள அல்சியோன் நட்சத்திரம் சூரியனைவிட 1000 மடங்கு ஒளியுடையது. அதன் குறுக்களவு 90 இலட்சம் கிலோ மீட்டர்! கிருத்திகையில் எந்த நட்சத்திரத்திதை வைத்து சோதிடம் கணிக்கப்படுகிறது. கிருத்திகையிலுள்ள மற்ற நட்சத்திரத்தின் ஆற்றல் பயனற்றதா அல்லது பயன்படாததா? சோதிடர்கள் இதற்குப் பதில் கூற முடியாது. இது அறிவியல் ஆதாரத்தோடு கூடியது! சோதிடர்களுக்கு இவை எதுவுமே தெரியாது. எனவே சோதிடர்கள் கூறுவது ஏற்றுக் கொள்ள முடியாதது மட்டுமல்ல! அறிவுக்கும் பொருந்தாதது! இது போன்றுதான் மற்ற ராசியிலுள்ள நட்சத்திரங்களின் தூரம் உள்ளது. அந்த நட்சத்திரங்களின் ஒளியாற்றலும் பூமிக்கு வந்து சேர நூற்றுக்கணக்கான ஆண்டுகள் ஆகிறது. எனவே குழந்தை பிறந்த நேரத்திற்கும் நட்சத்திரத்திற்கும் எந்த சம்பந்தமும் இருக்க முடியாது! எனவே சோதிடம் சொல்வது அறிவியல் அடிப்படையில் அமைந்தது அல்ல! நம்பத் தகுந்ததும் அல்ல!

நட்சத்திரங்களின் தூரம்

(ஒளி வினாடிக்கு 3 லட்சம் கி.மீ. வேகத்தில் ஓராண்டிற்குச் செல்லும் தூரம் ஒளியாண்டு ஆகும்)
ரிஷபராசியில் - கிருத்திகை நட்சத்திரம் 410 ஒளியாண்டுத் தொலைவு
ரிஷப ராசியில் - ரோகிணி நட்சத்திரம் 130 ஒளியாண்டுத் தொலைவு
மிதுன ராசியில் - புனர்பூச நட்சத்திரம் 36 ஒளியாண்டுத் தொலைவு
மிதுன ராசியில் - காஸ்டர் நட்சத்திரம் 46 ஒளியாண்டுத் தொலைவு
கடக ராசியில் - ஈட்டாகரினா 6000 ஒளியாண்டுத் தொலைவு
சிம்ம ராசியில் - மகம் நட்சத்திரம் 84 ஒளியாண்டுத் தொலைவு
கன்னி ராசியில் - சித்திரை நட்சத்திரம் 211 ஒளியாண்டுத் தொலைவு
கன்னி ராசியில் - சுவாதி நட்சத்திரம் 36 ஒளியாண்டுத் தொலைவு
விருச்சிகராசியில் - கேட்டை நட்சத்திரம் 300 ஒளியாண்டுத் தொலைவு
மகர ராசியில் - அசுவினி நட்சத்திரம் 84 ஒளியாண்டுத் தொலைவு
மிதுன ராசியில் - திருவாதிரை நட்சத்திரம் 1140 ஒளியாண்டுத் தொலைவு

சூரியன் ஒரு சிறிய நட்சத்திரம்!

சூரியன் ஒரு சிறிய நட்சத்திரம். பூமியிலிருந்து 14 கோடியே 94 இலட்சம் கி.மீ. தூரத்தில் உள்ளது! சூரிய ஒளி பூமிக்கு வர ஏழரை நிமிடம் ஆகும். சூரியனின் குறுக்களவு 13 இலட்சத்து 92 ஆயிரம் கி.மீ., சூரியனின் மையப்பகுதியில் வெப்பம் 1 கோடியே 50 லட்சம் சென்டி கிரேடு! விளிம்பில் 6000 டிகிரி சென்டிகிரேட்! சூரியன் அண்டத்தை மணிக்கு 8 இலட்சத்து 64 ஆயிரம் கிலோ மீட்டர் வேகத்தில் சுற்றி வருகிறது. இதே வேகத்தில் அண்டத்தை ஒரு சுற்று சுற்றி வர 25 கோடி ஆண்டுகள் ஆகிறது!

சூரியனுடன் சேர்ந்து பூமியும் மற்றக் கோள்களும் நாள் 1-க்கு 2 கோடியே 7 இலட்சத்து 36 ஆயிரம் கி.மீ., தூரம் அண்டத்தை சுற்றி வருகின்றன. சூரியன் அண்டத்தின் மையப் பகுதியிலிருந்து 30 ஆயிரம் ஒளியாண்டுத் தொலைவில் ஒரு ஓரத்தில் உள்ளது. சூரியனோடு சேர்ந்து நாமும் அண்டத்தைச் சுற்றுகிறோம்!

நட்சத்திரங்களின் ஆற்றல்!

ரோகிணி நட்சத்திரம் 5 கோடியே 10 இலட்சம் கிலோ மீட்டர் குறுக்களவு கொண்டது. ரோகிணியைச் சுற்றி 200-க்கும் மேற் பட்ட நட்சத்திரக் கூட்டம் உள்ளது! அந்த நட்சத்திரக் கூட்டத் தின் குறுக்களவு 33 ஒளியாண்டு! வயது 100 கோடி ஆண்டு!

ஈட்டாகரினா என்ற நட்சத்திரம் சூரியனைவிட 60 இலட்சம் மடங்கு பிரகாசமுடையது. ஒளி குன்றி வருவதால் செம்பூதமாக மாறி பெரு வெடிப்புக்கு உள்ளாகலாம் என்று ஆய்வுகள் கூறுகின்றன.
மகம் நட்சத்திரம் சூரியனைவிட 140 மடங்கு ஒளியுடையது. 14 ஆயிரம் டிகிரி வெப்பமுடையது.
சுவாதி நட்சத்திரம் சூரியனைவிட 115 மடங்கு அதிக ஒளியுடையது. 5000 டிகிரி வெப்பமுடையது.
கேட்டை நட்சத்திரம் சூரியனைவிட 285 மடங்கு குறுக்களவு கொண்டது. 30 மடங்கு சூரியனைவிட அதிக எடை 7500 மடங்கு அதிக ஒளி!

திருவாதிரை நட்சத்திரம் சூரியனைவிட 450 மடங்கு விட்டம் கொண்டது.
நமது அண்டத்தில் கோடிக்கணக்கான நட்சத்திரங்கள் உண்டு! அவற்றில் மனித வாழ்க்கையோடு தொடர்புபடுத்திய சில நட்சத்திரங்களை மட்டுமே இங்கு குறிப்பிடப்பட்டிருக்கிறது.
இந்த அறிவியல் முடிவுகளை ஆராய்ச்சியாளர்கள் எவ்வளவோ காலம் ஆராய்ந்து வெளியிட்டிருக்கிறார்கள். ஆராய்ச்சியாளர் களின் இந்த முடிவுகளை சோதிடம் ஏற்றுக் கொள்ளவில்லை.


- ------- ("சோதிட மறுப்பும் - வானவியல் சிறப்பும் நூலிலிருந்து...")

1 comments:

பனித்துளி சங்கர் said...

அய்யா நான்தான் பர்ஸ்ட்

பொறுங்க பத்திவை முழுதும் படித்துவிட்டு வருகிறேன் !