Search This Blog

15.6.08

தாழ்த்தப்பட்டவர்களுக்கு மதமாற்றம் முக்கியம்


------------------------------------------------------------------

மத மாற்றம் என்பது குழந்தை விளையாட்டல்ல; மனித வாழ்வை வெற்றிகரமாக்குவது எப்படி என்பதோடு தொடர்புடையது அது. சமூகம் சார்ந்தது, மதம் சார்ந்தது என மதமாற்றத்திற்கு இருபக்கங்கள் உண்டு. தீண்டாமையைப் புரிந்துகொள்ளாதவர்கள் மதமாற்றம் பற்றிய எனது பிரகடனத்தைப் புரிந்துகொள்ள இயலாது. தீண்டாமைப் பிரச்சனை என்பது ஒரு வர்க்கப்போராட்டம். சாதி இந்துக்களுக்கும் தீண்டத்தகாதவர்களுக்கும் இடையில் நடக்கும் போராட்டம். அடிமையாக வாழ விரும்புவோர் இது குறித்துச் சிந்திக்காமல் இருக்கலாம். ஆனால் சுய மரியாதையோடு வாழ விரும்புவோர் இதனைச் சிந்திக்காமல் இருப்பது எப்படி? இந்தப் போராட்டத்தின் ஊடாக உங்களைக் காப்பாற்றிக் கொள்வது எப்படி? தாசில்தாரும் போலீசும் சாதி இந்துவாக உள்ளபோது (அரசாலும்) உங்களுக்கு விடிவில்லை. எனவே உங்கள் (பாதுகாப்புக்கான) வலிமையை நீங்கள் உருவாக்கிக்கொள்ளவேண்டும். உங்களின் இன்றைய மதத்தை விட்டொழித்துவிட்டு வேறொன்றுடன் இணைத்தக்கொள்வதன் மூலம் இந்த வலிமையை நீங்கள் பெற வேண்டும்.


இவ்வழியில் யாராவது இஸ்லாமியராகவோ, கிறிஸ்தவராகவோ மாறிவிட்டால் அதற்குப் பின் உங்களை அவர்கள் தீண்டத்தகாதவராக நடத்த முடியாது. தீண்டாமை இழிவிலிருந்து நீங்கள் தப்புவதற்கான ஒரே வழி இந்து மத விலங்குகளை உதறித் தள்ளுவதே; இந்துச் சமூகத்தைவிட்டு வெளியேறுவதே. சாதியத்தையும் தீண்டாமையையும் ஒழிக்க ஒரே வழி மாற்றம்தான்.

மதத்தை மாற்றுவது என்பது பெயரை மாற்றுவது. பெயர் மாறுவதால் உங்களுக்கு பயனுண்டாகும். இஸ்லாமியராகவோ, புத்த மத்தவராகவோ, சீக்கியராகவோ மாறும்போது உங்களின் பெயரும் மாறிவிடுகிறது.

பிறவி மூடரே மதம் எனச் சொல்லி அதைப் பிடித்துத் தொங்கி கொண்டிருப்பார்கள். இந்து மதத்தை சீர்திருத்துவது நமது குறிகோளோ செயல்பாடோ அல்ல. நமது ஒரே குறிக்கோள் விடுதலை மட்டுமே. இந்து மதத்தை சீர்திருத்தும் பணியை நாம் ஏன் சுமக்கவேண்டும்?

சமத்துவடைவதற்கு இரண்டு வழிகள் உள்ளன. ஒன்று இந்து மதத்திலேயே சமத்துவம் ஏற்படுத்துவது. சமபந்தி உணவு, கலப்புத்திருமணம் மூலம் இதனை உருவாக்கலாம். அதாவது வருண முறையை, பார்ப்பன மதத்தை வேரறுப்பதன் மூலம். இது சாத்தியமா? சாத்தியமில்லாத போது இரண்டாவது வழியை நாம் யோசிக்கவேண்டியிருக்கிறது. அதுதான் மதமாற்றம்.

கிறித்தவர்கள் மத்தியிலும் இசுலாமியர் மத்தியில் சாதிகள் இருந்த போதிலும் இதனை இந்துமதத்தோடு ஓப்பிடுவது அற்பத்தனம். இம்மதங்களில் சாதி இருந்தபோதிலும் சாதியம் என்பது இவற்றின் முதன்மையான பண்பு அல்ல. இந்து மதத்தில் மட்டுமே சாதியம் மத அடிப்படை கொண்டுள்ளது. இந்துக்கள் இந்து மதத்தை ஒழிக்காமல் சாதிகளை ஒழிக்க முடியாது. ஆனால் சாதியை ஒழிப்பதற்கு கிறித்தவர்களும் இசுலாமியரும் அவர்களது மதங்களை ஒழிக்க வேண்டியதில்லை (எனவேசொல்கிறேன்) இந்தியாவுக்கு சுய அரசு எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் தாழ்த்தப்பட்டவர்களுக்கு மதமாற்றம்.

உங்கள் கல்வி மதிக்கப்பட வேண்டுமானால், உங்கள் முன்னேற்றம் தடைபடாது இருக்கவேண்டுமானால், தீண்டாமையை நீங்கள் ஒழித்தாகவேண்டும். எனவே நீங்கள் மதம் மாறியாக வேண்டும். பிரிட்டிஷாரின் இடஓதுக்கீடு இருப்பது ஆண்டுகள் நீடித்தது. பூனா ஒப்பந்தத்தில் இப்படி காலக்கெடு இல்லாவிட்டாலும் இந்த அரசியல் உரிமை என்றென்றைக்கும் நீடிக்கும் என எப்படிச் சொல்ல முடியும்? என்றென்றைக்கும் உங்கள் வலிமையை தக்கவைப்பதற்கான ஒரே வழி மதம் மாறுவதே!


இத்தகைய சூழல்களில் எது நிரந்தரப் பயன் விளைவிக்கம் என யோசிக்கவேண்டும். என்னுடைய கருத்துபடி மதமாற்மே நிரந்தரப் பயன் உடையது. அரசியல் உரிமைகள் பறிபோனாலும்கூட நீங்கள் மதம் மாறத் தயங்கக்கூடாது. எனவே அமைப்பாகத் திரண்டிட, வலிமைபெற சமத்துவமடைய, விடுதலை ஈட்ட, குடும்ப வாழ்வை மகிழ்ச்சியாக்க மதம் மாறுங்கள், மதம் மாறுங்கள்.


-----------அம்பேத்கரின் 'ஏன் மதம் மாறவேண்டும்' என்ற ஆங்கில நூலிலிருந்து...

0 comments: