Search This Blog

2.6.08

அல்லாடும் ஆண்டவன்




``கடவுள் சாட்சியாக நான் சொல்லுவ-தெல்லாம் உண்மை - என்று சொல்’’
``நான் ஏங்க, பொய் சொல்லப் போகிறேன்? பொய் சொன்னா, சாமி கண்ணை அவிச்சிடாதுங்களா’’
``சரி, உன் பெயர்.....?’’
``சாமிக்கண்ணுங்க’’
* * * *
சாமிக்கண்ணு சாட்சி சொல்ல வந்திருக்கிறான், கோர்ட்டுக்கு! கூண்டேறிய அவனை, முதலில் `குமாஸ்தா’ சத்யம் பண்ணச் சொல்லுகிறார். அவனும் ஆண்டவன்மீது ஆணையிட்டு விட்டே, வாக்குமூலம் தருகிறான்! அவன் தந்த வாக்குமூலம் இது.

`எனக்கு ஊர்க்காவல் வேலைங்க! ராத்திரி மணி 12 இருக்கும். ராஜவீதி வழியே வந்துகொண்டிருக்கும்போது, `அய்யோ! என்னை குத்திட்டானே, குத்திட்டானே! என்று சப்தம் கேட்டுதுங்க, ஓடிப்போய்ப் பார்த்தேன். ஒரு பொண்ணு, இரத்த வெள்ளத்திலே கிடந்தது. இதோ நிற்கிறாரே, இவரு கத்தியை வைச்சிக்கிட்டு நின்னாருங்க, பார்த்தேன், உடனே ஓடிப்போய், போலீஸ் ஸ்டேஷனிலே சொல்லி இவரைப் பிடிச்சோமுங்க...
* * *
இளம் பெண், அவள்! கொலையுண்டதும் உண்மை. பிணமான அவளை பரிசோதனை செய்த பஞ்சாயத்தாரும் கொலையால் ஏற்பட்ட மரணம் என்று தீர்ப்பளித்துவிட்டனர். கண்ணால் கண்ட சாட்சி இருக்கிறது! புலன் விசாரணை செய்த போலீசாரும், `கத்தியும் கையுமாய் பிடிபட்ட வாலிபனே’ கொலை செய்திருக்க வேண்டும் என்பதற்கான ஆதாரங்களைச் சேகரித்திருக்கிறார்கள். அந்த ஆதாரங்களை விசாரணை செய்த சப்-இன்ஸ்பெக்டர் சாம்பு சமர்ப்பித்த விவரம்:

கமலாவும், கருப்பனும் காதலர்கள். ஆனால், வெவ்வேறு ஜாதி என்றாலும், இரண்டு பேரும் ஒருவரை ஒருவர் கலியாணம் செய்து கொள்ளுகிற அளவுக்குக் காதல் கொண்டிருந்தார்கள். ஆனால், கமலாவின் அப்பா, ஜாதிவிட்டு ஜாதி மாறி கலியாணம் செய்து கொடுக்க விருப்பமில்லை. சொந்தக்காரரும், பணக்காரருமான பாக்கியநாதனுக்குத் திருமணம் செய்துதர ஏற்பாடு செய்திருந்தார். இந்த விஷயத்தைக் கேள்விப்பட்ட கருப்பன், `உண்மைதானா’ என்று கேட்க கமலாவிடம் போயிருக்கிறான்.

கமலாவும், தன் அப்பாவின் விருப்பத்தை மறுக்க முடியாமல் ஒத்துக்கொண்டதாகச் சொல்லியிருக்கிறாள். அதற்கு இதோ, கருப்பன் வீட்டிலிருந்து கைப்பற்றிய கடித ஆதாரம் இருக்கிறது. கடிதம் கமலா கருப்பனுக்குத் தீட்டியது. `ஆசைக் காதலரே அப்பா நமக்கு எமனாக இருக்கிறார். பாக்கியநாதனைக் கலியாணம் செய்து கொள்ள வேண்டுமாம் நான். பணம் இருக்கிறதாம் அவரிடம். மறுத்தால் கிணற்றில் விழுந்துவிடுவதாகப் பயமுறுத்துகிறாள், அம்மா. இதுபற்றி ஒரு முடிவு செய்யவேண்டும். என்ன செய்வது? தெரியாமல் திகைக்கிறேன். இந்த அபாக்கியவதியை மறந்துவிடுங்கள். இந்த உலகத்தில் ஏழைகளுக்கும் காதலுக்கும் எட்டாத தூரம் உண்டு போலிருக்கிறது கமலம்’ கடிதத்தில் தன் முடிவைத் தெரிவித்திருக்கிறாள்! முடிவைக் கண்ட கருப்பன் மூர்க்கனாகி இருக்கிறான். கோபத்துக்கு ஆளாகி, காதலியும் தன்னைப் புறக்கணிப்பதாக எண்ணி, இந்த கோரக் கொலையைச் செய்திருக்கிறான்.
* * *
இந்த விவரத்தை வெளியிடுவதற்கு முன் சப்-இன்ஸ்பெக்டரையும் கோர்ட்டு குமாஸ்தா கேட்கத் தவறவில்லை.

``ஆண்டவன்மீது ஆணையாக நான் சொல்லுவதெல்லாம் உண்மை’’ - என்று சொல்லும்படி, சப்-இன்ஸ்பெக்டரும் சொல்லத் தவறவில்லை!! கொலையுண்ட கமலம்பற்றி சாட்சியும் அதிகாரியும் கருப்பனே கொலை செய்தவன் என்று ‘ஆண்டவன்மீது ஆணை’-யாகச் சொல்லிவிட்டார்கள். இதோ கருப்பன் வாக்குமூலம்! அவனும் கோர்ட்டு குமாஸ்தா கேட்டதுபோல, ஆண்டவனின் மீது சத்யம் செய்துவிட்டு சொல்லுகிறான் - ``நான் கொலைகாரனில்லீங்க. நான் கொலை செய்யவும் இல்லே! கெஞ்சிக் குலாவிய என் கமலத்தையா, கொல்லுவேன் நான்? எசமான்! என் வார்த்தையை நம்புங்க. ஆண்டவன்மீது ஆணையாகச் சொல்கிறேன் - நான் கொலை செய்யலீங்க. கொலை நடந்த இரவு 12 மணிக்கு என்னைத் தன் வீட்டுக்கு வரச் சொன்னதா, ஒரு ஆள் மூலம் கமலம் சொல்லியனுப்-பிச்சுதுங்க. அதனால்தான் போனேன். கொல்லைக் கதவு சாத்தியிருக்கும் - எப்பவும். அன்னைக்குத் திறந்திருந்தது. உள்ளே போனேன். வீட்டிலே யாரும் இல்லை. கமலம் மட்டும் தூங்கிக்கிட்டு இருந்தது. எழுப்பினேன்! என்னைப் பார்த்து திகைச்சுது! நான் சொல்லியனுப்பலேன்னும் சொல்லிச்சு. அப்பா, அம்மா, சினிமாவுக்குப் போயிருக்கிறதாகவும் சொல்லிச்சு. அதுக்கு மேலே இரண்டு பேரும் விளக்கை அணைச்சிட்டு... அப்ப, யாரோ வருகிற காலடி சப்தம் கேட்டுதுங்க. பக்கத்திலே படுத்திருந்த கமலம், அய்யோ குத்திட்டாங்களே, குத்திட்டாங்களே என்று சப்தம் கேட்டுதங்க. திடீர்னு யாரோ ஓடுற சப்தம் கேட்டுது. விளக்கைப் போட்டுப் பார்த்தா, என் கமலம் பிணமா கிடந்ததுங்க! பக்கத்திலே, என் கமலத்து உயிரைப் பறித்த கத்தி, எமனாட்டம் கிடந்ததுங்க. எசமான்! நான் சாவறதைப் பற்றி கவலைப்படலீங்க, ஆனா கமலத்தைக் கொன்ற பழியை மட்டும் என்மீது சுமத்தாதீங்க, எசமான்! எசமான்!! கடவுள்மீது ஆணையாச் சொல்றேங்க’’

கருப்பன், கண்ணீர் ததும்ப, கடவுளே கடவுளே என்று அலறியவண்ணம்தான் இந்தச் சோகக் கதையைச் சொன்னான். ஆனால், யார் நம்பமுடியும்? சப்-இன்ஸ்பெக்டரின் விசாரணைக் குறிப்புகள் - சாட்சியங்கள் - இவைகள் சொல்லுகின்றனவே, கருப்பனே கொலைஞன் என்று.

சர்க்கார் வக்கீல், அதனைச் சுட்டிக்காட்டி வாதாடுகிறார். வழக்கு, கொலை சம்பந்த-மானதால்! - ஆயினும் சக வக்கீல்கள் பிரமிக்க வேண்டுமே. அழகாகப் பேசுகிறார் கேளுங்கள்!

``கனம் தங்கிய கோர்ட்டாரவர்களே! காதலித்தேன் - கண்ணே, என்றேன். அவளையா நான் கொலை செய்திருப்பேன்? என்று கூறுகிறான். கொலைக் குற்றம் சாட்டப்பட்ட கருப்பன் அவன் கொலை செய்தான் என்பதை ருசுப்பிக்கும் சாட்சியங்களை நீங்கள் கண்டீர்கள். என்றாலும் இப்படிச் சொல்லி காருண்யமிக்க சட்டத்தின் பிடியிலிருந்து தப்ப முயல்கிறான். நாட்டின் நானாவிடங்களில், சந்து முனைகளிலும், சாக்கடைப் பள்ளங்களிலும் வெட்டிக் கொண்டு வீழ்கிறார்கள் பலபேர் - கள்ளக் காதலின் காரணமாக! கமலத்தைக் கருப்பன் கொன்றதற்கும் காரணம், காதலித்தான் அவளை! அவளோ பாக்கியநாதனைக் கணவனாக அடைய இருந்தாள்! சகிக்க முடியவில்லை, கருப்பனால். காதலி, காதகியாகி விட்டாள் என்று மனம் புழுங்கினான். விளைவுதான் இந்த வேதனை.’’

* * * *
தெளிவான வழக்கு! எனவே கனம் தங்கிய கோர்ட்டுக்கு நீதி வழங்குவதில் எவ்வித சிக்கலும் ஏற்படவில்லை.
தூக்குத் தண்டனை! அளிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டு விட்டது. `கடவுள்மீது

ஆணையாக’ ஒவ்வொருவரும் சாட்சியம் சொல்லினர். அந்த சாட்சியங்கள், கருப்பனின் உயிரைக் கொண்டு போய்விட்டன!


* * *
கருப்பன் தூக்கில் தொங்கியபிறகு சாட்சி சொல்லிய சாமிக்கண்ணு இதோ நிற்கிறான், பாக்கியநாதன் எதிரில்! பாக்கியநாதன் பேசுகிறார். ``சாமிக்கண்ணு சாட்சி சொன்னதெல்லாம் சரிதான். ஆனா, என்னப்பா பிரயோசனம்? உன்னையும் உத்தண்டி முத்தன் ஆகியவர்களையும் அவளையா தீர்த்துக் கட்டச் சொல்லி அனுப்பிச்சேன். அந்தப் பயல் கருப்பனைக் கொன்று போட்டுட்டு வாங்கடான்னு அனுப்பிச்சா. என் மனசிலே இருந்த கமலத்தை எமலோகத்துக்கு அனுப்பிச்சுட்டு வந்து கேட்கிறீங்களே. அப்பா, பணம். ஊம்! உங்களுக்குப் பணம் வேறவா, கொடுக்கணும் பணம். இந்தக் கேசிலே நீங்க மாட்டிக்காமே இருக்க, அவருக்கும் இவருக்குமா, நான் செஞ்சிருக்கிற செலவுக்கே, நீங்க கொடுக்கணும் பணம், தெரிஞ்சுதா!’’
* * *
‘பாவிப்பய!’ ‘அக்கிரமக்காரன்’, ‘இப்படிச் செஞ்சிட்டானே!’ என்று, சாமிக்கண்ணுவும், உத்தண்டியும், முத்தனும், சாலையோரத்திலும் `டீ.’ கடையிலும் பேசுகின்றனர் பாக்கிய-நாதனைப் பற்றி. அவரோ வில் வண்டியில், கமலத்துக்கும் பதில் கிடைத்த கோகிலத்துடன் போய்க் கொண்டிருக்கிறார். கோவிலுக்கு!! `காவடிச் சிந்து’ விற்கப்படுகிறது. கருப்பனைப் பற்றி ‘கடவுள்மீது ஆணை’யாகச் சொல்லிய சாட்சிகளும், இருந்த வண்ணமே இருக்-கிறார்கள்! அப்படிச் சொல்லச் சொல்லும், ‘கோர்ட் குமாஸ்தாவும்’ கூண்டிலேறும் ஒவ்வொருவரையும் விசாரணைக்கு முன் அப்படியே சொல்லச் சொல்லுகிறார்! ஆனால், தண்டனை பெறுவதும், தண்டனையிலிருந்து தப்புவோரும் அபாக்கியவான்களும், பொய் சாட்சியம் சொல்லுவோரும் அக்கிரமக்காரர்களும் இருக்கத்தான் இருக்கிறார்கள்! ஆண்டவன் என்ன செய்வார், பாவம்? கல்லாகவே இருக்கிறார்.


--------------------10.4.1955 - பேரறிஞர் அண்ணாவின் சிறுகதைத் தொகுதியிலிருந்து

0 comments: