Search This Blog

30.6.08

சமூக சீர்திருத்தம் பேசுகிறவர்கள் அரசியல் பேசலாமா? --கி.வீரமணி பதில்கள் -1



குற்றாலத்தில் நடைபெற்ற பெரியாரியல் பயிற்சி முகாமில் (16-6-2008) திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள் மாணவர்கள் கேட்ட கேள்விகளுக்கு அளித்த பதில் விவரம் வருமாறு:

பெரியாரைப் பொறுத்த வரையில் - திராவிடர் கழகத்தைப் பொறுத்தவரையிலே அய்யா அவர்கள் நீண்ட காலத்திற்கு முன்னாலே தெளிவாக தங்களுடைய தொண்டைப்பற்றி ஒன்றை சொல்லியிருக்கின்றார்கள். நம்முடைய தொண்டு - திராவிடர் கழகத்தினுடைய தொண்டு - கருப்புச் சட்டைக்காரனுடைய தொண்டு என்பது நன்றி பாராட்டாத நன்றியை எதிர் பார்க்காத ஒரு தொண்டாகும்.

நன்றி என்பதிருக்கிறதே...

thankles job என்று ஆங்கிலத்திலே அய்யா அவர்கள் சொல்லுவார்கள். அந்த வகையிலே பெரியாரோ இந்த இயக்கமோ என்றைக்கும் நன்றியை எதிர்பார்ப்பதில்லை. ஆனால் அய்யா அவர்கள் சொன்ன ஒன்றை நாம் அனைவரும் நினைவிலே வைத்துக்கொள்ள வேண்டும். 1933-லே குடிஅரசுவில் தந்தை பெரியார் அவர்கள் எழுதினார்.

நன்றி என்பது பயனடைந்தவர்கள் காட்ட வேண்டிய பண்பே தவிர உதவி செய்பவர்கள் எதிர் பார்ப்பது சிறுமைக் குணமேயாகும் என்று சொன்னார். எனவே அந்த வகையிலே நாம் நன்றியை எதிர்பார்த்து எதையும் செய்யவில்லை.

நன்றி கொன்றால் வரலாற்றுப் பழி

எனவே நன்றி கொன்றால் வரலாற்றுப் பழியை அவர்களே ஏற்கக் கூடிய அவசியம் இருக்கும். எனவே இந்த சமுதாயம் வளர வேண்டுமானால், அவர்களுக்கு மட்டுமல்ல, நம் எல்லோருக்குமே நன்றாக நினைவிலே வைத்துக் கொள்ள வேண்டியது - நன்றி காட்டுகின்ற பண்பை நாம் குறைத்துக் கொள்ளக் கூடாது.

அய்யா இன்னொன்றையும் சொன்னார்.: நன்றி காட்டுவது தமிழனுக்கு நஞ்சு போன்றது என்று அய்யா அவர்கள் அவருடைய மொழியில் பக்குவப்பட்டு சொல்லியிருக்கின்றார்கள் பெரியார் - நன்றியை எதிர்பார்க்கவில்லை
எனவே பெரியார் நன்றியை எதிர்பார்க்கவில்லை. நாம் நன்றியை மறக்கக் கூடாது. நன்றி மறந்தவன் மனிதனே அல்ல என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

பகுத்தறிவுக் கல்வியின் அவசியம்

மாணவர் கேள்வி: அறிவியல், சமூக அறிவியல், இயற்பியல், கணிதம் போன்று பகுத்தறிவுக் கல்வி என்பதை ஒரு பாடப் பொருளாக ஆக்க அரசை வற்புறுத்துவீர்களா?

தமிழர் தலைவர்: அரசை வற்புறுத்துவது என்பது ஒரு பகுதியாக இருந்தாலும், கல்வியே பகுத்தறிவை அடிப்படையாகக் கொண்டால்தான் அது கல்வி என்றே தகுதியுள்ள பெயராக அமையுமே தவிர, வேறு அல்ல. பகுத்தறிவு இருப்பதால் தான் படிக்கவே, கற்கவே வருகிறான். ஆகவே அந்த அடிப்படையிலே பகுத்தறிவுக் கல்வி என்பது இருக்கிறதே, இன்றைய சூழலிலே இந்தக் கேள்விக்கு அவசியம் இருக்கிறது என்று சொன்னால்கூட நடைமுறையிலே பகுத்தறிவுச் சிந்தனையைத்தான் நாம் உருவாக்கிக் கொள்ள வேண்டும். மற்றவர்கள் அதை செய்யாவிட்டாலும் கூட தஞ்சை வல்லத்தில் உள்ள பெரியார், மணியம்மை பல்கலைக் கழகம், பகுத்தறிவு பாடத்தை ஒரு பட்டயப் படிப்பாக பட்டப் படிப்பாக, பெரியார் சிந்தனை உட்பட ஆக்கியிருக்கிறது என்பது எல்லோருக்கும் முன்னோடியாகத் திகழ்ந்து கொண்டிருக்கின்றது. இதை அரசு பின்பற்றும் மற்ற பல்கலைக் கழகங்களும் பின்பற்றும். நீண்ட காலமாகவே மதுரையிலே இருக்கக் கூடிய யாதவர் கல்லூரியிலே பெரியார் சிந்தனைகள் - பகுத்தறிவு சிந்தனைகளை அவர்கள் ஒரு சான்றிதழ் படிப்பாக வைத்து அதை சொல்லிக் கொடுக்கின்றார்கள். ஆண்டு தவறாமல் அரசு சான்றிதழ் வழங்கி வழி காட்டுகிறார்கள். இதை விரிவாக்க வேண்டும். மற்றவர்களும் பின்பற்ற வேண்டும். அது சிறப்பானது. நிச்சயமாக வற்புறுத்துவோம்.

ஊடக வசதி இருந்தும்

பெரியார் கருத்து அதிகம் பரவவில்லையே!


மாணவர் கேள்வி: ஊடக வசதி, இன்றுபோல் இல்லாத அந்த காலத்தில் தந்தை பெரியார் அவர்களுடைய கருத்துகள் வேகமாகப் பரவியது போல், ஊடகங்கள் வசதி அதிகம் உள்ள இந்த காலத்தில் கழகக் கருத்துகள் அதிகம் பரவாதது போல் தோன்றுகிறதே, என்ன காரணம்?

தமிழர் தலைவர்: ஊடகங்கள் தான் காரணம். முதலாவது, விஞ்ஞானம் வந்தால் நம்முடைய நாட்டில் மூடநம்பிக்கை ஒழியும் என்பது பொதுவான ஓர் உலக தத்துவம். ஆனால், நம்முடைய நாட்டில் ஊடகங்கள் வந்ததுதான் இப்பொழுது மூடநம்பிக்கை அதிகமாக வளருவதற்கே காரணமாக இருக்கிறது.
எங்கேயோ ஓர் இடத்தில் சபரி மலை கோயில் விழா நடைபெறுகிறது. அங்கு கதவு திறக்கிறது, எங்கோ ஒரு நாள் திருவண்ணாமலையில் கார்த்திகை தீபம் என்றால் ஊடகங்கள் வருவதற்கு முன்னாலே - டெலிவிஷன், வானொலி எல்லாம் வருவதற்கு முன்னாலே அது அந்த ஊரோடு அந்த நோய், அந்த மூடநம்பிக்கை அங்கே வருகிறவனோடு நின்றுபோய் விடும்.
மூடநம்பிக்கையை லைவ் டெலிகாஸ்ட்டில்
இப்பொழுது என்ன செய்கிறார்கள். டெலிவிசனைக் கண்டுபிடித்தவுடனே அதுவும் கலர் டெலிவிசன் என்றவுடனே எத்தனை கலர் புடவையோடு யார் யார் வந்திருக்கிறார்கள்? சாமிக்கு எத்தனை கலர் விருப்பமாக இருக்கிறது என்று சொல்லக்கூடிய அளவிற்கு அதை நேரடி அலை வரிசையில் (டுஎந கூநடநஉயளவ) எடுத்துக்காட்டி எல்லா ஊர்களில் இருக்கிறவனும் கன்னத்தில் போட்டுக் கொண்டு உட்கார்ந்திருக்கிறார்கள். ஆகவே நம்முடைய நாட்டில் விஞ்ஞான கருத்துகளை, விஞ்ஞான கருவிகளைக் கொண்டே பரப்புவதற்குப் பதிலாக அஞ்ஞானத்தையும், மூடநம்பிக்கையையும் ஊடகங்கள் பரப்புகின்ற காரணத்தால்தான் ஊடகங்கள் தான் நம்முடைய சீர்திருத்தத்திற்கு முதல் எதிரியாக இன்றைக்கு இருக்கிறது என்பதை நாம் பிரகடனப்படுத்தத் தயாராக இருக்கின்றோம்.
எப்படி ஏடுகள், ஊடகங்கள் மூடநம்பிக்கையைப் பரப்பிக் கொண்டிருக்கின்றார்களோ, அதற்கு விரோதமாக எதிராக விடுதலை, முரசொலி போன்ற ஏடுகள் எழுதுகின்றன. அதுமாதிரி நம்முடைய ஊடகங்களைத் தயாரிக்க வேண்டும்.

பெரியார் தொலைக்காட்சி வந்தால் - பிரச்சினை தீரும்

பெரியார் தொலைக்காட்சி என்பது தனியாக வந்தால்தான் இந்த வாய்ப்புகள் முழுமையாக இன்றைக்கு வரும். இருந்தாலும் மூலதனமும், வேறு சில சிக்கல்களும் அதிலே இருப்பதாலே அந்த சிக்கல்களை கொஞ்சம் சரிப் படுத்திவிட்டு, எப்படி காலந்தாழ்ந்தாலும் சிறப்பாக பெரியார் மணியம்மை பல்கலைக் கழகம் அமைந்திருக்கிறதோ அதுபோல பெரியார் தொலைக்காட்சி வந்தால் இப்பிரச்சினைகள் தீரும்.
மக்கள் மத்தியிலே பகுத்தறிவு கருத்துகள் பரவ ஆரம்பித்தால் மூடநம்பிக்கைகள் மீது சலிப்பு ஏற்படும். புளிப்பு ஏற்படும். அதன்பிறகு மற்றவர்களும் நம்முடைய வழியைப் பின்பற்றுவார்கள்.

சேது கால்வாய் திட்டம் நிறைவேறுமா?

மாணவர் கேள்வி: சேது கால்வாய் திட்டம் நிறைவேறுமா?

தமிழர் தலைவர்: நிறைவேறியே தீரவேண்டும் (கைதட்டல்). இதை நிறைவேற்றாமல் விட மாட்டோம். ராமன் குறுக்கே நின்றாலும், இராவணப் படைகள் அதை முறியடிக்கும் (கைதட்டல்).

பா.ஜ.க. - தி.க., கொள்கைகளை ஏற்றுக் கொண்டால்...!

மாணவர் கேள்வி: பாரதீய ஜனதா கட்சி திராவிடர் கழகத்திற்கு எதிர் கட்சியாகக் கருதப்படுகிறது. பாரதீய ஜனதா கட்சியும், திராவிடர் கழகக் கொள்கையை ஏற்றுக் கொண்டால் ஆதரிப்பீர்களா?

தமிழர் தலைவர்: அப்படி ஏற்றுக் கொண்டால் அது பாரதீய ஜனதாவாக இருக்காது. திராவிடர் கழகமாகத்தான் இருக்கும். ஆதரிக்கின்ற பிரச்சினைக்கே இடமில்லை (கைதட்டல்).

நூலகங்களில் விடுதலை, உண்மை கிடைக்கவில்லையே

மாணவர் கேள்வி: பல மாவட்டங்களில் உள்ள நூலகங்களில் இன்றுவரை விடுதலை, உண்மை சரியாக வருவதில்லை. குறிப்பாக நகர்ப்புறங்களில் அதற்கு முடிவு என்ன?

தமிழர் தலைவர்: இந்த பிரச்சினையை புள்ளி விவர ரீதியாக எடுத்து மாநில நூலக ஆணையக் குழுத் தலைவர் அவர்களிடத்திலே கொண்டு போய் கொடுக்க அவர்கள் அதை ஆய்வு செய்து எல்லா நூலகங்களுக்கும் போடுவதற்கு ஏற்பாடுகள் நடந்துகொண்டிருக்கின்றன.
இன்னும் சிறிது காலத்திற்குள்ளாக இந்தப் பிரச்சினைக்கு இந்தக் கேள்விக்கு சரியான விடை, சரியான பரிகாரம் கிடைக்கும்.
ஆகவே கவலைப்பட வேண்டாம். ஆனால் எந்தெந்த நூலகங்களுக்கு வரவில்லை என்பதை உள்ளூர் தோழர்கள் எங்களுக்குக் கடிதம் எழுதி முயற்சித்தால் இன்னும் அது விரைந்து கிடைக்க வாய்ப்பு ஏற்படும். அந்த பிரச்சினையில் தெளிவாக நாங்கள் முயற்சிகள் எடுத்துக் கொண்டிருக்கின்றோம். நன்றி.

சமூக சீர்திருத்தம் பேசுகிறவர்கள்
அரசியலைப்பற்றி பேசலாமா?


மாணவர் கேள்வி: சமூக சீர் திருத்தம் பேசுகிறவர்கள் அரசியலைப்பற்றிப் பேசக் கூடாது என்று ஒரு அரசியல் கட்சித் தலைவர் சொல்லுகிறாரே இது பொருத்தமான கருத்தா?

தமிழர் தலைவர்: காமாலைக் கண்ணனுக்கு கண்டதெல்லாம் மஞ்சள் என்கிற ஒரு பழமொழி உண்டு. எனவே சரியான பார்வை எதிலும் இப்படித்தான் பேசத் தோன்றும். சமுதாயத்தை சீர்திருத்தாமல் ஓர் அரசியல் அமைந்திருக்கின்ற காரணத்தால்தான் கொள்ளைக்காரர்களும், ஜாதி வெறியர்களும், மத வெறியர்களும் அரசியலை நடத்த முடிகிறது. எனவே சமுதாய சீர்திருத்தக்காரர்கள் அரசியலை திருத்தினால்தான் அரசியலே திருந்தும் என்று சொல்லக்கூடிய வாய்ப்பு முழுமையான முன்னுரிமை. சமுதாயப் பார்வை சமுதாய சீர்திருத்தக்காரனுக்குத்தான் உண்டே தவிர அரசியல்வாதிகளுக்குக் கிடையாது. சமுதாய சீர்திருத்தவாதிக்கு அடுத்த தலைமுறையைப் பற்றிக் கவலை. அரசியல் வாதிக்கு அடுத்த தேர்தலைப்பற்றிக் கவலை. ஆகவே தான் சமுதாய சீர்திருத்தவாதிக்குத்தான் முழு உரிமை, . முன்னுரிமை உண்டு.

பகுத்தறிவைப் பிரச்சாரம் செய்ய
தி.மு.க,, அ.தி.மு.க., கட்சிகளை வலியுறுத்துவீர்களா?


மாணவர் கேள்வி: திராவிடர் இயக்கம் என்று சொல்லப்படுகின்ற அல்லது அதிலிருந்து வந்ததாகச் சொல்லப்படக்கூடிய தி.மு.க., அ.தி.மு.க., போன்ற கட்சிகள் பகுத்தறிவு கருத்துகளையும் பிரச்சாரம் செய்ய நீங்கள் வலியுறுத்துவீர்களா?

தமிழர் தலைவர்: .தி.மு.க. என்றால் பகுத்தறிவு இயக்கம் என்பதை அண்ணா அவர்கள் ஏற்படுத்தி இன்றளவும் கலைஞர் அவர்கள் அந்தக் கொள்கையிலேயே வழுவாமல், நழுவாமல் தீவிரமாக இருந்து கொண்டிருக்கின்றார் (பலத்த கைதட்டல்).

இதிலே கொண்டு போய் அ.தி.மு.க.வை சேர்ப்பது இருக்கிறது பாருங்கள், அது ரொம்ப சிக்கலான விசயம். அ.தி.மு.க. கட்சிப் பெயரில் அண்ணா இருக்கிறார். பெயரில் திராவிடம் இருக்கிறது. அந்த மாதிரி ரொம்ப கட்சிகள் இருக்கிறது. விஜயகாந்த் கட்சியில் கூட திராவிட கழகம் இருக்கிறது.
இதில் தேசியம் இருக்கிறது. முற்போக்கு இருக்கிறது. பிற்போக்கு இருக்கிறது. எல்லா போக்கும் சேர்ந்து கடைசியில் கொள்கைக்கு வயிற்றுப் போக்கு ஏற்படுமே தவிர வேறு ஒன்றும் இல்லை (கைதட்டல்). ஆகவே அந்த நிலையில்தான் இருக்கிறது. ஆகவேதான் அவர்களை வற்புறுத்த வேண்டிய அவசியமில்லை.

அ.தி.மு.க. தலைமையே அப்படி இருக்கிறது

கல் சோறும், மண் சோறும் சாப்பிட்டுக் கொண்டு அடிப்படையே தெரியாத தலைமையே அங்கு இருக்கிறது. அந்த தலைமைக்கு கண்ணை மூடிக் கொண்டு பின்பற்றக் கூடியவர்களாக இருக்கின்ற வரையிலே அவர்களுக்கு வாய்ப்பில்லை.

அதனால்தான் கொஞ்சம் கொள்கை உணர்ச்சி இருக்கிறவர்கள் அதை விட்டு, வெளியே இருக்கிறார்கள். அந்த சூழ்நிலையில் இரண்டையும் ஒன்றாக வைத்துப் பார்க்கக் கூடாது. ஆகவேதான் நாம் முழுக்க முழுக்க பகுத்தறிவு கொள்கையைத் தாரளமாக வலியுறுத்துகின்றோம். பெரியாரை ஒரு முத்திரையாகப் பயன்படுத்தக் கூடாது.

பெரியார் அவர்களை ஒரு கொள்கையின் சின்னமாக மட்டுமே வைத்துப் பயன்படுத்தப்பட வேண்டும் என்பதுதான் நாம் இந்த இயக்கத்திற்கும் சொல்லக்கூடிய ஒன்று. ஒரு காலத்திலே பெரியாரைப் பரப்ப வேண்டும், பரப்ப வேண்டும் என்கிற கவலையெல்லாம் நமக்கு இருந்தது.
இப்பொழுது பெரியாரை மற்றவர்களிடமிருந்து காப்பது எப்படி? பாதுகாப்பது எப்படி? என்கின்ற கவலைதான் நம்மை இப்பொழுது உலுக்கிக் கொண்டிருக்கிறது.

எனவே பெரியாரையும் பரப்புவோம், பெரியாரையும் பாதுகாப்போம் - இவர்களிடமிருந்து என்பதுதான் மிக முக்கியம்.

ஒன்பதாவது அட்டவணை பாதுகாப்பானதா?

மாணவர் கேள்வி: 9-ஆவது அட்டவணை பாதுகாப்பானதா?

தமிழர் தமிழர்: பாதுகாப்பான ஏற்பாடுதான். ஆனால், உச்சநீதிமன்ற நீதிபதிகள் பலருக்கு இன்னமும் இது விளங்கவில்லை.

கொஞ்ச காலமானால் விளங்கும். அல்லது விளங்கவைக்க வேண்டிய பொறுப்பு மத்திய அரசாங்கத்திற்கும், உரிய முற்போக்கு சிந்தனையாளர்களைப் பெற்றுள்ள நாடாளுமன்றத்திற்கும் உண்டு.

ஆகவே அதை வலியுறுத்த வேண்டும். இது சட்டப்படித் தெளிவாக இருக்கிறது. ஒன்பதாவது அட்டவணையில் இருக்கக் கூடிய அந்தக் கருத்துகள் அதை மறுக்க இயலாத நீதிபதிகள் பார்ப்பனர்கள், உயர் ஜாதிக்காரர்கள் வேண்டுமென்றே அதற்குள்ளே ஒரு கோடு போட்டிருக்கின்றார்கள்.

இந்த ஆண்டிற்கு முன்னால்... இந்த ஆண்டிற்கு பின்னால்...

இந்த ஆண்டிற்கு முன்னால் வரையிலே, இந்த ஆண்டுக்குப் பின்னால் வரையிலே முன்னால் வரையிலே இருக்கக் கூடிய சட்டம் செல்லும். அதிலே நாங்கள் தலையிட முடியாது. ஆனால், பின்னால் இருக்கின்ற சட்டம் ஆய்வுக்குரியது என்று சொல்லுகின்றார்கள்.

பெரியார் சொன்ன மாதிரி தலைக்கொரு சீக்காய், தாடிக்கொரு சீக்காய் எப்படியிருக்க முடியும்? இருக்க முடியாது. ஆகவேதான் கோளாறு உள்ள நீதிபதிகள் குழப்பமான சிந்தனைகளுக்கு ஆளாகிறார்கள். அவர்கள் திருத்தப்படக்கூடிய வகையிலே காரியங்கள் நடைபெறவேண்டும். அழுத்தங்கள் கொடுக்கப்பட வேண்டும்.

சில நேரங்களில் சில மனிதர்கள்...

நாடாளுமன்றத்திலே இப்பொழுது முற்போக்கு சக்திகளினுடைய கையும் ஓங்கித்தான் வருகிறது. நல்ல சிந்தனையாளர்கள் நாடாளுமன்றக் குழுத் தலைவர்களாக இருந்து பல நல்ல காரியங்களை செய்து வருகிறார்கள் எனவே இடைவிடாமல் வற்புறுத்தினால் தெளிவாக நாம் இதை ஏற்றுக்கொள்ள முடியும். நம்முடைய நாட்டைப் பொறுத்தவரையிலே அய்வருக்கும் தேவியாம், அழியாத பத்தினியாம் என்று சொல்லிச் சொல்லி, ஆமாமாம் என்று தலையாட்டின நாடு நம்முடைய நாடு.

ஆகவே நீண்ட காலமாக அந்தக் கருத்து இருக்கின்ற காரணத்தால்தான் இந்த சூழ்நிலை. எனவே ஒன்பதாவது அட்டவணை சட்டப்படி, நியாயப்படி சரியானது. அதை பயன்படுத்துகின்ற நீதிபதிகளின் போக்குத்தான் சில நேரங்களில் தவறானது.

நம்முடைய ஜெயகாந்தன் அவர்கள் எழுதிய நாவலின் தலைப்பைத்தான் எடுத்துக் காட்டிக் கொள்ளவேண்டும். சில நேரங்களில் சில மனிதர்கள். அவ்வளவுதான். வேறு ஒன்றுமே இல்லை (சிரிப்பு, கைதட்டல்).

-------- (தொடரும்)

2 comments:

bala said...

//நல்ல சிந்தனையாளர்கள் நாடாளுமன்றக் குழுத் தலைவர்களாக இருந்து பல நல்ல காரியங்களை செய்து வருகிறார்கள் எனவே இடைவிடாமல் //

ஆமாங்க எனக்கு தெரிஞ்சு மூணு பேர் நாடாளுமன்றத்துல சிறந்த,பார் வியக்கும் வண்ணம் சிந்தனைத் திறம் படைத்தவர்களாக உள்ளனர்.அவர்கள்,முறையே,கனிமொழி,டி ஆர் பாலு,ராஜா.தலை கீழா நின்னாலும் அன்புமணியால் இந்த லிஸ்டில் சேர முடியாது.

பாலா

bala said...

//பெரியாரை ஒரு முத்திரையாகப் பயன்படுத்தக் கூடாது.//

தமிழ் ஓவியா அய்யா,
நம்ம ஊர் ம க இ க எனப்படும் தீவிரவாத நக்சல் கும்பல் கூட தங்கள் கொள்கை,பெரியாரிய,மார்க்ஸிய,பெண்ணிய,தலித்திய,பின்னவீனத்துவ போன்றவகைகளை உள்வாங்கிய சித்தாந்தம் என்று சொல்கிறார்களே.இதை நம்ம மானமிகு கருப்பு சட்டை,இரட்டை குழல் துப்பாக்கி புகழ்,வீரமணி அய்யா வரவேற்கிறாரா என்று கொஞ்சம் கேட்டு சொல்லுங்கய்யா.எதுக்கு கேட்கிறேனென்றால்,பெரியாரிஸம் என்றாலே மற்ற அனைத்து கொளகைகளையும் உள்ளடிக்கிய சிந்தனை தானே.அப்படியிருக்க அவர்கள் தங்கள் சித்தாந்தம் பெரியாரிஸத்தைவிட சிறந்த சிந்தனை என்று சொல்லி அய்யாவுக்கு வஞ்சனை செய்கிறார்களோ என்ற அய்யம் எனக்கு சில நாட்களாக தோன்றுகிறது.இதை முளையிலேயே கிள்ளிவிட வேண்டும் அல்லவா?

பெரியாரிஸத்தை நாம் உலக அளவில,அமெரிக்காவுக்கும்,இஸ்ரேலுக்கும் எடுத்துப் போய்,அங்கும் சமூக நீதி பரவ, போராட வேண்டிய வேளை வந்து விட்டதா என்றும் அறிய ஆவலாக உள்ளேன்.இதையும் கேட்டு சொல்லுங்கய்யா.

பாலா