Search This Blog

9.6.08

ஆதி திராவிடர் முன்னேற்றத்திற்கு அருமையானதோர் திட்டம்




தமிழ்நாடு அரசின் ஆதி திராவிடர் நலத்துறை வெளியிட்ட செய்திக் குறிப்பு வருமாறு: தமிழக அரசின் ஆதி திராவிட, பழங்குடியினர் கலை இலக்கிய மேம்பாட்டுப் பணிக்கான நிதியில் இருந்து 2008-09 ஆம் ஆண்டுக்கான சிறந்த ஆதி திராவிட, ஆதிதிராவிட கிறிஸ்தவர் மற்றும் பழங்குடியினர் பிரிவைச் சேர்ந்த 10 எழுத்தாளர்களைத் தேர்ந்து எடுத்து, அதிக அளவில் ரூ 20,000 வரை அல்லது நூல் வெளியிட ஆகும் செலவு, இவற்றில் எந்தத் தொகை குறைவாக உள்ளதோ அந்தத் தொகை நிதி உதவியாக வழங்கப்படும்.

ஆதிதிராவிடர் பற்றி எழுதும் ஆதிதிராவிடர் அல்லாத ஒருவருக்கும் பரிசு வழங்கப்படும். தமிழ் படைப்புகளுக்கு மட்டுமே நிதியுதவி வழங்கப்படும். மொழி பெயர்ப்புகளுக்கு நிதியுதவி வழங்கப்பட மாட்டாது.

தேர்ந்தெடுக்கப்படும் எழுத்தாளர்கள், தமது படைப்புகளை 90 பக்கங்களுக்குக் குறையாமல் தயாரித்து, 1000 பிரதிகளுக்குக் குறையாமல் தேர்ந்து எடுக்கப்பட்ட நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் வெளியிட வேண்டும்.

முறையான விண்ணப்பத்துடன் படைப்புகள் எழுத்து வடிவிலும், குறுந்தகடு வடிவிலும் அரசுக்கு ஜூன் 30 ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும் என்பதுதான் அச்செய்திக் குறிப்பு.
மானமிகு கலைஞர் அவர்களின் தலைமையிலான திமுக அரசு சமூகநீதியில் கொண்டுள்ள அக்கறையை இது வெளிப்படுத்துகிறது.

இதுபோன்ற சிந்தனைகள் திமுக அரசுக்கு மட்டுமே தோன்றுவதற்குக்காரணம் - திராவிட இயக்கம் என்ற உணர்வோடு அது இருப்பதுதான். திராவிடர் இயக்கம், தன்மான இயக்கம் எதற்காகத் தோற்றுவிக்கப்பட்டது? ஆண்டாண்டுக் காலமாக ஆரிய ஆதிக்கச் சமூகத்தில், வருணாசிரம அமைப்பில் கடைக் கோடியில் அழுத்தப்பட்ட மக்களின் சமத்துவ உரிமைக்கும், தன்மானத்துக்கும் குரல் கொடுத்த, பிரச்சாரம் செய்த போராடிய இயக்கமாகும்.

இந்த இயக்கத்தையே தாழ்த்தப்பட்ட மக்களின் ஜாதியைச் சொல்லி (பள்ளன் கட்சி என்றும் பறையன் கட்சி என்றும்) அழைக்கப்பட்ட காலம் ஒன்றுண்டு.
அண்ணல் அம்பேத்கர்மீது அன்பும், மதிப்பும் கொண்டு தமிழ்நாட்டு மக்கள் மத்தியில் தந்தை பெரியார் பொதுக் கூட்டங்களில் எல்லாம் எடுத்துக் கூறி வந்திருக்கிறார்கள்.
``ஜாதியை ஒழிக்க வழி என்ற அவர்தம் மாநாட்டு உரையைத் தமிழில் மொழி பெயர்ந்து வெளியிட்டவர் தந்தை பெரியார். பல பதிப்புகள் வெளியாகியுள்ளன.
சென்னை உயர்நீதிமன்றத்தில் உயர்நீதிபதியாக ஜஸ்டிஸ் திரு ஏ. வரதராசன் அவர்களை முதல் முதலாகக் கொண்டு வருவதற்குக் காரணமாக இருந்தது கலைஞர் தலைமையிலான திமுக ஆட்சிதான் அந்த ஜஸ்டிஸ் திரு ஏ. வரதராசன் அவர்கள்தான் உச்சநீதிமன்றத்திலும் நுழைந்த முதல் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த நீதிபதியாவார்.
இந்தப் பின்புலத்தை உணர்ந்து கொண்டால் தமிழ்நாடு அரசின் ஆதி திராவிடர் நலத்துறை தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த எழுத்தாளர்களை ஊக்குவிப்பதில் ஆச்சரியம் ஏதும் இருக்க முடியாது.
ஆதி திராவிடர்பற்றி எழுதும் ஆதி திராவிடர் அல்லாத ஒருவருக்குப் பரிசு அளிக்கப்படும் என்ற அறிவிப்பும் வரவேற்கத்தக்கதாகும்.
தாழ்த்தப்பட்டவர்களைப்பற்றி தாழ்த்தப்பட்டவர்கள் தான் எழுத வேண்டும், பேச வேண்டும் என்பதுகூட ஒரு ஜாதி வட்டத்துக்குள் அத்தகைய சிந்தனையை சிறைப்படுத்துவதாகும். ஆதி திராவிட மக்கள் வளர்ச்சி பற்றிய அக்கறை ஆதி திராவிடர் அல்லாத மக்கள் மத்தியிலும் இருக்க வேண்டியது மிகவும் அவசியமாகும்.
``பறையன் பட்டம் ஒழியாமல் சூத்திரன் பட்டம் ஒழியாது என்று எச்சரித்தவர் தந்தை பெரியார்.
தாழ்த்தபட்ட சமூக மக்கள்மீது சுமத்தப்பட்ட இழிவு இன்னும் முற்றாக ஒழிந்த பாடில்லை என்பது வெட்கக் கேடான ஒன்றே! தமிழ்நாட்டுக் கிராமப் பகுதிகளில் தேநீர்க் கடைகளில் இன்னும் இரட்டைக் குவளை முறை என்பது தலை குனியத் தக்கதாகும்.
அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை என்கிற அளவுக்குப் புதுச்சூழல்கள் பூத்துக் குலுங்கயிருக்கும் ஒரு கால கட்டத்தில் இந்த அவலம் நீடிக்க அனுமதிக்கக் கூடாது.
திராவிடர் கழகத்தைப் பொறுத்த வரையில் ஜாதி ஒழிப்பின் அடுத்த கட்டமாக பல்வேறு பணிகளை மேற்கொள்ளயிருக்கிறது. நாடெங்கும் ஜாதி ஒழிப்பு மாநாடுகளை நடத்தி விழிப்புணர்வுப் பிரச்சாரத்தில் ஈடுபடயிருக்கிறது.
ஆதி திராவிடர் எழுத்தாளர்களும் சரி, மற்றவர்களும் சரி, சமுதாய சமத்துவக் கண்ணோட்டத்தில், எளிமையான நடையில், மக்கள் மத்தியில் சேரும் நூல்களைக் கொண்டு வர முயற்சிக்க வேண்டும்.
அந்த முயற்சிக்குத் தமிழக அரசின் ஆதி திராவிடர் நலத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பு ஊக்கத்தைக் கொடுக்கும் என்பதில் அய்யமில்லை - இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்வார்களாக!


----------------------- "விடுதலை" தலையங்கம் -9-6-2008

0 comments: