Search This Blog

19.6.08

தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் என்றைக்கு உயர முடியும்?






ஏன் பெரிய பெரிய கொள்கைகள், குறிக்கோள்கள், எண்ணங்கள் எல்லாம் பெரும் பாடுபட்டும் கூட தந்தை பெரியார், அறிஞர் அண்ணா போன்ற அறிவுலக மேதைகளாலும், அண்ணல் அம்பேத்கர் போன்ற அத்தகைய அறிஞர் பெருமக்களாலும் சொல்லப்பட்ட இந்தக் கருத்துகளெல்லாம் ஏன் இன்னும் முழுமையான அளவில் வெற்றி பெறவில்லை என்றால், அதிலேதான் வருந்தத்தக்க செய்தி உள்ளது.

இந்தக் கருத்துகள் யாருக்காக சொல்லப்படுகிறதோ அவர்கள் இந்தக் கருத்துகளை ஏற்றுக் கொள்ளாதவர்களாக இருக்கிறார்கள். யாருக்காக இந்தத் தலைவர்கள் பாடுபடுகிறார்களோ அவர்கள் இந்தத் தலைவர்களை ஏற்றுக் கொள்ளாதவர்களாக இருக்கிறார்கள். யாருக்குப் பாடுபடுகிறார்கள் என்பதைத் தெரிந்து கொள்ளாதவர்களாக ஒரு பெரிய சமுதாயம் இருக்கின்றது.

நான் ஒருமுறை பெரியார் அவர்களிடத்திலே பேசிக் கொண்டிருக்கும்போது “அய்யா! நாம் பிற்படுத்தப்பட்ட மக்களுக்காக உழைத்துப் பாடுபடுகிறோம். இவ்வளவு சலுகைகள் அறிவிக்கிறோம். அதைப் போலவே தாழ்த்தப்பட்ட ஆதிதிராவிட மக்களுக்காக நாம் பணியாற்றிக்கொண்டு இருக்கிறோம். ஆனால் அவர்கள் நம்மை உணர்ந்ததாகத் தெரியவில்லையே?” என்று கேட்டபோது, பெரியார் சொன்னார்: “அதனால்தான் அவர்கள் இன்னமும் பிற்படுத்தப்பட்டவர்களாகவே இருக்கிறார்கள். இன்னமும் தாழ்த்தப்பட்டவர்களாகவே இருக்கிறார்கள். அவர்கள் நம்மைப் புரிந்து கொண்டால், நம்முடைய எண்ணங்களைப் புரிந்து கொண்டால் அவர்கள் உயர்ந்து விடுவார்கள். அவர்கள் வாழ்க்கையை நடத்த முற்படுவார்கள். வாழ்க்கையினுடைய உண்மையை உணருவார்கள்” என்று பெரியார் அவர்கள் கூறினார்கள்.

-------------- முதல்வர் கலைஞர் அவர்களின் நெல்லைப் பேச்சு -"விடுதலை" 19-6-2007

0 comments: