Search This Blog

2.6.08

கலைஞரின் முத்திரைகள்





மானமிகு இல்லையேல்...

நான் தலைவனாக விளங்குகின்றேனோ இல்லையோ, இளமை தொட்டு தென்னையின் விழாத மட்டைகள் தரும் பயன்களையும், விழுந்த மட்டைகள் தரும் பயன்களையும், மறைந்த மட்டைகள் விட்டுச் சென்ற வடுக்களையும் கண்டுணர்ந்து தொண்டுள்ளத்தைத் தொலைக்காமல் இருப்பவன். மானமிகு இல்லையேல், மாண்புமிகுக்கு மதிப்பில்லை என்று அறிந்தவன்
---------(முரசொலி 15.9.2006)

சுயமரியாதை இயக்கத்தின் குறிக்கோள்

கேள்வி: வேகமாக வளரும் மாநிலமான தமிழகத்தில் இன்னமும் சாதி, மத ரீதியான பிளவு இருப்பது சரிதானா? பார்ப்பனர்-சூத்திரர், இந்து-திராவிடர் என்பது போன்ற சர்ச்சைகளில் நீங்களும் பங்கு கொள்கிறீர்களே?

பதில்: சர்ச்சைகளைத் தவிர்க்க வேண்டும் என்பதற்கான சமத்துவ நிலையில் ஏற்படுத்துவதுதானே சுயமரியாதை இயக்கத்தின் கொள்கை, குறிக்கோள்! அந்த இயக்கத்தில் என் பங்கு இல்லாமல் எப்படி இருக்கும்?

கேள்வி: தமிழக அரசியல் மற்றும் ஏனைய அம்சங்களிலும் அகில இந்திய அரசியலிலும் பல படிகள் வளர்ந்துவிட்ட தி.மு.க. இன்னும் தனது அடிப்படை பார்ப்பன எதிர்ப்பை வைத்துக் கொண்டிருக்கிறதே - ஏன்?

பதில்: தி.மு.க. பார்ப்பனியத்தைத்தான் எதிர்க்கிறது. தனிப்பட்ட பார்ப்பனரை அல்ல. பார்ப்பானை அய்யர் என்ற காலமும் போச்சே! என்று பாரதியார்தான் பாடியிருக்கிறார்.

------------------ (இந்தியா டுடே, 17.1.2007)

பெரியாரின் கொச்சைத் தமிழ்தான் வென்றது

நாங்கள் அழகாக எழுதி அண்ணாவைப் போல் எழுத முயற்சித்து, அண்ணாவைப் போல் எழுதிப் பார்த்து, புரட்சிக் கவிஞரைப் போல எழுத வேண்டுமென்று முயற்சித்து, அதைப்போல கவிதைகளை எழுதி, எவ்வளவு எழுதினாலும் அத்துணையும் தந்தை பெரியார் அவர்களுடைய அந்தக் கொச்சைத் தமிழுக்கு முன்னால் என்றைக்கும் நின்றதில்லை. அந்தக் கொச்சைத் தமிழ்தான் இன்றைய சாதிய ஒழிப்புக்கு, மதமாச்சரியங் களால் ஏற்படுகின்ற மடைமைகளைக் கொளுத்துவதற்குப் பயன்பட்டிருக்கின்றது.

----------- (13.11.2006 அன்று சென்னை - கலைவாணர் அரங்கில் நடைபெற்ற சமத்துவப் பெருவிழாவில்)

திராவிடன் என்றால் யார்?

தமிழ்நாட்டின் சரித்திரத்தில் திராவிடன் என்ற சொல் மறைந்து போய்விட்டது. இன்றைக்கு யார் யாரோ திராவிடன் என்று, அந்தச் சொல்லுக்குள்ள மகிமை தெரியாமல் திராவிடன் என்று சொல்லிக் கொள்கிறார்கள். திராவிடன் என்றால் அவன் மூடநம்பிக்கைக்கு விரோதி; ஆரிய தருமத்திற்கு விரோதி; நூற்றுக்கணக்கான சாதிகள் என்று சொல்லுகின்ற அந்த மனுதர்மத்திற்கு விரோதி; மனிதனை மனிதனாக மதிக்க வேண்டும், மானத்தோடு வாழ வேண்டும். இந்தக் கொள்கையை ஏற்றுக் கொண்டவன் தான் திராவிடன்.

------ (11.10.2006 அன்று சேலத்தில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில்)

செந்நீர் இருக்கிறது!

கேள்வி: போகிற போக்கைக் கவனித்தால் கண்ணீரும், செந்நீரும் சிந்தி வளர்த்த பயிராம் இடஒதுக்கீடுக் கொள்கைக்கு கல்லறை கட்டப்படுமோ என்ற சந்தேகம் எழுகிறதே?
கலைஞர்: அஞ்சற்க - கண்ணீர் முழுவதும் காய்ந்து விடினும்; சிந்துவதற்குச் செந்நீர் நிறைய இருக்கிறது - பெரியார், அண்ணா, காமராசர் ஆகிய மூவரும் உருவாக்கிய பட்டாளத்துப் போர்வீரர்களிடம்.

---------------(முரசொலி, 12.1.2007)

குறிப்பு: அரசமைப்புச் சட்டத்தில் ஒன்பதாவது அட்டவணையில் சேர்க்கப்பட்ட சட்டங்களுக்கு நீதிமன்ற பரிசீலனையிலிருந்து, ஒட்டுமொத்தமாக விலக்கு அளிக்க இயலாது என்று தலைமை நீதிபதி சபர்வால் தலைமையிலான ஒன்பது நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் ஒரு மனதாகத் தீர்ப்பு அளித்தது (11.1.2007) குறித்து மேற்கண்டவாறு முதல் அமைச்சர் கலைஞர் கருத்துக் கூறினார்.

தி.க.வுக்கு அடுத்தபடியாக தி.மு.க.

அரசியலுக்கு வந்த காரணத்தால் சமுதாயத்தில் புரட்சியையும் நாம் மறந்துவிடவில்லை. ஆனால், இப்போது ஏற்படுகின்ற புதிய கட்சிகளைப் பாருங்கள். திராவிட என்ற சொல்லை அவர்கள் பயன்படுத்திக் கொண்டு பெயரை வைத்தாலுங்கூட, சமுதாயத்தைப் பற்றிப் பேசப் பயப்படுவார்கள். கடவுளின் பெயரால் நடைபெறுகின்ற அக்கிரமங்களைக் கண்டிக்க அஞ்சுவார்கள். சாதியின் பெயரால் நடைபெறுகின்ற சதிச் செயல்களை எல்லாம் வீழ்த்த வேண்டும் என்று சொல்லுகின்ற தைரியமும், அந்த அஞ்சாமையும், அந்தத் துணிவும் எந்தத் திராவிட இயக்கத்திற்கு ஏற்படுமென்றால், திராவிடர் கழகத்திற்கு நிகராக அடுத்தப்படியாக அந்த உணர்வு ஏற்படக் கூடிய ஒரே இயக்கம் திராவிட முன்னேற்றக் கழகம் தான் என்பதை மறந்து விடக் கூடாது.

-------------- (முரசொலி 15.9.2006)

(முதல் அமைச்சர் மாண்புமிகு கலைஞர் அவர்கள் பலநேரங்களில் உதிர்த்தவை இவை)

0 comments: