Search This Blog

3.6.08

கலைஞர் அவர்களின் பிறந்த நாள் செய்தி







85 எனச் சொல்லி என்னைக் கிழவனாகவே ஆக்கி விட்டீர் !
எட்டும் அஞ்சும் கூட்டிய என் பதின்மூன்றாம் வயதினிலே;
எட்டிநில் தொடாதே ! என்ற வைதிகத்தைப் புரட்டிப் போட்டுவிட்டு
அட்டியில்லை அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்பதற்குச்
சட்டமியற்றி ஆகம விதிப்படி ஆண்டவன் சன்னதியில் அந்த உரிமை பெற
அய்யா பெரியாரின் உழைப்புக்கே ஆயிற்று அறுபது ஆண்டு எனில்;
அதிலோர் துளியாக ஆட்சித் தலைவனாம் என் தொண்டும் அமைந்துள்ளதே!
அவரின் முதிர்ந்த வயதில் ஒரு முள் வைத்துப் புதைத்தோம் என்று
அதிர்ந்த அந்தக் கல்லறை அமைதி பெற்றது அதன் பிறகு தானே!

திராவிடப் பெருந் தலைவருக்கு மட்டுமல்ல; தேர்தல் நேரத்திலும்
மக்களுக்களித்த வாக்குறுதிகள் அனைத்தையும் -
தினந்தோறும் ஒரு சாதனையாகச் செய்து முடிக்கின்றோம்;
சினங்காங்கும் சான்றோராக அரசியல் சீற்றம் தாங்குகின்றோம்;
இனம் வாழ ஏற்ற வழி யெல்லாம் வகுக்கின்றோம்;
நிலம் தழைக்க நீரில்லாமல் பல நேரம் வாடுகின்றோம் -
இயற்கையின் கருணை இல்லாமற் போவதும் இருப்போர் தர மறுப்பதுமே
உணர்ந்து, சேமித்து வைக்கும்
செயற்கையின் பயனைத் தமிழர் சேமமுறவே திருப்புகின்றோம்.
ஆயினும் ஒரு கவலை; அய்யா, அண்ணா, காமராஜர் கண்ட கனவொன்று
இன்றும் நிறைவேறாமல் இதயம் துடிக்கின்றது.
இந்தத் துயரமெல்லாம் தீர்வதற்கே நிலையான பெருந்திட்டங்கள் தேவையென்று;
நிறைவேற்றி வருகின்றோம் அடுக்கடுக்காக முடிந்த வரையில்!
அதிலோர் அற்புதத் திட்டமே
சேது சமுத்திரத் திட்டமாகும் -
செந்தமிழ் நாட்டில் செழிப்பு துள்ளவும்,
வாணிபம் பெருகி வளங்கள் சிறக்கவும்
ஏதுமில்லை நமக்கு வேறு வழி!
சேதுத் திட்டம் ஒன்றே நமக்குச் சரித்திரக் கட்டாயம்!
சூது நினைவால் அதையும் தடுத்திட முனையாமல்
நாடு மொழி வாழ நாளெல்லாம் உழைத்த என் நடுங்கும் குரலுக்கு மதிப்பளித்து;
இராமன் பெயர் கூறி திட்டத்தையே தீர்த்துக் கட்டி விடாமல்
என் பிறந்த நாள் செய்தியாகவே வேண்டுகோள் ஒன்று விடுக்கின்றேன்.
வேண்டுமானால்; சேது ராம் திட்டமென்றே பெயரிடுக!
வெறுப்பு விருப்பு கடந்து நாடு வாழ்வதற்கும், நலிவு தீர்வதற்கும்
நான் தெரிவிக்கும் பிறந்த நாள் செய்தி இது!

0 comments: