Search This Blog

12.6.08

அரண்மனை சுக போகத்தில் வாழ வேண்டிய பெரியார்அன்றாடம் காய்ச்சி மக்களுக்காகப் பாடுபட்டாரே -ஏன்?


ஆண் - பெண் சேர்க்கை இல்லாமல் குழந்தை

பெரியார் அவர்கள் எல்லா துறையிலும் கருத்து சொல்லியிருக்கின்றார். பெரியார் சொல்கிறார். ஆண் + பெண் சேர்க்கை இல்லாமல் குழந்தை பெறலாம் என்று சொன்னார். அன்றைக்கு எல்லோரும் கேலி பண்ணினார்கள்.

இப்பொழுது பரிசோதனை குழாய் குழந்தை (கூநளவ கூரநெ க்ஷயலெ) எங்கே பார்த்தாலும் வந்தாகிவிட்டது.

வாடகைத் தாய்

இப்பொழுது வாடகைத் தாய் என்று பத்திரிகைகளில் எழுதுகிறார்கள். பெரியார் அவர்கள் காலத்தைத் தாண்டி சிந்தித்தவர். பெரியார் 100 ஆண்டுகளுக்கு முன்னால் போய் சிந்திப்பார். பெரியார் அன்றைக்கு என்னென்ன சொன்னாரோ அவை அத்தனையும் வந்துவிட்டது. ஒரு சின்ன விஷயம் பாருங்கள்.

எல்லோரிடத்திலும் செல்ஃபோன்

`இனிவரும் உலகம்’ என்ற தலைப்பில் அய்யா அவர்கள் சொல்லியிருக்கின்றார். இனிமேல் வருங் காலத்தில் தொலைப்பேசி ஒவ்வொருவருடைய தொப்பியிலும், கையிலும் இருக்கும் என்று சொன்னார்.

இப்பொழுது செல்ஃபோன் எல்லோரிடத்திலும் இருக்கிறது. எங்கே பார்த்தாலும் சளசளவென சத்தம். நல்ல வாய்ப்பாக இந்த நிகழ்ச்சியில் கொஞ்சம் அதிகம் சத்தம் கேட்காமல் இருக்கிறது.
சும்மா இருக்கிறவன் என்ன திடீரென்று சிரித்துக் கொண்டு, தானே பேசிக் கொண்டிருக்கிறான் என்று பார்த்தால் காரணம், ஒயரை காதில் மாட்டிக் கொண்டு செல்ஃ-போனை சட்டைப் பாக்கெட்டில் வைத்திருக்கின்றார். `ஓகோ! செல்ஃ-போனில் பேசிக் கொண்டிருக்கிறார் என்பது பிறகுதான் தெரியவருகிறது. இப்பொழுது ஒவ்வொரு மனிதனும் தனித்தனியாக சிரிக்கிறான். தனித்-தனியாக பேசிக் கொண்டிருக்கிறான் (பலத்த கைதட்டல்).

அய்யா அவர்கள் படிக்காதவர். தனது சொந்த புத்தியால்தான் இவ்வளவையும் சிந்தித்தவர். டீசபைiயேட கூhiமேநச, ஒப்பற்ற சுய சிந்தனையாளர். பெண்ணுரிமைகளைப் பற்றி எல்லாம் சொல்லிக் கொண்டு வந்த பெரியார் பட்டென்று ஒன்றை சொன்னார்.

ஆண்களுக்கு வருத்தமாக இருக்கும்

ஆண்களே! பெண்களுக்கு உரிமை கொடுத்துவிட்டால் நம்முடைய கதி என்ன ஆவது? என்று நினைப்பீர்கள். உங்களுக்கு கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருக்கும். ஒவ்வொரு ஆணும் இப்படித்தான் நினைப்பார்கள்.

அய்யா அவர்கள் அதற்கு பதில் சொன்னார். தயவு செய்து உங்கள் மனைவிமார்களை நினைத்துக் கொண்டு பார்க்காதீர்கள். அப்படி பார்த்தால் சரியாக வராது. உங்கள் மகளை நினைத்துக் கொண்டு பாருங்கள் (பலத்த கைதட்டல்).

உங்கள் தாயை நினைத்துக்-கொண்டு பாருங்கள். உங்கள் தங்கையை நினைத்துக் கொண்டு பாருங்கள் (கைதட்டல்). என்னுடைய மகள் சுதந்திரமாக இருக்கவேண்டும் என்று நினையுங்கள்.

இரட்டை அளவு கோல்

ஒரு தாயாரைப் பார்த்துக் கேளுங்கள். `ஏங்க உங்கள் மகனுக்குத் திருமணமாகி விட்டதா? நன்றாக இருக்கிறாரா? என்று கேட்டால் ரொம்ப மகிழ்ச்சியாக நன்றாக இருக்கிறார்’ என்று பதில் சொல்லுவார்.

ஏங்க உங்கள் மருமகள் எப்படி இருக்கிறார் என்று கேட்டுப் பாருங்கள். `அதை ஏங்க கேட்கிறீர்கள். அது வந்ததிலிருந்தே எங்களிடம் பேசுவதே இல்லை. என்னமோ தெரிய வில்லை’ என்று சொல்லுவார். அதே காரியம்தான் நடக்கிறது. ஆனால், இந்த இடத்தில் இரண்டுபேருக்கு இரட்டை அளவு கோலை வைத்துப் பார்க்கிறார்கள். இந்த இரட்டை அளவுகோல் எதற்காகத் தேவை? என்று தந்தை பெரியார்தான் கேட்டார்.

பார்ப்பனருக்கு ஒரு நீதி

எப்படி பார்ப்பனருக்கு ஒரு நீதி, தாழ்த்தப்பட்டவருக்கு ஒரு நீதி என்று மனு தர்மத்தில் எழுதியிருக்கின்றார் களோ, அதே மாதிரிதான் பெண் களின் நிலையும் இருக்கிறது.
ஜாதி அமைப்பில் பார்த்தீர்களேயானால், பிராமண, சத்திரிய, வைசிய, சூத்திரர் என்று நான்கு ஜாதிகள். அய்ந்தாவது ஜாதிதான் பஞ்சம ஜாதி. நான் அடிக்கடி பல கூட்டங்களில் சொல்லியிருக்கிறேன். இங்கு இருக்கிற வயதானவர்களுக்குத் தெரியும். இளைஞர்களுக்குத் தெரியாது.

பஞ்சமன் எங்கே பிறந்தான்?

அய்யா அவர்களிடம் கேட்டார்கள். ஏங்க பிரம்மாவின் கால்வரை நான்கு ஜாதிகள் சூத்திர ஜாதிவரை பிறந்தாகிவிட்டதே. இந்த அய்ந்தாவது ஜாதி பஞ்சமன் எங்கேயிருந்து பிறந்தான்? பிறப்பதற்கு இடமே இல்லையே எப்படி பிறந்தான்? எங்கிருந்து பிறந்தான் என்று கேள்வி கேட்டார்கள்.

அந்த கேள்வி கேட்டவர் எழுதிய சீட்டைப் படித்துவிட்டு அய்யா அவர்கள்தான் பளிச்சென்று பதில் சொன்னார். `அவன்தாண்டா அவுங்க அப்பாவுக்கும், அம்மாவுக்கும் பிறக்க வேண்டிய இடத்திலிருந்து பிறந்திருக்கிறான் போ!’ என்று பதில் சொன்னார் (பலத்த கைதட்டல்).


பெண்களின் நிலையோ

வர்ணாசிரம தர்ம அடுக்குமுறை, ஜாதிய அடுக்குமுறை இருக்கிறது பாருங்கள் அய்ந்தாவது ஜாதிக்குக் கீழே கடைசியாக ஒரு அடுக்கு முறை இருக்கிறது. அவர்கள்தான் பெண்கள். உயர்ஜாதிப் பெண்களாக இருந்தாலும் அவர்களுக்கும் உரிமை கொடுப்பதில்லை.

அதற்கு என்ன காரணம் தெரியுங்களா? ரொம்ப பேருக்கு இதுவரையிலே தெரியாது.
ஆரம்பத்தில் ஆரியர்கள் இந்த நாட்டிற்கு ஆடு மாடுகளை ஓட்டிக் கொண்டு வந்துபொழுது, ஆண்கள் மட்டும்தான் வந்தார்களே தவிர பெண்களை அழைத்துக் கொண்டு வரவில்லை (பலத்த கைதட்டல்). பிறகு அவர்கள் வாழ்விணையர்களான ஆனது இந்த நாட்டுப் பெண்களோடுதான். ஆகவே ஆண்களுக்கு இருக்கிற அதே வாய்ப்பு, வசதி பெண்களுக்குக் கொடுத்துவிடக் கூடாது என்று நினைத்தக் காரணத்தால் பெண்களை அடிமைப்படுத்தி வைத்திருந்தார்கள். பஞ்சமர்களுக்கு கீழே பெண்களை வைத்திருந்தார்கள்.

அதுதான் ரகசியம் என்பதை நீங்கள் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும். ஆகவேதான் பெண்களை கீழ்மைப்படுத்தி வைத்தார்கள். பெண்களைப் படிக்கக்கூடாது என்று ஆக்கிவைத்து விட்டார்கள். பெண்களுக்கு உத்தியோகம் கொடுக்கக் கூடாது என்று சொன்னான்.
நல்ல வாய்ப்பாக இன்றைக்கு இதெல்லாம் மாறிவிட்டதே.

ஜாதியை ஒழித்தார்

அய்யா அவர்கள் அதே மாதிரிதான் ஜாதி ஒழிப்பில் ஈடுபட்டார்கள். எல்லா இடங்களிலும் ஜாதி பாம்பை அடித்தார் பெரியார். வைக்கத்தில் ஜாதியை ஒழித்தார். சேரன் மாதேவி குருகுலத்தில் மாணவர்களிடையே ஜாதி வேறுபாடு பேதம் காட்டப் பட்டதினுடைய விளைவாக அந்த சம்பவத்தை பெரியார் ராஜாஜியிடம் சொல்கிறார். இந்தக் காட்சி பெரியார் திரைப்படத்தில் காட்டப்பட்டுக் கொண்டிருக்கிறது. அய்யா அவர்கள் அந்த காலத்திலே ஒவ்வொன்றிலும் வெற்றி பெற்றுக் கொண்டே வந்திருக்கிறார்.

உடல் உபாதையை
தாங்கிக் கொண்டு...


தனது கடைசி காலத்திலே 95 வயதுவரை அவருக்கு இயற்கையாக சிறுநீர் பிரியவில்லை. உடலில் அவருக்கு ஒரு அறுவைச் சிகிச்சை செய்து, உடலில் ஒரு ரப்பர் குழாயை இணைத்து, அந்தக் குழாயில் எந்த நேரமும் சிறுநீர் வடிந்துகொண்டே இருக்கிற நிலையில் அந்த ரப்பர் குழாயை ஒரு பாட்டலில் பொருத்தி, அதை ஒரு பிளாஸ்டிக் வாளியில் வைத்து அந்த வாளியைத் தூக்கிக் கொண்டு கடும் உபாதையை ஏற்றுக் கொண்டு தனது 95 வயதுவரை பிரச்சாரம் செய்தார்கள்.

அரண்மனை சுகபோகத்தில்

அரண்மனை சுக போகத்திலே இருக்கவேண்டிய தந்தை பெரியார் அன்றாடம் எளிய மக்களுக்காக ஏழை மக்களுக்காக ஒடுக்கப்பட்ட மக்களுக்காக உயர் ஜாதி வர்க்க ஆணவ சுரண்டலிலிருந்து அவர்கள் வெளியே வரவேண்டும் என்பதற்காக அவர்கள் அரும்பாடுபட்டு, வெளியே வந்தார்கள் என்பதை நீங்கள் நினைத்துப் பார்க்க வேண்டும்.

அய்யா அவர்களின்
சமூக அக்கறை


அய்யா அவர்களுக்கு ஒவ்வொரு காலகட்டத்திலும் சமூக அக்கறை இருந்தது. தனக்கு 95 வயது ஆகிவிட்டதே என்று தந்தை பெரியார் அவர்கள் கவலைப்படவில்லை. நமக்குத்தான் நோய் வந்துவிட்டதே என்று கவலைப்படவில்லை.

அய்யா அவர்களுக்கு இந்த பக்கம் இரண்டு பேர் அந்த பக்கம் இரண்டு பேர். அவர்களின் தோளைப் பற்றிக் கொண்டு நடந்தே வந்து பிரச்சாரம் செய்தார். இதை அருகில் இருந்தவர்கள் பார்ப்பதற்கு சங்கடமாக இருக்கும்.

அய்யா அவர்கள் சொன்னார்கள். உங்களுக்கெல்லாம் இரண்டு கால்கள். எனக்கோ ஆறு கால்கள் என்று சொன்னார்.


ஜாதி ஓடி ஒளிந்த இடம்!

இருந்தாலும் மனித சமுதாயத்திற்கு இறுதி மூச்சு அடங்குகிறவரை நான் தொண்டு செய்வேன் என்று தனது இறுதி மூச்சு அடங்குகிறவரைப் பிரச்சாரம் செய்தவர் தந்தை பெரியார் (பலத்த கைதட்டல்). அய்யா அவர்கள் கடைசியாகச் சொன்னார்.

பள்ளிக்கூடத்திலிருந்து வெளியே வந்த ஜாதிப் பாம்பை அடித்தேன். அடுத்து ஓட்டலிலிருந்து வெளியே வந்தது. அதற்கு முன்பு சூத்திரர்கள் சாப்பிடும் இடம், பிராமணர்கள் சாப்பிடும் இடம் என்றெல்லவா இருந்தது. நம்மாள்தானே இலையை எடுத்துப் போடுவான். இன்றைக்கு நிலைமை அப்படிஅல்லவே.

ஜாதிப் பாம்பை கோயிலுக்குள்...

கடைசியில் கோயிலுக்குள் ஜாதிப் பாம்பு ஓடி ஒளிந்தது. அதையும் பெரியார் விடவில்லை. பெரியாருடைய நுண்ணாடி எதையும் விடவில்லை. அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகவேண்டும். ஆதிதிராவிடர் உட்பட, எல்லா ஜாதியினரும் அர்ச்சகர் ஆகவேண்டும் என்று தந்தை பெரியார் சொன்னார்.

உடனே வழக்கம்போல கேட்டார்கள். நீங்கள்தான் கடவுளே இல்லையென்று சொல்கிறவர்கள் ஆயிற்றே.

இது மனித உரிமை அல்லவா?

எந்த ஜாதிக்காரர் அர்ச்சகர் ஆனால், உங்களுக்கு என்ன கவலை? அய்யா அவர்கள் உடனே பதில் சொன்னார். கடவுள் இல்லையென்பது என் கொள்கை. கோயிலுக்குப் போகிற எல்லோருக்கும் சமத்துவம் கிடைக்க வேண்டும். சம உரிமை கிடைக்கவேண்டும் என்பது மனித உரிமையினுடைய வேட்கை எனக்கு.

எனது சகோதரர் கோயிலுக்குப் போகிறார். அவரை சூத்திரர் என்று சொன்னால் என்னுடைய அம்மாவை தேவடியாள் என்று சொல்வதாகத்தானே அர்த்தம். இல்லைங்க, என்னுடைய தம்பியைத்தான் சொல்கிறார்கள் என்று நான் விட்டுவிட முடியுமா?


அனைத்து ஜாதியினர் அர்ச்சகர்

அதைத்தான் தந்தை பெரியார் அவர்கள் பளிச்சென்று கேட்டார். நல்ல வாய்ப்பாக இன்றைக்கு கலைஞர் அவர்கள் ஆட்சியில் இருக்கின்ற காரணத்தால் நீங்கள் கவலைப்படத் தேவையில்லை. நானே ஒரு சட்டம் கொண்டு வருகின்றேன். அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆவார்கள். அதன்மூலம் சமத்துவம் வரட்டும் என்று சொன்னார். அய்ந்தாவது முறையாக கலைஞர் அவர்கள் ஆட்சிக்கு வந்ததினுடைய விளைவாக அவர் செய்தார்.

முதல் அமைச்சரவைக் கூட்டத்திலே

பெரியார் நெஞ்சினில் தைத்த முள்ளோடு நான் அடக்கம் செய்துவிட்டேனே. அந்த முள்ளை இந்த முறை ஆட்சிக்கு வந்தால் அகற்றுவேன் என்று சொன்னார்.
அவர் ஆட்சிக்கு வந்தவுடனே முதல் அமைச்சரவைக் கூட்டத்தில் முதல் தீர்மானமாக இந்தத் தீர்-மானத்தைத்தான் அவர்கள் நிறைவேற்றினார். சட்டம் கொண்டு வந்தார்.


-----------மும்பையில் 30.5.2007 அன்று நடைபெற்ற தந்தை பெரியார் மற்றும் தமிழர் தலைவர் கி. வீரமணி ஆகியோரின் நூல்கள் வெளியீட்டு விழாவில் திராவிடர் கழகத் தலைவர், தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள் ஆற்றிய உரையிலிருந்து

0 comments: