Search This Blog

15.6.08

இரமாயணமும் தமிழரும்



தமிழர்கள் எதற்காக இராமனை வணங்குதோ, இராமாயணத்தை ஒரு பக்தி சரித்திரமாகக் கொள்ளுவதோ ஆன காரியம் செய்ய வேண்டும்?

தமிழன், நாட்டில், கலையில், மொழியில் ஆரியர்களிடமிருந்து வேறுபட்டவன்.
கடவுளிலும், சமயத்திலும், சரித்திர புராண இதிகாசங்களிலும், இலக்கியத்திலும் வேறுபட்டவன். இவை மாத்திரமல்லாமல் சமுதாயத்திலும் இழிவு படுத்தப்பட்டு ஆரியனிலிருந்து தாழ்வு படுத்தப் பட்டவன்.

ஆரியரால் தமிழருக்கு இழி நிலை

இந்த இழிவுக்கும் தாழ்வுக்கும் ஏற்பவே ஆரியன் கடவுள், மத, சாத்திர, தர்ம புராண இதிகாசங்களை அவனது மொழியில் இயற்றிக் கொண்டிருக்கிறான்.

அவற்றை தமிழன் தன் மொழியில் மொழி பெயர்த்து அவற்றிற்கு அடிமையாகி இழிநிலையில் இருப்பதோடு, இழிவை ஏற்றுக் கொள்ளுவதற்கு ஆகவே அவைகளை தன்னுடையது என்று உரிமை கொண்டு ஏற்ற இழிவை உறுதிப்படுத்திக் கொள்வது தமிழனுக்கு அறிவுடைமை யாகுமா? மானமுடையதாகுமா?

இந்திய தீபகற்பம் 53 தேசங்களைக் கொண்ட ஒரு உபகண்டமாய் இருந்த காலத்தில், ஆரியனுக்கும் திராவி டனுக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லாமல் தனித்தனி நாட்டானாகவும் ஒருவனுக்கு ஒருவன் அயல் நாட்டானாகவுமே இருந்து வந்திருக்கிறான்.

அப்போது தமிழனுக்கு கடவுள், சமயம் முதலியவை வேறாகவே இருந்திருக்கிறது.
ஆரியத்துக்கு தமிழர் எதிர்ப்பு 2500 ஆண்டுகட்கு பின்பே
சுமார் 2500 ஆண்டுகளுக்குப் பின்புதான் ஆரியம் தமிழகத்திற்குள் நுழைந்திருப்பதாகத் தெரிகிறது. ஆரியத்திற்கு எதிர்ப்பும் திராவிடத்தில் பலமாக இருந்திருக்கிற தாகவும் தெரியக் கிடக்கிறது.

நாளாவட்டத்தில் ஆரியம், திராவிடத்தில் சிறப்பாக தமிழ்நாட்டில் வளர்ந்து, அரசர்களின் மடமையால் இரண்டறக் கலந்து திராவிடரை ஆரியம் அடிமை கொண்டுவிட்டது.

ஆரியரை வெறுத்தால்தான் மான வாழ்வு

இன்று ஒரு சிறு அளவாவது ஆரியத்தில் இருந்து திராவிடம், தமிழன் விடுதலையும் உரிமையும் பெற்று வருகிறான் என்றால், அது ஆரிய வெறுப்பினாலும், ஆரிய கடவுள்களையும், சாதி, தர்ம, புராண, இதிகாசங்களின் பகிஷ்காரத்தினாலுமே அல்லாமல் திராவிடனின் அறிவுணர்ச்சியாலோ, சுயமரியாதை உணர்ச்சியாலோ அல்லவே அல்ல. இனியும் நல்ல அளவுக்கு திராவிடர் - தமிழன் அறிவும் மானமும் பெற்று உலக மக்களைப் போல விடுதலையும் சுதந்திரமும் பெற்று வாழ வேண்டுமானால், எந்த அளவுக்கு தமிழன் ஆரியக் கடவுள், மத சாஸ்திர, தர்மபுராண இதிகாச சம்பிரதாயக் கலாசாரத்தில் இருந்து விலகுகிறானோ அந்த அளவுக்குத்தான் நிறைவேறும் என்று துணிந்து கூறுவேன்.

ஆரியத்தை திராவிடர்மீது திணிப்பவர் துரோகிகளே

இன்று மடமையினாலோ, மானமற்ற தன்மையாலோ, சுயநலத்திற்காகவோ, ஆரியத்திற்கு ஆரியனுக்கு அடிமையாகி, ஆரிய கடவுள், மத, சாஸ்திர, தர்ம, கலாச்சார, புராண, இதிகாசங்களுக்கு அடிமையாகியும் திரவிடருக்குள் அவைகளைப் புகுத்தவும் முயலுகிற திராவிடன், திராவிட மந்திரி, திராவிட அதிகாரிகள், திராவிடப் புலவர்கள், திராவிட அரசியல்வாதிகள், திராவிட ஆரிய அடிமைகள் தமிழர்களுக்குக் கேடு செய்யும் பச்சைத் துரோகிகளே ஆவார்கள்.

திராவிட அதிகாரிகளுக்கு மானமும் ரோஷமும் வரவேண்டுமென்பதற்காகவே இதை எழுதுகிறேன்.

-------------தந்தைபெரியார் - "விடுதலை" 4-5-1972

0 comments: