Search This Blog

10.12.10

இந்த நாடு பெரியார் நாடு - பார்ப்பனர் நாடல்ல


நமது கழக மேடைகளிலும், பல கட்சி களின் பொதுக்கூட்டங்களிலும் அடிபடும் ஒரு தகவல் - 1971 சேலம் மாநாடு - 1971 தமிழ்நாட்டில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தல்!

அந்த சேலம் மாநாடுதான் என்ன?

அந்த 1971 தேர்தல்தான் என்ன?

1971 ஜனவரி 23, 24 ஆகிய இரு நாள்களிலும் சேலம் போஸ் மைதானத்தில் தந்தை பெரியார் அவர்களின் கட்டளைப்படி நடத்தப்பட்ட மூட நம்பிக்கை ஒழிப்பு மாநாடும் - அதனையொட்டிய பேரணியும்தான் அது.

முதல் நாள் நிகழ்ச்சி மாபெரும் மூட நம்பிக்கை ஒழிப்பு ஊர்வலத்துடன் தொடங் கப்பட்டது. இராசேந்திரா சத்திரத்திலிருந்து புறப்பட்ட இந்தப் பேரணியில் 50 ஆயிரம் கருஞ்சட்டைத் தோழர்கள் ஆண்களும், பெண்களுமாகக் குடும்பம் குடும்பமாகப் பங்கேற்றனர்.

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் பவனி வந்தார்.

தீ மிதித்தல், அலகு குத்துதல், தீச்சட்டி ஏந்தி வருதல் போன்ற மூட நம்பிக்கை ஒழிப்பு நிகழ்ச்சிகள் பேரணியில் இடம்பெற்றன. மூட நம்பிக்கை ஒழிப்புப் பேரணியல்லவா - அந்தத் தன்மைக்கு ஏற்ப நிகழ்ச்சிகள் இடம் பெற்றன.

இராமாயண கதாபாத்திரங்களான ராமன், சீதை மற்றும் அய்யப்பன் பிறப்பு உள்ளிட்ட இந்து மத ஆபாசக் கடவுள்களின் போக்குகள் ஓவியங்களாகத் தீட்டப்பட்டு டிரக்கில் அணி வகுத்துப் புறப்பட்டன.

இவையெல்லாம் கழகத்தின் கற்பனையல்ல; இந்து மதப் புராணங்களில், இதி காசங்களில் கூறப்பட்டதன் அடிப்படையில் தீட்டப்பட்டவை. பொது மக்கள் மத்தியில் தோலுரித்துக் காட்டப்பட்டு அவர்களின் பக்தி மயக்கம் தெளியப்படுத்தப்படவேண்டும் என்பதுதான் இதன் நோக்கமாகும்.

பேரணியில் 50 ஆயிரம் கருஞ்சட்டை யினர் அணிவகுத்துச் சென்றனர் என்றால், வழிநெடுக லட்சக்கணக்கான பொதுமக்கள் கண்டு ரசித்தனர்.

இதற்கிடையே ஆத்திரம் தாங்காத ஒரு சிறு கூட்டம் ஜனசங்கம் என்ற பெயரில் 34 பேர்கள் ஓரிடத்தில் - பேரணியின் பாதையில் கூடி தந்தை பெரியார் அவர்களுக்குக் கருப்புக் கொடி காட்ட முனைந்தனர்.

அவர்கள் 34 பேர்கள்தான் - அவர்களைச் சுற்றி நூற்றுக்கணக்கான காவல்துறையினர்.

வந்தோம் - கருப்புக் கொடி காட்டினோம் என்று சொல்லி சென்றிருக்கக் கூடாதா? காலிகள் கூட்டமாயிற்றே! ஒரு செருப்பைத் தூக்கி வீசினார்கள். அது தந்தை பெரியார் மேல் படவில்லை. அடுத்து வாகனத்தில் சென்ற கழகத் தோழர் ஒருவரின் கையில் சிக்கியது.

மூல பலத்தோடு போர் புரிவதுதானே தந்தை பெரியார் அவர்களின் போர் முறை. எனவே, வீசியவர்களை விடுத்து ஊர்வலத்தில் எடுத்துச் செல்லப்பட்ட ராமன் உருவத்திற்குச் சாத்துப்படி நடந்தது - செருப்படி வீழ்ந்துகொண்டேயிருந்தது.

செருப்பு வீசிய நிலையில் இளைஞர்கள் கொந்தளிப்பு எழுந்தனர். தந்தை பெரியார் அவர்கள் கைகளைக் காட்டி தோழர்களை அமைதிப்படுத்தினார்; கழகப் பொறுப் பாளர்களைக் கூப்பிட்டு ஒரு சிறு அசம்பாவிதமும் நடந்துவிடக் கூடாது என்று கண்டிப்பாகக் கூறிவிட்டார்.

இல்லையென்றால், ஆற்றில் கரைப்பதற்குக் கூட ஒரு சிறு எலும்புத் துண்டும் எஞ்சியிருக்காது.

அதுவரை சென்ற பேரணியின் வீச்சு பல மடங்கு பொங்கி எழுந்தது.

காலை 10 மணிக்குப் புறப்பட்ட மூட நம்பிக்கை ஒழிப்புப் பேரணி பிற்பகல் 2 மணிக்கு மாநாடு நடைபெறும் போஸ் மைதானத்தை வந்தடைந்தது.

ஒரு புள்ளியைக் கடக்க ஒரு மணிநேரம் பிடித்தது. அவ்வளவு பெரிய பேரணி.

இராவண லீலா

போஸ் மைதானத்தில் 20 அடி அகலம் - 30 அடி நீளத்தில் 5 டன் விறகுகள் திகுதிகு வென்று எரிந்துகொண்டு இருந்தன.

அத்தோடு 10 அடி உயரத்தில் ராமன் உருவமும் நின்று கொண்டிருந்தது. ஆம், இராவண லீலா நடைபெற்றது.

வடநாட்டில் தலைநகரில் ஆண்டுதோறும் ராம் லீலா நடத்தப்படுவதில்லையா?

தந்தை பெரியார் அவர்களின் கையில் தீப்பந்தம் ஒன்று கொடுக்கப்பட்டது. அதனை தோழர் பச்சைமுத்துவிடம் கொடுத்து, தனது சார்பாக ராமன் பொம்மைக்குத் தீ மூட்டச் செய்தார்!

அடேயப்பா - எத்தனைப் பெரிய ஆவேசம் - இடி முழக்கங்கள்!

தந்தை பெரியார் வாழ்க!

இராவணன் வாழ்க! என்ற விண்ணை முட்டும் முழக்கங்கள்!

தொடர்ந்து நூற்றுக்கணக்கான ஆண்களும், பெண்களும் தகித்து நின்ற அந்தத் தீக்குழியில் இறங்கினர். கடவுள் இல்லை! கடவுள் இல்லவே இல்லை! என்ற முழக்க மிட்டபடியே தீக்குண்டம் இறங்கிக் காட்டினர்.

கோயில்களில்கூட இவ்வளவுப் பெரிய நீள, அகலத்தில் தீக்குண்டம் ஏற்பாடு செய் வது கிடையாது!

அவ்வளவுதான் - ஆரியம் துடித்தது!

மூட நம்பிக்கை ஒழிப்பு ஊர்வலம், ராமன் எரிப்பு, மாநாட்டில் பெண்ணுரிமை சம்பந்தமாகப் போடப்பட்ட தீர்மானம் - இவற்றைக் கையில் எடுத்துக்கொண்டு பார்ப்பனர்கள் குய்யோ முறையோ என்று கூக்குரலிட்டுக் கிளம்பிவிட்டனர்.

அவர்களின் காகித அம்புகளான ஏடுகளில் நாடே தீப்பற்றிக் கொண்டதுபோல எழுத்து நெருப்புகளைக் கக்கினார்கள்.

இ.பி.கோ. 295(ஏ)யின்படி மத உணர்வைப் புண்படுத்துபவர்களைக் கைது செய்யவேண்டும் என்று கத்தினார்கள். அவர்களின் ஏடுகளில் ஆசிரியர் கடிதங்கள் அனல் கக்கின.

சேலம் மாநாட்டில் முக்கியமான பத்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில் மூன்றாவது தீர்மானம்,

ஒருவன் மனைவி மற்றவனை விரும்பு வது என்பதைக் குற்றமாக்கக் கூடாது என்பதாகும்.

பெண்ணுரிமையை முன்னிலைப்படுத்தும் இந்தத் தீர்மானத்தைத் திரிபு செய்து, ஒருவன் மனைவியை அபகரித்துச் செல்வதைக் குற்றமாகக் கருதக்கூடாது என்று வெளியிட்டனர்!

திருவாளர் சோ ராமசாமி சேலம் மாநாட்டுக்காக ஒரு சிறப்பு இதழையே வெளியிட்டார். நாடெங்கும் கோயில் கதவு அளவில் பெரிய சுவரொட்டிகளை ஒட்டினார்கள்.

பெரியார் ராமனை செருப்பால் அடிப்பது போலவும், முதலமைச்சர் கலைஞர் அதைப் பார்த்து மகிழ்ந்து இரசித்து சபாஷ்! சபாஷ்!! என்று கூறுவது போலவும் அச் சிட்டு நாடெங்கும் ஒட்டினார்கள்.

தேர்தல் பிரச்சாரத்தின் மய்யப் புள்ளியாக சேலம் மாநாடு மாறிவிட்டது.

பாமர மக்களைப் பீடித்துள்ள பக்தி நோயைப் பயன்படுத்தி அதற்கடுத்த மாதம் நடக்க இருந்த சட்டப்பேரவைத் தேர்தலில் தி.மு.க.வை ஒழித்துக்கட்ட வேண்டும் என்பது எதிரிகளின் திட்டமாகும்.

தினமணி, இந்து, இந்தியன் எக்ஸ்பிரஸ் போன்ற ஏடுகளைப் புரட்டினால், ஒவ்வொரு பக்கத்திலும் இதே கதைதான்.

அதற்காகத் தந்தை பெரியார் பின் வாங்கிடவில்லை; அடித்தேன்; ஆமாம், ராமனை செருப்பால் அடித்தேன். அடித்தவனைத் தவிர அடிக்காதவன் இன இழிவை ஏற்றுக்கொள்பவன் என்று ஒரு படி மேலே சென்று முழங்கினார்.

தி.மு.க.வும், காங்கிரசும் கூட்டு வைத்துக்கொண்டிருந்தன. எதிர் அணியில் சிண்டிகேட் காங்கிரசும் (காமராசர்), சுதந்திரா கட்சியும் (ராஜாஜி) கூட்டு வைத்துக் கொண்டு தேர்தலில் குதித்திருந்தன.

லூதியானாவில் தேர்தல் சுற்றுப்பயணத்தில் இருந்த காங்கிரஸ் தலைவர் இந்திரா காந்தியிடம் செய்தியாளர்கள் தமிழ்நாட்டில் நடக்கும் பிரச்சினையைக் கொண்டு போனார்கள்.

இராமனை செருப்பாலடித்த தி.மு.க. வோடு உங்கள் கட்சி கூட்டு வைத்துள்ளதே என்று கேட்டார்கள். அடித்தது யார் என்று கேட்டார் அம்மையார்.

தி.க. - அதன் தலைவர் பெரியார் ராமசாமி நாயக்கர் என்றனர் - அப்படியா? அவர் இன்றைக்கு நேற்றா ராமனை செருப்பால் அடிக்கிறார்? அவர் 50 வருடங்களாக அதைச் செய்துகொண்டிருக்கிறாரே, அது எனக்கும் தெரியுமே என்று பதில் சொல்லி, செய்தியாளர்களை உப்பு சப்பு இல்லாமல் ஆக்கிவிட்டார்.

இது ஒரு பக்கம் என்றால், இன்னொரு பக்கத்தில் பெண்ணுரிமைபற்றி முதன்மைப் படுத்தி சேலம் மாநாட்டில் நிறைவேற்றப் பட்ட தீர்மானத்தைத் திரிபு செய்து பிரச்சாரம் செய்தார்கள்.

இதுகுறித்து விடுதலையில் முதல் பக்கத்தில் கீழ்க்கண்ட அறிவிப்பு வெளி யிட்டது.

பொய்! பொய்!! அயோக்கியத்தனமான பொய்!!!

சேலம் மகாநாட்டு தீர்மானம் என்னவென்றால்,

ஒருவன் மனைவி மற்றவனை விரும்புவது என்பதை ஒரு குற்றமாக்கக்கூடாது என்பதாகும்.

-------------------- 25.1.1971, விடுதலை

இது (இந்தக் கருத்து) இன்றைய தினம் சட்டத்தின்படியே உள்ள நிலைமைதானே ஒழிய புதிய கருத்தல்ல.

அதாவது ஒரு திருமணமான பெண்கூட தனக்கு (ஏற்பட்ட புருஷன் திருப்தி இல்லாவிட்டால்) மற்ற ஒரு ஆணை விரும்பலாம். அதுமாத்திரமல்லாமல் மற்றவனை மணந்து கொள்ளலாம். இது குற்றமாகாது.

இப்படிப்பட்ட இந்தத் தீர்மானத்தை பார்ப்பன பத்திரிகைகள் வேண்டுமென்றே விஷமத்தனத்திற்கு ஆக திரித்துக் கூறி வருகின்றன.

அதாவது ஒருவன் மனைவியை மற்றவன் அபகரித்துக்கொண்டு போனால் குற்றமாக்கப்படக் கூடாது என்று மாநாட்டில் தீர்மானம் செய்யப்பட்டதாக மன தறிந்து விஷமப்பிரச்சாரம் செய்யப்பட்டு வருகிறது.

இதுபற்றி நீதி ஸ்தலத்தில் பரிகாரம் தேட முயற்சிக்கப்பட்டு வருகிறது.

-----------------------------(விடுதலை, 30.1.1971)

உண்மைக்கு மாறாக தீர்மானத்தைத் திரித்து வெளியிட்ட பார்ப்பன ஏடுகளான இந்து, இந்தியன் எக்ஸ்பிரஸ், தினமணி ஆகிய மூன்று ஏடுகளுக்கும் மாநாட்டு வரவேற்புக் குழுத் தலைவரான தி.வை. சொக்கப்பா அவர்கள் வழக்கறிஞர்மூலம் நோட்டீஸ் அனுப்பினார். (1.2.1971) மூன்று நாள்களுக்குள் உண்மையான செய்தியை வெளியிட்டு, மன்னிப்புக் கேட்காவிட்டால், கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதில் கூறப்பட்டு இருந்தது. அவ் வாறு உண்மை செய்தியை வெளியிட்டு, மன்னிப்புக் கேட்காததால், சென்னை 5 ஆவது மாகாண மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றத் தில் மான நஷ்ட வழக்குத் தொடுக்கப் பட்டது (9.2.1971).

விடுதலையில் வேண்டுகோள் என்று தலைப்பில் தந்தை பெரியார் அறிக்கை ஒன்றினை வெளியிட்டார்கள் (13.2.1971) ஆதாரமற்ற செய்திகளைப் பிரசுரித்த மைக்காக தினமணி, இந்து, இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆகிய பத்திரிகைகள்மீது கிரிமினல் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. ஓட்டர்களே! ஆதாரமற்ற செய்திகளை நம்பாமல், தி.மு.க.வுக்கே ஓட்டளியுங்கள் என்று தம் கையெழுத்துடன் வேண்டு கோள் விடுத்தார் அய்யா.

இப்படி நீதிமன்றத்தில் மான நஷ்ட வழக்கு இருக்கும்போதே திமிர்ப்பிடித்த திரிநூல் ஏடான இந்து ஏடு மீண்டும் அதே தவறைச் செய்யும் வகையில் திரித்து வெளியிட்டது. இதனைச் சுட்டிக்காட்டி நீதிமன்ற அவமதிப்பு வழக்கு ஒன்றினை சென்னை உயர்நீதிமன்றத்தில் திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் கி. வீரமணி எம்.ஏ. பி.எல்., அவர்கள் தாக்கல் செய்தார்.

வழக்கினை தலைமை நீதிபதி கே. வீராசாமி, வி.வி. இராகவன் ஆகியோர் விசாரித்து, இந்து ஏட்டின் ஆசிரியர், வெளியிடுவோருக்கு நோட்டீஸ் அனுப்பிட ஆணை பிறப்பித்தனர்.

16.3.1971 அன்று சென்னை உயர்நீதி மன்றத்திற்கு வந்து இந்து ஏட்டின் சார்பில் ஆஜரான திரு.ரங்கராஜன், திரு. இராமமூர்த்தி அய்யர் ஆகியோர் தவறாகச் செய்தி வெளியிட்டதற்காக உண்மையான, நிபந்தனையற்ற மன்னிப்புக் கோரினர். மன்னித்து, வழக்கு திரும்பப் பெறப்பட்டது என்பது நமது வரலாறு.

இதற்கிடையே பார்ப்பன ஊடகங்களும், பார்ப்பனர்களும் வெறி பிடித்ததுபோல தேர்தல் களத்தைச் சூடுபடுத்தினர்.

சும்மாயிருந்த சங்கை ஊதிக் கெடுத்ததுபோல, திருச்சிராப்பள்ளியில் இருந்த தந்தை பெரியார் சிலையை பார்ப்பனர்களின் தூண்டுதலால் சில மாணவர்கள் சேதப்படுத்தினர்.

அவ்வளவுதான்! பல்லாயிரக்கணக் கான மாணவர் பட்டாளம் கிளர்ந்தெழுந்தது. திருச்சி முழுமையும் முழக்கமிட்டு, புத்தூர் பெரியார் மாளிகைக்கு வந்து அய்யாவே! ஆணையிடுங்கள்! என்று முழக்கமிட்டனர்.

வழமைபோல வைக்கம் வீரர் மாணவர்களை அமைதிப்படுத்தி பலாத்காரத்தில் இறங்கவேண்டாம் என்று கேட்டுக்கொண் டார்.

தேர்தல் சுற்றுப்பயணத்தில் ஈடுபட வேண்டாம் என்று கருதியிருந்த தந்தை பெரியார் அவர்கள் திருச்சியில் பார்ப்பனர்கள் நடந்துகொண்ட சம்பவத்துக்குப் பிறகு, தஞ்சை, திருச்சி, கோவை, சேலம், தருமபுரி, வடாற்காடு மாவட்டங்களுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொள்வதாகக் கூறி (18.2.1971) சுற்றுப் பயணத்தை மேற் கொண்டார்கள்.

பெரியார் சிலையைச் சேதப்படுத்தியதாலும், சில இடங்களில் பெரியார் படத் தைக் கொளுத்தியதாலும், சில இடங்களில் ஊர்வலம் நடத்தியதாலும், நாட்டில் பச்சையாக பார்ப்பனர் -தமிழர், ஆரியர் - திராவிடர் என்னும் உணர்வு கொழுந்து விட்டுக் கிளம்பியது.

1971 தேர்தல் என்பது ஆரியர் - திராவிடர் போராட்டமாக - தேவாசுரப் போராட்டமாகப் பரிணமித்தது.

தவத்திரு குன்றக்குடி அடிகளார் அவர்கள் நறுக்குத் தெறித்ததுபோல - குறள் மொழிபோல இரண்டு வரிகளில் நச்சென்று ஓர் அறிக்கையினை பொன் மணியாக வெளியிட்டார்.

இன்று ஆஸ்திகம் என்பது உயர் ஜாதியினரின் நலம்; இன்று நாஸ்திகம் என்பது பெருவாரியான தமிழ் மக்களின் நலம். உங்களுக்கு இதில் எது வேண்டும்? என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப் பட்டு இருந்தது. (விடுதலை, 18.2.1971).

சேலம் மாநாட்டைக் கண்டித்து நாடு தழுவிய அளவில் முழு அடைப்புக்கு - வேலை நிறுத்தத்திற்கு (ஹர்த்தால்) அழைப்பு விடுத்தனர் மத வெறியர்கள்.

அது புஸ்வாணம் ஆகிவிட்டது - படுதோல்வியை அடைந்தது.

முதலமைச்சர் கலைஞர் அவர்கள் மிக வெளிப்படையாகவே திருச்சியில் செய்தி யாளர்களின் கூட்டத்தில், கேள்வி ஒன்றுக்குப் பதில் அளிக்கையில் குறிப்பிட்டார் (3.3.1971).

பார்ப்பனர் - பார்ப்பனரல்லாதார் இயக்கத்தை முன்பு தந்தை பெரியார் தொடங்கினார். இப்பொழுது ஆச்சாரியார் தொடங்கியுள்ளார். இந்தத் தேர்தலின் ஒரே புதிய அம்சம் இதுதான் என்றார்.

எப்படிப்பட்ட சூழலில் 1971 தேர்தல் அமைந்திருந்தது என்பதை ஒரு முதல மைச்சரே படம் பிடித்துக் காட்டிவிட்டார் என்பதே இதன் விழுமிய பொருளாகும்.

தேர்தல் முடிவும் வந்தது (3.3.1971) தி.மு.க. 183 இடங்களில் வெற்றி வாகை சூடியது.

பார்ப்பன அணியாக - மதவாத அணியாக கூடிக் களித்து நின்ற சுதந்திரா - சிண்டிகேட் கூட்டணிக்குக் கிடைத்த மொத்த இடங்கள் வெறும் 21 தான்.

இராமனை செருப்பாலடிக்காத 1967 இல் தி.மு.க.வுக்குக் கிடைத்த இடங்கள் 138. இராமனை செருப்பாலடித்த பின் நடைபெற்ற தேர்தலில் தி.மு.க.வுக்குக் கிடைத்த இடங்கள் 183 ஆகும்.

தமிழ்நாட்டில் இனப் பிரச்சினை என்று வந்துவிட்டால், அது பார்ப்பனர்களுக்கு மரண அடியாகவே இருக்கும் என்பதற்கு எடுத்துக்காட்டுதான் 1971 தேர்தல்.

தேர்தல் முடிவைக் கண்டு மகிழ்ந்த தந்தை பெரியார் முதலமைச்சர் கலைஞர் அவர்களுக்கு வாழ்த்துத் தந்தி ஒன்றினைக் கொடுத்தார் (11.3.1971).

உங்களைப் பாராட்ட எனக்குத் தமிழில் வார்த்தை இல்லை. எனக்குப் பழி நீங்கியது. உங்களுக்கு உலகப் புகழ் கிடைத்தது! என்று அந்தத் தந்தியில் குறிப்பிட்டு இருந்தார்.

முதலமைச்சர் கலைஞர் அவர்கள் சென்னையில் விடுதலைப் பணிமனையில் தங்கியிருந்த தந்தை பெரியார் அவர்களைச் சந்தித்து மாலை அணிவித்து மகிழ்ச்சி பொங்க மரியாதை தெரிவித்தார்.

அங்கிருந்து அண்ணா சதுக்கத்திற்குச் சென்று அய்யா தலைமையில் கலைஞர் அவர்கள் வெற்றி மாலையைக் காணிக்கை யாக்கினார்.

15.3.1971 அன்று சென்னைப் பல்கலைக் கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் அமைச்சர்களின் பதவியேற்பு விழா தந்தை பெரியார் முன்னிலையில் நடைபெற்றது. பதவியேற்ற ஒவ்வொரு அமைச்சரும் தந்தை பெரியார் அவர்களிடம் வந்து வாழ்த்தினைப் பெற்றார்கள்.

முதலமைச்சர் கலைஞர், நாவலர் இரா. நெடுஞ்செழியன், பேராசிரியர் க. அன்பழ கன், என்.வி. நடராசன், திருமதி சத்தியவாணிமுத்து, ப.உ. சண்முகம், எஸ். மாத வன், எஸ்.ஜே. சாதிக்பாட்சா, சி.பா. ஆதித்தனார், அன்பில் தருமலிங்கம், க. இராசாராம், ஓ.பி. இராமன், பண்ருட்டி எஸ். இராமச்சந்திரன், எம். கண்ணப்பன் ஆகியோர் அமைச்சர்களாவார்கள்.

தேர்தல் முடிவுற்ற நிலையில், சக்ரவர்த்தி ராஜகோபாலாச்சாரியார் கையொப்பமிட்டு மனம் நோக கைப்பட ஓர் அறிக்கையை வெளியிட்டார்.

தேசம் முழுமைக்கும் இன்று ஒரு துர்ப்பாக்கியம் ஏற்பட்டிருக்கிறது. இந்தத் துர்ப்பாக்கியம் தமிழகத்தை இரட்டிப்புத் தீவிரத்துடன் தாக்கியிருக்கிறது. மதம், சம்பிரதாயக் கட்டுப்பாடுகள், தெய்வபக்தி இவற்றின் முழு எதிரி என்று தம்மை முழுமூச்சுடன் பகிரங்கப் படுத்திக் கொள்பவரின் திருமுன்னரே அவரது ஆசியும், அநுக்கிரகமும் பெற்றுப் பதவிப் பிரமாணம் செய்துகொண்டிருக்கிறது, தமிழக மந்திரி சபை.

இனித் தமிழகம் ஆஸ்திகர்கள் வாழத்தகுதி இழந்துவிட்டது; இந்த ராஜ்யத்தை விட்டே வெளியேறிவிட வேண்டும் என்று சில மகாபுருஷர்கள் உள்படப் பலர் எண்ணத் தொடங்கி விட்டனர்.

(கல்கி, 4.4.1971)

இந்த நாடு பெரியார் நாடு - பார்ப்பனர் நாடல்ல என்பதற்குப் பார்ப்பனர்களின் ஏகோபித்த தலைவரான ராஜாஜியே கையொப்பமிட்டு இதன்மூலம் ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்துவிட்டார் அல்லவா!

எப்பொழுது போகப் போகிறீர்கள் - சொல்லாமல் போய்விட வேண்டாம் - நாங்கள் வழியனுப்பக் காத்திருக்கிறோம் என்று சென்னை திருவல்லிக்கேணியில், நாவலர் நெடுஞ்செழியன் பேசினார்.

1971 தேர்தல்தான் 2011 லும் நடக்கப் போகிறது - தமிழர் தலைவர் மதுரை மாநாட்டில் கூறியதன் தாத்பரியம் இப் பொழுது புரிந்திருக்கவேண்டுமே!

இதனை வழிமொழியும் பாணியில் வேலூரில் (27.11.2010) முதலமைச்சர் கலை ஞர் சூளுரைத்திருந்தார்.

1971 இல் பார்ப்பனர்களும், பார்ப்பன ஊடகங்களும் கண்களை மூடிக்கொண்டு மானமிகு கலைஞர் ஆட்சியினை எதிர்த்தது போலவே, இப்பொழுதும் அதை அச்சு வார்த்ததுபோல செய்கின்றனர்.

முடிவும் 1971 இல் நடந்ததுதான் என்று தமிழர் தலைவர் அவர்கள் சொன்னது ஆசையால் அல்ல - அறிவு திட்பத்தால், நாட்டின் நாடியை உணர்ந்தவர் என்பதால் - தொலை நோக்கோடு சொன்ன வார்த்தைகளாகும்.

------------------------ கலி.பூங்குன்றன் ,தி.க.பொதுச் செயலாளர் அவர்கள் “விடுதலை” 10-12-2010 இல் எழுதிய கட்டுரை

0 comments: