Search This Blog

22.12.10

கல்கி இதழ் பதில் சொல்ல முன்வருமா?

பதில் உண்டா?

பொதுவாக கல்கி கிருஷ்ணமூர்த்தி அய்யரை சீர்திருத்தவாதி என்றுதான் அவர்கள் வட்டாரத்தில் சொல்லுவார்கள்.

இந்த வார கல்கி இதழ் (26.12.2010) கல்வெட்டுகள் என்ற பகுதியில் உண்மையான ஆஸ்திகம்! என்ற தலைப்பில் கல்கியின் கருத்துகள் என்று கூறி ஒரு பக்கக் கட்டுரையை வெளியிட்டுள்ளது.

மேனாடுகளில் ஒரு காலத்தில் கடவுள் இல்லை என்று சொன்னவர்களையும், வேறு விதத்தில் தேவ தூஷணை செய்தவர்களையும் நெருப்பிட்டுக் கொளுத்தினார்கள்; வேறுவித சித்திரவதைகளும் செய்தார்கள்.

ஆனால், இந்தியாவில் அம்மாதிரி என்றைக்கும் கிடையாது என்று கல்கி கிருஷ்ணமூர்த்தி சொன்னதாக இவ்வார கல்கி வார இதழ் கூறுகிறது.

வரலாற்றை மய்யப் படுத்தி நாவல்கள் எழுதுவதில், பிரசித்தி பெற்ற கல்கி கிருஷ்ணமூர்த்தி - இப்படி உண்மைக்கு முரணாக எழுதுகிறார் என்றால், இனி எந்தப் பார்ப்பானின் வார்த்தைகளை வாய்மையானது என்று கருதுவது?

எண்ணாயிரம் சமணர்களைக் கழுவில் ஏற்றிக் கொன்றது எந்த மதம்? இந்து மதத்தின் உயிர்க் கொலைகளையும், வருணாசிரமப் போக்குகளையும், கடவுள் களையும் மறுத்துக் கருத்துப் பிரச்சாரம் செய்தார்கள் என்பதற்காகத்தானே இந்தக் கொடுமை?

மண்ணகத்திலும் வானிலும் எங்குமாய்த்

திண்ணகத் திருவால வாயருள்

பெண்ணகத் தெழில் சாக்கிய பேய்மண்

பெண்ணர் கற்பழிக்கத் திருவுள்ளமே

என்றவர்- தேவாரம் பாடிய திருஞான சம்பந்தன் அல்லவா!

மதுரையில் குடிகொண் டிருக்கும் எங்கள் சிவனே, பவுத்தர், சமணர் வீட்டு அழகிய பெண்களின் கற்பை அழிக்க எங்களுக்கு அருள் புரிவாயாக என்று வேண்டிக் கொண்டானே- இதற்கு என்ன பதில்?

வேத வேள்வியை

நிந்தனை செய்துழல்

ஆதமில்லி யமணோடு தேரரை

வாதில் வென்றழிக்க

திருவள்ளமே!

பவுத்தர்களையும், சமணர்களையும் வாதத்தில் வெல்ல கடவுள் அருள்புரிய வேண்டுமாம்.

அப்படியென்றால் திருஞான சம்பந்தன்களுக்குச் சக்தியில்லை; சரக்கும் இல்லை. கடவுள்தான் அருள் புரிய வேண்டும் என்றால், பக்தனின் யோக்கியதை என்ன? கடவுளின் யோக்கியதையும் தான் என்ன?

சமணர்களையும், பவுத்தர்களையும் கண்ட மாத்திரத்திலேயே அவர்களின் தலைகளை அறுக்கவேண்டும் என்று அரங்கமா நகருள்ளானை வேண்டிப் பாடியுள்ளாரே தொண்டரடிப் பொடியாழ்வார்.

(நாலாயிரத் திவ்விய பிரபந்தம்- பாடல் எண் 879)

அரசர்களைக் கையில் போட்டுக்கொண்டு பார்ப்பனர்கள், சமணர்களைக் கழுவில் ஏற்றிக் கொல்லு கின்ற கல்வெட்டுகளை திருவத்திபுரம் கோயிலுக்குள் இன்றும் பார்க்கலாமே!

கடவுளோடு அன்றாடம் குடும்பம் நடத்துவது போலக் கசிந்துருகும் கல்கிகள் இவற்றுக்கெல்லாம் பதில் சொல்ல முன்வருமா?

------------------------ மயிலாடன் அவர்கள் 21-12-10 “விடுதலை” யில் எழுதிய கட்டுரை

1 comments:

தமிழ் ஓவியா said...

பக்தியின் யோக்கியப் பொறுப்பு இதுதானா?

திருவண்ணாமலை அண்ணாமலையில் மலைமீது 25 பேர் கொண்ட ஒரு கும்பல் நேற்றுமுதல்நாள் (20.12.2010) நான்கு அடி உயரம் உள்ள சிவலிங்கத்தை வைத்துள் ளனர்.

திருட்டுத்தனமாக இந்தக் கும்பல் இந்தக் காரியத்தைச் செய்துள்ளது. சிலையை வைத்துவிட்டுத் திரும்பி வந்த போது இந்தக் கும்பல் இப்பொழுது காவல்துறையின் கைகளில் சிக்கியுள்ளனர்.

ஏன் இதைச் செய்தார்களாம்?

அக்னியால் பெரும் பாதிப்பு உண்டாகப் போகிறது; அதனால் அக்னித் தலமான திருவண்ணாமலையின் மலைமீது சிவ லிங்கத்தை வைத்தால் சீற்றத்தின் பாதிப்பு குறையும். எனவே, சிவலிங்கத்தை திருப் பூரில் உள்ள தங்களின் குருவின் கட்டளைப் படி வைத்தோம் என்று கூறி யுள்ளனர்.

திருவண்ணாமலையில் இருப்பதே சிவன் கோயில்தானே, அங்கே சிவலிங்கம் இல் லையா? அந்தச் சிவலிங்கத்துக்குச் சக்தி யில்லையா?

ஒரு சிவலிங்கத்தைப் புதிதாகத் திருட்டுத் தனமாக எடுத்து வந்து ஏன் வைக்க வேண்டும்? ஏன் காவல்துறையிடம் சிக்கி அவமானப்படவேண்டும்?

சரி, அப்படித்தான் வைத்தார்களே. குறைந்த பட்சம் அந்தப் பக்தர்களை யாவது காவல்துறையில் சிக்காமல் அந்தக் கடவுள் காப்பாற்றியதா?

பக்தி என்றால் புத்தி போனது மட்டு மல்ல; ஒழுக்கக் கேடும், திருட்டுத்தனமும் எப்படி யெல்லாம் தலை விரித்தாடுகிறது!

-------------"விடுதலை” 22-12-2010