Search This Blog

11.12.10

பார்ப்பனர்களுக்கு வாரி வழங்கப்பட்ட ஊர் எது தெரியுமா?


மதுரை மாநாட்டில் (5.12.2010) தமிழர் தலைவர் ஆற்றிய செறிவான ஒரு உரையில் பார்ப்பனர் அல்லாதார், ஒடுக்கப்பட்ட மக்களுக்குக் கல்வி வாய்ப்புக் கிடைத்தது- வெள்ளைக்காரர்களின் ஆட்சியில்தான்; மருத்துவம், கல்வி இரண்டும் நம் மக்களுக்குக் கிடைத்த தற்குக் காரணமாக அவர்கள் இருந்தார்கள் என்பதை எடுத்துக்காட்டினார்.

நெல்லை சுந்தரனார் பல்கலைக் கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் முனை வர் கா.பா. அறவாணன் அவர்களால் எழுதப்பட்ட தமிழர் அடிமையானது ஏன்? எனும் நூலிலிருந்து சில விவரங்களை மேற்கோளாகக் காட்டினார்.

1901 ஆம் ஆண்டில் ஆங்கிலேயர்கள் காலத்தில் எடுக்கப்பட்ட மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் மூலம் தெரிய வருவது- தமிழர்களில் கல்வி கற்றவர்கள் ஒரே ஒரு சதவிகிதம்தான்.

நாயக்கர்கள், பல்லவர்கள் காலத்திலும் சரி, நமது சேர, சோழ, பாண்டியர் ஆட்சிக்காலங்களிலும் சரி, தமிழர்கள் கல்விக்கென்று எதுவும் உருப்படியாகச் செய்யப்படவில்லை. எல்லாம் பார்ப்பனர்களின் வயிற்றில்தான் அறுத்து வைக்கப்பட்டிருந்தது.

சோழ அரசர்கள் காலத்தில் தானங்கள் எல்லாம் பார்ப்பனர்களுக்கு வாரி வாரி வழங்கப்பட்டன என்ற விவரங்களை எல்லாம் தமிழர் தலைவர் எடுத்துரைத்தார்.

பேராசிரியர் கா.பா. அறவாணன் அவர்களின் அந்த நூலில் ராபர்ட் டி நொபிலி எழுதிய கடிதம் (22.11.1610) பற்றி எடுத்துரைத்தார்.

மதுரையில் நாயக்கர் மன்னர் ஆட்சியில் 10,000 மாணவர்கள் படித்தனர். அவர்கள் அத்தனைப் பேரும் பார்ப்பனர்களே என்று அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டு இருந்தது.

நமது சோழ அரசர்களின் யோக்கியதைதான் என்ன?

11 ஆம் நூற்றாண்டில் சோழ அரசர்கள் தென்னார்க்காடு மாவட்டத்தைச் சேர்ந்த எண்ணாயிரத்தில் பெரிய கல்விக் கழகம் கண்டனர். அங்கு 140 மாணவர்கள் கலை பயின்றனர். 14 ஆசிரியர்கள் அறிவு புகட்டினர். ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் தினந்தோறும் நெல் அளந்து தரப்பட் டது. உபகாரச் சம்பளம் வேறு தரப்பட் டது. 45 வேலி நிலம் அக்கல்லூரிக்கு அளிக்கப்பட்டது. வேதங்களும், சமஸ் கிருத இலக்கணமும், மீமாம்ச வேதாந்த தத்துவங்களுமே சொல்லிக் கொடுக்கப்பட்டன.

பாண்டிச்சேரிக்கு அருகில் உள்ள திருபுவனத்திலும் சோழ அரசர்கள் ஒரு கல்லூரி ஏற்படுத்தினர். 72 வேலி நிலம் அதற்கு அளிக்கப்பட்டது. 260 மாணவர்களும், 12 ஆசிரியர்களும் அங்கு இருந்தனர். இதிகாசங்களும், மனுதர்ம சாஸ்திரமும் அங்குக் கற்பிக்கப்பட்டன. 12 ஆம் நூற்றாண்டு சோழ அரசர்கள் திருவாவடுதுறையில் ஒரு கலைமன்றம் கண்டனர். அங்கு வடமொழியில் உள்ள சாரகமிதை, அஷ்டாங்க இருதய சமிதை இரண்டும் பாடங்கள் (ஆர். சத்தியநாதய்யர் எழுதிய இந்திய வரலாறு எனும் நூலிலிருந்து).

இந்தக் கல்வி எல்லாம் சமஸ்கிருதக் கல்வி என்பதும், சமஸ்கிருதம் படித்த வர்கள் எல்லாம் பார்ப்பனர்களே என்பதும் சொல்லித் தெரியவேண்டிய அவசியம் இல்லை. சமஸ்கிருதத்தை சூத்திரன் படித்தால்தான் அவன் நாக்கை அறுக்க வேண்டுமே; கேட்டால் காதுகளில் ஈயத் தைக் காய்ச்சி ஊற்றவேண்டுமே; தெரிந்து வைத்திருந்தால் நெஞ்சைப் பிளக்க வேண்டுமே - அப்படி இருக்கும்போது சூத்திரனான தமிழன் அவற்றைக் கற்பது என்பது குதிரைக் கொம்புதானே.

நம்முடைய தமிழ் அரசர்களின் புத்தி எங்கே மேயப் போயிருக்கிறது என்பதை எண்ணினால் வெட்கப்படத்தான் வேண் டும்!

சோழ வேந்தர்கள் பத்தாம் நூற்றாண்டிலேயே தேர்தல் முறையைக் கைக்கொண்டிருக்கிறார்களே - கிராம சபைக்கு உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்க - அது அவர்களுடைய அறிவுத் திறனைக்காட்டுகிறது. கிராம சபை உறுப்பினர் ஆவதற்குரிய தகுதியை அவர்கள் தீர்மானித்தது இருக்கிறதே, அது, அவர்களுடைய அறிவு ஆரியத்திடம் அடகு வைக்கப்பட்டது என்பதை விளக்குகிறது. கிராம சபை உறுப்பினராக ஒருவன் 35 வயது நிரம்பியிருக்க வேண்டும் - சரி. 70 வயதுக்குள்ளும் இருக்கவேண்டும் - கால் வேலிக்குக் குறையாத நிலம் இருக்கவேண்டும் - இவை மட்டுமா! வேத மந்திரங்களையும், உப நிஷத்துக்களையும் தெரிந்திருக்கவேண்டும். அல்லது ஒரு வேதமும் ஒரு வேத பாஷ்யமும் தெரிந்திருக்கவேண்டும். இதன் பொருள் வெளிப்படை.

நமது அரசர்கள் பார்ப்பனர்களுக்கு அள்ளிக் கொடுத்தவைதான் சதுர்வேதி மங்கலங்களும், துவேதி மங்கலங்களும், திரிவேதி மங்கலங்களும் - உத்தமதான புரங்களும்!

விஜய நிருபதுங்க செய்தாங்கி சதுர்வேதி மங்கலம் என்று நிருபதுங்க வர்ம பல்லவன் காலத்திலும், ஜனநாத சதுர்வேதி மங்கலம் என்று முதலாம் இராசராசன் காலத்திலும் பார்ப்பனர்களுக்கு வாரி வழங்கப்பட்ட ஊர் எது தெரியுமா?

இன்றைய விழுப்புரம்தான்!

1901 மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் நம் மக்கள் ஒரு சதவிகிதம் படித்திருந்தார்கள் என்பதே கூட விந்தைக்குரியதுதான்.

வெள்ளைக்காரன் வந்தான்; சற்றுக் கண் திறந்து பார்த்தான். படிப்பைப் பரவலாக்கினான் - உத்தியோகத் தையும் கொஞ்சம் பிரித்துக் கொடுத்தான் - நாமும் கொஞ்சம் பிழைத்தோம்!

ஒரே ஒரு எடுத்துக்காட்டு - மக்கள் தொகைக் கணக்கெடுப்பு மேற்பார்வையாளராக (சூப்ரெண்டெண்ட்) இருந்த டபிள்யூ.ஆர். கார்னிஷ் என்பவர் 1871 இல், நாட்டின் முன்னேற்றம் சம்பந்தப்பட்ட ஒவ்வொரு பிரச்சினையையும் பார்ப்பனக் கண்ணாடி வழியே பார்ப்பது என்பது அரசாங்கத்திற்கு நன்மை தருவது ஆகாது. எந்த ஒரு ஜாதியினரும். வகுப்பினரும் தனி முக்கியத்துவம் பெறாத வண்ணம், பார்ப்பனரல்லாத இந்துக்களும், முஸ்லிம்களும் பெரும் எண்ணிக்கை அளவில் உத்தியோகங்களைப் பெறும் வண்ணம் அவர்களுக்கு வாய்ப்புகள் ஏற்படுத்துவதும், பார்ப்பனர்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்துவதும் அரசின் திட்டமாக இருத்தல் நல்லது என்று குறிப்பிட்டுள்ளார்.

வெள்ளைக்காரருக்குப் புரிந்தது!

நாட்டின் நிர்வாகத்தை நடத்தும் உத்தியோகங்களைப் பொருத்தவரை பரவலாக எல்லோருக்கும் வாய்ப்புகள் இருக்கும் வண்ணமும், குறிப்பிட்ட ஒரே ஒரு ஜாதியினருக்கே அவை ஏக போக உரிமையாகாமல் தடுக்கவும் ஆன வகையில் சில சலுகைகளை அளிக்க முன்வரவேண்டும் என்று திரு. கார்னிஷ் அவர்கள் குறிப்பிட்டார்கள். அதற்கு முந்தைய 15 ஆண்டுகளில் மெட்ரிக்குலேசன் தேறியவர்களில் 55 சதவிகிதம் பார்ப்பனர்களேயாவார்கள் என்றும், மற்ற முகம்மதியர்கள், பார்ப்பனரல்லாத இந்துக்களும் கல்வி கற்கும் வண்ணம், ஊக்கம் தந்த உத்தியோகத் துறையில் பார்ப்பனர்களே ஆதிக்கம் செலுத்தும் நிலையை மாற்றவேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார் (நூல்: வகுப்புரிமைவரலாறு - கி. வீரமணி).

ஆங்கிலேயர்கள் மத்தியில் - பார்ப்பனர், பார்ப்பனர் அல்லாதார் கண்ணோட்டம் தெளிவாகிவிட்டது. கல்வி, வேலை வாய்ப்புகளில் பார்ப்பனர்கள் உச்சத்தில் உள்ளனர் - பார்ப்பனர் அல்லாதார் அடிமட்டத்தில் கிடக்கின்றனர் என்ற நிலையை ஆங்கிலேயர்கள் உணர ஆரம்பித்தனர். அதன் காரணமாகத்தான் நம்மவர்களும் கல்விச் சாலைகளைக் கண்கொண்டு பார்க்க முடிந்தது.

பார்ப்பனருக்குத் தண்ணீர் காட்டப்பட்டுவிட்டதே!

பார்ப்பனர் அல்லாதார் இயக்கமான நீதிக்கட்சி தோற்றம்- அக்கட்சி ஆட்சிப் பொறுப்பை ஏற்ற நிலை - முதன்முதலாக வகுப்புவாரி உரிமைச் சட்டம் அமல் என்று ஏற்றத் திசை வந்ததால் இன்றைக்குத் தமிழர்கள் கல்விப் போட்டிகளில், வேலை வாய்ப்புப் போட்டிகளில் பார்ப்பனர்களைத் தண்ணீர் காட்டிக் கொண்டு இருக்கும் ஒரு நிலை ஏற்பட்டது என்பதை நினைத்துப் பார்க்கவேண்டும்.

அதேநேரத்தில், ஆரியக் குலத் திலகமான ஆச்சாரியார் இரண்டு முறை சென்னை மாநிலத்துக்கு முதலமைச்சராக வந்தாரே, என்ன செய்தார்?

1937-39 களில் 2500 கிராமப் பள்ளிகளை இழுத்து மூடினாரே - அந்தக் காலகட்டத்தில் படிப்பறிவு குறைவு - அரசின் கடமை என்பது முதலாவதாகக் கல்வியைக் கொடுப்பது. ஆனால், ஆச்சாரியாரோ, கல்வியைக் கெடுப்பது என்ற தோரணையில் அல்லவா துள்ளிக் குதித்துச் செயல்பட்டார்.

தருமபுரி மாவட்டத்தில் ஜில்லா போர்டார் தங்கள் நிதி ஒதுக்கீட்டில் 13,500 ரூபாயைக் கல்விக்காக ஒதுக்கினார்கள். அதைக் கூட ஏற்க மறுத்தாரே!

கிராமங்களில் இருந்து வந்த 60 பிள்ளைகளுக்குக் குறைந்த மத்திய தர இங்கிலீஷ் பள்ளிக்கூடங்களும், 60 பிள்ளைகளுக்குக் குறைந்த உயர்தர இங்கிலீஷ் பள்ளிக்கூடங்களும் ஆச்சாரியார் காலத்தில் இழுத்து மூடப்பட்டதே!

1952-54 இல் முதலமைச்சராக இருந்தபோதும், தமிழர்களின் கல்விக் கண்களைக் குத்தினாரே - அப்பொழுது மொத்தம் இருந்த பள்ளிகளே 15 ஆயிரம்தான்; அதில் 6000 பள்ளிகளுக்கு மூடுவிழா நடத்தினாரே - அரைநேரம்தான் பள்ளி; மீதி அரை நேரம் அவரவர்களின் அப்பன் தொழிலை - குலத்தொழிலைச் செய்யவேண்டும் என்றும், ஆசிரியர்கள் அதனை மேற்பார்வையிடவேண்டும் என்றும் உத்தரவு போட்ட கவுடில்யன் ஆயிற்றே அவர்.

பச்சைத் தமிழர் காமராசர்

குலக்கல்வியை ஒழித்த காமராசரைப் பச்சைத் தமிழர் என்று அடையாளம் காட்டி, தந்தை பெரியார் கைதூக்கி விட்டதால்தானே நாம் பிழைத்தோம்; மளமளவென்று கல்வி நீரோடை தாழ்த்தப்பட்ட பகுதிக்கும், பிற்படுத்தப்பட்டோர் பகுதிக்கும் பாய்ந்தது - மறுக்க முடியுமா?

அதன்பின் தொடர்ந்து வந்த திராவிடர் இயக்க ஆட்சியில் நீரோடை வெள்ளமாக அல்லவா பாய்ந்து கல்விப் பயிர் செழிக்க உதவியுள்ளது!

அனைத்து மக்களும் படிப்பதற்கு என்னென்ன வழிகள் உண்டோ அவை எல்லாம் தாராளமாகத் திறந்து விடப்பட்டனவே - முட்டுக் கட்டைகள் எல்லாம் முற்றிலு மாகத் தூக்கி எறியச் செய்யப்பட்டதே! அதனால்தானே இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் 69 விழுக்காடு இட ஒதுக்கீடு.

கலைஞர் அரசின் சாதனை

மண்டல் குழுப் பரிந்துரை அமலாக்கம் ஆனதற்குத் தந்தை பெரியார் பிறந்த தமிழ்நாடும், திராவிடர் கழகமும், அதன் தலைவரும்தானே கிரியா ஊக்கிகளாக இருந்தனர்.

மானமிகு மாண்புமிகு கலைஞர் ஆட்சியில் நுழைவுத் தேர்வு தூக்கி எறியப்பட்டதால் ஏற்பட்ட புரட்சி - சாதாரணமானதா?

2010 ஆம் ஆண்டில் பொறியியல் கல்லூரிகளுக்கான விண்ணப்பங்கள் 1,63,131 என்றால் இது என்ன சாதாரணமா? திறந்த போட்டியில் 5662 போக மீதி இடங்கள் எல்லாம் தாழ்த்தப்பட்டோருக்கும், பிற்படுத்தப் பட்டோருக்கும், சிறுபான்மையினருக்கும் கிடைத்து விட்டதே!

இவ்வாண்டு பொறியியல் கல்லூரி சேர்க்கையில் 200-க்கு 200 மதிப்பெண்கள் பெற்றவர்கள் 10 பேர். இந்தப் பத்துப் பேர்களும் யார் தெரியுமா? 7 பேர் பிற்படுத்தப் பட்டவர்கள்; 3 பேர் மிகவும் பிற்படுத்தப்பட்டவர்கள்.

2009 ஆம் ஆண்டில் மருத்துவக் கல்லூரியில் திறந்த போட்டிக்கான இடங்கள் 460.

அதில் பிற்படுத்தப்பட்டோர் 300

மிகவும் பிற்படுத்தப்பட்டோர் 72

தாழ்த்தப்பட்டோர் 18

முசுலிம்கள் 16

உயர்ஜாதியினர் 54

இதில் 200-க்கு 200 மதிப்பெண்கள் பெற்றவர்கள் 8 பேர். இந்த எட்டுப் பேர்களும் யார் தெரியுமா?

பிற்படுத்தப்பட்டவர்கள் 7; மிகவும் பிற்படுத்தப்
பட்டோர் 1.

தி.மு.க. அரசின் மகத்தான சாதனை இது அல்லவா!

2009 இல் அகில இந்தியாவில் அய்.ஏ.எஸ். தேர்வில் வெற்றி பெற்றவர்கள் 875.

பிற்படுத்தப்பட்டோர் 236

தாழ்த்தப்பட்டோர் 131

பழங்குடியினர் 65

திறந்த போட்டி 443

பிற்படுத்தப்பட்டோர் இந்தியா முழுமைக்கும் தேர்ச்சி 236

இதில் தமிழ்நாட்டில் மட்டும் 95

இந்த மாற்றத்திற்குக் காரணம் எங்கள் அரசுதான் என்று மானமிகு கலைஞர் மார்தட்ட முடியுமே!

பார்ப்பனர் அல்லாதார் இயக்கத்தின் - இடையறாத உழைப்பால் - தந்தை பெரியார் அவர்களின் தன்மானப் புரட்சிக் குரலால் - திராவிட இயக்கத்தின் தீர்மானமான திட்டங்களால் - இவற்றால் ஏற்பட்ட சமூகநீதி விழிப்புணர் வால் இன்றைய நிலை என்ன? கண்ணுள்ளவர்கள் ஒரு கணம் விழித்துப் பார்க்கட்டும்! கருத்துள்ளவர்கள் கொஞ்சம் கவனமாகவே பார்க்கட்டும் - இதோ ஒரு புள்ளி விவரம்:

2008-2009 மருத்துவக் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கை கட்-ஆஃப் மதிப்பெண் (200-க்கு)

திறந்த போட்டி 197.25

பிற்படுத்தப்பட்டோர் 195.25

பிற்படுத்தப்பட்டோர் (கிறித்தவர்) 194.50

பிற்படுத்தப்பட்டோர் (முசுலிம்) 193.25

தாழ்த்தப்பட்டோர் 187.50

பழங்குடி மக்கள் 176.25

இந்தப் புரட்சிக்கு இணை ஏது?

இந்தியாவில் வேறு எங்கு இந்தப் புரட்சி நடந்திருக்கிறது?

பார்ப்பனர்கள் தி.மு.க. ஆட்சியின்மீது சீற்றம் கொண்டு எகிறி நிற்பதற்குக் காரணம் - இரகசியம் - இதற்குள் புதைந்து கிடக்கிறதே!

கலைஞரைக் கைவிடார்!

நன்றி உள்ள மக்கள் நம் கலைஞர் அரசைக் கைவிடுவார்களா? கைதான் விடலாமா?

எதைக் கொடுத்தாலும் சூத்திரனுக்குக் கல்வியைக் கொடுக்காதே என்பதுதான் மனுதர்மம் - ஆரிய தர்மம்!

எதில் குறையிருந்தாலும் கல்வியில் குறை என்பது கூடவே கூடாது என்கிற பெரியாரின் மனிதத் தர்மத்தை ஏற்றுக்கொண்ட அரசு - கலைஞர் அவர்கள் அன்று சட்டப்பேரவையில் பிரகடனப்படுத்தினாரே - அந்தச் சூத்திர அரசு!

மதுரை மாநாட்டின் நிறைவுரையில் தமிழர் தலைவர் இறுதியாக முத்திரை அடியாகப் பொறித்தது - இந்தச் சூத்திர - திராவிட அரசை மீண்டும் கொண்டுவர வேண்டும் என்பதாகும்.

சூத்திர அரசைக் காப்போம் -

சுயமரியாதை உணர்வைக் கூர் தீட்டுவோம்!

வெல்லட்டும் திராவிடர் இன உணர்வு!

வீழட்டும் மனுதர்மப் பேரழிவு!!

--------------------- நிறைவு -----

-------------கலி.பூங்குன்றன்,தி.க.பொதுச்செயலாளர் அவர்கள் "விடுதலை” 11-12-2010 இல் எழுதிய கட்டுரை

1 comments:

Shanmuganathan.N said...

நீங்கள் ஒரு இடத்தில்(2009 ஆம் ஆண்டில் மருத்துவக் கல்லூரியில் திறந்த போட்டிக்கான இடங்கள் 460.)உயர் சாதியினர் என்று குறிப்பிட்டுள்ளீர்கள் அதை மாற்றி பார்பனர், பாப்பான், என்று சிறப்பாக குறிப்பிட வேண்டும் என்றுகேட்டுக்கொள்கிறேன்