Search This Blog

12.4.08

மனிதத் தன்மையே அற்ற மருத்துவர்

வருகின்ற ஏப்ரல் -14 ஆம் தேதி அண்ணல் அம்பேத்கர் அவர்களின் பிறந்த நாள் ஆகும். அண்ணல் அம்பேத்கர் அவர்களின் தொண்டுக்கு வீர வணக்கம் செலுத்தி இக்கட்டுரையை பதிப்பிக்கிறோம்.

மனிதத் தன்மையே அற்ற மருத்துவர்!
-----------------------------------

அது கத்தியவார் கிராமத்தில் உள்ள ஒரு தீண்டத்தகாத ஆசிரியரின் வழக்கு. காந்தியால் வெளியிடப் பட்டு வரும் யங் இந்தியா என்றும் பத்திரிகையின் 1929 டிசம்பர் 12 ஆம் தேதிய பதிப்பில் கீழ்க்கண்ட கடிதம் வெளியிடப்பட்டது. குழந்தை பெற்றிருந்த தனது மனைவிக்கு ஒரு மருத்து-வரை மருத்துவம் பார்க்கச் செய்ய, தான் எதிர்கொண்ட இடையூறுகளை அக்கடி-தத்தில் வெளிப்படுத்தியிருந்த அவர், தனது மனைவியும், குழந்தையும் மருத்துவ உதவி-யின்றி எவ்வாறு இறக்க நேர்ந்தது என்பதையும் கூறியிருக்கிறார். அக் கடிதம் கூறுவதாவது:

இந்த மாதம் 5 ஆம் தேதி என் மனைவிக்கு ஒரு குழந்தை பிறந்தது. 7 ஆம் தேதியன்று உடல் நலமிழந்த என் மனைவிக்கு வயிற்றுப் போக்கு ஏற்பட்டது. அவளது பலம் எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து கொண்டே வந்தது; அவளது மார்பு விங்கிக் கொண்டது. மூச்சு விடுவதற்கே துன்பப்பட்ட அவளது மார்பெலும்புகளில் தாங்கமுடியாத வலி ஏற்-பட்டது. நான் ஒரு மருத்துவரை அழைக்கச் சென்றேன். ஆனால் தான் ஒரு அரிஜன் வீட்டிற்கு வரமாட்டேன் என்று கூறிய அவர் எனது குழந்தையையும் பரிசோதனை செய்து பார்க்கத் தயாராக இல்லை. பின்னர் நாகர்சேத் மற்றும் கராசியா தர்பாருக்குச் சென்ற நான் எனக்கு உதவும்படி வேண்டினேன். மருத்துவருக்கான மருத்துவக் கட்டணம் இரண்டு ரூபாயை முழுமையாக நான் கொடுப்பதற்கு நாகர்சேத் பிணையாக நின்றார். பின்னர் மருத்துவர் வந்தார்; ஆனால் ஒரு நிபந்தனை-யின் பேரில். அரிஜன் காலனிக்கு வெளியே-தான் நோயாளியைச் சோதனை செய்வேன் என்பதுதான் அந்த நிபந்தனை. பிறந்த குழந்தையுடன் என் மனைவியை அரிஜன் காலனிக்கு வெளியே கொண்டு வந்தேன். பின்னர் மருத்துவர் ஒரு தர்மாமீட்டரை ஒரு முஸ்லிமிடம் கொடுக்க, அந்த முஸ்லிம் அதனை என்னிடம் கொடுத்தார்.

என் மனைவியிடம் கொடுத்த நான் பின்னர் அதைத் திரும்பப் பெற்று முஸ்லிமிடம் கொடுத்தேன். அந்த முஸ்லிம் அதை மருத்துவரிடம் கொடுத்தார். அப்போது இரவு எட்டுமணி ஆகிவிட்டது. ஒரு விளக்கு வெளிச்சத்தில் அந்த தெர்மாமீட்டரைப் பார்த்த மருத்துவர் நோயாளி நிமோனியா நோயால் துன்புறுவதாகக் கூறினார். பின்னர் அங்கிருந்து சென்ற மருத்துவர் மருந்து அனுப்பி வைத்தார். சிறிது ஆளி விதைகளை நான் கடைத் தெருவிலிருந்து வாங்கி வந்து நோயாளி மீது அதைப் பயன்படுத்தினேன். மருத்துவருக்கு இரண்டு ரூபாய் கட்டணத்தை நான் கொடுத்த பிறகும், மறுபடியும் நோயாளியை வந்து பார்க்க அவர் மறுத்துவிட்டார். அந்த நோய் மிகவும் ஆபத்தானது; கடவுள் மட்டுமே எங்களுக்கு உதவ முடியும். எனது வாழ்க்கையின் ஒளி அணைந்துவிட்டது. அன்று பிற்பகல் இரண்டு மணி அளவில் என் மனைவி இறந்துவிட்டாள்.

அந்தத் தீண்டத்தகாத ஆசிரியரின் பெயர் கொடுக்கப் பட்டிருக்கவில்லை. அதே போல அந்த மருத்துவரின் பெயரும் அதில் குறிப்பிடப்பட்டிருக்கவில்லை. பெயரைக் குறிப்பிட்டால் பழிவாங்கும் செயல்கள் எழலாம் என்ற அந்தத் தீண்டத்தகாத ஆசிரியரின் அச்சத்தினால் பெயரைக் குறிப்பிடவேண்டாம் என்று அவர் கேட்டுக் கொண்டதே அதன் காரணம். ஆனால் அதில் குறிப்பிடப்பட்ட உண்-மைகள் மறுக்க முடியாதவை.

இதற்கு எந்த விளக்கமும் தேவையில்லை. நோய்வாய்ப்பட்டு மிகவும் மோசமான நிலையில் இருக்கும் நோயாளிக்கு தெர்மாமீட்டர் வைத்து சோதனை செய்ய அந்த மருத்துவர், படித்தவராக இருந்தும் கூட, மறுத்துள்ளார். அந்தப் பெண்மணிக்குச் சிகிச்சை செய்ய அவர் மறுத்ததன் காரணமாக அந்தப் பெண்மணி இறந்துபோனார். அவரது தொழில் அவருக்கு விதித்துள்ள கடமையைப் புறக்கணிக்கிறோம் என்ற வருத்தமோ உணர்வோ அந்த மருத்துவர் கொண்டிருக்க வில்லை. ஒரு தீண்டத்தகாதவரைத் தொடுவதை விட மனிதத் தன்மையே அற்றவனாக இருப்பதையே ஓர் இந்து விரும்புகிறான்.


---------- அம்பேத்கரின் விசாவுக்காக காத்திருக்கிறேன் நூலிலிருந்து

0 comments: