Search This Blog

11.5.12

பெரியார்பொதுவாழ்வின்முன்னுரைஅன்னைநாகம்மையார்



இன்று அன்னை நாகம்மையார் நினைவு நாள் (1933) சாதாரண குடும்பத்தில் பிறந்த இந்தப் பெண்மணி செல்வச் செழுமையில் திளைத்த ஈ.வெ. ராமசாமி அவர்களை கைப்பிடித்தார். அந்தக் கால கட்டத்திலேயே இருவரும் ஒருவரை ஒருவர் விரும்பிப் பிடிவாதமாக இருந்து திருமணம் செய்து கொள்வது என்பது சாதாரணமானதல்ல.

வைதிகப் பழக்க வழக்கத்தில் வளர்ந்த இந்தப் பெண் சுட்டெரிக்கும் பகுத்தறிவுச் சூரியனின் வெப்பத்தைத் எதிர் கொள்வதில் மூச்சுத் திணறியவர்தான்.

பெரியாரிடமா நடக்கும்? தம் வழிக்குக் கொண்டுவர பல உபாயங்களை மேற் கொண்டு வெற்றியும் பெற்றார்.

நான் மட்டும்தான் பகுத்தறிவுவாதி - வீட்டில் அப்படி இல்லை என்று சொல்பவர் களுக்கு இது ஒரு பாடம்! குடும்பத்தைத் திருத்தாத நீயா குவலயத்தைத் திருத்தப் போகிறாய்? என்ற கேள்வியை அனாவசியமானதாகக் கருத முடியாதே!

எந்த அளவுக்கு அம்மை யார் தயாரிக்கப்பட்டார்? கள்ளுக்கடை மறியலைத் தலைமை தாங்கி நடத்தும் அளவுக்கு -காங்கிரஸ் தலைவர் காந்தியாரின் கவனத்தையும், கருத்தையும் கவரும் அளவுக்குத் திற மையை வெளிப்படுத்தியவர்.

சட்டமறுப்பு இயக்கத்தை நிறுத்துவது என் கையில் இல்லை. ஈரோட்டில் இருக்கும் இருபெண்மணிகளின் கைகளில் (தந்தை பெரியாரின் இணையர் நாகம் மையார் - தங்கை எஸ்.ஆர். கண்ணம்மாள்) இருக்கிறது என்று காந்தியார் மதிக்கும் அளவுக்கு நிமிர்ந்து நின்றார். வைக்கம் தீண்டாமை ஒழிப்புப் போராட்டத்தில் தந்தை பெரியார் சிறைப்பட நேர்ந்தபோது, அப்போராட் டத்தைத் தலைமை தாங்கி நடத்தும் அளவுக்கு அவர் உயர்ந்தார்.

அய்ரோப்பிய நாடுகளுக்கு அவரது துணைவர் பெரியார் சுற்றுப் பயணம் செய்தபோது இயக்கத்தையும், குடிஅரசு இதழையும் நிருவகிக்கும் அளவுக்குத் திறமை பெற்றார்.

தம் துணைவரோடு சிங்கப்பூர் சென்று திரும்பிய காலை அன்பின் மிகுதியால் தங்களுக்குப் பரிசு பொருள் என்ன வேண்டும் என்று அம்மக்கள் கேட்ட பொழுது நீங்கள் எல்லாம் இங்கு சுயமரியாதை இயக்கத்தைப் பரப்பி வருகிறீர்களே அந்த அன்பு போதும்! என்று சொல்லும் அளவுக்குப் பக்குவம் பெற்றார். அகில இந்திய காங்கிரஸ் கட்சி உறுப்பினர் என்னும் நிலையை அடையும் அளவுக்கு பிரபலமானார். சுயமரியாதைத் திருமணங்களைத் தலைமை தாங்கி நடத்தும் அளவுக்கு முன்னேறினார்.


வீட்டுக்கு வருவோரை வரவேற்று விருந்தோம்புவதில் அவர் ஒரு தாய். எந்த நேரத்தில் சென்றாலும் சூடாக எப்படி அந்த சுவையான தோசை கிடைக்கிறதோ என்று ஆச்சாரியார் ஆயாசப்படும் அளவுக்குச் சிறந்தவர்.

தந்தை பெரியார் அவர்களின் பொது வாழ்வின் முன்னுரை அன்னை நாகம் மையார் - பின்னுரை அன்னை மணியம்மையார்.

--------------- மயிலாடன் அவர்கள் 11-5-2012 “விடுதலை” யில் எழுதிய கட்டுரை

4 comments:

தமிழ் ஓவியா said...

தாயன்பு


அனைவருக்கும் பெற்ற தாய் உண்டு. ஆனால் தாயன்பு என்பது பெற்ற தாய் மட்டுமன்றி சில நேரங்களில் சிலருக்கு மற்றவர்களிடமிருந்தும் கிடைக்கும் போது அதன் பெருமை பல மடங்காகி விடுகின்றது.

சிலருக்குப் பெற்ற தாய் மறைந்து விட நேரலாம். அப்போது அடுத்து வருபவரிடம் அந்த அன்பு கிடைப்பது நிச்சயமில்லாமல் போகலாம்.

மானமிகு ஆசிரியர் அவர்கள் பல முறை எழுதியுள்ளது போல அவரது குழந்தைப் பருவத்திலேயே பெற்ற தாயை இழந்தவர். அவரது வாழ்க்கையில் சிலர் அந்த அன்பை அவருக்கு அளித்துள்ளனர்.

அவரை வளர்த்த தாயார், இயக்கத்தில் அன்னை மணியம்மையார், பிற்காலத்தில் அமெரிக்கத் தாயார் வர்ஜீனியா க்ருச்னர் அவர்களையும் குறிப்பிடுவார். இன்றும் அவரிடம் பல இயக்கத் தாய்மார்கள் காட்டும் அளவு கடந்த அன்பில் அவர் குழந்தையாக அந்த அன்பை அனுபவித்து மகிழ்வதை நேரில் பார்த்தவர்கள் உணர்ந்து ஆச்சரியப்படுவார்கள்.

என்னையும் எனது உடன் பிறப்புக்களையும் வளர்த்து, ஆளாக்கிய பெருமை எங்கள் சித்தப்பாக்களைச் சேரும். கொள்கையில் திளைத்து வளர்ந்தவர்கள் எங்களைத் தன்னம்பிக்கையுடன் வளர்த்து விட்டனர்.

கொள்கை வீரராகத் திகழ்ந்த தியாகராசன் என்பவர் 1943லே சுயமரியாதைத் திருமணம் செய்து கொண்டவர். அவர் காலராவில் மறைந்துவிட நேர்ந்தாலும் அவரது துணைவியார் வைடூரியம் அவர்கள் எங்கள் வாய் ருசியை கவனித்து வளர்த்தவர் ஆவார்கள்.

சித்தப்பா பி.வே.இராமச்சந்திரன் அவர்கள் கொள்கைப் பசியைத் தீர்த்தவர் ஆவார்.

ஒரே சமயத்தில் நாங்கள் நான்கு பேர் கல்லூரிகளில் படிக்க நேர்ந்த பொருளாதாரச் சுமையைத் தாங்கியவர்கள் முக்கியமாக எங்கள் தாயாரும் அவரது உடன் பிறப்புத் தங்கை ராசாமணி அம்மாளும் ஆவார்கள். எங்கள் பெயருக்குப் பின்னுள்ள பட்டங்கள் இவர்களைச் சாரும் என்றால் அது மிகையாகாது.

இவர்கள் ஒரு முறை கூட போடா, வாடா என்றழைத்ததில்லை. அன்பும், பண்பும், பணிவும். ஆனால் பெருமையும் உணவாகப் படைத்தார்கள். அந்த அன்பு எங்கள் குழந்தைகட்கும் முழு அளவில், ஏன் எங்களை விட அவர்களுக்கு அதிகமாகவே கிடைத்தது, சிறப்பானது.

நாகம்மை குழந்தைகள் இல்லம் அவர்கள் இருவர் இதயங்களிலும் நிறைந்த இடத்தைப் பெற்றிருந்தது. மே 4, 2012இல் மறைந்த அன்பில் ராஜாமணி சந்திரகாசன் அவர்கள் நினைவாக ஒரு லட்சம் ரூபாய் வைப்புத் தொகையாக அன்பளித்து, அதில் வரும் வருவாய் அங்கு முதலாவதாக தேர்ச்சிப் பெறும் மாணவிக்கு அன்பில் சந்திரகாசன் ராஜாமணி அம்மாள் விருது அளிப்பதில் எங்கள் குடும்பத்தினர் மகிழ்வடைகின்றோம்.


- சோம.இளங்கோவன் 11-5-2012

தமிழ் ஓவியா said...

மக்கள் ஒருமைப்பாடு பேசுவோரே! கடவுள் ஒருமைப்பாடு எங்கே!


அரியும் சிவனும் ஒண்ணு: இதை அறியாதவர் வாயில் மண்ணு! நெடுங்காலமாய் நம் நாட்டில் வழங்கிவரும் பழமொழியிது. சிவனுக்கும் திருமாலுக் கும் உயர்வு - தாழ்வு-வேறுபாடு-முரண்பாடு கிடையவே கிடையாதென்று, மதக்குழப்பங்களுக்குள் ளான மக்கட்கு அறிவு கொளுத்தும் மொழியாக இப்படிச் செப்பினர் சூழ்ச்சி மதியினர் சிலர்.

ஆதிசங்கரர் மேற்கொண்ட சமய நடவடிக்கையான உண்மை இணைப்பில் சைவத்தையும், வைணவத் தையும் உள்ளடக்கவே செய்தார்.

அதன்பின் பல நூறு ஆண்டுகள் கடந்த நிலையிலும் அறிவாசான் அய்யா அவர்கள் தெளிவாகக் கேட்டு வந்தார் மதத் தலைவர்கள் தங்கள் கடவுளர்களைப் பற்றி ஒருமைப்பாடான முடிவுக்கு முதலில் வரமுடியுமா? என்று,

அய்யா சொல் என்றைக்கும் பொய்யா தென்பதற்கு இதோ சான்று:

மொட்டைக் கோபுரம் என்று அழைக்கப்பட்டு வந்த சிறீரங்க பெருமாள் கோவிலின் தென்திசைக் கோபுரத்தை வளரச் செய்வதில் வெற்றி கண்ட அகோபில மடத்தின் 44ஆம் ஜீயர் சிறீ அழகிய சிங்கரிடம் கல்கி இதழ் சார்பில் கேட்கப்பட்ட 87ஆண்டு அகவையாகி விட்ட ஒளிவு மறைவில்லா கேள்வியொன்றுக்குச் சிங்கர் அளித்த விடை சமய மக்களுக்குச் சரியான அறைகூவல்!

கேள்வி: சிறீ சங்கராச்சார்யாள் இந்த கோபுரத் தில் மூன்றாம் கட்டத்துக்குப் பண உதவி செய்திருக் கிறார். பல சைவர்களும் பெருமாள் திருப்பணிகளுக்கு உதவுகிறார்கள். இதுமாதிரி வைஷ்ணவப் பெரியார்கள் சைவ தலப் பணிகளுக்கு ஏன் உதவுக்கூடாது?

விடை: நான் சிவன் கோவில்களுக்குச் செய்ய மாட்டேன்... ஏன் என்று கேட்டா.... சிறீமத் நாராயணன் தான் எல்லா தெய்வங்களுக்கும் மேற்பட்ட தெய்வம்னு என்னோட சித்தாந்தம்... பிரமாவை நாராயணன் தன் நாபியிலிருந்து படைத்தான். அந்த பிரும்மா சங்கரனைப் படைத்தான் என்று கதையிருக்கு. அதுபடி பார்த்தா சங்கரனுக்கு நாராயணன் பாட்டன் ஆகிறார்.

தபஸ் பண்ணி பிரம்மா அந்தப் பதவிக்கு வந்தார்னும், அதே போல சிவன் எத்தனையோ யாகம் பண்ணி கடைசியிலே தானும் நெருப்பிலே குதித்துச் சக்தி பெற்றார்னு சாஸ்திரம் இருக்கு, சிவங்கள்ளாம் புண்ணியம் பண்ணி, தபஸ் பண்ணி தெய்வத் தன்மைக்கு உயர்ந்தவர்கள். நாராயணன் எப்போதும் உள்ளவர். அவரை வழிபடற நாங்கள் வேறு தெய்வத்தை வழிபட மாட்டோம். ஏன்னா அங்கே போனா புத்தி கெட்டுப் போகும். நாங்கள்ளாம் மோட்சத்துக்குப் போக டிக்கெட் வாங்கிண்டாச்சு. அதனாலே சிவன் கோவில் திருப்பணிக்குப் பணம் இருந்தாலும் தரமாட்டேன் (கல்கி 11-4-82) மேற்கண்ட விடை நமக்கு விளக்குவதென்ன?

1. சங்கரனுக்கு நாராயணன் பாட்டன். 2. சிவன் தவம் புரிந்து தெய்வம் ஆனவன். 3 வைணவன் சிவன் கோவிலுக்குச் சென்றால் புத்தி கெட்டுவிடும். 4 வைணவனிடம் பணம் இருந்தால் கூட, சிவன் கோவிலுக்குத் தரக்கூடாது!

ஆக, இன்றைக்கும் கூட அரியும் சிவனும் ஒன்றாகி விட்டார்களா? குழப்பம் குறையவில்லை; நீடிக்கிறது. மக்கள் ஒருமைப்பாடு பேசவந்து விட்ட மதக்காவற் காரர்கள் முதலில் கடவுள் ஒருமைப்பாடு காணட்டும்.

- பகுத்தறிவு

தமிழ் ஓவியா said...

தரித்திரம் ஏன்?


சாமி, பூசை, உற்சவம், புண்ணியம், யாத் திரை ஆகியவைகளின் பெயரால் தனித் தனி செலவும், அவற்றிற்காக நடைபெறும் பொது ஏற்பாட்டுச் செலவும், கணக்கு பார்த்தால், மனிதனின் மொத்த வரும்படி யில், ஒரு குறிப்பிட்ட பாகம் வீணா வதைக் காணலாம். மற்றும் மனிதன் வாழ்க்கையில் பிரவேசிக்கும் போதே பெரும்பான்மையோர் அவர்களது கல்வி, கல்யாணம் முதலியவை களால் ஏற்பட்ட கடனின் பேரிலே வாழ்க் கையைத் தொடர வேண்டியிருக்கிறது. இவை எல்லாம் சேர்ந்து அவசியமான காரியங்களுக்குப் பொருள் இல்லாமல் கஷ்டப்படும்படிச் செய்து விடுவதுடன், சதா தரித்திரர்களாகவும் இருக்க வேண்டியதாய் இருக்கிறது


- தந்தை பெரியார் (27.12.1930 களக்காட்டில் ஆற்றிய சொற்பொழிவிலிருந்து

தமிழ் ஓவியா said...

அண்ணா அறைகிறார்!


குழந்தையை மிரட்டக் கிழவர்கள், அய்ந்து கண் ணனைப் பற்றியும், ஆறு காலனைப் பற்றியும் கதை கூறும் போது குழந்தைகள் மிரட்சியுடன் கேட்டு, வாய்பொத்திக் கொண்டிருக்குமேயன்றி, தாத்தா, இதை நான் நம்ப முடியாது என்று கூறுவதுண்டோ?

குழந்தைப் பருவம், மனித சமுதாயத்துக்கு இருந்த போது தான் இடதேவன், மின்னல் மாதா, மழை மாகாளி, தீக்கடவுள் எனக் கடவுட் கதைகள் கட்டி விடப்பட்டன.

உலகிலே இதுபோலத் தோன்றிய கதைகள், அறிவுப் பருவத்தை அவனியோர் பெற்றதும் மறையலாயின!

ஆனால், இங்கு மட்டும், ஆரியர் அந்தநாள் ஆபாசத்தை இன்னும் விடாப்பிடியாக வைத்துக் கொண்டிருப்பதுடன், அதே கருத்துகளை மக்க ளிடையே பரப்புவதையே தங்கள் பிழைப்பாக வைத்துக் கொண்டுள்ளனர்.


நூல்: உவமை நயம்