Search This Blog

6.5.12

திராவிடர் என்ற மாறுதல் ஏன்? பெரியார் விளக்கம்

தோழர்களே, திராவிடர்களாகிய நாம் பிறந்ததால், வளர்ந்ததால், வாழ்வதால், திராவிட நாடு என்று சொல்லிக்கொள்ளும் இந்த நமதுநாடு இன்று பொருளாதார வாழ்வில், சமூக மேம்பாட்டில் சமூகக் கொள்கையில் அரசியல் ஆதிக்கத்தில், இது பிறருடைய - அந்நியருடைய நாடாக இருக்கிறது. எப்படி எனில் நம் உழைப்பையும், நம் நாட்டின் வளப்பத்தையும், அந்நியர்களே கொள்ளை கொண்டு அனுபவிக்கிறார் கள். நம் நிலை ஆப்பிரிக்கா நாட்டு சுதேசிகள் நிலையில் இருக்கிறது.

இதை மாற்றுவதற்கு ஆகவே இப்படிப் பட்ட மாநாடுகளைக் கூட்டி மக்களுக்கு உணர்ச்சி ஊட்டி தொண்டாற்றச் செய் கிறோம். இம்மாநாடு தேர்தல்களுக்காக செய்யப்படும் பிரச்சார மாநாடல்ல. நம் இன்றைய நிலையை நாம் உணர்ந்து நம் கடமையைச் செய்யத் தூண்டும் மாநாடே யாகும்.

தேர்தலும், நாமும்

தேர்தல் பற்றி என்னுடைய அபிப் பிராயம் உங்களுக்கெல்லாம் தெரியும். பலதடவையும் சொல்லியிருக்கிறேன். இன்று நம் லட்சியம் தேர்தலல்ல. ஆனால், தனிப்பட்டவர்கள் தம் சொந்த முறையில் தேர்தலில் நிற்பதையோ வெற்றி பெறுவதையோ நான் வெறுக்கவில்லை; இன்று வேண்டாமென்றும் சொல்லவில்லை. இயக்கத்தின் பெயரால் இப்போது தேர்தலில் ஈடுபடக்கூடாது என்பதும் இயக்க வேலை தேர்தல் பிரச்சாரமென்றிருக்கக்கூடாது என்பதும் என் கருத்து. தவிர இன்று தேர்தலில் நிற்பதற்கு நமக்கு என்ன யோக்கியதை இருக்கிறது? என்னை சுயமரியாதை இயக்கத் தலைவரென்றும், ஜஸ்டிஸ் கட்சியின் தலைவரென்றும் சொல்லு கிறீர்கள். நான் சொல்கிறபடி என் பேச்சைக் கேட்டு நடக்க பல முக்கிய ஸ்தர்களும் தொண்டர்களும் இருக்கிறார்கள். அப்படி இருந்தும் ஒரு சிறு பஞ்சாயத்து எலக்ஷனுக்கு நான் நின்றேனென்றாலும் நான் வெற்றிபெற மாட்டேன். இயக்கப் பிரமுகர்கள் பலர் நிலையும் இப்படித்தான். இதிலிருந்து பொதுமக்களிடத்தில் நமக்குச் செல்வாக்கு இல்லை என்று அருத்தமல்ல. இன்றைய தேர்தல் என்பது பாமர மக்களை ஏய்க்கும் ஒரு வித்தை. அதில் தேர்ச்சி பெற முதலில் முன்வரவேண்டும். அதற்கேற்ற துணிவும் தொண்டும் நமக்கு வேண்டும்.

பெருந்தோல்விக்குப் பின்

1937ஆம் ஆண்டில் ஜஸ்டிஸ் கட்சிக்கு ஏற்பட்ட படுதோல்விக்குப் பின்னர் தான் நம்மை நாம் உணர முடிந்தது. பாமர மக் களிடம் நேரிடை சம்பந்தம் வைத்துக்கொள்ள வேண்டும் என்கின்ற எண்ணம் தோன்றிற்று. ஆகவே, தோல்வியின் காரணமாக நாம் நம்மைத் திராவிடரென்று உணர்ந்திருக்கிறோம்; நம் மக்களிடையே ஒரு புது உணர்ச்சியை ஊட்டி நமது கொள்கைகளைப் பயமின்றி எல்லா இடங்களிலும் பிரச்சாரம் செய்து வருகிறோம் திருவாரூர் தீர்மானப்படியே.

சேலத்தில் சென்ற ஆண்டில் நடை பெற்ற நிர்வாகசபைக் கூட்டத்தில் ஜஸ்டிஸ்கட்சி எனப்படுவது திராவிடர் கட்சி என்ற பெயரால் வழங்கப்பட வேண்டு மென்றும், சமுதாயத்திலே பார்ப்பனரல்லாதார் என்ற பெயர் மறைந்து திராவிடர் என்ற பெயர் நிலை நிறுத்தப்பட வேண்டுமென்றும் சொன்னேன். அதை அநேகர் ஆதரித்தார்கள். வரப்போகும் மாகாண மாநாட்டில் இதுதான் முக்கியமான முதல் பிரச்சினையாக இருக்க முடியும்.

திராவிடர் என்ற மாறுதல் ஏன்?

இப்பொழுது திராவிடர் என்ற மாறுதல் ஏன்? இது பலரும் கேட்கக்கூடிய நியாயமான கேள்வியாகும். அதைப்பற்றி ஒரு சில வார்த்தைகள் கூற ஆசைப்படுகிறேன். இந்த நாட்டு மக்களாகிய நமக்கு ஏராளமான குறைபாடுகள் இருப்பது கண் கூடு. அதை உத்தேசித்தே நமது பெரியார்கள் 27 ஆண்டுகளுக்கு முன்னர் நீதிக்கட்சியை தோற்றுவித்தார்கள். எனக்கு நன்றாக ஞாபகமிருக்கிறது, இயக்கம் ஆரம்பிக்கப்பட்ட நாளில் நீதிக்கட்சி என்ற பெயர் இருந்த தில்லை. தெ.இ.ந.உ. சங்கம் எனப்படுவது தான் அதன் பெயர். அந்தக் கட்சிக்காக ஏற்பட்ட ஆங்கிலப் பத்திரிகையின் பெயரே (JUSTICE) ஜஸ்டிஸ். பத்திரிகையின் பெயரே கட்சிக்கு நிலைத்துவிட்டது. கட்சியின் தமிழ்ப் பத்திரிகைக்குத் திராவிடன் என்ற பெயரிருந்தும் நம் கட்சிக்கு திராவிடர் கட்சி என்ற பெயர் ஏற்படாமல் ஆங்கிலப் பத்திரிகையின் பெயராலே கட்சியின் பெயர் வழக்காற்றில் வந்துவிட்டதற்குக் காரணம் ஆங்கிலம் அறிந்தவர்களே அக்காலத்தில் நம் கட்சியில் செல்வாக்கும், ஆதிக்கமும் பெற்றிருந்ததுதான். அந்தக் காலத்தில் இந்தக் கட்சி எந்த மக்களின் நல்வாழ்விற்காக ஏற்பட்டதோ, அந்த மக்களுக்குப் பெயரென்ன என்ற பிரச்சினை எழுந்தது. ஆனால், திராவிடர் என்ற பெயருக்கு ஏகோபித்த ஆதரவு கிடைக்காத காரணத்தால் பெரிதும் ஆந்திரர் ஒப்புக்கொள்ளாததால் தென் இந்தியர் என்று ஏற்படுத்திக் கொண் டார்கள்.

தென் இந்தியர், பார்ப்பனரல்லாதார் என்ற இவ்விரண்டும் ஒன்றுக்கொன்று முரண்பட்ட கருத்துக்களைக்கொண் டுள்ளன. உத்தியோகங்களைப் பிரித்துக் கொடுப்பதில் பார்ப்பனரல்லாதார் என்ற பிரிவினை ஒப்புக்கொள்ளப்பட்டதே தவிர, இன உணர்ச்சி ஏற்படவேண்டிய முறையில் ஒப்புக்கொள்ளப்படவில்லை. அந்தக் குறைபாடு நம் மனத்தில் பல நாட்களாகவே இருந்து வருகிறது. தென் இந்தியப் பெருங்குடி மக்களுக்கு லட்சியச் சொல் ஒன்றில்லாமலிருப்பது பெருங்கேடு. இந்தக் காரணத்தாலேயும், அல்லாதார் என்ற பட்டம் நமக்குக் கூடாது என்பதாலேயும், நாமெல்லோரும் ஒரு கூட்டிற்குள் வர வேண்டும் என்பதாலேயும் ஒரு குறிச்சொல் தேவை; மிகமிகத் தேவை. இதைப் பல நாட்களாகவே நான் கூறி வருகிறேன்.

நம் மடமை மடியவேண்டாமா? நம்மை, யார்? என்று கேட்டால், பார்ப்பனரல்லதார் என்று சொல்கிறோம். மற்றபடி நம் நாடு எது? என்று கேட்டால், நமது அருமை நாட்டின் பெயரை மறந்து, பெரிய நிலப்பரப்பின், நமக்குச் சம்பந்த மில்லாத நாட்டின் பெயரை (இந்தியா என்று) கூறுகிறோம்; அதன் காரணமாக இந்தியர் என்றும் அழைக்கப்படுகிறோம். அரசாங்கத்தார் நம்மை மகமதியரல்லாதார் என்று அழைக்கிறார்கள். நம் தொகுதிக்கு அதுதான் பெயர். மேல் நாடுகளாகிய ஜெர்மனி, பிரான்சு, இத்தாலி, ஸ்பெயின், கிரீஸ், எகிப்து, துருக்கி ஆகிய எந்த நாட்டை எடுத்துக் கொண்டாலும் மொழி, கலை, நாகரிகம் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றின் பெயரை வைத்துக் கொண்டு, அதைக் காப்பாற்றவேண்டி மற்றவர்களுடன் போராடியே வந்திருக்கிறது.

ஜெர்மானியன், ஜெர்மனிக்குள் யூதன் ஏன் வாழ்ந்திருக்கவேண்டும்? அவன் நமது நாட்டை ஏன் சுரண்டவேண்டும்? வெளி நாட்டானுக்கு இங்கு என்ன வேலை? வெளியான் ஏன் நம்மீது ஆதிக்கம் செலுத்த வேண்டும்? என்ற உணர்ச்சிகளால் உந்தப்பட்டு போராடி வந்ததன் காரணமாக, இன்று ஜெர்மனி உலகில் பெரியதோர் வல்லரசாகவும், மற்ற நாடுகள் கண்டஞ்சும் படியாகவும் இருக்கிறது. நாமேன் அப்படி ஆகக்கூடாது, என்பதைத் திராவிட மாணவராகிய நீங்கள் யோசிக்க வேண்டும்.

திராவிடர் இந்துக்களல்லர்

இனத்தைக் குறிப்பாக வைத்துக் கொண்டு ஒற்றுமைபெற வழியில்லாதவர்கள், சமயத்தைச் சொல்லி அதன் மூலம் ஒற்றுமைப்படுகின்றார்கள். முஸ்லிம்கள் தங்கள் இனம் இன்னது என்று சொல்லா விட்டாலும், தங்களுக்குள்ளே பல இனங்கள் இருப்பதன் காரணமாக, இஸ்லாம் என்ற ஒரு சமயத்தின் மூலம் ஒன்றுபட்டிருக்கின்றனர். உலகத்திலுள்ள பல்வேறு மக்கட் கூட்டத்தினரின் நிலை நாளுக்குநாள் முன்னேற்றமும், ஒற்றுமையும் ஏற்படுவதாக அமைந்திருக்க, இந்த நாட்டு மக்களாகிய நாம் நம்மைப் பார்ப்பனரல்லாதார் என்ற பொருளுள்ள வார்த்தையால் அழைத்து கொண்டு இருப்பதால், நம்மிடையே இன உணர்ச்சியும், ஒற்றுமை உணர்ச்சியும் எப்படி ஏற்பட முடியும்? நம் சமயம் இந்துவென்றும், நாடு இந்தியா என்றும், இனம் இந்தியர் என்றும் கூறிவருகிறோம்; இதைத் தப்பு என்று மட்டும் நான் கூறவில்லை. வெறுங்கற்பனையுங்கூட. இந்து என்று சொல்வதால் நாம் இவ்வளவு பெரிய இனம் பல சிறுசிறு வகுப்புகளாகப் பிரிந்து ஒருவரையொருவர் பகைத்துக் கொண்டிருக்கத்தான் முடிகின்றதே தவிர, அவ் வார்த்தையில் வேறென்ன தத்துவார்த்தம் இருக்க முடியும்? 500 அல்லது 600 ஆண்டுகளுக்கு முன்னர் எழுதப்பட்ட எந்த நூலிலாவது இந்த நாட்டுப் பெருங்குடி மக்களை இந்து என்று குறிப்பிடப்பட்டிருக்கிறதா? என்று பண்டிதர்களையே நான் கேட்கிறேன்.

இந்தியாவின் சீர்கேடு

உலக சமுதாயத்தைப் பொதுவாக எடுத்துக் கொண்டால், இவ்விந்திய நாட்டைப் போன்ற நாடு இருந்ததில்லை. இருக்கவுமில்லை. கையிலே வலுத்தவன் மற்றவர் களைச் சுரண்டிப் பிழைக்கவும், உண்ண ஒரு கூட்டமும், உழைக்க மற்றவர்களும் இருக்கும்படியானதுமான சீர்கேடான நிலை ஏற்படத்தான் இப்பெரிய விஸ்தீரணமும் இந்தியா என்கிற பெயரும் பயன்படுகிறதே ஒழிய இந்தக் கண்டத்தின் பல்வேறு இனங்கள் ஒன்றுபடும்படியான அறிகுறிகள் ஏதும் தோன்றவேயில்லை. இவ்வாறு பல்வேறு இனங்கள் 400, 500 மொழிகள் 1000, 2000 வகுப்புகள் பலப்பல கொள்கைகள் பழக்க வழக்கங்கள் கொண்ட ஒரு பெரும் நிலப்பரப்பை ஒரு நாடு (நேஷன்) என்று சொல்வதால் பயனென்ன? என்று யோசிக்க இந்த நாட்டு மேதாவிகளுக்கு அவகாச மில்லை. 4 கோடி, 2 கோடி, 50 லட்சம், 20 லட்சம் என்பன போன்ற எண்ணிக்கை யுள்ள மக்களைக் கொண்ட தனிச் சிறு நாடுகள் நமது ஒரு ஜில்லா 2 ஜில்லா போன்றவைகள் சுதந்திர நாடுகளாக அய்ரோப்பாவிலே இருக்கின்றன. அம்மாதிரி சிறு நாடுகள் சுதந்திர நாடுகளாக இருக்க முடிவது ஒரு குறிப்பிட்ட லட்சியத்தை முக்கியமாகக் கருதிய தால்தான். அந்தப்படி இந்திய கண்டத்தில் வாழ்ந்து வரும் தனி இனத்தவராகிய நாம், பிறருடைய சம்பந்தத்தை விட்டு நமக்குரிய இலட்சி யத்தை விடாப் பிடியாய்ப் பிடித்துக் கொண்டு முன்னேற்றமடைய முயற்சி செய்ய வேண்டும். அதற்காகத்தான் இதை திராவிடர் மாநாடு என்கிறோம்.

மாணவர் மாநாடு - அவசியம்

இறுதியாக, தோழர்களே! மாணவர் மாநாடு எதற்கு இந்த மாநாட்டை மாணவர் மாநாடு என்று ஏன் கூறவேண்டும்? நாங்கள், அதாவது மாணவரல்லாதார் செய்த காரியம் போதும். ஒவ்வொரு பெரியவருக்கும் ஒவ் வொரு ஜோலி வந்துவிட்டது. எக்காலத்திலும், இலாப நஷ்டத்தைப் பொருட்படுத்தாமல், கிளர்ச்சியில் தீவிரமாக இறங்கித் துணிந்து தொண்டாற்ற ஒரு கூட்டம் வேண்டும். முந்நாட்களில் தொண்டர் கூட்டத்திலிருந் தவர்கள் இன்று பெரியவர்களாகி விட் டார்கள். லாபநஷ்டம் பார்க்கவேண்டியவர்களாக ஆகிவிட்டார்கள். இது இயற்கை, செடிகள் மரங்களாகி விட்டன. செடிகளை நம்பித்தான் நான் இயக்கப் பணியாற்றி வந்திருக்கிறேன். மரங்களைப் பற்றி நான் கவலை கொள்ளுவதில்லை.

எனவே, இன்றைய திராவிட மாண வர்கள், இளைஞர்கள் நம்முடைய இயக் கத்திற்கு பற்றுதல் கொள்ளவேண்டியதும், மாநாடுகள் நடத்தவேண்டியதும் காலத்தாற் செய்யத்தக்கனவாகும். ஆதலால் மாணவ மாநாடு கூட்டுகிறோம்.

---------------11.06.1944 அன்று விருதுநகரில் இராமநாதபுர மாவட்ட மாநாட்டைத் திறந்து வைத்து பெரியார் ஈ.வெ.ரா. ஆற்றிய சொற்பொழிவு-"குடிஅரசு" - சொற்பொழிவு - 17.06.1944

1 comments:

krishy said...

மே தின வாழ்த்துகள்
உங்கள் பதிவுகளை DailylLib ல் இணைத்து பயன் பெறுங்கள். DailyLib செய்தி தாள் வடிவமைப்பு உங்கள் பதிவுகளை அழகாக வெளிகாட்டும்

தமிழ்.DailyLib

we can get more traffic, exposure and hits for you

To link to Tamil DailyLib Logo or To get the Vote Button
தமிழ் DailyLib Vote Button

உங்கள் பதிவுகளை இணைத்து பயன் பெறுங்கள்

நன்றி
தமிழ்.DailyLib