Search This Blog

30.5.12

பெரியாரின் சொந்த அனுபவம்




காங்கிரசில் நான் இருக்கும்போது, காங்கிரசில் ஜாதி வித்தியாசம் பாராட்டக் கூடாது என்று ஒரு தீர்மானம், காங்கிரஸ் கமிட்டியில் நானும் திரு.எஸ்.ராமநாதனும் சேர்ந்து எங்கள் சொந்த செல்வாக்கில் நிறைவேற்றி வைத்தோம். ஆனால், உடனே திருவாளர்கள் சி.இராஜ கோபாலாச்சாரி, டாக்டர் இராஜன், டிவிஎஸ்.சாஸ்திரி, என்.எஸ்.வரதாச்சாரி, கே.சந்தானம் முதலாகிய காங்கிரஸ் தலைவர்கள் என்கின்ற பார்ப்பனர்கள் இராஜினாமா செய்தார்கள் என்பது உங்களுக்குத் தெரியாதா? என்று கேட்கின்றேன். காங்கிரஸ் பணத்தில் - காங்கிரஸ் பக்தரால் நடத்திய குருகுலத்தில்தானே எல்லோரையும் சமமாய் வைத்துச் சாப்பாடு போடவேண்டும் என்று நாங்கள் சொன்னதற்கு, மேல்கண்ட தலைவர்களேதான் _ அது அவரவர்கள் இஷ்டமேயொழிய யாரையும் கட்டாயப்படுத்தி, யாருடைய மனதையும் புண்படுத்தி, யாருடைய உரிமையையும் பறிக்கக்கூடாது என்று பதில் சொன்னதோடு, அதற்காக அந்த குருகுலமே கலைக்கப்பட்டு, இப்போது அதை ஒரு பார்ப்பனர் தனது சொந்த சொத்தாக அனுபவிக்கிறார் என்பது உங்களுக்குத் தெரியாதா? என்று கேட்கின்றேன். இந்த விஷயத்தை திரு.காந்தியும் ஒப்புக் கொண்டு, அது அவர் தனி அபிப் பிராயம் என்று செட்டிமார் நாட்டு சுற்றுப் பிரயாணத் தில் சமாதானம் சொல்லவில்லையா? என்று கேட்கின்றேன்.

இந்த மகாத்மாக்களும், தியாகிகளும், தலைவர்களும் இதற்குள்ளாக இப்போது புடம் போட்ட தங்கமாய் விட்டார்களா? அல்லது சலவை செய்த மக்களாய் விட்டார்களா? என்று கேட்கின்றேன். அல்லது இந்த விஷயங்கள் பொய்யா? என்று கேட்கின்றேன். அல்லது இன்றைய சுயராஜ்யத் திட்டத்தில் பார்ப்பனருக்குள்ள இந்த உரிமை பறிக்கப்பட்டு விட்டதா? அல்லது இந்த யாருடைய மனமும் புண்படக்கூடாது என்கின்ற தர்மநீதி எடுத்தெறியப்பட்டு விட்டதா? என்று கேட்கின்றேன்.

காங்கிரஸ் அங்கத்தினரில் ஜாதி வித்தியாசம் பாராட்டப் பட்டதில்லை என்று ஒரு நண்பர் சொன்னார். என்னுடைய சொந்த அனுபோகத்தை இங்கு எடுத்துச் சொல்லுவதற்கு மன்னிக்க வேண்டுகிறேன். அதாவது, நானும் உயர்திரு எஸ்.சீனிவாச அய்யங்காரும் காங்கிரஸ் பிரசார விஷயமாய்த் திண்டுக்கல்லுக்குப் போன போது ஒரு பார்ப்பனர் வீட்டுக்குப் போயிருந்தோம். அந்தக் காலத்தில் நான் வேறாக வைத்தே சாப்பாடு போடப் பட்டேன். ஆனாலும், பகலில் சாப்பிட்ட எச்சில் இலை அப்படியே இருக்க, அதன் பக்கத்தில்தான் இரவும் இலை போடப்பட்டு சாப்பிட்டேன்.


இது இப்படியிருக்க, மற்றொரு சமயம் நானும் தஞ்சை திரு.வெங்கட கிருஷ்ண பிள்ளையும் காங்கிரஸ் பிரசாரமாக பெரியகுளத்திற்குப் போன போது, ஒரு வக்கீல் பார்ப்பனர் வீட்டில் இறக்கப்பட்டோம். அப்போது காலை பலகாரம் சாப்பிட்ட எச்சில் இலைக்குப் பக்கத்தில் பகல் சாப்பாடும், பகல் சாப்பாடு சாப்பிட்ட எச்சில் இலைக்குப் பக்கத்திலும் இராத்திரி சாப்பாட்டுக்கும் இலை போடப்பட்டு, எறும்புகளும், பூச்சிகளும், ஈக்களும் ஊர்ந்து கொண்டிருக்கவே சாப்பிட்டு வந்தோம். இவற்றையெல்லாம் இலட்சியம் செய்யாமல்தான் காங்கிரசில் உழைத்தேனா னாலும், காங்கிரசில் ஜாதி வித்தியாசம் பாராட்டப்படுவ தில்லை என்பதை நான் ஒப்ப முடியாது என்பதற்காக இதை சொல்லிக் கொள்ளுகின்றேன்.

------------------ தந்தை பெரியார், "குடிஅரசு" 12.7.1931

0 comments: