Search This Blog

21.5.12

பகுத்தறிவுக்கு ஒத்த மாறுதல் -பெரியார்


நம்மிடையே உள்ள ஜாதி இழிவும், மூட நம்பிக்கையும், அர்த்தமற்ற சடங்குகள், வீண் செலவுகள் ஆகியவற்றுக்குக் காரணமாக இருப்பது நம்மிடையே இருந்து வரும் திருமண முறைதான். எனவே, இதை உணர்ந்து இதனை ஒழித்து பகுத்தறிவுக்குப் பொருத்தமான முறையிலேயே இத்தகைய மாறுதல் திருமணத்தை வகுத்து நடத்தி வருகின்றோம்.


சீர்திருத்தத் திருமணத்தில் நமது இழிவு துடைக்கப்படுகின்றது. பார்ப்பானுடைய கடவுள், மதம், சாஸ்திரம் முதலியன விலக்கப்படுகின்றன.

நம்மிடையே திருமணத்துக்கு முதலாவதாக பொருத்தம் பார்க்கின்றார்கள். மணமக்களின் வயதுப் பொருத்தம், உடலமைப்பு, அழகு, கல்விப் பொருத்தம் இவற்றைவிட ஒருவருக்கு ஒருவர் திருமணத்துக்கு சம்மதிக்கின்றார்களா என்ற பொருத்தம் இவற்றைப் பார்க்காமல் முட்டாள்தனமாக பெயர், ராசிப் பொருத்தம் பார்க்கின்றார்கள். இத்தகைய முட்டாள் தனத்தை எல்லாம் மக்கள் விட்டொழிக்க வேண்டும்.

நம்மிடையே ஒருவனுக்கு கல்யாணம் செய்ய வேண்டும் என்று தொடங்குவது, வீட்டு வேலைக்கு ஆள் தேவைப்படு கின்றது என்பதற்காகவே செய்கின்றார்களே ஒழிய, தம் பையன் வாழ்க்கைக்கு என்று சொல்ல மாட்டார்கள். நம்மிடையே பெண்களை அடிமையாகவே வீட்டுக்கு வேலையாளாகவே வெகுநாளாக நடத்திக் கொண்டு வருகின்றோம்.

எங்களுடைய திருமண முறை காரணமாக ஆண்களைவிட பெண்களுக்குத்தான் அதிக நன்மை ஏற்பட்டுள்ளது.

புரோகித திருமணம் என்ற பேரால் ஏற்பாடு செய்யப்பட்ட அத்தனையும் முட்டாள்தனமானதும், அர்த்தமற்றதுமேயாகும் என்று எடுத்துரைத்து, கடவுள், மதம், சாஸ்திரம் ஆகியவற்றின் பேரால் நாம் அடையும் இழிவுகள் குறித்து தெளிவுபடுத்தியும் மணமக்களுக்கு அறிவுரை கூறியும் பேசினார்.


-------------------------- தந்தைபெரியார் - “ விடுதலை” 10.7.1963

2 comments:

தமிழ் ஓவியா said...

சகுனங்கள் சரியா?



மக்களிடையே மண்டிக் கிடக்கின்ற மூடநம்பிக்கைகளுள் சகுன நம்பிக்கையும் ஒன்று. இதனால் ஏற்படும் பாதிப்புகள், கேடுகள், இழப்புகள் ஏராளம் என்பதோடு இவை உருவாக்கும் மன உளைச்சல், வீண்பழி, மனத்தளர்ச்சி, வாழ்விழப்பு போன்றவை ஏராளம். குறிப்பாக, விதவைப் பெண்களும், திருமணத்தை எதிர்நோக்கும் இளம்பெண்களும் அடையும் இழப்பும், இன்னல்களும் ஏராளம். ஒரு பெண்ணின் வாழ்வையே பல்லியின் ஓசையில் பலிகொடுக்கும் அவலமும் இதில் அடங்கும். எனவே, சகுனம் பற்றிய விழிப்புணர்வு பிஞ்சுகளுக்கேயன்றி பெரியவர்களுக்கும் வேண்டும்.

சகுனங்கள் பல வகைப்படும்:

மனிதர்கள்: எதிரில் வரும் மனிதர்கள் யார்? என்பதை வைத்து சகுனம் பார்க்கப்படுகிறது.

சலவைத் தொழிலாளி, பால்காரர் எதிரில் வந்தால் நல்ல சகுனம்; எண்ணெய், விறகு எடுத்துக்கொண்டு எதிரில் வந்தால் கெட்ட சகுனம்.

காரணம், பால் மங்கலப் பொருள். அழுக்கு நீக்கி ஆடை வெளுப்பவர் சலவைத் தொழிலாளி. எனவே, நல்ல சகுனம். எண்ணெய், விறகு அமங்கலப் பொருள். எனவே, அது கெட்ட சகுனம்.

விதவை வாழ்வு இழந்தவள். அதனால் கெட்ட சகுனம். சுமங்கலி வாழ்வுடையவள். எனவே, நல்ல சகுனம்.

ஒலி: சங்கு ஊதினால், வெடிவெடித்தால் கெட்ட சகுனம். மணி ஒலித்தால் நல்ல சகுனம்.

பறவை: சில பறவைகள் கத்தினால் நல்லது. ஆந்தை போன்றவை கத்தினால் கெட்ட சகுனம்.

பல்லி: கத்துகின்ற இடத்தைப் பொறுத்து நல்ல சகுனம், கெட்ட சகுனம் என்று கொள்ளப்படுகிறது.

விலங்கு: கழுதை கத்தினால் நல்ல சகுனம். பூனை குறுக்கே வந்தால் கெட்ட சகுனம்.

தோணி(ஓடம்) : ஆற்றின் இக்கரையில் இருந்தால் நல்ல சகுனம். அக்கரையில் இருந்தால் கெட்ட சகுனம்.

தும்மல்: சிலர் தும்மினால் நல்ல சகுனம். சிலர் தும்மினால் கெட்ட சகுனம்.

வார்த்தைகள்: ஒரு காரியத்திற்குச் செல்லும் போது, காதில் விழும் வார்த்தைகளை வைத்து நல்ல கெட்ட சகுனம் கணிக்கப்படுகிறது.

பொருள்கள் தவறிவீழ்தல்: விழாமல் பிடித்துக் கொண்டால் நல்ல சகுனம். தவறி விழுந்தால் கெட்ட சகுனம். தவறி விழுந்து பொருள் உடைந்தால் பாதிப்பு வரும் என்ற நம்பிக்கை.

மேற்கண்ட சகுனங்களை மூன்று வகையாகப் பிரிக்கலாம்.

1. காட்சியின் தன்மையை வைத்து நல்ல காட்சியாயின் நல்ல சகுனம்; கெட்ட காட்சியாயின் கெட்ட சகுனம்.

2. நாம் எதிர்நோக்கும் ஆளோ, பொருளோ, வாகனமோ அமைவது, சாதகமான நிலையாயின் நல்ல சகுனம், பாதகமான நிலையாயின் கெட்ட சகுனம்.

3. மரபுவிழா சொல்லப்படும் சகுனங்கள்: முதலாவதாக, நல்ல காட்சி - நற்சகுனம் கண்டால் - நல்லது நடக்கும் என்பதும், கெட்ட காட்சி - கெட்ட சகுனம் கண்டால் கெட்டது நடக்கும் என்பதும், நம் மனதில் எழும் வெறுப்பு விருப்புகளின் வெளிப்பாடாகும்.

இரண்டாவதாக, காட்சி சாதகமா அல்லது பாதகமா என்பதை வைத்து எழும் சகுன நம்பிக்கை, நடக்கப்போகும் காரியத்தின் முன்னறிவிப்பாக இக்காட்சிகளைக் கருதும் அறியாமையால் எழுகிறது.

மூன்றாவதாக, பல்லி, பூனை போன்ற சகுன நம்பிக்கைகள் மரபு வழியில் கற்பிக்கப்பட்ட சகுன நம்பிக்கைகள் ஆகும்.

விதவை என்பவள் வாழ்விழந்தவள், அலங்கோலப்படுத்தப்பட்டவள். எனவே, அவள் எதிரில் வந்தால் கெட்டது நடக்கும் என்ற நம்பிக்கை. அவள் மீதுள்ள வெறுப்பால் எழுந்தது. நடக்கப்போகும் கெடுதலுக்கு அவள் எப்படிப் பொறுப்பாவாள் என்பதைச் சிந்திக்க வேண்டும்.

நடக்கப்போகும் கெடுதலுக்கு வாழ்விழந்த பெண்ணை, அபாய அறிவிப்பாக ஆக்குவதும், அதை நம்புவதும் அடிமுட்டாள்தனமல்லவா? அநியாயம் அல்லவா?

நடக்குப்போகும் காரியத்திற்கு, புறப்படுமுன் நல்லதாயின் நல்லது நடக்கும் என்பதும், கெட்டதாயின் கெட்டது நடக்கும் என்பதும், காட்சியோடு காரியத்தைப் பொருத்திப் பார்க்கும் மூடத்தனத்தின் விளைவாகும்.

இந்தக் காட்சிகளை பலமுறைச் சோதித்துப் பார்த்தால், கெட்ட சகுனத்தைப் பார்த்துச் சென்றபோது நல்லது நடப்பதையும், நல்ல சகுனத்தைப் பார்த்துச் சென்றபோது கெட்டது நடப்பதையும் நாம் அறியலாம்.

எந்தவொரு காட்சியும், வார்த்தையும், ஒலியும் நடக்கப்போவதை அறிவிக்கக் கூடியவை அல்ல. எல்லாம் நமது உள விருப்பு, வெறுப்பின் வெளிப்பாடுகள்; தொடர்புப்படுத்திப் பார்ப்பதன் விளைவுகள்.

மேலும், ஒரே காட்சியை, ஒரே சகுனத்தைப் பார்த்துச் செல்கின்ற அனைவருக்கும் ஒரே மாதிரியான பலன்கள் கிடைப்பதில்லை. விதவையைப் பார்த்துச் சென்ற ஒருவருக்குக் கெட்டது நடந்திருந்தால், இன்னொருவருக்கு நல்லது நடந்திருக்கும். எனவே, காட்சிகளுக்கும், நடக்கப்போகும் காரியங்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பதை, பிஞ்சுக் குழந்தைகள் மட்டுமின்றி பெரியவர்களும் நன்கு சிந்தித்து, சகுன நம்பிக்கையென்னும் மூடநம்பிக்கையை விட்டொழித்து பகுத்தறிவுப் பாதையில் பரிசோதித்து, சிந்தித்துச் செயல்பட வேண்டும்.

- சிகரம்

தமிழ் ஓவியா said...

தெரிந்துகொள்வோம்

குழந்தைகள் பலவிதமான பொம்மைகள் வைத்து விளையாடினாலும் குறிப்பிட்ட சில பொம்மைகளை மட்டுமே அதிகம் விரும்புவர். அந்த வகையினுள் தனக்கென தனியிடம் பிடித்திருப்பதே பார்பி பொம்மை. அனைத்துத் தரப்பினரும் வாங்கும் வகையில் 20 ரூபாயிலிருந்தே கிடைப்பது இதன் சிறப்பு. இத்தகு பெருமை வாய்ந்த பார்பி பொம்மைகள் எப்போது தோன்றின? எப்படித் தோன்றின?

அமெரிக்க நிறுவனமான மேட்டல் இங்க் என்னும் பொம்மைகள் தயாரிக்கும் நிறுவனத்தில் 1959 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 9 ஆம் தேதி வெளியிடப்பட்ட பொம்மையே பார்பி. பில்ட் லில்லி என்னும் ஜெர்மன் பொம்மையை அடிப்படையாகக் கொண்டு பார்பி பொம்மையை உருவாக்கியதாக இதனை வடிவமைத்த ரூத் ஹேன்ட்லர் கூறியுள்ளார். ரூத் ஹேன்ட்லரின் மகள் காகித பொம்மைகளை வைத்து விளையாடிய போது அவற்றிற்கு பெரியவர்களின் பாத்திரங்களைக் கொடுத்து மகிழ்ச்சி அடைந்ததைப் பார்த்துள்ளார். அந்தக் காலத்தில் குழந்தைகள் விளையாண்ட பொம்மைகள் மிகச் சிறியதாக இருந்தன. இதனைப் பார்த்த ஹேன்ட்லர், வளர்ந்து பருவமடைந்த ஒரு உடலை பொம்மையாகச் செய்யும் தமது எண்ணத்தை அவரது கணவர் எலியட்டிடம் கூறியுள்ளார். ஹேன்ட்லரின் கணவர் எலியட், மேட்டல் பொம்மை நிறுவனத்தின் இணை நிறுவனர். எலியட் மற்றும் அவருடன் இருந்த மற்ற இயக்குநர்களில் யாருமே ஹேன்ட்லர் கூற்றில் ஆர்வம் காட்டவில்லை.

1956 ஆம் ஆண்டு ஹேன்ட்லர் தனது குழந்தைகள் பார்பரா மற்றும் கென்னத் ஆகியோருடன் அய்ரோப்பியச் சுற்றுலா மேற்கொண்டார். அப்போது, பில்ட் லில்லி என்றழைக்கப்பட்ட ஜெர்மன் பொம்மையைப் பார்க்கும் வாய்ப்பு ஏற்பட்டது. வளர்ந்த மனித உருவம் கொண்ட அந்தப் பொம்மை போன்ற தோற்றமே ஹேன்ட்லரின் மனதினுள் இருந்தது. பார்த்ததும் மகிழ்ச்சியில் 3 பொம்மைகளை வாங்கினார். ஒரு பொம்மையைக் குழந்தைகள் கையில் கொடுத்தார். 2 பொம்மைகளை தனது கணவர் நடத்தும் மேட்டல் நிறுவனத்திற்குக் கொண்டு சென்றார்.

சித்திரப் புத்தகம் ஒன்றில் இடம் பெற்ற பிரபலமான கதாபாத்திரத்தை ஒட்டி லில்லி பொம்மை வடிவமைக்கப்பட்டிருந்தது. இது டை பில்ட் ஜியுடுங் என்பவரால் வரையப்பட்டது. 1955 ஆம் ஆண்டு முதன்முதலாக ஜெர்மனியில் லில்லி பொம்மை விற்பனைக்கு வந்தது. முதலில் பெரியவர்களுக்கான பொம்மையாக விற்கப்பட்டாலும் குழந்தைகளிடமே அதிக வரவேற்பைப் பெற்றது. அந்தப் பொம்மைக்கேன்றே தனியாகக் கிடைத்த ஆடைகளை அணிவித்து மகிழ்ந்தனர் குழந்தைகள்.

அமெரிக்கா திரும்பிய ஹேன்ட்லர், ஜேக் ரையான் என்ற பொறியாளரின் உதவியுடன் மீண்டும் வடிவமைத்து பார்பி என்ற புதிய பெயரினைச் சூட்டினார். இந்தப் பெயர் ஹேன்ட்லரின் மகள் பார்பராவின் பெயரிலிருந்து வந்தது. 1959ஆம் ஆண்டு மார்ச் 9ஆம் நாள் நியூயார்க் நகரில் நடைபெற்ற அமெரிக்க அனைத்துலக விளையாட்டுப் பொருள்கள் கண்காட்சியில் இந்தப் பொம்மை முதன்முதலாக அறிமுகம் செய்யப்பட்டது. இந்த அறிமுக நாளே பார்பி பொம்மையின் அதிகாரப்பூர்வமான பிறந்தநாளாகப் பின்பற்றப்பட்டு வருகிறது.

பில்ட் லில்லி பொம்மைக்கான காப்புரிமைகளை மேட்டல் நிறுவனம் 1964 ஆம் ஆண்டு பெற்றது. முதன்முதலாக உருவாக்கப்பட்ட பார்பி பொம்மை கருப்பும் வெள்ளையும் கலந்த ஒரு வரிக்குதிரை வண்ணத்தில் நீச்சல் உடை மற்றும் அதன் தனிப்பட்ட அடையாளமான உச்சந்தலையில் போனி டெயில் ஆகியவற்றுடன் தோற்றமளித்தது. பதின்வயது நவநாகரிக மாடல் என்ற பெயரில் விளம்பரப்படுத்தப்பட்டது. பொம்மையின் உடைகளை மேட்டல் நிறுவன நாகரிக உடை வடிவமைப்பாளர் சார்லட் ஜான்சன் அமைத்தார்.

பார்பி பொம்மைகள் முதலில் ஜப்பான் நாட்டில் தயாரிக்கப்பட்டன. அறிமுகப்படுத் தப்பட்ட முதல் ஆண்டிலேயே 3,50,000 பொம்மைகள் விற்பனையாகியுள்ளன. தொலைக்காட்சியில் விளம்பரம் செய்து விற்பனை உத்திகளை வகுத்துக் கொண்டதில் பார்பி பொம்மை முதலிடத்தைப் பெறுகிறது. 1999 ஆம் ஆண்டு வெளிவந்த டாய்ஸ்டோரி 2 என்ற திரைப்படத்தில் பார்பி பொம்மை சிறிய வேடத்தில் இடம் பெற்றுள்ளது.

- மேகா