Search This Blog

13.5.12

நம்பெண்கள்அலங்காரப்பொம்மைகளானதற்கு காரணம்?



நம் பெண் மக்கள் பற்றிப் பெண் மக்களுக்கும் பெற்றோர்களுக்கும் அவர்களது கணவர் என்பவர்களுக்குமாகச் சிறிது பேச அவா கொள்கிறேன். எல்லாத் துறையிலும் எல்லோர்களுக் குள்ளும் மாற்ற உணர்ச்சி ஏற்பட்டால் ஒழிய நம் நாட்டைப் போன்ற, நம் சமுதாயத்தைப் போன்ற தாழ்த்தப்பட்ட அடிமையாக்கப்பட்ட நாட்டுக்கும், சமுதாயத்திற்கும் விமோசனம் இல்லை ஆகையால் பெண்கள் பற்றி பேசுகிறேன்.

பெண்கள் என்ன அஃறிணைப் பொருள்களா?

பெண்கள் மனித சமுதாயத்தில் சரி பகுதி எண்ணிக்கை கொண்டவர்கள். இரண்டொரு உறுப்பில் மாற்றம் அல்லாமல் மற்றபடி பெண்கள் மனித சமுதாயத்தில் ஆண்களுக்கு முழு ஒப்பு உவமையும் கொண்டவர்கள் ஆவார்கள் என்பேன். நாமும் அவர்களைச் சிசு, குழந்தைப் பருவ முதல் ஓடி விளையாடும் பருவம் வரையில் கொஞ்சி முத்தங்கள் கொடுத்துப் பல விதத்தும் பேத உணர்ச்சியே அற்று ஒன்று போலவே கருதி நடத்துகிறோம், பழகு கிறோம். அப்படிப்பட்ட மனித ஜீவன்கள் அறிவும், பக்குவமும் அடைந்தவுடன் அவர்களைப் பற்றி இயற்கைக்கு மாறான கவலை கொண்டு, மனித சமுதாயத்தில் வேறாக்கி, கடைசியாக ஒரு பொம்மையாக்கிப் பயனற்ற ஜீவனாக மாத்திரமல்லாமல் அதைப் பெற்றோருக்கு ஒரு தொல்லையான பண்டமாக ஆக்கிக் கொண்டு, அவர் களது வாழ்வில் அவர்களை அவர்களுக்கும் மற்றும் உள்ளவர்களுக்கும் கவலைப்படத்தக்க ஒரு சாதனமாய்ச் செய்து கொண்டு அவர்களைக் காப் பாற்றவும், திருப்திப்படுத்தவும், அலங் காரப்படுத்தி திருப்தியும், பெருமையும் அடையச் செய்ய வேண்டியதான ஒரு அஃறிணைப் பொருளாகவே ஆக்கி வருகிறோம்.

பெண்களால் வீட்டிற்குச் சமுதாயத்திற்குப் பலன் என்ன? என்று பாருங்கள். எங்குக் கெட்ட பேர் வந்து விடுகிறதோ என்பதுதானே? இன்று பெண்கள் வேலை என்ன? ஒரு ஆணுக்கு ஒரு பெண்ணாய் அமைப்பது, அது எதற்கு? ஆணின் நலத்துக்குப் பயன்படுவதற்கும் ஆணின் திருப்திக்கும், ஆணின் பெருமைக்கும் ஒரு உப கருவி என்பதல்லாமல் வேறு என்ன? என்று சிந்தித்துப் பாருங்கள்.

ஒரு ஆணுக்கு ஒரு சமையல்காரி; ஒரு ஆணின் வீட்டிற்கு ஒரு வீட்டுக்காரி, ஒரு ஆணின் குடும்பப் பெருக்கிற்கு ஒரு பிள்ளை விளைவிக்கும் பண்ணை, ஒரு ஆணின் கண் அழகிற்கும் மனப்புளகத்திற்கும் ஒரு அழகிய அலங்கரிக்கப்பட்ட பொம்மை என்பதல்லாமல் பெண்கள் பெரிதும் எதற்குப் பயன்படுகிறார்கள்? பயன்படுத்தப் படுகிறார்கள் என்பதைச் சிந்தித்துப் பாருங்கள்.

இது என்ன நியாயம்? மனித சமுதாயம் தவிர மற்றபடி மிருகம், பட்சி, பூச்சி, ஜந்து முதலியவைகளில் வேறு எந்த ஜீவனாவது ஆண்களுக்காகவே இருக்கிறோம் நாம் என்ற கருத்துடன் நடத்தையுடன் இருக்கிறதா? என்று பாருங்கள்.

இந்த இழி நிலை பெண்களுக்கு அவமானமாய்த் தோன்றவில்லை என்பதற்கு ஆகவே, ஆண்கள் பெண்களை இவ்வளவு அட்டூழியமாய் நடத்தலாமா? என்று கேட்கிறேன். ஒரு ஆண் ஒரு பெண்ணைத் தனது சொத்து என்று எண்ணுகிறானே, எதனால்? துணியாலும் நகையாலும்தானே பெரிதும்! கம்பி இல்லாத தந்தியும், ரேடியோவும், அணுகுண்டும் கண்டு பிடிக்கப்பட்ட இந்தக் காலத்திலும் பெண்கள் அலங்காரப் பொம்மைகளாக இருப்பதா? என்று கேட்கிறேன்.

நான் சொல்லுவது இங்குள்ள பல ஆண்களுக்கும், ஏன் பெண்களுக்குக் கூட வெறுப்பாய், குறைவுமாய் சகிக்க முடியாதபடியாய் தோன்றலாம் என்பது எனக்குத் தெரியும். இந்த வியாதி கடினமானது. தழை அடித்துப் பாடம் மந்திரம் போடுவதாலும் பூச்சுப் பூசி பத்துப் போடுவதாலும் விலக்கக் கூடிய வியாதி அல்ல இது. கூர்மையான ஆயுதத்தால் ஆழம்பட அறுத்துக் கிளறி காரம் (எரிச்சல்) மருந்து போட்டுப் போக்கடிக்க வேண்டிய வியாதி, அழுத்திப் பிடித்து கண்டித்து அதட்டி அறுத்துத் தீர வேண்டியதாகும். நான் வெறும் அலங் ரப் பேச்சைத் தொண்டாக கொண் டவனல்ல. அவசியப்பட்ட வேலை நடக்க வேண்டும். என் ஆயுளும் இனி மிகமிகச் சொற்பம். இதையாவது செய்தாக வேண்டும். ஆதலால் கோபிக்காமல், ஆத்திரப்படாமல் சிந்தியுங்கள்.

பூமிக்குப் பாரமாயிருப்பதற்கா பெண்கள்


நம் பெண்கள் உலகம் பெரிதும் மாற்றமடைய வேண்டும். நம் பெண்களைப் போல் பூமிக்குப் பாரமானவர்கள், மனிதனுக்குத் தொல்லையானவர்கள் நல்ல நாகரிகமான வேறு நாடுகளில் கிடையாது. இங்கு படித்த பெண், படியாத பெண் எல்லோரும் பொம்மைகளாகவே இருக்கிறார்கள். அவர்கள் பெற்றோர்களும், கணவன்மார்களும் அவர்களது (பெண்களை) அழகிய பொம்மைத் தன்மையைக் கொண்டே திருப்தி அடைகிறார்கள். பெருமை அடை கிறார்கள். பெண்களைத் திருப்தி செய்ய, அவர்களை நல்ல பெண்களாக ஆக்க விலையுயர்ந்த நகையும், துணியும் கொடுத்து அழகிய சிங்காரப் பதுமை யாக்கிவிட்டால் போதும் என்று நினைக் கிறார்கள்.

பெண்கள் பெருமை வருணனை ஆகியவைகளில் பெண்கள் அங்கம், அவயவங்கள், சாயல் ஆகியவைகளைப் பற்றி அய்ம்பது வரி இருந்தால் அவர் களது அறிவு, அவர்களால் ஏற்படும் பயன், சக்தி, திறமைபற்றி ஒரு அய்ந்து வரிகூட இருக்காது. பெண்களின் உருவை அலங்கரிப்பது, அழகை மெச்சுவது, சாயலைப் புகழுவது ஆகியவை பெண்கள் சமுதாயத்திற்கு அவமானம், இழிவு, அடிமைத் தனம் என்பதை ஆயிரத்தில் ஒரு பெண்ணாவது உணர்ந்திருக்கிறது என்று சொல்ல முடியுமா? என்று கேட்கிறேன்.

பெண்களுக்குத் தகப்பன் சொத்தில் உரிமை கிடையாதது ஏன் என்று எந்தப் பெண்ணாவது காரணம் கேட்டாளா? பெண்களை அனுபவிக்கிறவன் அவர் களிடம் வேலை வாங்கிப் பயன் அடை கிறவன் காப்பாற்ற மாட்டானா என்பது தான். அதற்கேற்ற நகை, துணி ஆகியவையே போதும்.

அலங்காரம் ஏன்? மக்கள் கவனத்தை ஈர்க்கும்படியான நகை, துணிமணி, ஆபரணம் ஏன்? என்று எந்தப் பெண் ணாவது பெற்றோராவது கட்டின வராவது சிந்திக்கிறார்களா? பெண்கள் அஃறிணைப் பொருள் என்பதற்கு இதைவிட வேறு என்ன ஆதாரம் வேண் டும்? தன்னை அலங்கரித்துக் கொண்டு மற்ற மக்கள் கவனத்தைத் தம்மீது திருப்புவது இழிவு என்றும், அநாகரிகம் என்றும் யாருக்கும் தோன்றாததற்குக் காரணம் அவர்கள் போகப் பொருள் என்ற கருத்தேயாகும். இது பரிதாபமாகவே இருக்கிறது.

பிறநெஞ்சு புகாள்

நல்ல கற்புடைய பெண்களுக்கு உதாரணம் மற்றொருவர் உள்ளம் புகாள் என்பது திராவிட மரபு நூல்களின் கூற்று, அதாவது ஒரு பெண் இயற்கையில் கற்புடையவளாயிருந்தால் தன் கணவன் தவிர மற்றவர்கள் நினைவுக்குக் கூட ஆளாக மாட்டாள், பிறர்நெஞ்சு புகாள் என்பதாகும். நாம் நம் பெண்களை மற்றவர்கள் எப்படிப்பட்டவர்களானாலும் பல தடவை திரும்பித் திரும்பிப் பார்க்கும்படி அவர் கள் கவனத்தை நம்மீது திரும்பும்படி அலங்கரிக் கிறோம்.

அலங்கரிக்க அனுமதிக்கிறோம். அதில் நம் பணம், உழைப்பு, நம் வாழ்க்கைப் பயன் முதலியவைகளைச் செலவழிக்கிறோம். இது ஏன்? எதற்காக என்று சிந்திக் காததால் அதைத் தவிர வேறு காரியத் திற்கு நம் பெண்கள் பயன்படாமல் போய்விட்டார்கள்.

நான் பாமர மக்களை மாத்திரம் சொல்லவில்லை. நம் அறிஞர் செல்வர், தனக்கென வாழாப் பிறர்க்குரியாளரானவர்கள் என்று சொல்லப்படும் பெரி யோர்கள் யோக்கியதைகளையும் அவர்கள் பெண்கள், உலகத்துக்கு ஆற்றும் தொண்டுகளையுமே பற்றிச் சொல்லுகிறேன், சர் சண்முகம் செட்டி யார், சர். குமாரராஜா முதலாகிய திராவிடப் பேரறிஞர் செல்வர்களின் மனைவிகள், தங்கை, தமக்கைகள் பெண்கள் எங்கே? எப்படிப் பிறந்தார்கள்? எப்படி வளர்ந்தார்கள்? எப்படித் தகுதி ஆக்கினார்கள்? எப்படி இருக்கிறார்கள்? ஷராப்பு கடைகள், ஜவுளிக்கடைகள் ஆகியவற்றில் விளம்பரத்திற்கு வைத்திருக்கும் அழகிய பொம்மைகள் உருவங்கள் போல் அல்லாமல் நாட்டுக்கு மனித சமுதாயத்திற்கு பெண்கள் உலகத்திற்கு இவர்கள் என்ன மாதிரியில் தொண்டாற்ற அல்லது தாங்களாவது ஒரு புகழோ கீர்த்தியோ பெறத்தக்கபடி வைத்தார்களா? என்று கேட்கிறேன். இவர்களே இப்படியிருந்தால் மற்ற பாமர மக்கள் தங்கப் பெட்டியின் உள்ளே வெல்வெட் மெத்தை போட்டுப் பூட்டித்தானே வைப்பார்கள்.

ஒரு பீகம் அமீருதின் அம்மையார் முஸ்லிம் கோஷா இனம். அவர்கள் எவ்வளவு தொண்டாற்றுகிறார்கள்? நம் பெண்கள் மாத்திரம் நகைகள் மாட்டும் ஸ்டாண்டா என்று கேட்கிறேன். இந்தப் பிரபல ஆண்கள் பிறந்த வயிற்றில் தான் இவர்கள் தங்கை, தமக்கையர் பிறந்தார்கள். இவர்கள் தகப்பன் மார்கள்தான் அவர்களுக்கும் தகப் பன்மார்கள். அப்படி இருக்க இவர் களுக்கு இருக்கும் புத்திதிறமை அவர்களுக்கு ஏன் இல்லாமல் போகும். இதைப் பயன்படுத்தாதது, நாட்டுக்குச் சமுகத்திற்கு நட்டமா இல்லையா என்று கேட்கிறேன்.

பெண்கள் படிப்பு:-

பெண்கள் படிப்பு என்பது சுத்த முட்டாள்தனமான முயற்சியாகவே பெரிதும் இருக்கிறது.

பெண்களைப் படிக்க வைப்பது வீண் பணச் செலவு, நாட்டு வரிப் பணத்தின் வீண் என்று ஒரு சமயத்தில் ஈரோட்டில் மணியம்மை சொன்னது போல் உண்மையில் பெரிதும் வீணாகவே ஆகிறது. கோபிக்காதீர்கள். இந்தக் கீழ் உதாரணத்தைக் கொண்டு ஒப்பிட்டுப்பாருங்கள்.

அதாவது ஒரு குடும்ப வாழ்க்கைப் பெண்ணுக்கு அவள் தாய், தகப்பன் பாட்டு, பிடில், வீணை, நாட்டியம் கற்றுக் கொடுத்து அவற்றில் வெற்றியாய் தேற வைத்தான் என்று வைத்துக் கொள்ளுங்கள் (பலர் இதை இன்னும் செய்கிறார்கள்) அதை ஒருவன் கையில் பிடித்துக் கொடுத்த பின்பு, அதாவது திருமணம் ஆன பின்பு அந்தப் பாட்டு, பிடில், வீணை யாருக்கு என்ன பயன் கொடுக்கிறது? என்று கேட்கின்றேன். புகுந்த வீட்டில் சங்கீதம் பாடினால் இது என்ன குடித்தன வீடா? வேறு வீடா என்று மாமி கேட்பாள்; பிடில், வீணை தூசு அடையும்.

ஆகவே, இந்தப் படிப்பு நல்ல மாப்பிள்ளை சம்பாதிக்க ஒரு அட்வர்டைஸ் மெண்ட்டாகப் (விளம்பரம்) பயன்பட்டது, தவிர மற்றபடி வீணாகப் போய்விட்ட தல்லவா? செலவும் கண்டது தானே என்கிறேன்.

அது போல் ஒரு பெண்ணை ஒரு தாய் தகப்பன் பி.ஏ. படிக்க வைத்து ஒருவன் கையில் பிடித்துக் கொடுத்து அந்தப் பெண் சமையல் செய்யவும் குழந்தை வளர்க்கவும் நகை துணி அலங்காரங்களுடன் மக்கள் கவனத்தை ஈர்க்கவும் செய்தால் பி.ஏ. படிக்க வைத்த பணம் வீண் என்பதோடு அதற்காகச் சர்க்கார் செலவழித்த மக்கள் வரிப் பணமும் வீண் தானே? இது தேசிய குற்றமாகாதா?

இந்தத் துறையில் எந்த அறிஞரும் சீர்திருத்தவாதியும் கவலை செலுத்தாமல் எவராலும் இனப்பெருக்கத்திற்கே பெண்கள் ஆளாக்கப்பட்டு விட்டார்கள்.

பிள்ளை வளர்ப்பு

நான் சில படித்த பெண்களைப் பார்க் கிறேன், வயிற்றில் ஒரு குழந்தை, கட்கத்தில் ஒரு குழந்தை, கையில் பிடித்துக் கொண்டு ஒரு குழந்தை, இவ்வளவோடு சிலருக்கு, முன்னால் ஓடும்படி ஒரு குழந்தையை விட்டு இப்படியாகப் படைகளோடு நல்ல நிகழ்ச்சிகள் நடக்கும் கூட்டங்களுக்கு வந்து நடுவிலிருந்து கொண்டு நிகழ்ச்சி களுக்கு இடையூறும் தொல்லையும் கொடுப்பதைப் பார்க்கிறேன். இதற்காக அவர்கள் வெட்கப்படாததையும் சிலர் வருத்தப்படுவதையும் பார்க்கிறேன். இது மனித சமுகத்தில் இருக்கத்தக்கதா? அதுவும் நாகரிக சமுகத்தில் படித்த பெண்கள், படித்தவர்கள் வீட்டுப் பெண்கள் என்கிறவர்கள் இடையில் இருக்கத்தக்கதா? என்று கேட்கிறேன். இந்த லட்சணத்தில் நகைகள், விலை உயர்ந்த துணிகள், குழந்தைகள் கூட்டத்தில் மலஜலம் கழிக்கும், கத்தும் ஆபாசம் இவை ஏன்?

நகைக்கும், துணிக்கும் போடும் பணத்தைப் பாங்கியில் போட்டு குறைந்த வட்டியாவது வாங்கி குழந்தை பிறந்த உடன் அதை எடுக்க அந்த வட்டியில் ஒரு ஆள் வைத்தாவது அதைப் பார்த்துக் கொள்ளச் செய்தால் அன்பு குறைந்துவிடுமா? பெற்ற தகப்பன் குழந்தையைத் தன்னுடன் கூடவே வைத்துத்தானா அழகு பார்க் கின்றான்? அன்பு காட்டுகிறான்? கொஞ்சி விளையாடுகிறான். ஆகையால் குழந்தையை ஆள்கள் மூலம் வளர்க்க வேண்டும். சமையல் ஆள்கள் மூலம் செய்விக்க வேண்டும். பெண்கள் ஆண்களைப் போல உயர் வேலை பார்க்க வேண்டும். சர்.ராமசாமி முதலியார் தங்கை சர்.எ.லட்சுமணசாமி முதலியார் போல் ஆக வேண்டும். சர்.சண்முகம் தங்கை ஆர்.கே. வெங்கடாசலம் செட்டியார் போல் ஆக வேண்டும். குமாரராஜா தங்கை இராமநாதன் செட்டியார் போல், சிதம்பரம் செட்டியார் போல் ஆக வேண் டும். பொம்மைகளாக நகை மாட்டும் ஸ்டாண்டுகளாக ஆகக் கூடாது, என் கின்றேன்.

ஆண்கள் பார்க்கும் எல்லா வேலை களையும், ஆண்கள் செய்யும் எல்லாத் தொண்டுகளையும் பெண்கள் பார்க்கச் செய்ய முடியும், உறுதியாய் முடியும் என்பேன். ஆனால் நகைப் பயித்தியம், துணி அலங்காரப் பயித் தியம், அணிந்து கொண்டு சாயல் நடை நடக்கும் அடிமை இழிவு சுய மரியாதை அற்ற தன்மைப் பயித்தியம் ஒழிய வேண்டும்.

சினிமா

நம் பெண்கள் நாட்டுக்குச் சமுகத்துக்குப் பயன்படாமல் அலங்காரப் பொம்மைகளானதற்கு ஆண்கள் கண்களுக்கு விருந்து ஆனதற்குக் காரணம் இந்த பாழாய்ப் போன ஒழுக்கமற்ற சினிமாப் படங்களேயாகும். சினிமா நட்சத்திரங்களைப் பார்த்தே தினம் ஒரு பேஷன், நகை, துணி, கட்டு, வெட்டு, சாயல் ஏற்பட்டதென்பேன். அந்தப் பெண்கள் தன்மை என்ன? ஒழுக்கம் என்ன? வாழ்க்கை என்ன? லட்சியம் என்ன? என்பதெல்லாவற்றையும் நம் குலப்பெண்கள் என்பவர்கள் கருதாமல் புகழ், வீரம், பொது நலத்தொண்டு முதலியவற்றில் கீர்த்தி பெற்ற ஆண்களைப் போல் தாங்களும் ஆக வேண் டுமே என்றில்லாமல் இப்படி அலங்கரித்துக் கொண்டு திரிவது பெண்கள் சமுதாயத்தின் கீழ் போக்குக்குத்தான் பயன்படும் என்று வருந்துகிறேன்.

டீசென்சி - சுத்தம், கண்ணுக்கு வெறுப்பில்லாத ரம்மியம் வேண்டாம் என்று நான் சொல்லுவதாக யாரும் கருதக்கூடாது. அது அவசியம் வேண்டும். ஆனால் அது அதிகப் பணம் கொண்ட, மக்கள் கவனத்தை ஈர்க்கத் தகுந்த பேஷன், நகை, துணி வெட்டு போன்ற அலங்காரத்தால் அல்ல என்றும் (ளஅயீடந) சாதாரண குறைந்த தன்மையில் முடியும் என்றும் சொல்லுவேன்.

நம் நாட்டுப் பெண்கள், மேல் நாட்டுப் பெண்களைவிடச் சிறந்த அறிவு, வன்மை ஊக்கம் உடையவர்கள் ஆவார்கள். நம் சீதோஷ்ண நிலை அப்படிப்பட்டது. அப்படி இருக்க ஒரு ருக்குமணி, ஒரு விஜயலட்சுமி என்கின்ற பார்ப்பன பெண்கள்தானா பொது வாழ்வில் ஈடுபடத் தக்கவர்களாக மந்திரிகளாக ஆக வேண்டும்? ஏன் நம்மவர்கள் ஏராளமாக வெளியில் வரக்கூடாது? இவர்களைத் தடுப்பது சேலை, நகை, துணி, அலங்கார வேஷம் அல்லாமல் வேறு என்ன?

எனவே பெற்றோர்கள் தங்கள் பெண்களைப் பெண் என்றே அழைக்காமல் ஆண் என்றே அழைக்க வேண்டும், பெயர்களும் ஆண்கள் பெயர்களையே இடவேண்டும். உடைகளும் ஆண்களைப் போல கட்டுவித்தல் வேண்டும். சுலபத்தில் இது ஆணா, பெண்ணா? என்று மற்றவர்கள் கண்டுபிடிக்க முடியாத மாதிரியில் தயாரிக்க வேண்டும்.

பெண்களைப் புருஷனுக்கு நல்ல பண்டமாக மாத்திரம் ஆக்காமல், மனித சமுதாயத்திற்குத் தொண்டாற்றும் கீர்த்தி, புகழ் பெறும் பெண்மணியாக்க வேண்டும். பெண்ணும் தன்னைப் பெண் இனம் என்று கருத இடமும் எண்ணமும் உண்டாகும் படியாக நடக்கவே கூடாது. ஒவ்வொரு பெண்ணும் நமக்கும், ஆணுக்கும் ஏன் பேதம்? ஏன் நிபந்தனை? உயர்வு, தாழ்வு? என்ற எண்ணம் எழ வேண்டும்; ஏன் இப்படிச் சொல்லுகிறேன் என்றால் நம் பெண்கள் வெறும் போகப் பொருளாக ஆகப்படாது அவர்கள் புது உலகைச் சித்தரிக்க வேண்டும் என்பதுதான் என் கருத்து; இந்தப் படி பேசுகின்ற தன்மையும் இதற்குத்தான்.



------------------15.09.1946 அன்று திருப்பத்தூரில் நடைபெற்ற சம்பத் - சுலோச்சனா திருமணத்தின்போது பெரியார் ஆற்றிய சொற்பொழிவு - " குடிஅரசு" - சொற்பொழிவு - 21.09.1946

2 comments:

தமிழ் ஓவியா said...

தாயன்பின் தனித்தன்மை இதுதான்!


இன்று - மே 13 - அன்னையர் தினமாக உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது.

இது மேலை நாட்டில் - குறிப்பாக அமெரிக்காவில் பிரபலப்படுத்தப்பட்டு கொண்டாடப்படுகிறது.

நம் நாட்டைப் பொறுத்தவரை, தாய்மை என்பதும் தாய்ப்பாசம், தாய் அன்பு என்பதும் பாரம்பரியமாக வருவதாகும்.

உலகில் மனித குலமே துவக்கத்தில் தாய்வழிச் சமூகத்தில்தான் துவங்கியது; பிறகுதான் பிறழ்ந்து, இன்றுள்ள ஆணாதிக்கச் சமூகமாக மாறிவிட்டது!

தாய் அன்புக்கும், தாயின் தியாகத்திற்கும் ஈடாக, இணையாக எந்த உவமையையும் (100க்கு 100 சரியாக) சொல்ல முடியாது.

கருவில் சுமந்து கொண்டுள்ள காலத்தில் கூட தன் நலத்தை விட, வயிற்றில் வளரும் அந்தக் குழந்தைக்காக செய்யப்படும் தாயின் தியாகம் அப்போதே துவங்கி விடுகிறது!

கவலைகள் பூராவிலும் தனது உடல்நலத்தை விட அந்த பூமிக்கு வராத அந்த புது மொட்டினை நோக் கியதாகவே அமைந்து, அதற்கேற்பத் தன்னுடைய சுவைகள், தேவைகள், விருப்புகள் எல்லாவற்றையும் அந்தத் தாய் மாற்றிக் கொள்ளுகிறாரே இதை எப்படி பிறவற்றோடு ஒப்பிட முடியும்?

இப்போது மகப்பேறு எளிதாகிவிட்டது. சுமார் 50, 60 ஆண்டுகளுக்கு முன்பு, கருவைச் சுமக்கும் நமது தாய்களைப் பற்றி, ஆதிக்கம் - அதிகாரம் செலுத்தும் மாமியார்கள் கூட, அய்யோ அவள் சாவைத் தலையில் வைத்துக் கொண்டுள்ளவளாயிற்றே, அவளது விருப்பத் தினை நாம் பூர்த்தி செய்யவேண்டாமா? என்ற ஒரு பச்சா தாபம் கலந்த இரக்கத்தைக் காட்டத் தவற மாட்டார்கள்!

சந்திக்கக் கூடிய வேதனைகளில் மிகவும் சங்கப்படக் கூடிய உச்ச வேதனை பிரசவ வேதனை என்பதுதானே நடைமுறை வழக்கு?

இப்படியெல்லாம் தொல்லைகளையும் துன்பங்களையும் அனுபவித்த அந்தத் தாய், மலர்ந்த அந்த புதுமலரைக் கண்டபோது, கதிரவன் ஒளி கண்டு காணாமற்போகும் பனித் திவலைகளாக அல்லவா அவரது கவலைகள் மாறி விடுகின்றன. அந்தத் தாயின் புன்சிரிப்பு - பிறந்த குழந்தையின் அழுகுரல் கண்டு புது வானத்து முழுநிலவைக் கண்டது போன்ற ஒரு குளிர்ச்சி அல்லவா ஏற்படுகிறது உடம்பெல்லாம்!

அதன் பிறகு எத்தனையோ பாதுகாப்பு - கவசங்களைச் சுமந்து ஆளாக்கிய பிறகும் அந்த அன்னை எதிர்பார்ப்பது தம் செல்வத்திடமிருந்து பணமா, காசா, நன்றியா? நல்லவைகளைக் கூட அல்ல, பாசம், பாசம்! பாசம் தானே!!

ஒழுக்கத் தவறுடன் கொலை செய்த பிள்ளை யானாலும் கூட, அந்தப் பாசம் அந்தத் தாயின் ரத்தத்திலிருந்து வெளியேறுவதே இல்லையே!

வெறுக்கத் தெரியாது, பொறுத்தே வாழ்வதற்கு மறு பெயர்தான் தாய் அன்பு!

யார் நேசித்தாலும், இவர் - இந்த அன்னை அதனைத்தானே வாழ்நாள் முழுவதும் யாசிக்கிறார்?

இதை ஏன் பல பிள்ளைகள் - வளர்ந்து வாழ்வில் ஒரு சில மமதை மன்னர்கள் யோசிக்க மறுக்கிறார்கள் - அதுதான் புரியவில்லை. இதற்கு வள்ளுவர் பதில் அளிக்கிறார், அவர்கள் செத்தாருள் வைக்கப்பட வேண்டியவர்கள் என்று.

ஆனால் இந்தத் தாய்களோ அத்தகைய பிள்ளை செத்தாலும் தாங்களும் அவர்களுடன் எரிந்துவிட வேண்டும் என்று மனதார அழுது புலம்பி ஆறுதல் பெறாமல் அலைகின்றார்களே!

இதுதான் தாயன்பு, இதுதான் கைம்மாறு கருதா, இன்னா செய்தாருக்கும் இனியவே செய்யும் இயல் புடையது!

வாழ்க தாயன்பு!

வளர்க நன்றி உணர்வு!! 13-5-2012

ஆத்மா said...

சிந்திக்க் வேண்டிய பதிவு....:)
இருந்தும் ஓவர்...