தோழர் இரவிக்குமார் அவர்கள் இரு பிரச்சினைகளை எழுப்பியுள்ளார்.
பிரிட்டீஷ் ஆட்சியாளர்கள் தாழ்த்தப்பட்ட மக்களின் முன்னேற்றத்துக்காக ஏற்படுத்திய லேபர் கமிஷனர் துறையினை நீதிக்கட்சி ஆட்சியாளர்கள் மெல்ல மெல்லச் சாகடித்தனர். அதற்கு ஒதுக்கப் பட்ட நிதியைக் குறைத்தனர் என்று கூறுகிறார்.
இது உண்மையா? லேபர் கமிஷனர் என்பதைப் பயன்படுத்தி நீதிக்கட்சி ஆட் சியில் தாழ்த்தப்பட்டவர்களுக்குச் செய்தவை என்னென்ன? எடுத்துக்காட்டுக்காக ஒரு சில இதோ:
வீட்டுமனைகள் குடியிருப்புகள், சாலைகள், பள்ளிகள்
தாழ்த்தப்பட்டோர் நிலையை முன்னேற்றுவதற்காகச் சிறப்புப் பணி ஏற்ற அலுவலர் கோதாவரி மாவட்டத்தில் தாழ்த்தப்பட்டவர்களுக்குச் சிற்றூர்களி லுள்ள இடங்களை அளிப்பதுப்பற்றி கோதாவரி மாவட்டச் சிறப்புத் துணைக் கலெக்டருக்கு விடுத்த அறிவுரைகள்.
1. எங்கெங்கு இயலுமோ எங்கெங்கு மேற்கொண்டு வீட்டுமனைகள் வேண் டப்படுகின்றனவோ அங்கெல்லாம் வீட்டுமனைகள் வாங்குவதற்காக ஆதி ஆந்திரர்களுக்குக் கூட்டுறவு நாணயச் சங்கங்களை அமைத்தல்.
2. இயன்ற இடங்களில் எல்லாம் வாங்குவதற்கும் விற்பதற்கும் கூட்டுறவுச் சங்கங்கள் அமைத்தல்.
3. எல்லாச் சிற்றூர்களிலும் ஆதி ஆந் திரர்களுக்கு நீர் வசதி இருப்பது குறித்து ஆய்ந்து - நடவடிக்கைகள் வேண்டு மிடங்கள் பற்றித் தாலுகா போர்டு ஜில்லா போர்டு தலைவர்களுக்குப் பரிந்துரை செய்தல்.
4. சிற்றூர்களுடனோ சாலைகளுட னோ தண்ணீர் எடுக்குமிடங்களுடனோ தொடர்பு அறுந்துள்ள பறைச்சேரி களுக்குப் போக்குவரத்து வசதி அளிப்பது குறித்துக் கருத்துச் செலுத்துதல்.
5. ஆதி ஆந்திரர்கள் குடியிருப்புகள் அமைக்கப் பெரிய இடங்களைக் கண்டு பிடித்தல், அத்தகைய குடியிருப்புகள் அமைக்கப் பொதுத் தொண்டு நிறுவனம் ஏதேனும் ஒன்றுடன் ஆய்ந்து திட்டம் தருதல்.
6. தர்காஸ்தில் உள்ள நிலங்களைத் தனிப்பட்ட ஆதி ஆந்திரர்கள் பெற முடி யாதிருந்தால் அதுகுறித்து வருவாய்த் துறை அலுவலர்க்கு அறிவித்தல்.
7. உள்ளாட்சி மன்றங்களின் தலைவர் களையும், கல்வித்துறை அலுவலர் களையும் கலந்து ஆய்ந்து முடிந்த இடங்களிலெல்லாம் ஆதி ஆந்திரர்கள் பள்ளிகளைத் தொடங்குதல்.
8. ஆதி ஆந்திரர்கள் தாம் வாழும் இடங்களில் குறிப்பான இடையூறுகளுக் கிடையே இருப்பின் அவைபற்றி முழமையாக அறிக்கை அளித்தல். இவற்றை 10.1.1920 நாளிட்ட 55ஆம் எண் ஆணையிற் காணுகின்றோம்.
லேபர் கமிஷனர் உருவாக்கம்
தாழ்த்தப்பட்டவர்களின் முன்னேற்றத்தைக் கருதிச் செயல்படும் தனி அலு வலரின் பெயர் லேபர் கமிஷனர் என்று மாற்றப்படுகிறது அவரது முதன்மையான, வரையறுக்கப்பட்ட கடமைகளாவன:
தாழ்த்தப்பட்டவர்களின் பொருள் நிலையை ஆய்தல்: அவைகளை முன் னேற்ற அரசாங்கத்திற்குக் கருத்துக்களைப் படைத்தல்: இதே குறிக்கோளுடன் செயல்படும் பொதுநல நிறுவனங்கள் அவர்களுக்கு வேண்டிய உதவிகளை அரசிடமிருந்து பெறுமாறு செய்தல்; தாழ்த்தப்பட்டவர்களின் கல்வி குறித்த சிக்கல்களைக் கையாளுதல், வீட்டு மனைகளும் கிணறுகளும் வழங்கியும் அவர்களிடையே கூட்டுறவை உருவாக் கியும் அவர்களுடைய தொழில் நிலைமை களைச் சீர்படுத்தியும் அவர்கள் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துதல்.
அடியிற்கண்ட கடமைகளும் அவர்களுக்கு விதிக்கப் பெற்றன;
1. ஏஜென்சி பகுதிகள் நீங்கலாக உள்ள பழங்குடியினர் மலைவாழ் மக்கள் ஆகியோரின் நலன் காத்தல்.
2. குற்ற பரம்பரையினரின் குடியிருப் புகளைக் கவனித்தலும் நிர்வகித்தலும்.
3. ஆலைத் தொழிலாளர்களைத் தம் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருத்தல்.
4. ஆலைத் தொழிலாளர் ஊதியம் - ஆண்டு முழுவதும் ஊதிய விவகாரங் களுடன் தொடர்பு கொள்ளுமாறு லேபர் கமிஷனர் தனித்து அறிவிக்கப்படுகிறார்.
5. சென்னைத் துறைமுகம் நீங்கலாக மாகாணத்திற்கு உள்ளும் வெளியேயும் மக்கள் வெளியேற்றம் குறித்த பொறுப்பு.
6. தோட்டத் தொழிலாளர் சட்டம் தொழிலாளர் ஒப்பந்தச் சட்டத்தை மீறல்.
7. தொழிலாளர் அமைப்பு தொழிற் சங்கங்களை ஏற்றல்,. அல்லது பதிவு செய்தல், கூட்டுறவில் வீடு கட்டல், தொழி லாளர்களின் நல்வாழ்வு முன்னேற்றம் உள்ளிட்ட தொழிலாளர் சார்பான பொதுப் பொருளியல் இயல்கள்.
லேபர் கமிஷன் பொறுப்புக்களை இவ்வாறு வரையறுக்கும் செய்தியை 2.2.1920 நாளிட்ட 271 ஆம் எண் ஆணையிற் காண்கிறோம்.
செய்யப்பட வேண்டிய தலையாய பணிகள்
இம்மாகாணத்தில் உள்ள தாழ்த்தப்பட்ட வகுப்பினர்களில் அடங்கிய வகுப்புகள் சாதிகளின் பெயர்கள் ஏற்கெனவே நடந்த வேலைகளின் இயல்பு. அவர்கள் முன்னேற்றத்திற்காக இன்னும் நடைபெற வேண்டிய தலையாய பணிகள் அடங்கிய பத்திரிகைக் குறிப்பு வெளியிடப்பட்டது. தாழ்த்தப்பட்டவர் நலனுக்காக இன்னும் நடக்க வேண்டிய பணிகளில் கீழ்க்கண்டவை மிகவும் தலை மையானவை எனக் கருதப்படுகின்றன.
1. ஆதித் திராவிடர்களுக்கு என்று மட்டுமான மிகப்பலவான பள்ளிகளை உருவாக்கலும் நடத்தலும்.
2. ஆதி திராவிடர்களுக்குத் தொழிற் கல்வி அளிப்பதில் விவசாயத் துறை கல்வித்துறை இரண்டும் தனியார் துறையில் நல்ல போட்டியுடன் நடை பெறும் நிறுவனங்களுடன் இணைந்து செயல்படுவதை ஊக்குதல்.
3. கூட்டுறவு இயக்கத்தை ஆதி திராவிடர்களிடையே ஊக்குதல்.
4. நீர்வசதியை மேம்படச் செய்தல்.
5. நிலங்கள் வழங்குவதை விரைவு படுத்துதல்.
6. மதுவிலக்கை ஊக்குதல்
தம் நிலை குறித்துக் கவலைப்பட எவருமே இல்லா திருந்த தாழ்த்தப் பட்டோர் வாழ்வில் எழுச்சியையும் வசதியையும் அளிக்க எழுந்த இந்த 559ஆம் எண் ஆணை 8.3.1920 அன்று பிறப்பிக்கப்பட்டது.
லங்கா நிலங்கள் - ஏலத்தில் அல்லாமல் வாடகைக்கு விடல்
தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர் களுக்கு லங்கா நிலங்களை வழங்குவது பற்றி லேபர் கமிஷனருடன் பேச்சு வார்த்தை நடத்தி அறிக்கை அளிக்குமாறு கோதாவரி மாவட்டக் கலெக்டர் கேட்டுக் கொள்ளப்பட்டிருந்தார். இந்தக் கொள்கையின்படிகோதாவரி, கிருஷ்ணா, குண்டூர் மாவட்டங்களில் ஏராளமான லங்கா நிலங்கள் ஆதி ஆந்திரர்களுக்கும் மீனவர்களுக்கும் ஏலத்தில் அல்லாமல் வாடகைக்கு விடப்பட்டுள்ளன என்ற செய்தியை 10.03.1920 நாளிட்ட 586ஆம் எண் ஆணை புலப்படுத்துகின்றது.
வதுவார்பட்டிக் குறவர் நலன்
வதுவார்பட்டிக் குறவர்களைச் சீர்திருத்தவும் அவர்கள் கல்வியில் முன்னேறவும் உணவுச் செலவுக்காக மாதம் ஒன்றுக்கு ரூபாய் ஐந்துவீதம் உயர்ந்த அளவாக நூறு உதவிகள் அவர்கள் பிள்ளைகட்கு வழங்கப்படு கின்றன. அருப்புக்கோட்டையிலுள்ள அமெரிக்கன் பேப்டிஸ்ட் மிஷன் பள்ளியில் குறவர் மாணவர்கள் தங்குவதற்காகப் படுக்கை வசதி கொண்ட பெரிய அறை கட்டுவதற்காக ரூ.7640/- அனுமதிக்கப்படுகிறது.
இச்செய்திகளை 19.6.1920 நாளிட்ட 1456ஆம் எண் ஆணை தருகிறது.
கோவை மாவட்ட வலையர், குறவர் (குற்றபரம்பரையினர்) மீட்பு
கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள வலையர்கள், குறவர்கள் என்று அழைக்கப்படும் குற்ற பரம்பரையினரை மீட்பதற்காக அவர்கள் குழந்தைகளுக்கு 25 உதவிநிதிகள் (ஸ்காலர்ஷிப்கள்) அளிக்கப்படுகின்றன.
1. முதல் வகுப்பில் படிக்கும் ஒவ் வொரு மாணவனுக்கும் மாதம் 0.8.0 (அரை ரூபாய்) மதிப்புள்ள 5 உதவி நிதிகள்.
2. இரண்டாம் வகுப்பு மாணவர் களுக்கு மாதம் ஒரு ரூபாய் மதிப்புள்ள 5 உதவி நிதிகள்.
3. மூன்றாம் வகுப்பு மாணவர்களுக்கு மாதம் ஒரு ரூபாய் மதிப்புள்ள 5 உதவி நிதிகள்.
4. ஐந்தாம் வகுப்பில் பயிலும் மாணவர் ஒவ்வொருவருக்கும் மாதம் இரண்டு ரூபாய் மதிப்புள்ள ஐந்து உதவிநிதிகள்.
பள்ளிக்கூடத்தின் உடைமைகளாக இருக்க வேண்டும் என்ற நிபந்தனையின் பேரில் புத்தகங்களும் கரும்பலகைகளும் இலவசமாக அவர்களுக்கு வழங்க ஒப்புதலளிக்கப்பட்டது.
இம்மாணவர்களுக்கு உடைகள் வழங்குவதுபற்றி கல்வித்துறை இயக்கு நரின் கருத்தை ஆயுமாறு கோவை மாவட்ட ஆட்சியாளர் கேட்டுக் கொள் ளப்பட்டார்.
இந்த விவரங்களைத் தருவது 23.06.1920 நாளிட்ட 1503 எண்களின் ஆணை.
தாழ்த்தப்பட்டவர்களை நிலங்களில் அமர்த்தும்போது ஏற்படும் தொல்லைகளை நீக்குதல்
நிலங்களில் தாழ்த்தப்பட்டவர்கள் அமர்த்தப்படுகிறார்கள். அப்போது தொல்லைகள் ஏற்படுகின்றன. இவற்றை நீக்க லேபர் கமிஷனரால் கூறப்பட்டு ரெவினியூ போர்டினால் பரிந்துரைக் கப்பட்டவை இவை.
நிலம் ஒரு கூட்டு அமைப்புக்குக் கொடுக்கப்பட வேண்டும். அவ்வமைப்பு மூலதனம் வழங்கவேண்டும். சாதி மக்களிடமிருந்து எழும் எதிர்ப்பைச் சமாளிக்க ஆதி திராவிடர்களுக்கு உதவ வேண்டும். நிலம் வழங்கப்பட்ட ஒரு உறுப்பினர்க்கு நிலத்தின்மீது ஈடுபாடு கொள்ளச் செய்யும்போது அந்த சொத்தை அவர் அடமானம் வைக்க ஒப்புதல் அளிக்கக்கூடாது. அவ்வாறே தாழ்த்தப் பட்டோருக்காகச் செயலாற்றும் மிஷனரி கள், பொது நல அமைப்புகள், கூட்டுறவு அமைப்புகளுக்கு பி.எஸ்.ஓ. 15 படி அவர் களுக்கு நிலங்களை ஒதுக்குவதில் மறுப்ப தற்கில்லை என அரசு ஆணை பிறப் பித்தது.
இச்செய்திகள் 11.08.1920 நாளிட்ட 1934ஆம் எண் ஆணையிற் காணப் பெறுவன.
ஐ.சி.எஸ். அதிகாரியை லேபர் கமிஷனராக நியமித்தல்
தொழிலாளர்களின் சிக்கல்களைக் கவனிக்கவும் தாழ்த்தப்பட்டவர்களின் நிலைமைகள் முன்னேறுவதுபற்றிக் கவனிக்கவும் தம் கீழ் ஆற்றல் வாய்ந்த அலுவலவர்களைக் கொண்ட ஒரு ஐ.சி.எஸ். அதிகாரியை லேபர் கமிஷனராக நியமிக்கவும் இந்திய அரசாங்கத்தின் ஒப்புதலைக் கோரித் தொடர்புடைய அதிகாரிகட்கு அறிவிக்கப்பட்டது. தஞ்சை, கோதாவரி மாவட்டங்களுக்குமேல், தொழில் துறையின் செயற்பாடுகள் செங்கற்பட்டு மாவட்டத்திற்கும் விரிவு படுத்தப்பட்டது. எனவே மூன்று லேபர் கமிஷனர்களின் கடமைகளும் கீழ்க் கண்டவாறு வரையறுக்கப்பட்டன.
1. கூடுதலான வீடுகள் வேண்டப்படும் இடங்களில் வீட்டுமனைகளைக் கையகப்படுத்தவும் வீடுகளாகக் கட்டவும் நாணயச் சங்கங்களை அமைத்தல்
2. பொது நோக்கங்களுக்காகவும் ஆதி திராவிடர்களுக்குக் கூட்டுறவு நாணயச் சங்கங்கள் அமைத்தல்.
3. கூட்டுறவு வாங்கும் விற்கும் சங்கங்களை இயல்கின்ற இடங்களில் அமைத்தல்.
4. ஆதிதிராவிடர்களுக்கு நீர் வழங்கலில் முன்னேற்றம் காண்பது குறித்து ஆய்ந்து நடவடிக்கை எடுக்கப்பட வேண்டிய இடங்கள் குறித்து உள்ளாட்சி மன்றங்களின் தலைவர் களுக்கு இதுபற்றிப் பரிந்துரை செய்தல்.
5. பல்வேறு இடைஞ்சல்களுக்கு இடையே தனியார் நிலங்களின் வழியே தான் நெடுஞ்சாலைகளை ஆதிதிராவி டர்கள் அணுக முடியும் என்ற நிலைமை இருக்குமிடங்களில் பறைச்சேரிகளுக்குப் போக்குவரத்து வசதி அமைத்தல்.
6. இயன்ற இடங்களில் எல்லாம் தாழ்த்தப்பட்டவர்கள் குடிஅமைப்பு ஏற்படுத்தத் திட்டங்களை உருவாக்குதல்.
7. தாழ்த்தப்பட்டவர்கள் நிலங்கள் பெற அவர்களுக்கு உதவுதல்.
8. அவர்கள் கல்வியில் முன்னேறப் பள்ளிகளைத் திறத்தல்
9. இது தவிர, வேறு எந்த வழியிலும் தாழ்த்தப்பட்டோர் விருப்பங்களைச் செயல்படுத்துதல்.
இச்செய்திகளைத் தருவது 14.9.1920 நாளிட்ட 2254 எண் உள்ள ஆணை.
ஒப்பந்தப் படிவங்கள்
தஞ்சை மாவட்டத்தில் தாழ்த்தப்பட் டவர்களுக்கு நிலங்கள் கையகப் படுத்துவது தொடர்பாக நில மாற்றம் செய்தல், அடமானம் ஒப்பந்தம் இவற் றிற்கான படிவம் ஏற்றுக் கொள்ளப்பட்டது. இந்தப் படிவத்தில் எந்த நிபந்தனைகளின் பேரில் ஆதி திராவிடர்களுக்கு அல்லது தாழ்த்தப்பட்டவர்களுக்குக் கூட்டுறவுச் சங்கம் மூலம் நிலங்கள் தரப் பெறுகின்றன என்ற விபரம் உள்ளது.
இத்தகவல்களை 28.10.1920 நாளிட்ட 2590 எண் ஆணை உள்ளடக்கி உள்ளது.
செயற்பாட்டு அறிக்கையும் லேபர் கமிஷனுக்கு அறிவுரையும்
30.06.1920 முடிய உள்ள காலப் பகுதிக்கான தொழிலாளர் துறையின் செயற்பாட்டு அறிக்கை பதிவு செய்யப்பட்ட ஆணை இது. இந்தச் செயற்பாட்டு ஆணையைப் பதிவு செய்த போது கூட்டுறவுச் சங்கங்களே வீட்டுமனை வரிவாக்கத்திற்கு மட்டுமின்றி நிலக்கூட்டு உடைமைக்கும் விவசாயத் திற்கும் உரிய கருவியாதலின் முடிந்த இடங்களில் எல்லாம் கூட்டுறவுச் சங்கங் கள் வளர்ச்சி அடையத் தூண்டுகோலாக இருக்குமாறும் உற்சாகம் அளிக்குமாறும் லேபர் கமிஷனருக்கு அறிவுறுத்தப்பட்டது. சென்னை நகரத்திலுள்ள ஆதி திராவிடர்களுக்குச் சுகாதாரமுள்ள இருப்பிடங்கள் தேடித் தருவதில் நிறைய நேரத்தைப் பயன்படுத்த வேண்டுமென்று லேபர் கமிஷனர் அறிவுறுத்தப்பட்டார் - ஆணை எண் 2636 நாள்: 3.11.1920.
வீட்டுமனைகள் வாங்குவதற்குக் கடன் வசதி அளித்தல்
தாழ்த்தப்பட்டவர்களுக்கு வீட்டுமனை கள் வாங்கும் திட்டத்தொடர்பாகக் கூட்டுறவு நிறுவனங்களுக்கும் நேரடியாகத் தனியே விண்ணப்பித்தவர்களுக்கும் கடன் கொடுப்பதற்காக ஒன்றரை லட்ச ரூபாய் வரை வழங்க அரசு முடிவு செய்தது. இதற்காக இந்திய அரசாங்கத்திடமிருந்து ஒப்புதல் பெற்றுத் தொடர்புடைய அலுவ லர்களுக்கு அறிவிக்கப்பட்டது - அரசு ஆணை எண் 2785 நாள்: 20.11.1920.
தொழிலாளர் துறை ஆணையருக்குச் சில அதிகாரங்கள் வழங்கப் பெறல்
தாழ்த்தப்பட்டவர்கள் தொடர்பான வேலைகள் விரைந்து முடிக்கப்படுவதற் காகத் தொழிலாளர் துறை ஆணையர்க்கு லேபர் கமிஷனர்)ச் சில அதிகாரங்கள் வழங்கப்பட்டன.
இந்த அரசு ஆணையில் அவருக்குத் தரப்பட்ட அதிகாரங்கள் வருமாறு:
(அ) ஓராசிரியர் பள்ளிகளின் ஆசிரி யர்கட்கு ஊதியம் தரவும் அதிகாரம் தரப் பட்டது. ஊதிய விகிதமும் நியமிக்கப்பட வேண்டிய ஆசிரியர்கள் எண்ணிக்கையும் கல்வி விதிகள் 81, 82படி நெறிப்படுத்தப்படும்.
(ஆ) மரச்சாமான்கள் துணைக் கருவிகள், பதிவேடுகள் போன்றவற்றிற்காக ரூ.125/-க்கு மேல் போகாமல் செலவழிக் கவும் சில்லரைச் செலவுகளுக்காக மாதம் ஒன்றுக்கு ரூபாய் ஒன்று செலவழிக்கவும் அதிகாரம் வழங்கப்பட்டது.
(இ) ஒவ்வொரு பள்ளிக்கும் தற்காலிகக் கட்டடம் கட்டுவதற்காக ரூ.500/- வரை செலவழிக்க ஒப்புதல் வழங்கவும், வாட கைக்குப் பெறுவதே நல்லது என்ற நிலை ஏற்படும் போது மாதம் ஒன்றுக்கு ரூபாய் ஐந்துக்கு மேல் போகாமல் வாடகை அனுமதிப்பதற்கு என அதிகாரம்.
(ஈ) தாழ்த்தப்பட்டோரின் நலன் களுக்காகப் பாதைகள் கிணறுகள், கழிப் பறைகள், வீட்டுமனைகளை உயர்த்துவது போன்றவற்றிற்காக ஒவ்வொரு பணிக்கும் ரூ.2500/-க்கு மிகாமல் ஒப்புதல் அளிக்க அதிகாரம்.
தாழ்த்தப்பட்ட வகுப்பு மக்களுக்கு அனுமதிக்கப்பட்ட கடன் தொகையை அர சாங்கத்திற்கு அறிவிக்காமலே வழங்குவ தற்கு அவருக்கு அதிகாரம் வழங்கப் படுகிறது - அரசு ஆணை 3073 நாள்: 27.12.1920.
மூன்றாண்டுகட்கு நிலவரியும் நீர்வரியும் இல்லை
கிருஷ்ணா மாவட்டத்தில் ஆதி திராவிடர்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங் களுக்கு நிலவரியும் நீர்வரியும் செலுத்துவ திலிருந்து 1331ஆம் பசலியிருந்து மூன்றாண்டுகட்கு விலக்கு அளிக்க அர சாங்கம் ஒப்புதல் அளித்தது - அரசு ஆணை 2415 நாள்: 2.11.1921.
ஆதிதிராவிடர்களுக்கு வேளாண்மைக்காக நிலங்களை ஒதுக்குதலும் மரங்களின் மதிப்பு நில அளவைக் கட்டணம் இவற்றைத் தள்ளுபடி செய்தலும்
1. வேளாண்மைக்காக நிலங்களை ஒதுக்கித் தருதல்
அ) வேளாண்மைக்காக ஏராளமான நிலங்கள் இருக்கும் சிற்றூர்களில் ஆதிதிராவிடர்கள் வேளாண்மை செய்வதற்காக ஒரு குறிப்பிட்ட பகுதி நிலங்களை அவர்களுக்காக ஒதுக்குதல்; மற்ற சிற்றூர்களிலும் தேவை என மாவட்ட ஆட்சியாளர் எண்ணுவா ரானால் இவ்வாறு செய்யலாம்.
ஆ) எண்ணற்ற புறம்போக்குப் பகுதிகளோ அளக்கப்படாது உள்ள நிலங் களோ அவனுக்கு மாற்றப்படும்போது - எடுத்துக்காட்டாக ஒதுக்கப்பட்ட காடுகள் அழிக்கப்படும் போது ஆதி திராவி டர்களின் இன்றைய தேவைகளும் எதிர் காலத்தேவைகளும் குறித்து ஆராயலாம்.
இ) இத்தகைய நிலங்களில் தர்காஸ்து கோரி வரும் விண்ணப்பங்கள் ஆதி திராவிடர் சமுதாயத்தைச் சேர்ந்தவர் பெயராலும் உண்மையாகவே அவர் பெயராலும் அல்லது அவர்கள் சார்பில் செயல்படும் ஒப்புதல் பெற்ற சங்கம் பேராலும் அமைந்திருக்கவேண்டும்.
ஈ) இந்த நிலங்களைப் பெறுபவர்கள் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்களுக்கன்றி மற்றவர்களுக்கு மாற்றப்படாதவாறு நிலங்கள் இவர்களுக்கு வழங்கப்பட வேண்டும்.
நிலத்தைப் பெறுபவர்கள் கட்டணம் செலுத்த முடியாதபடி மிக ஏழையராக இருப்பின் வழங்கப்படும் நிலங்களில் உள்ள மரங்களின் மதிப்பைத் தள்ளுபடி செய்யவோ குறைக்கவோ செய்யலாம். நில அளவைக்கான கட்டணமும் இவ்வாறு செய்யப்படலாம்.
இவ்விவரங்கள் 16.12.1921 நாளிட்ட 2815 எண் ஆணையில் உள.
வீட்டுமனைகளுக்காக இலவச நிலம் வழங்குதல்
விண்ணப்பதாரர்கள் சாதாரண விதிகளின்படி நிலங்களை விருப்பத்திற்கு ஏற்றவாறு வாங்க உரிமை அற்றவர் களாகவும் அவர்களுக்காக விதிக்கப்பட்ட சிறப்புப் பட்டாப் படிவத்தில் கண்ட நிபந்தனைகளுக்கு உட்பட்டுத் தமக்கு வீட்டுமனைகளை வாங்க இயலாதவாறு ஏழைகளாக இருப்பின் அவர்களுக்கு அளவு செய்யப்பட்ட தரிசு நிலங்களை இருபது சென்ட்டுக்கு மேல் போகாமல் இலவசமாக வழங்க வகை செய்யப் பட்டது என்ற செய்தியை 5.7.1922 நாளிட்ட 1243 எண் ஆணை தருகிறது.
பஞ்சமர் கல்வி குறித்த அரசு ஆணை (17.3.1919)
1854ஆம் ஆண்டே கோர்ட் ஆப் டைரக்டர்கள் எம்மாண வனும் அரசு கல்லூரிகளிலோ, அரசுப் பள்ளிகளிலோ சாதி காரணமாக அனுமதி மறுக்கப்படக் கூடாது என ஒரு விதி அமைத்தார். 1865 இல் இந்திய மந்திரியால் இது மீண்டும் வலியுறுத்தப்பட்டது. ஆனால், மாகாணத்தின் பல பகுதிகளிலும் பஞ்சமர் பிள்ளைகள் கல்வி நிலையத்தில் சேர்க்கப் படாமை காணப்பட்டது.
இதற்கான காரணங்கள் கூறப்பட்டன. உயர் சாதியினர் கொண்டுள்ள வெறுப்புணர்ச்சி காரணமாக அவர்கள் தம் பள்ளியி லிருந்து விலக்கிக் கொள்கின்றமை; அக்ரகாரத்திலும், சாவடிகளிலும், கோவில்களிலும் உயர்சாதி யினர் வாழும் பகுதிகளிலும் உள்ள பள்ளிகளில் பஞ்சமர் பிள்ளைகட்கு அனுமதி மறுக்கப் படல்; பெருநிலக்கிழார்கள் பஞ்சமர் மீது கொண்டுள்ள வெறுப்பு இவை காரணமாக அவர்கள் பள்ளிகளில் சேர்க்கப்படுவ தில்லை என்பது தெரிகிறது.
எனவே, பள்ளிகளை எல்லாச் சாதியாரும் அணுகக் கூடிய பகுதியில் அமைக்க வேண்டும் என்றும் அக்ரகாரத்திலும் சாவடிகளிலும், கோயில்களிலும் உள்ள பள்ளிகளை எல்லாச் சாதியாரும் அணுகக் கூடிய வேறு இடங்களுக்கு மாற்ற வேண்டும் என்றும், பள்ளிக்கு வாடகைக்கு இடம் தருபவர்கள் பஞ்சமர் பிள்ளைகட்கு இடம் கொடுக்கக் கூடாது என்று கூறினால், அவ்விடத்தில் உள்ள பள்ளிகளை வேறு இடங்கட்கு மாற்ற வேண்டும் என்றும்,
எல்லாச் சாதியாரும் அணுகக் கூடிய இடத்தில் பள்ளி உள்ளது எனச் சான்றிதழ் அளிக்கப் பட்டாலொழிய பொதுப் பணத்தில் பள்ளிகள் கட்டப்படக் கூடாது என்ற விதியும் இவை குறித்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை ஆண்டிற்கு ஒரு முறை கல்வித் துறை இயக்குநரும் ஜில்லா போர்டு தலைவர்களும் நகராட்சி மன்றங்களின் தலைவர்களும் அறிக்கை அனுப்ப வேண்டும் என்றும் பிறப்பிக்கப்பட்ட ஆணை தாழ்த்தப் பட்டோர் கல்வி பெற நீதிக்கட்சி எடுத்துக் கொண்ட துணிவான முயற்சிகளாகும்.(17.3.1919)
லேபர் கமிஷனர் என்ற பதவியின் தகுதியை மேலும் உயர்த்தி - அக்கறை மூலம் அலை அலையாக தாழ்த்தப்பட்ட மக்களில் கல்வி, பொருளாதார நிலைகளை உயர்த்தச் செய்திருக்கும் நிலையில் இதனைத் தலைகீழாகப் புரட்டி எழுத வேண்டிய அவருடைய தோழர் இரவிக்குமாருக்கு ஏன் வந்தது என்று தெரியவில்லை.
பனகல் ஆணை
தாழ்த்தப்பட்ட வரை குறிப்பிட்ட அள வில் பள்ளிக் கூடங்களில் சேர்த்துக் கொண்டால் தான் கல்வி மானியம் வழங்கப்படும் என்று ஆணை பிறப்பித்தது டாக்டர் சுப்பராயன் தலைமையில் அமைந்த நீதிக்கட்சி ஆதரவு அமைச்சரவைதானே (1928).
சென்னை மாநகராட்சி, பிற நகராட்சிகள், மாவட்ட நாட் டாண்மைக் கழகங்கள் போன்றவை நடத்தும் பள்ளிகளில் இன்னும் மிகுதியாகத் தாழ்த்தப்பட்ட வகுப்பு மாணவர்கள் சேர்க்கப்படவேண்டும் என்றும் ஒவ்வொரு ஆண்டு இறுதியிலும் பள்ளியில் பயில்வோர் பட்டியலை அனுப்பும்போது பள்ளி யில் சேர்க்கப்பட்ட தாழ்த்தப்பட்ட மாணவர் பற்றிய விவரங்களையும் அனுப்ப வேண்டும் என்றும் ஆணை பிறப்பித்தது பனகல் அரசரைப் பிரதமராகக் கொண்ட நீதிக்கட்சி ஆட்சிதானே! (G.O.No. 205 Dt. 11-2-1924 Law (Education) Dept.).
1935-_ல் தாழ்த்தப்பட்ட சமுதாய மக்களின் கல்விக் கென்றே 52 லட்ச ரூபாயை ஒதுக்கியது நீதிக்கட்சி என்றால், அந்தக் கால கட்டத்தில் அது எவ்வளவுப் பெரிய தொகை? எஸ்.எஸ்.எல்.சி. தேர்வுக்குச் செல்லும் ஆதிதிராவிடர் மாணவர்கள் தேர்வுக் கட்டணம் கட்டத் தேவை யில்லை என்றும் சலுகை செய்யப் பட்டது. 1936 இல் அவர்களுக்காக அய்ந்து விடுதிகள் கட்டப்பட்டன.
உரிமம் ரத்து செய்யப்படும்
ராமநாதபுரம் ஜில்லா போர்டு தலைவர் W.P.A. சவுந்தரபாண்டியன் அவர்கள் மோட்டார் கம்பெனி முதலாளிகளுக்குப் பின்வருமாறு ஒரு சுற்றுக் கடிதம் அனுப்பியிருக்கிறார்கள். அது வருமாறு:
இந்த ஜில்லாவிலுள்ள சில மோட்டார் கம்பெனி முதலாளிகள் ஆதி திராவிடர்களை தமது பஸ்களில் ஏற்றிக் கொண்டு போவதில்லையென்றும் டிக்கெட்டில், ஆதிதிராவிடர்களுக்கு டிக்கட்டு கொடுக்கப்பட மாட்டாது என்று நிபந்தனை ஏற்படுத்தியிருப்பதாகவும் அறிகின்றோம்.
இவ் வழக்கம் பிரயாணிகளுக்கு இடைஞ்சல் உண்டு பண்ணத் தக்கதாகவும், மிக அக்கிரம மானதாகவும் இருக்கிறது.
ஆகவே மோட்டார் கம்பெனி முதலாளிகள் ஏதேனும் ஒரு சமூகத்தாரை பஸ்சில் ஏற்றிச் செல்ல மறுக்கவோ, டிக்கெட்டுகளில் மறுப்பு விதிகள் அச்சிடவோ செய்தால் அவர்களுடைய லைசென்சு முன்னறிக்கை கொடாமலே ரத்து செய்யப் படுமென இதனால் எச்சரிக்கை செய்கிறோம். இந்தச் சுற்றுக் கடிதம் கிடைத்து ஒரு வாரத்திற்குள் அந்தத் தடை விதி நீக்கப் பட்டதா அல்லவா என்று சாம்பிள் டிக்கெட்டுடன் ரிப்போர்ட் செய்து கொள்ள வேண்டும்.-
டாக்டர் அம்பேத்கர் போராட்டத்திற்கு நீதிக்கட்சி ஆதரவு
தாழ்த்தப்பட்டவர்களுக்கான கோவில் நுழைவுப் பிரச்சினை இன்று முன்னணியில் இருக்கிறது. சேத்ஜமான் லால் பஜாஜ் இப்பிரச்சினையில் பேரளவு பங்கேற்று அது காரணமாக எச்சிச்பூர், ஜபல்பூர் போன்ற இடங்களில் தனியார் கோவில்கள் அவர்களுக்குத் திறந்து விடப்பட்டன.
ஆனாலும் பஜாஜூம் மகாத்மா காந்தியும் கூடப் பொதுக் கோவில்களில் இவ்வகுப்பினர் நுழையும் பிரச்சினையைச் சந்திக்கத் தயாராகவில்லை.
இவர்களுக்காக தனிக் கோவில்களைக் கட்டவேண்டும் என்பதை மகாத்மா காந்தி எடுத்துக் கூறி வருகிறார்.; அவரது இச்செய்கை 1929 நவம்பர் 28 ஆம் நாளிட்ட ஜஸ்டிஸ் பத்திரிகையில் ஒரு கட்டுரையில் கண்டிக்கப் பட்டிருக்கிறது. பூனாவிலுள்ள பெயர் பெற்ற பார்வதி கோவிலில் தாழ்த்தப்பட்டவர்கள் நுழையவேண்டும் என்பதற்காக ஒரு சத்தியாக்கிரகப் போராட்டம் செப்டம்பர் 1929 இல் தொடங்கப்பட்டது.
இப்போராட்டம் கடுமையான விளைவுகளைத் தரும் என்று அச்சுறுத்துவதாக எண்ணிக் காவல்துறை இதில் தலையிட்டது. எனவே சத்தியாக்கிரகப் போராட்டம் 1929 அக்டோபர் 29 ஆம் நாளுக்குத் தள்ளி வைக்கப்பட்டது. பூனாவில் ஏற்பட்டுள்ள இப் போராட்டத்திற்கு ஆதரவு தருவதற்காக தாழ்த்தப்பட்டவர்களின் கூட்டம் ஒன்று சென்னை நேப்பியர் பூங்காவில் 22-10-1929 அன்று கூட்டப்பட்டது.
இக்கூட்டத்திற்கு கீ.றி.கி. சவுந்தரபாண்டிய நாடார் தலைமை தாங்கினார். திரு.ஈ.வெ.இராமசாமி நாயக்கர் உள்ளிட்ட தலைவர்கள் இக்கூட்டத்தில் பேசினார்கள். இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் பம்பாய் மாகாணத்தில் உள்ள தாழ்த்தப்பட்ட மக்களின் தலைவரான டாக்டர் அம்பேத்கருக்கு அனுப்பப்பட்டது.
-------------------ஜஸ்டிஸ் இயர் புக் 1929 முன்னுரை. பக். 13_-14
குறிப்பு: ஆதார நூல்கள்: முனைவர் பு. இராசதுரை அவர்களின் (1) நீதிக்கட்சி பாடுபட்டது யாருக்காக? (2) நீதிக்கட்சியின் சாதனைகள் எனும் நூலைப் படியுங்கள்.
-------------------கவிஞர் கலி. பூங்குன்றன் அவர்கள் 12-5-2012 “விடுதலை”ஞாயிறுமலரில் எழுதிய கட்டுரை
0 comments:
Post a Comment