Search This Blog

11.5.12

நீதிக்கட்சிதாழ்த்தப்பட்டோருக்குநீதிசெய்யவில்லையா? -2


ஜாயின்ட் பார்லிமென்டரிக் குழுவிடம் நீதிக்கட்சித் தலைவர்கள் சாட்சியம் அளித்தபோது திராவிடர் சங்கம் சார்பில் சர். ஏ.இராமசாமி முதலி யார் குழு முன் சாட்சியம் அளித்தார். தாம், சாட்சியம் அளித்தபோது சட்டத்தில் தாழ்த்தப்பட்டவர்களுக்குச் சிறப்பான பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டுமென்று அவர் கோரினார். தனித் தொகுதியை எதிர்த்து காந்தியார் உண்ணாவிரதம் இருந்ததற்கு முன்பாகவே தாழ்த்தப்பட்டவர்களுக்கு தொகுதிகள் அளிக்கப்படவேண்டும் என்றும் அப்போதுதான் தக்க சார்பாளர்களை அவர்கள் சட்ட மன்றத்திற்கு அனுப்ப முடியும் என்றும் அவர் வாதிட்டார். இந்தக் கோரிக்கை உடனடியாக ஏற்றுக்கொள்ளப்படா விட்டாலும் நியமனம் மூலம் தாழ்த்தப்பட்டவர்கட்குப் பிரதிநித்துவம் அளிக்கப்படவேண்டும் எனச் சட்டத்தில் வகை செய்யப்பட்டது. அந்தக்கால அளவில் தாழ்த்தப் பட்டவர்களுக்காகப் போராடத் தாழ்த்தப்பட்ட இனத் தலைவர்கள் பலராக இல்லை. தாழ்த்தப்பட்டவருள் அரசியல் அறிவு வாய்க்கப் பெற்றி ருந்த ஓரிருவர் நீதிக் கட்சியில் சேர்ந் திருந்தனர்.

தாழ்த்தப்பட்ட இனத் தலைவர்கள் நீதிக்கட்சியின் கொடியின்கீழ் அணிவகுத்து நின்றனர். நீதிக்கட்சி தாழ்த்தப்பட்டவர்களின் உரிமைக்காகப் போராடிற்று. இதைச் செய்தமைக்காக நீதிக்கட்சியினர் பார்ப்பனர்களால் இழித்துரைக்கப்பட்டார்கள். நீதிக் கட்சி உயர்சாதி இந்துக்களின் பெண்களைப் பறையர்களுக்குத் திருமணம் செய்து வைக்க விரும்புவதாக அந்த இயக்கத்தை இடைவிடாது எதிர்த்துப் பார்ப்பனர் பிரச்சாரம் செய்தனர். நீதிக் கட்சிக்கு ஆதரவு அளித்து வந்த உயர்சாதி இந்துக்களிடையே இந்தப் பொறாமைப் பிரசாரம் ஒரு பயன் தராத நிலையை உருவாக்க முயன்றது. எனினும் இப் புரோகிதக் கூட்டத் தாரின் முகச்சுளிப்பைப் பொருட்படுத் தாது நீதிக்கட்சி தாழ்த்தப்பட்டவர்களை உயர்த்தும் பணியைத் தொடர்ந்து செய்து வந்தது.

நீதிக்கட்சியின் தொண்டு காரண மாகப் பல தாழ்த்தப்பட்ட சமுதாயங்கள் - நீதிக்கட்சி தோன்றுவதற்கு முன் இருந்த நிலைமைக்கு மாறாக அரசியல் விழிப்புணர்ச்சியையும், சமுதாயத்தில் தன்மான உணர்ச்சியையும், பொரு ளியல் உயர் நிலையையும் பெறத் தொடங்கின.

பார்ப்பனரல்லாதார் அரசியலிலும் சமூக இயலிலும் விழிப்புணர்ச்சியைப் பெற்றுவிட்டால் பிரிட்டிஷ் ஆட்சியை எந்த நேரமும் அகற்ற முடியும் என்று நீதிக்கட்சி எண்ணியது. ஆனால் நாட்டில் பார்ப்பன ஆட்சி என்ற பூதம் கால் ஊன்றிவிட்டால் அதை அசைக்க முடியாது என்றும் அது கருதியது. பார்ப்பன ஆட்சி பிரிட்டிஷாரின் ஆட்சியைக் காட்டிலும் நூறு மடங்கு கேடு விளைவிப்பது ஆகும் என்று நீதிக்கட்சி உறுதியாக நம்பியது.

நீதிக்கட்சிப் பத்திரிகைகளின் போர்க்கோலம்

1919 ஆம் ஆண்டைய சட்டத்தில் வகுப்புரிமை இடம் பெறவேண்டும் என்று நீதிக்கட்சிப் பத்திரிகைகளான ‘Non-Brahmin’, ‘Justice’, திராவிடன், ஆந்திரப்பிரகாசிகா ஆகியவை போர்க்குரல் கொடுத்தன. லெஜிஸ்லேடிவ் கவுன்சில்களில் நிற வேற்றுமைகள் இடம் பெற்றால் உடனே பார்ப்பனரின் பெரிய ஓலம் கேட்கிறது. ஆனால் சாதி வேற்றுமைகள் பற்றிப் பேசப்பட்டால் அவர்கள் அது பற்றி அறியாதவர்கள் போல் இருந்து விடுகிறார்கள். இந்தியர்களின் பிறப்புரிமை பற்றி இப்பொழுது நிறையப் பேசப்படுகிறது. ஆனால் பஞ்சமர்க்கு ஒரு நாயின் பிறப்புரிமை கூட மறுக்கப்படுகிறது. ஒரு பஞ்சமர் மட்டும் லெஜிஸ்லேடிவ் கவுன்சிலில் உறுப்பினராக இருப்பாரே யானால் அவர் தமது சமுதாய மக்கள் அடைந்துவரும் இன்னல்களை அழுத்தமாக எடுத்துரைக்க மாட்டாரா? பார்ப்பனர்களைப் போலவே பிரிட்டிஷ் அரசாங்கத்தின் நன்மை களைப் பஞ்சமர்களும் அனுபவிக்க வேண்டும் என அரசாளும் பிரிட்டி ஷாருக்கு அவர்கள் உணர்த்தி இருக்க மாட்டார்களா? இதனாலேயே அர சாங்கத்தின் ஒவ்வொரு கவுன்சிலிலும், அரசாங்கத்தின் எல்லாப் பொது நிலைகளிலும், ஒவ்வொரு சமுதாயத் திற்கும் பிரதிநிதித்துவம் அளிக்க வேண்டும் என்று நாம் வற்புறுத்து கிறோம் என்று 3.-10.-1917 திராவிடன் ஏடு எழுதிற்று. வகுப்புவாரி உரிமை இந்தியாவிற்கு அளிக்கப்பட்டாலொழிய, நாட்டிலுள்ள எல்லா மக்களும் சமஉரிமை பெற இயலாது என்று அது திட்ட வட்டமாக 5-.8-.1918இல் எழுதியது. சட்டமன்றத்தில் ஆதி திராவிடர்களின் பிரதிநிதிகள் ஆதிதிராவிடர்களாகவே இருக்க வேண்டும் என 15.-12.-1920 நாளிட்ட திராவிடன் எழுதிற்று.

இதுகாறும் கூறப்பெற்றவையிலிருந்து பார்ப்பனரல்லாதார் அனைவரும் கல்வி, சமூக இயல், அரசியல், பொருளியல் போன்றவற்றில் முன்னேற வேண்டு மென்றும் வகுப்புரிமை நிலை நாட்டப்பட வேண்டும் ஒவ்வொரு சாதியினருக்கும் சமஉரிமை ஆட்சிப் பொறுப்பிலும், அலுவலகப் பொறுப் பிலும் தரப் படவேண்டுமென்றும், தாழ்த்தப்பட்டவர்கள் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டுமென்றும் போராடுவதற்காக நீதிக்கட்சி உருவாயிற்று என்பதைக் காண்கிறோம்.

பார்ப்பனரல்லாதாரில் உயர்ந்த சாதியினர், தாழ்ந்த சாதியினர் எனப் பாராது அனைவர்க்கும் இடம் தரும் திராவிடன் ஹோம் பார்ப்பனரல் லாதாரில் உயர்ந்த சாதியாராகிய சி.நடேச முதலியாரால் உருவாக் கப்பட்டது.

உரிமைகள் தமக்கும் உண்டு என்பது கூட அறியாராய்த் தமது உரிமைகள் எவை என்பதை அறி யாராய் வாழ்ந்து கொண்டிருந்த தாழ்த்தப்பட்டோர் உரிமைகளுக்காக இலண்டன் மாநகரத்தில் திராவிடச் சங்கம் சார்பில் சான்றுரை பகர்ந்தவர் பார்ப்பன ரல்லாதரில் உயர்சாதி யினராகிய சர்.ஏ.இராமசாமி முதலியார் என்பதையும் அறிகிறோம்.

அக்காலக் காங்கிரஸ் இயக்கம் பார்ப்பனருக்கு மட்டுமே தனி உரிமையுடைய ஓர் இயக்கமாக இருந்தது. இந்தக் காங்கிரஸ் இயக்கத்தின் சார்பில் பார்ப்பனரால் நடத்தப்பட்ட பத்திரிகைகள் நீதிக் கட்சி தோன்றியமையையும், வகுப்புரிமை யையும் சாடின. வகுப்புரிமை இந்திய சமுதாயத்தில் வாழும் மக்களிடையே வேற்றுமை உணர்வை வளர்க்கவே உதவும் என்று இந்து 20.-12.-1916 அன்று எழுதியது. நாட்டின் நலனுக்கு இந்த இயக்கம் நன்மை பயக்காது என்று ஹிந்துநேசன் என்ற பத்திரிகை எழுதியது.

எல்லா வகுப்பினர்களுக்கும் பிரதி நிதித்துவம் அளிக்க வேண்டுமானால் துப்புரவு செய்பவர்களுக்கும் கூடப் பிரதிநிதித்துவம் அளிக்க வேண்டும். அவ்வாறு செய்ய இயலுமா? முடியு மென்றே வைத்துக் கொண்டாலும் இந்த எல்லா வகுப்பு, உள்வகுப்பு பிரதிநிதிகளும் தத்தமக்கு உரிய கடமைகளைச் செய்ய இயலுமா? துப்புரவு செய்யும் (ஷிநீணீஸ்மீஸீரீமீக்ஷீ) சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் இந்தி யாவில் உள்ள நிர்வாக சபைக்கோ, லெஜிஸ்லேடிவ் கவுன்சிலுக்கோ தேர்ந்தெடுக்கப்பட்டால் தேர்ந் தெடுக்கப்பட்ட காரணத்துக்காகத் தமக்குரிய கடமைகளைச் செய்வதற்குத் தகுதி பெற்றிருக்க வேண்டாமா? என்று சம்பத் அப்யூதயா எனும் தேசி யப் பார்ப்பன ஏடு 19.-10.-1917-_இல் எழுதியது.

வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் ஏற்பட்டானதும் பின்னால் வரும் குழப்பங்களுக்குக் கணக்கே இராது. ஒரு பார்ப்பனர், பார்ப்பனரல்லா தார்க்குப் பிரதிநிதியாக இருக்க முடியாது என்ற நெறி, ஒரு சூத்திரன் ஒரு சூத்திரன் அல்லாதவனுக்குப் பிரதிநிதியாக இருக்க முடியாது என்ற நெறிக்கு இட்டுச் செல்வதாகும். தாழ்ந்த மக்கள் எழுப்பி விடப்படும்போது வகுப்பு வாரிப் பிரதி நிதித்துவத்தின் குறை வெளிப்படையாகத் தோன்றும் என்று கிஸ்டன் பத்ரிகா என்ற தேசியப் பார்ப்பன ஏடு 31.-01.-1920இல் எழுதியது.

தாழ்த்தப்பட்டோர் சிக்கல்

நீதிக்கட்சியின் இடையறாத உழைப்பால் பஞ்சமர் என்று அந்நாளில் அழைக்கப்பட்ட ஆதிதிராவிடர்கள் பிள்ளைகளைச் சென்னை மாநகராட்சி தன் மாதிரிப் பள்ளிகளில் சேர்க்க முன்வந்தது. இதைக் கண்டித்தும் தாழ்த்தப்பட்டவர் குழந்தைகட்குத் தனிப் பள்ளிக் கூடங்கள் அமைக் கப்படவேண்டும் என்றும் 18-.01.-1918 நாளிட்ட இந்து நேசன் என்ற தேசியப் பார்ப்பனப் பத்திரிகை எழுதியது.

அன்னிபெசன்ட் ஹோம்ரூல் இயக்கத்தவர்; இந்தியாவிற்கு ஹோம் ரூல் அளிக்கப்படப் போராடியவர். காங்கிரஸ் அவையில் உறுப்பினர். இவர் ஆதிதிராவிடர்களைப் பற்றிக் குறிப்பிடும்போது அவர்கள் முற்பிறவியில் தாம் செய்த தீவினை களை இப்பிறப்பில் அனுபவிக்கிறார்கள் எனத் தாக்கி எழுதியிருந்தார். அது மட்டுமின்றி, உயர் சாதிப் பிள்ளை களுடன் பஞ்சமர் வீட்டுப் பிள்ளைகள் பொதுக் கல்வி நிலையங்களில் கலந்து இருப்பதற்கு உரிய தகுதியை அவர்கள் பல தலைமுறைகளுக்குப் பின்னரே பெறமுடியும் என்றும் குறிப்பிட்டிருந்தார். இக்கூற்றுகளைத் தாழ்த்தப்பட்டவர்களும், தாழ்த்தப் பட்டவரின் உரிமைகளைப் பாதுகாக்கும் இயக்கமாக இருந்த நீதிக்கட்சியும் கடுமையாகத் தாக்கின. 1916_ஆம் ஆண்டு அன்னி பெசன்ட் அவர் களின் கருத்துக்களைக் கண்டிக்கப் பறையர் மகாஜனசபையின் கூட்டம் சென்னையில் நடந்தது.

1917_இல் ராவ்பகதூர் தியாகராயர் செட்டியார், டி.எம்.நாயர் ஆகியோர் தலைமையில் சென்னை ஸ்பர்டாங்கில் கூடிய பஞ்சமர்களை (ஆதிதிராவிடர் களை)ப் பஞ்சைகள் என்றும் இழிசினர் என்றும் வீணர்கள் என்றும் இந்து ஏடு தீட்டியதைக் கண்டித்து 14.-10.-1917 முடிய உள்ள வாரத்திற்குரிய நான் பிராமின் ஏடு எழுதியது.

இவையெல்லாம் அந்நாளில் தேசியக் காங்கிரஸ் இயக்கம் தாழ்த்தப்பட்டவர் உரிமைகளுக்கும், முன்னேற்றத்திற்கும் எதிராகச் செயல்பட்டமையை விளக்குகின்றன. தாழ்த்தப்பட்டவர்களின் உயர்வுக்காக நீதிக்கட்சி மட்டுமே பார்ப்பனரின் எதிர்ப்புக்கு இடையே போராடிற்று என்பதையும் விளக்குகின்றன.

1916-_ஆம் ஆண்டு தொடங்கப் பட்ட நீதிக்கட்சி நான்கே ஆண்டு களில் - 1920_இல் அமைச்சரவை அமைத்துவிட்டது. இந்த அமைச்சர வையின் ஆக்கச் செயல்கள் யாவை? இந்த நான்கு ஆண்டுகளாக இக் கட்சியினர் இந்தியாவிலும், இலண் டனிலும், தம் குறிக்கோள்களையும், கோரிக்கைகளையும் விளக்கினதே. அவை குறித்து எழுதினரே. அவற்றிற்காகப் போராடினரே. அந்த விளக்கங்களும் எழுத்துக்களும்,. போராட்டங்களும் அமைச்சரவை வழியே சாதித்தவை யாவை?

தாழ்த்தப்பட்டவர்களுக்கும், பிற்படுத்தப்பட்டவர் களுக்கும் கல்விச் சலுகையும், ஒப்படை (தர்காஸ்) நிலங்களையும் வீட்டு மனைகளையும், உழவுத் தொழிலுக்குக் கடன்களையும் அரசு அலுவல்களில் நியமனங் களையும் அளித்தன இவ்வரசின் ஆணைகள்.

இவ்வமைச்சரவை ஜனவரி 1920 முதல் மூன்றாண்டுகளில் பிறப்பித்த ஆணைகளை ஒரு தொகுப்பாக 15.-01.-1924 நாளிட்ட அரசு ஆணை எண். 116 சட்டத்தில் (பொது) காண்கிறோம். இந்த ஆணைத் தொகுப்பின் முன்னுரையில் அடியிற்கண்ட செய்திகளை அறிகிறோம்.

அரசு தாழ்த்தப்பட்டோர் உதவிக் காக எத்தனையோ ஆணைகளைப் பிறப்பித்திருந்தாலும் அவை குறித்த விவரங்கள் தொடர்புடைய மக்களுக் குச் சரியாகப் போய்ச் சேரவில்லை என்று அந்நாளில் கருதப்பட்டது. இதன் விளைவாகச் சட்டமன்றத்தில் பல வினாக்கள் கேட்கப்பட்டன. அரசின் கருத்தை அலுவலர்கள் சரியாக நடைமுறைப்படுத்தவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்தது. எனவே இந்த ஆணைகளைத் தாய் மொழிகளின் (தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம்) வழியே மக்கள் அறியுமாறு செய்ய வேண்டும் என்று அரசு கருதியது. அது மட்டுமின்றித் தாழ்த்தப்பட்ட வர்கள் பற்றியன மட்டும் அல்லாமல் பிற்படுத்தப்பட்டவர்கள் குறித்த ஆணைகளும் விளம்பரப்படுத்தப் படலாம் என்று அரசு கருதிற்று.

எனவே நீதிக்கட்சி ஆட்சிப் பொறுப்பேற்ற திலிருந்து மூன்றாண்டு களில் அது நிகழ்த்திய சாதனைகள் குறித்து ஆணைகள் தொகுக்கப்பட்டு (116 ஆம் எண்) ஆணையாக வெளியிடப்பட்டது.

பொதுத்துறை

பொதுத் துறையைப் பொறுத்தவரை அரசாங்க அலுவல்களுக்கு நிய மனங்கள் குறித்த ஆணை 15-.8.-1922 நாளிட்ட 658 ஆம் எண். உள்ளதாகும். இந்த ஆணை தாழ்த் தப்பட்டோர் உள்ளிட்ட எல்லா மக் களுக்கும் உரிய இடங்கள் அளிக்கப் பட வேண்டும் என்று குறிப்பிடுகிறது.

தாழ்த்தப்பட்டோர் நியமனம்

கூட்டுறவுத் துறையில் தலைமை ஆய்வாளராக ரூபாய் தொண்ணூறு ஊதியம் பெற்றுக் கொண்டிருந்த திரு. கிரியப்பா ரூ.250 மாத ஊதியமுள்ள துணைப் பதிவாளராக நியமிக்கப்பட் டார். தாழ்த்தப்பட்ட வகுப்பான பில்லவர் சமுதாயத்தைச் சேர்ந்தவர் என்ற அடிப்படையில் மட்டுமே இவர் இப்பதவிக்கு நியமிக்கப்பட்டார். தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த கிறித்துவர் ஒருவரும் துணைப் பதிவாளராக ரூ.250 சம்பளத்தில் அமர்த்தப்பட்டார். திரு எம்.சி. ராஜா, கவுரவத் துணைப் பதிவாளர் ஆனார். துப்புரவு வகுப்பினர், தோடர்கள், கோடர்கள், படகர்கள் ஆகியவர் களுக்காக 30.-06.-1922 க்கு முன் கூட் டுறவுத் துறை அமைத்த சங்கங்கள் (ஷிஷீநீவீமீவீமீ) வருமாறு:

1. துப்புறவுத் தொழிலாளர் கூட்டுபவர் 61
துப்புரவுத் தொழிலாளர் அனுமதிக்கப்பட்ட
நகராட்சி அலுவலர்க்கு

2. மீனவர் 75

3. ஆதிதிராவிடர் 374

4. தோடர்கள் 2

5. படகர்கள் 60

6. கோடர் 4 ஏஜென்சிப் பகுதியில் 2877 உறுப்பினர்களைக் கொண்ட 7 விவசாயச் சங்கங்கள் இருந்தன. இவருள் 1268 பேர் மலைவாழ் இனத்தவர்; 592 உறுப்பினர்களைக் கொண்ட விவசாயமல்லாத சங்கங்கள் இரண்டு இருந்தன என்ற விவரங் களைக் காண்கிறோம்.

நீதிக்கட்சியின் இத்தகைய சாதனைகளை இருட்டடிக்க சிலர் விரும்புவது, துடிப்பது - அசல் பார்ப் பனத்தனம்தானே!

குறிப்பு: நீதிக்கட்சி தாழ்த்தப்பட்ட வர்களுக்கு என்னென்னவெல்லாம் செய்தது? முனைவர் பு. இராசதுரை அவர்களின் நீதிக்கட்சி பாடுபட்டது யாருக்காக? எனும் நூலைப் படியுங்கள்.

----------------------------------(இன்னும் உண்டு)

நீதிக்கட்சி ஆட்சியில்தான் தாழ்த்தப்பட்டோருக்கு பொது சாலைகளில் நடக்க உரிமை ஆணை

சென்னை அரசாங்கம் உள்ளூர் அரசாங்க இலாகா
(உள்ளூர் மற்றும் மாநகராட்சி)

அரசாங்க உத்தரவு நெ. 2660 உள்ளூர் மற்றும் மாநகராட்சி, 25 செப்டம்பர், 1924.

ஒடுக்கப்பட்ட மக்கள் உபயோகப்படுத்தும் சாலைகள், தண்ணீர் எடுக்கும் கிணறுகள் மற்றும் உள்ளவை - சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் - மாநிலத்திலுள்ள உள்துறை நிர்வாகங்கள் மற்றும் தலைமை இலாகாக்களுக்கு அனுப்பப் பட்டது.

1924 ஆம் ஆண்டு செப்டம்பர் 24-_ஆம் தேதி நடந்த சட்டமன்றக் கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர் மானம் நிறைவேற்றப்பட்டது.

ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்கள் உபயோகப்படுத்தும் பொதுச்சாலைகள், கிணறுகள் பற்றியது.

திரு. ஆர். சீனிவாசன்: (இரட்டைமலை)

1 (9) இந்தச் சட்டமன்றம் கீழ்க்கண்டவைகளை நிறைவேற்றி, அதை அரசாங்கத்தின் கொள்கையாக அறிவிக்கப்பட்டது.

(அ) எந்தப் பொதுச் சாலையிலோ, தெருவிலோ, அது எந்தக் கிராமத்திலோ அல்லது நகரத்திலோ இருந்தாலும் அதில் எந்த இனத்தைச் சேர்ந்த மனிதனாய் இருந்தாலும் நடப்பதற்கு உள்ள உரிமையை யாரும் தடுக்க முடியாது என்பதையும்,

(ஆ) எந்த அரசாங்க அலுவலகமாக இருந்தாலும் அல்லது கிணறு, குளம் போன்ற வைகளாய் இருந்தாலும், அல்லது பொது வர்த்தகம் நடைபெறும் இடமாய் இருந்தாலும் இவைகளி லெல்லாம் ஜாதி இந்துக் களுக்கு என்னென்ன உரிமைகள் இருக்கின் றனவோ அவ்வளவு உரிமைகளும் தாழ்த்தப் பட்ட மக்களுக்கும் உண்டு என்பதையும்,

சென்னை அரசாங்கம் ஒப்புக் கொண்டு அதைத் தீர்மானமாக நிறைவேற்றி எல்லா மாநகராட்சி, நகராட்சி, பஞ்சாயத்து மற்றும் அரசாங்கத்தில் உள்ள எல்லா இலாகாக்களுக்கும் அனுப்பப்பட்டது.

(இது அரசாங்க உத்தரவு, மாநில அரசு) பி.எல். மூர், அரசாங்க செயலாளர்
ஜில்லா போர்டு, தாலுக்கா போர்டு, நகராட்சிகள்,
கார்ப்பரேஷன், சென்னை,

பஞ்சாயத்து, நகராட்சி அதிகாரிகள்
தொழில் கமிஷனர்,
சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள எல்லா இலாகாக்கள்,
அரசாங்க செய்தி ஸ்தாபனம்,

இவைகளுக்கெல்லாம் மேற்கண்ட உத்தரவுகள் அனுப்பப்பட்டது. சட்டக்குழு அலுவலகம் 25-.6-.1924

தீர்மானம்

திரு. ஆர். சீனிவாசன்,
(இரட்டை மலை சீனிவாசன்)
உள்துறை அரசாங்க அலுவலகம்)

9. சென்னை மாகாணத்திலுள்ள ஒவ்வொரு அக்கிரகாரத் தெருக்களிலும், ஜாதி இந்துக்கள் உள்ள ஒவ்வொரு தெருக்களிலும், தாழ்த்தப்பட்டவர் கள் குடியிருக்கும் சேரிகளிலும், வஞ்சிக்கப்பட்ட மக்கள் குடியிருக்கும் தெருக்களிலும் கிராம தலையாரி மூலமாக மேற்கண்ட இந்த தீர்மானத்தின் விவரங்களை தண்டோரா போட்டு அறிவிக்க வேண்டும் என்றும், மாகாண அரசின் செய்தித் தாள்களிலும், மாவட்ட செய்தித் தாள்களிலும், அந்தந்த வட்டார மொழிகளிலும் இந்தத் தீர்மானத்தின் விவரங்களை அச்சிட்டு வெளியிட வேண்டும் என்றும் சட்டமன்றக் குழு அரசாங்கத் திற்கு சிபாரிசு செய்கிறது.

(அ) தாழ்த்தப்பட்டவர்கள் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்கள் அக்ரகாரத் தெருக்களிலும், ஜாதி இந்துக்கள் குடி இருக்கும் தெருக்களிலும் நடந்து போய் வருவதில் அரசுக்கு எந்த ஆட்சேபணையும் கிடையாது என்பதையும்,

(ஆ) கிணறு, குளம், பொது அலுவலகங்கள், வர்த்தகம் செய்யும் இடங்கள் போன்றவைகளிலும் மற்றும் எல்லா பொது இடங்களிலும், ஜாதி இந்துக் களுக்கு உள்ள உரிமைகள் தாழ்த்தப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் உண்டு.

தாழ்த்தப்பட்டவர்கள் பொதுக் குளத்தில் இறங்க மகத்தில் டாக்டர் அம்பேத்கர் போராட வேண்டி யிருந்தது. தமிழ்நாட்டிலோ நீதிக்கட்சி ஆணையே பிறப்பித்து விட்டதே.

----------------- கவிஞர் கலி. பூங்குன்றன் 5-5-2012 "விடுதலை”ஞாயிறுமலரில் எழுதிய கட்டுரை

5 comments:

தமிழ் ஓவியா said...

பார்ப்பனக் குறும்பைப் பாரீர்!


அம்பேத்கரைக் கேலி செய்து 11 ஆம் வகுப்புப் பாடம்!

சென்னை, மே 11: கேலிச் சித்திரக்காரர் சங்கர் 1960 இல் வெளியிட்ட கேலிச் சித்திரத்தை 11 ஆம் வகுப்பு பாட நூலில் எடுத்துப் போட்டு குறும்பு செய்துள்ளனர் பார்ப்பனர்கள்.

இந்தக் கேலிச் சித்திரம் பாபாசாகிப் அம்பேத்கர் அவர் களை இழிவு படுத்துவதாக இருப்பதால், இதனைப் பாட நூலில் இருந்து நீக்க வேண்டும் என்று கோரி விடுதலை சிறுத் தைகள் கட்சியினர் கீழ்ப் பாக்கம் கேந்திரிய வித்யாலயா முன் போராட்டம் நடத்தி மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் கபில்சிபிலின் உருவப் பொம்மையையும் எரித்தனர்.

இதற்காக காவல் துறை ஏழு விடுதலை சிறுத்தைகள் கட்சித் தொண்டர்களைக் கைது செய்துள்ளது. இந்திய அரசமைப்புச் சட்ட வரலாற்றைப் பற்றிய ஒரு பாடத்தில், இந்த கேலிச் சித் திரம் இடம் பெற்றுள்ளது.

அரசமைப்புச் சட்டம் இயற் றும் பணியை விரைவுபடுத்து மாறு கேட்டு, நத்தையின்மீது உட்கார்ந்திருக்கும் அம்பேத் கரை சாட்டையுடன் ஜவஹர் லால் நேரு துரத்துவது போன்ற கேலிச் சித்திரம் அது. நத்தை வேகத்தில் அரச மைப்பு சட்டம் இயற்றப் பட்டதாக இந்த கேலிச்சித்திரம் கேலி செய்துள்ளது.

அரசமைப்புச் சட்ட மன்றம் அமைக்கப்பட்டு, அரசமைப்பு வரைவுக் குழு ஒன்று பாபா சாகிப் அம்பேத்கர் தலைமை யில் நியமிக்கப்பட்டு, அக்குழு வரைவு அரசமைப்புச் சட் டத்தை சட்டமன்றத்தில் தாக் கல் செய்து அதனைப் பற்றி முழுமையாக சட்டமன்றம் விவாதித்து முடிவு செய்த பிறகு, அது 1950 ஜனவரி 26 முதல் நடைமுறைக்கு வந்தது. அரசமைப்புச் சட்டம் வரைவதில் ஆன தாமதத்திற்கு, அரசமைப்புச் சட்டத்தின் தந்தை என்று புகழப் படும் அம் பேத்கரே காரணம் என்பது போல இந்த கேலிச் சித்திரம் காட்டுகிறது.

அது மட்டுமல்ல. 1950 இல் நடைமுறைக்கு வந்து விட்ட அரசமைப்பு சட்டத்தைப் பற்றி 1960 களில் சங்கர் கேலிச் சித் திரம் வரைந்ததின் நோக்க மென்ன? அதன் பின் 50 ஆண்டு கள் கழித்து அந்தக் கேலிச் சித்திரத்தை மாணவர்களின் பாடநூலில் வெளியிட்டதன் நோக்கம் என்ன? பார்ப்பனக் குறும்பு அல்லாமல் இது வேறு என்னவாம்?

அரசமைப்பு சட்ட வரைவுக் குழுவிற்கு பாபாசாகிப் அம் பேத்கரைத் தலைவராக நியமித் ததே அக்குழுவில் உறுப்பினர் களாக இடம் பெற்றிருந்த பார்ப்பனர்களுக்கு மகா வயிற் றெரிச்சலாக இருந்தது. தம்மில் யாராவது அந்த தலைமையிடத் தில் நியமிக்கப்பட்டிருந்தால், வசதியாக அரசமைப்புச் சட் டத்தையே மனுதர்ம சாஸ்திரத் தின் அடிப்படையில் எழுதி விட்டிருக்கலாமே என்ற அங்கலாய்ப்பு அவர்களுக்கு.

பார்ப்பனர்களிடம் இந்தப் பணியை விட்டால் என்ன நடக்கும் என்பதை நன்கு அறிந் திருந்த பண்டித ஜவஹர்லால் நேரு, அம்பேத்கர் போன்ற தாழ்த்தப்பட்ட ஒருவரின் கண்ணோட்டத்தில் அரசமைப் புச் சட்டம் இயற்றப்படுவது தான் நியாயமானதாக இருக்கும் என்றும், இந்தப் பணிக்கு அம் பேத்கரே பொருத்தமானவர் என்றும் முடிவு செய்தார்.

அரசமைப்புச் சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு 60 ஆண்டுகளுக்கு மேல் சிறப்பாக செயல்பட்டு வரும் நேரத்தில், சம்பந்தமே இல்லாமல் ஒரு கேலிச் சித்திரக்காரர் வரைந்த கேலிச் சித்திரத்தை பள்ளி மாணவர்களின் வரலாற்றுப் பாடநூலில் வெளியிடுவது மிகவும் குறும்புத்தனமான செய லாகும். அதனை உடனே பாட நூலிலிருந்து நீக்க வேண்டும் என்பதை நாம் வலியுறுத்து கிறோம்.

இதனைச் செய்ய மறுப்பதோ, தயங்குவதோ, அது வேண்டுமென்றே வெளியிடப் பட்டது என்பதை உண்மை யாக ஆக்கிவிடும் என்பதை சம்பந்தப்பட்டவர்கள் உணரவேண்டும். 11-5-2012

தமிழ் ஓவியா said...

மரபு மீறப்படுகிறதா?


நேற்றைய தினமணியின் முதல் பக்கத்தில் குடியரசுத் தலைவர் தேர்தல் பற்றி விலாவாரியாக வார இதழ்போல படங்கள் எல்லாம் போட்டு விளாசித் தள்ளியுள்ளார் அதன் ஆசிரியர்.

கடந்த கால நிகழ்வுகளையெல்லாம் மலரும் நினைவுகளாக வெளியிட்டு இருக்கிறார்.

குடியரசுத் தலைவராக வட இந்தியாவைச் சேர்ந்த ஒருவர் இருந்தால் துணைக் குடியரசுத் தலைவராக தென்னிந்தியர் இருக்க வேண்டும்; தென்னிந் தியாவைச் சேர்ந்தவர் குடியரசுத் தலைவராக இருந்தால் வட இந்தியாவைச் சேர்ந்தவர் குடியரசு துணைத் தலைவராக இருக்க வேண்டாமா? இதற்கு தி.மு.க. தலைவர் கலைஞர்தானே முயற்சி செய்திருக்க வேண்டும்?

கலைஞர் நினைத்திருந்தால் பேராசிரியர் க.அன்பழகனையோ, விடுதலை கி.வீரமணியையோ கூட குடியரசுத் துணைத் தலைவர் பதவிக்குப் பரிந்துரைத்து இருக்கலாமே என்று நீட்டி முழக்கி எழுது கோல் பிடித்திருக்கிறது தினமணி.

ஊராட்சி மன்ற உறுப்பினர் பதவிக்குக் கூடப் போட்டியிடாத அமைப்பு திராவிடர் கழகம் என்று உலகத்திற்கே தெரியும். அப்படி இருக்கும் பொழுது திராவிடர் கழகத்தின் தலைவரைக் குடியரசுத் துணைத் தலைவர் பதவிக்கு கலைஞர் பரிந்துரை செய் திருக்கலாம் என்று எழுதுவது என்பது அசல் பார்ப் பனக் குசும்பும், குறும்புமாகும். விஷமத்தனமும்கூட!

திராவிடர் கழகத்திற்கு ஆற்ற வேண்டிய எவ்வளவோ சமூகப் புரட்சிப் பணிகள் இருக்கின்றன. இரண்டு முறை சென்னை மாகாணத்தின் பிரதமராக பதவி ஏற்கவேண்டும் என்று ஆங்கிலேய ஆளுநர்கள் கேட்டுக் கொண்ட போதும் கூட முகவரி தெரியாமல் இங்கு வந்து விட்டீர்கள்; மாகாண பிரதமர் பதவிக்கு எத்தனையோ பேர் தவம் இருக்கிறார்கள். அங்கே செல்லுங்கள்; அதே நேரத்தில் இந்தச் சமூகப் பணிக்கு என்னை விட்டால் வேறு நாதியில்லை என்று சொன்ன உண்மையான புரட்சித் தலைவரான தந்தை பெரியாரின் தலைமைச் சீடர்தான் மானமிகு கி.வீரமணி அவர்கள்.

விளையாட்டாகவோ, வினையாகவோ அவரின் பெயரை இப்படிப் பயன்படுத்துவது கண்டிக்கத் தக்கதாகும். தி.மு.க. வடக்கு - தெற்கு பேசினால் பிரிவினை வாதம் என்று பேசிக் கொண்டிருந்த தினமணி வகையறாக்கள் இப்பொழுது வடக்கு - தெற்கு பேச ஆரம்பித்துவிட்டனவே - இது என்ன வாதமாம்?

வடக்கு - தெற்கு என்பதை விட குடியரசுத் தலைவராக ஒரு தாழ்த்தப்பட்டவர் வரவேண்டும் என்று குரல் கொடுத்தது திராவிடர் கழகம். குஜராத்தில் நடைபெற்ற அரசு பயங்கரவாதத்தை அடக்கிட இராணுவத்தை அனுப்பி ஒடுக்க வேண்டும் என்று பிரதமர் வாஜ்பேயியை குடியரசுத் தலைவர் என்ற முறையில் கே.ஆர். நாராயணன் அவர்கள் அறிவுறுத்தியும் அதற்கு செவி மடுக்கவில்லையே - அது பற்றியெல்லாம் என்றைக்காவது தினமணிகள் எழுதியதுண்டா? விமர்சித்ததுண்டா?

பிரதமராக ஒரு தாழ்த்தப்பட்டவர் வரவேண்டும் என்று சொன்னால் இதே தினமணிகள் எப்படி எடுத்துக் கொள்ளும்? பிரதமர் பதவியையெல்லாம் இந்தக் கண்ணோட்டத்தில் பார்க்கலாமா என்று இதோபதேசம் செய்யும்.

குடியரசுத் தலைவர் பதவி என்பது - அதிகாரமற்றது. பிரதமர் பதவி என்பது வலிமை வாய்ந்தது என்பதால் அவர்களின் எழுதுகோல்கள் சந்தர்ப்பச் சதிராட்டங்கள் போடும்.

தாழ்த்தப்பட்ட ஒருவர் இந்தியாவில் பிரதமராக வர இன்னும் நூறாண்டுகள் பிடிக்கும் என்றாரே - அரசியலில், பொது வாழ்வில் மூத்த தலைவரான - தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த பாபு ஜகஜீவன்ராம்! - அதன் பொருள் என்ன என்று தினமணிக்குத் தெரியுமா, தெரியாதா?

இந்தியாவின் முக்கிய பொறுப்புகளுக்கு யார் வரவேண்டும் என்பதை வடக்கு - தெற்கு என்று பார்ப்பதை விட சமூக நீதிப் பார்வையில் பார்ப்பதுதான் பொருத்தமானதும் - சரியானதுமாகும்.

ஒரே நேரத்தில் குடியரசுத் தலைவரும், குடியரசு துணைத் தலைவரும் பார்ப்பனர்களாக இருந்தார்களே - அப்பொழுது அது குறித்து ஒரு வரி எழுதி இருக்குமா பார்ப்பன ஊடகங்கள்?

எதையாவது சொல்லி கலைஞர் மீது சேற்றை வாரி இறைக்க வேண்டும் என்பதுதான் இதற்குள் இருக்கும் இரகசியம்! 11-5-2012

தமிழ் ஓவியா said...

கட்டுப்பாடுகளை ஊடகங்களால் நிராகரிக்க முடியாது


மார்க்கண்டேய கட்ஜூ

கடந்த வாரத்தில் நாடாளுமன்றத்தில் மீனாட்சி நடராஜனால் அறிமுகப்படுத் தப்பட இருந்த ஊடகக் கட்டுப்பாடு பற்றிய தனியார் மசோதா வரைவினை நான் படிக்கவில்லை என்பதால் அது பற்றிய எனது கருத்தைத் தெரிவிக்க இயலாத வனாக நான் உள்ளேன். என்றாலும் அச்சு மற்றும் மின்னியல் ஊடகங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வேண்டும் என்ற கருத்தை நிச்சயமாக நான் கொண்டிருக்கிறேன்.

ஊடகங்கள் ஒழுங்குபடுத்தப்பட வேண்டும் என்று நான் விரும்புகிறேனே அன்றி, கட்டுப்பாடு விதிக்கப்பட வேண்டும் என்று விரும்பவில்லை. இந்த இரண்டுக்கும் இடையே வேறுபாடு உள்ளது; கட்டுப்பாட்டில் சுதந்திரம் இருக்காது; ஆனால் ஒழுங்குபடுத்து வதில், பொது நலன் கருதி விதிக்கப்படும் சில நியாயமான கட்டுப்பாடுகள் கொண்ட சுதந்திரம் இருக்கும். இந்தியா வில் ஊடகம் ஆற்றல் மிக்கதாக ஆகி விட்டது. அதனால் மக்களின் வாழ்க் கையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்த அதனால் இயலும். எனவே பொது நலனுக்காக அது ஒழுங்குபடுத்த ப்படவேண்டும்.

பேச்சு மற்றும் கருத்தை வெளியிடும் சுதந்திரத்தை அளிக்கும் அரசமைப்புச் சட்ட 19 (1) (அ) பிரிவைப் பற்றி ஊடகத் தினர் பெரிதாகக் கூப்பாடு போட்டுக் கொண்டிருக்கின்றனர்; ஆனால் இந்தியாவின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாடு, நாட்டின் பாதுகாப்பு, பொது அமைதி, பண்பாடு, ஒழுக்கம், மானஇழப்பு அல்லது ஒரு குற்றம் புரியத் தூண்டுதல் போன்றவற்றைக் கருத்தில் கொண்டு சில நியாயமான வரையறைகளுக்கு உட்பட்டதுதான் இந்தப் பேச்சு சுதந்திரம் என்பதை வலியுறுத்தும் அரசமைப்புச் சட்ட 19 (2) பிரிவைப் பற்றி அவர்கள் வாய் திறப்பதேயில்லை. பேச்சு சுதந்திரம் கருத்து வெளியிடும் சுதந்திரம் நிலையானது அல்ல

இவ்வாறு ஊடகங்களுக்கு சுதந்திரம் இருக்க வேண்டும் என்று கூறும் அதே நேரத்தில், அதன் மீது கட்டுப்பாடு இருக்கக்கூடாது என்றும், நாட்டின் பாதுகாப்பை, பொது அமைதி, ஒழுக்கம் போன்றவற்றை பாதிக்காத வகையில் இந்தச் சுதந்திரம் பயன்படுத்தப் பட வேண்டும் என்றும் கூறவேண்டும். எந்த ஒரு உரிமையும் முழுமையானதாக இருக்க முடியாது. ஒவ்வொரு உரிமையும், பொதுநலனுக்குத் தேவையான சில நியாயமான வரையறைகளுக்கு உட்பட்டதுதான். இதன் காரணமே மனிதர்கள் சமூகப் பிராணிகள் என்பது தான்.

ஒரு சமூகத்தில் இல்லாமல், எவர் ஒருவராலும் தனித்து வாழ்ந்துவிட முடி யாது. எனவே, மற்றவர்களுக்கோ சமூகத் துக்கோ ஆபத்து விளைவிக்கும் வகையில் அந்த சுதந்திரத்தைப் பயன்படுத்தக் கூடாது. இல்லாவிட்டால் பிழைத்திருப் பதே கடினமான செயலாக ஆகி விடும்.

தமிழ் ஓவியா said...

சுயகட்டுப்பாடு பற்றி ஊடகத்தினர் அவ்வப்போது பேசுகின்றனர். ஆனால் ஊடக நிறுவனங்கள் லாபத்தையே குறிக்கோளாகக் கொண்ட வியாபாரி களின் உடைமைகளாக உள்ளன. லாபம் ஈட்டுவதில் எந்தத் தவறும் இல்லை. ஆனால் அவ்வாறு லாபம் ஈட்டுவது என்பது சமூகப் பொறுப்புகளுடன் இணைந்ததாக இருக்க வேண்டும். சமூகத்தின் மற்ற பிரிவு துன்பம் அடைந்து கொண்டிருந்தாலும், லாபம் ஈட்ட தாங்கள் அனுமதிக்கப்பட வேண்டும் என்று ஊடக முதலாளிகள் கூறமுடியாது.

அத்தகைய ஒரு அணுகு முறை தன்னைத் தானே அழித்துக் கொள்வதற்கு ஒப்பாகும்; இப்போது தங்களை அவர்கள் சரி செய்து கொள்ளவில்லை என்றால் நீண்ட காலத்திற்குப் பின் அவர்கள் துன்புறவே நேரும். பெரும்பாலான ஊடகங்கள் பொறுப்பற்ற முறையிலும், விளைவுகளைப் பற்றி கவலைப்படாமலும், மற்றவர்களின் உணர்வுகளைப் புரிந்து கொள்ளாமலும் நடந்து கொள்கின்றன. மக்களிடையே பரவிக் கிடக்கும் வறுமை, வேலையில்லாத் திண்டாட்டம், ஊட்டச் சத்துணவு இன்மை, விவசாயிகளின் தற்கொலை, உடல் நலம் பேணுதல், வரதட்சணை சாவுகள், பெண்கரு அழிப்பு ஆகிய வற்றைப் பற்றி அலட்சியப்படுத்துவது அல்லது அதிகமாகக் கவலைப்படாமல் இருப்பது என்ற முறையிலும், ஆபாச மஞ்சள் செய்திகள், மலிவான உணர்வு களைத் தூண்டும் செய்திகள், திரைப்பட நட்சத்திரங்களின் மற்றும், கிரிக்கெட் வீரர்களின் வாழ்க்கை போன்ற சில்லறைச் செய்திகளைப் பெரியதாக வெளியிடுவது, மூடநம்பிக்கைகளை வளர்ப்பது, மக்களுக்கும் அவர்களின் நற்பெயருக்கும் இழுக்கைத் தேடித் தரும் செய்திகளை வெளியிடுவதே ஊடகங்களின் இன்றைய அடையாளங்களாக ஆகிவிட்டன. சோதிடம், கிரிக்கெட் (இந்திய மக்களின் அபின்), பொதுமக்களை பாபாக்கள் ஏமாற்றி முட்டாள்களாக்குவது என்பது போன்ற செய்திகள் மற்றும் தொலைக் காட்சி நிகழ்ச்சிகள் சர்வசாதாரண மானவைகளாக ஆகிவிட்டன.

கட்டணம் செலுத்தி செய்தியிதழ்களி லும், தொலைக்காட்சிகளிலும் செய்தி வெளியிடுவது இன்றைய நடைமுறையாக ஆகிவிட்டது. தங்களின் பத்திரிகை செய்தியாளர்களின் கூட்டத்திற்கு வரும் செய்தியாளர்களுக்குப் பணம் தருவது, கூட்டத்திற்கு வராதவர்களுக்கும் செய்தியை வெளியிடுவதற்காக பணம் தருவது என்ற அளவுக்கு சில அரசியல் வாதிகள் மோசமானவர்களாக உள்ளனர் என்று ஒரு மூத்த அரசியல் தலைவர் என்னிடம் கூறினார்.

அண்மைக்கால பாபா (இந்நாட்களில் தொலைக்காட்சி களில் ஆதிக்கம் செலுத்தும்) அவரது கூட்டங்களைத் தொலைக் காட்சியில் காட்டுவதற்கு ஒரு பெரும் தொகையை அளிக்கிறார் என்று ஒரு தொலைக் காட்சி உரிமையாளர் என்னிடம் கூறினார். பல பத்திரிகை செய்தியாளர்களும் கையூட்டு அளிக்கப்பட இயன்றவர்களே என்றும், அதன் மூலம் தாங்கள் விரும்பும் செய்தி களை வெளியிடச் செய்யவும் இயல்கிறது என்றும் மது கிஷ்வார் என்ற மூத்த பெண் பத்திரிகையாளர் ஒருவர் மாநிலங்களவை யில் கூறினார். 11-5-2012

தமிழ் ஓவியா said...

ஒரு சந்தேகம்!


பையன்: புரோகிதரே, ஒரு சந்தேகம்?

புரோகிதன்: என்ன?

பையன்: இறந்து போனவர்களுக்கு ஏதாவது கொடுக்க வேண்டுமென்றால், அதை உம்மிடம்தான் கொடுக்க வேண்டுமா?
புரோகிதன்: ஆமாம்!

பையன்: அப்படீன்னா, இறந்து போனவர்கள் தர வேண்டியதையும் உம்மிடமே வசூலிக்கலாமா?
புரோகிதன்: ? ? ?


- கலைச்செல்வி, அறந்தாங்கி 11-5-2011