Search This Blog

14.5.12

கடவுளும்,அரசனும், ஜனநாயகமும், சர்வதிகாரமும்

மக்கள் மடையர்களாக, மூடநம்பிக்கைக்காரர்களாக, சிந்தனா சக்தி இல்லாதவர்களாக உள்ளவரைதான் கடவுளுக்கும் அரசனுக்கும் மதிப்பு இருக்க முடியும்; அவர்களிடத்தில் மக்களுக்கு பயம் இருக்க முடியும்.

ஏனெனில் இவர்களுக்கு இயற்கையான சக்தி கிடையாது. இவர்களது ``சக்தி'' செயற்கைச் சக்திதான். அதாவது புருஷனுக்கு பெண்டாட்டி பயப்படுவதுபோல ஒரு கட்டுப்பாட்டினால் தேவையைப் பொறுத்து ஏற்படும், ஏற்படுத்திக் கொள்ளும் சக்திதான். உதாரணமாக கடவுள் பயம் மக்களுக்கு நாளுக்கு நாள் குறைந்து வந்து இன்று சம்பிரதாயத்துக்காக அல்லாமல் மற்றபடி எவருக்குமே இன்று கடவுள் பயமோ - நம்பிக்கையோ அடியோடு இல்லாமல் போய்விட்டதுடன் இன்று மடையர்களிடமும் அயோக்கியர்களிடமுமே தேவையைப் பொறுத்து இருந்து வருவதையே பார்க்கிறோம். அதாவது ஒரு பூசாரிக்கு அர்ச்சகனுக்கு இருந்து வருகிற நம்பிக்கைப்படி.

அதுபோலவேதான் - அரசன் நிலைமையும் இன்று அடியோடு மறைந்துவிட்டது. உலகில் இன்று எங்குமே உண்மையான அரசன் இல்லை; உலகில் எங்குமே இன்று அரசனை மதிக்கும் மக்களும் இல்லை.

அரசர்களை ஒழிப்பதற்கென்று பல நாளாக கிளர்ச்சிகள் குடிமக்களாலேயே செய்யப்பட்டு சில அரசரைக் கொன்றும் சிலரை விரட்டியும் விட்டு அரசனல்லாத ஆட்சியையே உலகில் பெரும் பாகத்தில் மக்கள் ஏற்படுத்திவிட்டார்கள் என்றாலும் அதாவது அரசன் ஒழிக்கப்பட்டு விட்டான் என்றாலும் அரசன் செய்து வந்ததுபோல் மக்களை அடக்கி ஆளும் ஆட்சி என்பதாக ஒன்று இன்று மக்களுக்கு அவசியம் வேண்டியதாகவே இருக்கிறது.

இப்படி தேவையிருக்கும் ஒரு ஆட்சிக்கு ``அரசன் என்பதாக ஒருவன் தேவை இல்லை. மக்களாகிய நாமே ஆட்சித் தலைவனாக இருந்து கொண்டு ஆட்சி நடத்திக் கொள்ளலாம்'' என்று மக்கள் கருதியது அல்லது யாரோ சிலர் கருதியது என்பது மாபெரும் முட்டாள்தனம் அல்லது அயோக்கியத்தனமேயாகும். இதன் பயன் என்னமாய் முடியுமென்றால் மக்களுக்கு ஏற்கெனவே இருந்து வரும் கெட்ட குணங்கள், கூடாத குணங்கள் என்று சொல்லப்படுபவையான பொய், புரட்டு, பித்தலாட்டம், ஏமாற்றுதல் வஞ்சித்தல், கொலை, கொள்ளை, பலாத்காரகாலித்தனம், அமைதி இன்மை, குழப்பம் முதலிய சமுதாய வாழ்வுக்குக் கூடாததான காரியங்கள் நடைபெறவும், நாளுக்குநாள் மக்கள் இவற்றில் ஈடுபடவுமான மக்களின் சமூக வாழ்வுமுறை கெடவுமான நிலை ஏற்பட்டுத் தாண்டவமாடுவதுதான் விளைவாக இருக்கும், இருந்தும் வருகிறது.

சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால் கடவுள் நம்பிக்கை எவ்வளவு முட்டாள் தனமானதோ அவ்வளவு முட்டாள்தனமான கருத்தும் காரியமுமேயாகும் ஜனநாயகம் என்பதும், ஆனால், சில அயோக்கியர்களுக்கும், கீழ்த்தர மக்களுக்கும் இதில் பயன், சுயநலம் இருப்பதாக இவர்களால் எளிதில் மக்களை ஏமாற்றிப் பயன்பெற முடிகிறது.

இன்று உலகில் எந்த நாட்டில் ஜனநாயகம் ஒழுங்காக யோக்கியமாக நடைபெறுகிறது என்று சொல்ல முடியும்?

அரசன் நாயகன், அரசன் ஆட்சி என்று சொல்லப்படுவதற்கு சக்தி இருப்பதற்குக் காரணம்,

1. அரசன் என்கின்ற மதிப்பு

2. அரசன் நடுநிலை உள்ளவன் என்கின்ற நம்பிக்கை

3. அரசனது அதிகார பலம், இவற்றோடு

4. பரம்பரையாக யார் தயவுமில்லாமல் பதவிக்கு வரும் இயற்கை உரிமை.

இந்த காரணங்களால் அரசனது ஆட்சியை குடிகள் யாரும் எதிர்க்கவும் குறை கூறவும் முடியாமல் இருக்க முடிந்தது.

ஜனநாயக ஆட்சியாளருக்கு இவ்வித தகுதி ஏதாவது உண்டோ? மக்களுக்காவது இதற்கேற்ற பண்பாடு ஏதாவது உண்டோ?

கடவுளுக்கு சோறு போட்டு கல்யாணம் செய்து வைத்து கடவுள் பெண்டாட்டியின் தலையையும், சேலையையும் திருட்டுக் கொடுத்துவிட்டு வந்த ஒருவன் மற்றவனைப் பார்த்து, ``அடே, கடவுள் கெடுத்து விடுவாரடா'' என்று சொல்லி மிரட்டுகிறதைப் போல்தானே இருக்கிறது நமது ஜனநாயக அமைப்பு!

1. காசு கொடுத்து ஓட்டுப் பெறுகிறான்.

2. காசு பெற்றுக் கொண்டு ஓட்டுப் போடுகிறான்.

3. பொய்யும் புரட்டும் கூறி மக்களை ஏமாற்றி ஓட்டுப் பெறுகிறான்.

4. ஓட்டின் பலன் என்ன, அதை எப்படி, எதற்கு பயன்படுத்துவது என்ற அறிவே இல்லாமல் ஓட்டுப் போடுகிறான்.

இவ்வளவுதானா?

ஜாதிப் பெயர் சொல்லி ஓட்டுக் கேட்கிறான்; (தன்) ஜாதியான் என்பதற்காக ஓட்டுப் போடுகிறான். இவை ஜனநாயக பிரதிநிதித்துவ நிலைமை என்றால் நாட்டின் நிலைமையோ மக்கள் ஒருவனை ஒருவன் தொட முடியாத நான்கு ஜாதி, ஒருவருக்கொருவர் உண்ணல் கொடுக்கல் வாங்கல் இல்லாத 400 உள்பிரிவு, ஒருவருக்கொருவர் வெறுப்புக் கொண்ட பல மதம், கடவுள்கள், பல வேதங்கள், பல தர்மங்கள், இவற்றுள் பல ஜாதித் தொழில்கள், அவற்றின் படி ஒருவரை ஒருவர் அடக்கி ஆள பல இலட்சியங்கள், சூழ்ச்சிகள் இவை மாத்திரமேயல்லாமல் பெரிதும் கொள்கையே இல்லாத பல பதவி வேட்டைக் கட்சிகள்; இவற்றிற்கு ஏற்ற பத்திரிகைகள்; சாக்கடை கழுவுகிறவன் முதல் அய்க்கோர்ட் ஜட்ஜ், சீப் செகரட்டரி வரை ஜாதி உணர்ச்சி, ஜாதி அகம்பாவம், மற்ற ஜாதியை ஆள வேண்டுமென்கிற உணர்ச்சியை மூச்சாகக் கொண்ட சிப்பந்திகள், பதவியாளர்கள், பதவியையும் சம்பளத்தையும் வருவாயையுமே முக்கிய இலட்சியமாகக் கொண்ட மந்திரிகள், பிரசிடென்ட்கள், சட்டசபை, பார்லிமென்ட் மெம்பர்கள்.

இந்த நிலையில் ஜனநாயகம் என்றால் இதற்குப் பொருள் கடவுள் என்பதற்கு உண்டான பொருள் அல்லாமல் ஜனநாயகத்தை நம்புகிறவர்கள் கடவுளை நம்புவது போன்றவர்கள் என்பது அல்லாமல் வேறு என்ன? ஆகவே ஜனநாயகம் ஒழிந்து கொடுமையான சர்வாதிகாரம் ஏற்பட்டாலும் குடிமக்களுக்கு ஒருவனுடைய தொல்லைதான், ஒருவனுடைய நலத்திற்கு ஏற்ற கேடுதான் இருக்கலாமே ஒழிய ஜனநாயகப்படியான முள்ளுப் பீப்பாயில் போட்டு உருட்டுவது போன்ற தொல்லைகள் குடிமக்களுக்கு இருக்க முடியாது.

----------------- தந்தை பெரியார் அவர்கள் எழுதிய தலையங்கம்-"விடுதலை", 3.11.1968

2 comments:

தமிழ் ஓவியா said...

ஜெயேந்திரருக்கு கடை குட்டித் தம்பியா செத்துப் போன சந்திரசேகரேந்திர சரஸ்வதி?


திராவிடர் கழகத் தலைவர் வீரமணி: ஜார்க்கண்ட் ராஜ்ய சபா எம்.பி. வேட்பாளராக, முக்கிய பார்லிமென்ட்வாதிகளில் ஒருவரான அலுவாலியாவை தேர்வு செய்யாமல், ஒரு பண முதலையை பா.ஜ., வேட்பாளராக அறிவிக்க வில்லையா? மறுபடியும் அலுவாலியா அறிவிக்கப் பட்டு, தோற்கடிக்கப்பட்டாரே! இதற்கு பெயர் ஊழல் இல்லையா?

டவுட் தனபாலு: அது உண்மைன்னே வச்சுக்கிட்டாலும், ஜனாதிபதி தேர்தல்ல, அதிகாரப்பூர்வ காங்கிரஸ் வேட்பாளரைத் தோற்கடிச்சு, சுயேச்சை வேட்பாளர் வி.வி. கிரியை ஜனாதிபதியாக்கின முன்னுதாரணமும், உங்க இளவல் ஆதரிக்கிற காங்கிரசுக்குத் தானே இருக்கு...!

- தினமலர் 13.5.2012

பட்டுக்கோட்டைக்கு வழி கேட்டால் கொட்டைப் பாக்குக் கிலோ நூறு ரூபாய் என்று செவிடன் போல பதில் சொல்லுகிறது தினமலர் எனும் திரிநூல் ஏடு! பா.ஜ.க. செய்தது -ஊழலா இல்லையா என்பதற்கு என்ன பதில்?

பா.ஜ.க.வுக்காக, வரிந்து கட்டிக் கொண்டு தினமலர் ஆடுவது ஏனோ!

தி.மு.க.வுக்கு என்று குடியரசு தலைவர் தேர்தலில் அதிகாரபூர்வ வேட்பாளர் எங்கிருந்து வந்தது? எப்படி வர முடியும்? திமுக என்ன அகில இந்திய கட்சியா? கி.வீரமணி அவர்களுக்குக் கலைஞர் இளவலா? ஜெயேந்திர சரஸ்வதிக்கு கடைக் குட்டித் தம்பியா செத்துப்போன சங்கராச்சாரி யார் சந்திரசேகரேந்திர சரஸ்வதி? 14-5-2012

தமிழ் ஓவியா said...

மதுரை பி.ஜே.பி. மாநாடு


மதுரையில் பி.ஜே.பி.யின் மாநாடு ஒன்று நடைபெற்று இருக்கிறது. வாகனங்களை ஏற்பாடு செய்து கொடுத்து, வருகின்றவர் களுக்கு வழிச் செலவு என்ற பெயரில் கணிச மான அளவுக்குத் தொகையும் கொடுத்து, மூன்று வேளை தடபுடல் விருந்துக்கும் ஏற்பாடு செய்து கூட்டப்பட்ட கூட்டம் என்பது - மிக வெளிப்படையாகச் சந்தைக்கு வந்த செய்தி யாகும்.

மாநாட்டில் அப்படி என்ன புதுமை அறிவிப்பு என்றால், ஏடுகளே குறிப்பிட்டுச் சொல்லும் படியாக எதுவும் இல்லை.

அத்வானிதான் மாநாட்டின் முக்கிய தலைவர். பழைய கதைகளை ஒப்புவித்து இருக்கிறார். தன்னம்பிக்கை இல்லாத மாநாடாக நடந்து முடிந்திருக்கிறது.

காங்கிரசை எதிர்த்து அகில இந்திய அளவில் ஜனதா அரசு அமைக்கப்பட்டது பற்றி நினை வூட்டியுள்ளார். அதனை அவர் நினைவூட்டாமல் இருந்தால், கொஞ்சம் மரியாதையாவது மிச்சப்பட்டு இருக்கும்.

ஜனதா கட்சி வெற்றி பெற்று மத்தியில் மொரார்ஜி தேசாய் தலைமையில் ஆட்சி அமைந்த நிலையில், ஜனசங்கத்தைக் கலைத்துவிட்டு, ஜனதாவில் கரைய வேண்டிய இவர்கள் ஆர்.எஸ்.எஸ்.லும் உறுப்பினர்கள் என்பதைத் தொடர்ந்தனர். இத்தகைய இரட்டை உறுப்பினர் என்கிற இரட்டை நாக்கு அரசியல் கூடாது என்று பிரபல சோஷலிஸ்டான மதுலிமாயி பிரச்சினையைக் கிளப்ப, எந்தக் காரணத்தை முன்னிட்டும் ஆர்.எஸ்.எஸ். தொடர்பை விட்டுக் கொடுக்க முடியாது; இந்துத்துவா என்ற எண்ணத்திலிருந்து விடுபட முடியாது என்று கூறியதால், அவர்கள் மறு படியும் ஜனசங்கத்துக்கே ஓட வேண்டியதாயிற்று. அப்படி உண்டான மறு அவதாரம்தான் இன்றைய பாரதிய ஜனதா கட்சி.

சுருக்கென்று குறிப்பிட வேண்டுமேயானால், இந்து வெறித்தனம் - பார்ப்பனிய வருணா சிரமம் என்ற கட்டிலிருந்து விடுபட முடியாதவர்கள் இவர்கள். இந்தியாவின் மதச் சார்பின்மையை ஏற்றுக் கொள்ளாத நிலையில், இந்திய அரசமைப்புக்குள் அவர்கள் அரசியலில் உயிரை வைத்துக் கொள்வது என்பதே முடியாத ஒன்றாகும். மதச்சார்பின்மை கொள்கைப்படி நடப்பதாக இந்திய அரசமைப்பு சட்டத்திற்கு பொய்யாகச் சத்தியம் செய்வது எந்த வகையில் ஆரோக்கியமானது? இவ்வளவுக்கும் தார்மீக நெறியைப் பற்றி உரக்கக் கத்துபவர்களின் யோக்கியதை இந்தத் தரத்தில்தான் உள்ளது.

தமிழ்நாடு, மற்றும் இந்திய அளவில் ஆட்சியை பிடிக்கப் போகிறார்களாம்.

நடந்து முடிந்த சட்டப் பேரவைத் தேர்தலில், கட்டிய பணத்தை பி.ஜே.பி. வேட்பாளர் எவரும் திரும்பிப் பெற முடியாத பரிதாப நிலை!

இந்த நிலையில் தமிழ்நாட்டில் அரசியலை, ஆட்சியைப் பிடிக்கப் போகிறார்களாம். தென் மாநிலத்தில் பிடித்த கருநாடக ஆட்சியே கும்பி நாற்றம் எடுக்க ஆரம்பித்துவிட்டது. தென் மாநிலத்தில், கையில் கிடைத்ததையும் இழக்கப் போகிறார்கள்.

மீதி வடமாநிலங்களிலும் பி.ஜே.பி.க்குள் குத்து வெட்டு களேபரமாக நடந்து கொண்டிருக்கிறது. யார் பிரதமருக்கான வேட்பாளர் என்பதிலும் ஒரே குழப்பம்.

நரேந்திர மோடியை முன்னிறுத்த முயற்சிகள் நடந்தன். அண்மையில் வழக்குகள் பற்றி வெளிவந்துள்ள தகவல்கள் அவர் தேர்தலில் போட்டிபோட முடியுமா என்ற வினாவை எழுப்பியுள்ளது.

பாபர் மசூதி இடிப்பு தொடர்பான தீர்ப்பு வந்தால் அத்வானிகளே தேர்தலில் வேட்பு மனுவைத் தாக்கல் செய்ய முடியாது.

எல்லா வகையிலும் வீழ்ச்சி எனும் பள்ளத்தில் தாமரை விழுந்துவிட்டது. இந்தத் தன்மையில் சவால்கள் என்பதெல்லாம் வெத்து வேட்டுகள் தான்! 14-5-2012