அய்யா? ஐயா
மறுஆய்வும் மறுப்பும்
29.1.2012 நாளிட்ட தினமணி நாளேடு ஞாயிறு- தமிழ்மணி பகுதியில் புலவர் ப.அரங்கசாமி அய்யா அவர்கள் மொழியியல் இலக்கணம் தொடர்பான அரிய கட்டுரை ஒன்றினை எழுதியுள்ளார்.
தம் கருத்திற்கு ஏற்ப, சொல்லாடல் (வாதங்)களை எடுத்து வைத்திருக்கிறார். புலவர் அய்யாவின் ஆய்வுக் கருத்தினை மறுக்கும் வண்ணம் மறு ஆய்வுவகையில் எம் கருத்தினை எடுத்து வைக்க முன்வந்துள்ளோம்.
எதுவாக இருந்தால் என்ன?
'ஐ' - என்கிற வரிவடிவ உயிர் எழுத்துக்கு ஒலிப்பு அளவு 2 மாத்திரை.
'அய்' - என்கிற வரிவடிவ ஒலிப்பிற்கு ஒன்றரை மாத்திரை. இரண்டும் ஒன்றாகுமா? என்கிறார் புலவர் அய்யா.
உண்மை! மறுத்திட முடியாது!! நெடிலுக்கு மாத்திரை அளவு இழுத்தல் வேண்டும். ஐ என்னும் உயிர் நெடிலாகும். அய் என்பது ஒன்றரை மாத்திரை கொண்டது. அது எப்படி 2 மாத்திரை கொண்ட ஐக்கு நிகராதல் முடியும்? என்பது அவரின் கருத்து. நெடிலாக இல்லாவிட்டால் என்ன? ஐ ஒலிப்பும் அய் ஒலிப்பும் ஒன்றுதானே? இதனால், மொழிக்கு என்ன குறை?
எழுத்திலும் போலி இருக்கிறதே?
ஐக்குப் போலியாக அய் வரும் என்று நூற்பா செய்துள்ளார். அகரத்(து) இம்பர் யகரப் புள்ளியும் ஐ என நெடுஞ்சினை மெய்பெறத் தோன்றும் (தொல் - மொழிமரபு - 23) என்பது தொல்காப்பிய நூற்பா.
இந்நூற்பாவின்படி ஐக்குப் போலி அய் ஆகும். என எழுதுகிறார் புலவர் அவர்கள். ஐக்கு அய் மாற்றெழுத்து அன்று: போலிதான் என்கிறார் புலவர் அய்யா. போலி என்பது ஒன்றுபோல மற்றொன்று இருப்பதுதானே? ஐ என்பது நெடிலுயிர்; 2 மாத்திரை கொண்டது. அய் என்பது குறில்; அப்படி இருக்க, ஐக்குப் போலியாக அய் இருக்கும் என, தொல்காப்பியர் எப்படிச் சொன்னார்? ஏன் சொன்னார்? புலவர் அவர்கள்தான் விளக்க வேண்டும்!
இயல்புக்கு மாறானது இருக்காது:
அடுத்து, புலவர் அவர்கள் எழுதுகிறார்: அகர இகரம் ஐகாரம் ஆகும். (மொழிமரபு -_ நூற்பா 21)
இந்நூற்பாவின்படி ஐ வரும் இடங்களில் அஇ என்ற ஒலிப்பு வரவேண்டும்.
அய்யன் - அஇயன்;
வயிரம் -- வஇரம்; என்று எழுதுகிறோமா? இல்லையே? என்கிறார் புலவர். அப்படியானால அஇ சேர்ந்து ஐகாரம் என்ற கூட்டெழுத்து எனத் தொல்காப்பியர் ஏன் கூறவேண்டும்?
இயல்புக்கு மாறாக மொழியோ எழுத்தோ இயங்குவது இயலாது. அதனால், அப்படி அந்த ஒலிப்போடு எழுதும் வழக்கம் இல்லாது போயிற்று. இயல்புக்கு மாறானது எதுவும் நில்லாது. வழக்காற்றில் இயங்காது என்பதுதானே இயல்பு?
எழுத்தின் இரு வடிவங்கள்
அடுத்து, ஐ _ எழுத்தானது (மொழியாக) சொல்லாக ஓரெழுத்து ஒரு மொழியாக நின்று, கடவுள், குரு, அரசன், கணவன், மேன்மை, தலைமை, அழகு, சிறப்பு, நுண்கை முதலான பொருள்தரும் - என எழுதுகிறார் புலவர். எழுத்துக்கு வடிவங்கள் 2.
1. ஒலி வடிவம் (ஒலிப்பது)
2. வரி வடிவம் (எழுதப்படுவது). எழுத்து என்றால், எழுதப்படுவது என்று மட்டும் பொருள் அன்று. எழுப்பப்படும் ஒலி என்று பொருள்.
முதலில் ஒலி வடிவம். பிறகுதான் வரிவடிவம். ஒலி வடிவம் மாறாது; வரிவடிவம்
மாறும். ஐ - என்பது அய் என்றுதானே ஒலிக்கிறது?
வேண்டாம், விட்டு விடுவோமா?
இந்த அய் என்பதற்கு மேற்கொண்ட பொருள்கள் பொருந்தாவா? அய் _ என்பது எப்பொருளையும் குறிக்காத வெற்று எழுத்து _ என்கிறார் புலவர். அது என்ன வெற்று எழுத்து? குற்றெழுத்து, நெட்டெழுத்து என்றுதானே உள்ளன? வெற்றெழுத்து என்று எதுவும் இல்லையே? அகர இகரம் ஐகாரம் _ என்று ஐ என்பது மேற்கண்ட ஈரெழுத்துகளின் கூட்டொலிதானே? கூட்டெழுத்துத்தானே?
பழையன கழிதலும்.. என்ற விதிப்படி அய் என்பது ஓரெழுத்து ஒரு மொழி என்று சொல்வதை வேண்டாம் என்று விட்டுவிடலாமே? அதனால் என்ன இழப்பு? என்ன கேடு? ஈரெழுத்தொரு மொழி என்று சொல்லிவிட்டால் போகிறது?
ஐயனும் அய்யனும்:
ஐ குறிக்கும் கணவன் என்ற பொருள் அய்-_க்கு இல்லை என்கிறார் புலவர்! ஏன் இல்லை? அய் என்று எழுதினால் மனைவி என்று பொருள் தந்துவிடுமா?
அய்யா, என்று ஐயா _ என்றும் வழங்கும் ஒலிவடிவம் பெறும் சொல்லுக்கு உரிய மேலானவரே என்ற பொருள் இல்லாமல் போய்விடுமா?
ஐயா - என்னும் வரிவடிவத்திற்குத்தான் அந்தப் பொருளா? ஒலிக்கும்போது வரிவடிவத்திற்கு இடமில்லையே? ஒலிப்புதானே முதன்மை? அவர் மேலும் எழுதுகிறார்: அய்யன் வள்ளுவன் என்றால் வள்ளுவருக்குப் பெருமை தராதாம்! ஐயன் என்றால்தான் பெருமையாம்!
சொல்லும்போது அதன் ஒலிவடிவமும் அதன் பொருளும்தானே முதன்மை? வரிவடிவமாகிய ஐ-என்ற எழுத்தைக் கொண்ட ஐயன் என்று பொருள் பிரித்துக் கூறிக்கொண்டிருக்க முடியுமா? முடியாதே! அது தேவைதானா? வேண்டாத வீண்வேலை!
ஏன் எழுதக் கூடாது?
தொல்காப்பியம் அய் என்பது ஐயின் போலி என்று கூறியதால் அதனை எல்லா இடங்களிலும் எழுதக் கூடாதாம் எழுதுகிறார் புலவர். ஏன் எழுதக் கூடாது? அய்யா, மழய் என்று எழுதினால் மொழி மரபு கெடுமாம். அது என்ன மொழி மரபு?
ஐ - என்பதற்குப் போலியாக அய் - என்று எழுதலாம் என்றுதானே தொல்காப்பியர் மொழி மரபியலில் நூற்பா எழுதினார். இந்தத் தொல்காப்பிய நூற்பாவை மட்டும் தூக்கி எறிந்து விடலாமா? மற்ற நூற்பாவை மட்டும் ஏற்க வேண்டுமா?
தொல்காப்பியரின் கருத்துப்படி!
அஇ - என்றும் எழுதக் கூடாது!
அய் - என்றும் எழுதக் கூடாது என்பது எந்த வகையில் முறைமை? நியாயம்? புலவர் அய்யா விளக்க வேண்டும்?
அய்யா! நமக்குப் போதும்!
ஐயா நமக்கு வேண்டாம்!
மழய் பொழியட்டும்!
மழை கழியட்டும்!
தெளிவு பிறக்குமே?
மொழி இறுதியில் ஐக்குப் பதில் அய் எனவரின் இலக்கண விதியில் வரும் குழப்பம் தீரும், தெளிவு பிறக்கும்.
எடுத்துக்காட்டு:
தந்தை என்ற சொல் விளியேற்கும்போது தந்தாய்! என இலக்கணத்தில் திரியும். இது எப்படி நிகழ்ந்தது? தந்தை என்பதில் ஐ_நீங்கியது. நீங்கி தந்தய் _ என அய் எழுத்துகள் சேர்ந்தன. விளிக்கும்போது ஆய் எனும் விகுதி சேர்ந்து தந்தாய் என நீண்டு ஒலித்தது.
தந்தை - தந்தய் என மாறி, தந்தாய் என விளிப்பெயரானது. ஏன் இந்த இரட்டைத் திரிபு? தந்தய் - என அய் - இறுதியில் இருந்தால் அது விளியில் ஆய் என நீண்டது என இலக்கணத் தெளிவும் எளிமையும் ஏற்பட்டுள்ளதே?
தந்தை என்ற சொல்லின் ஈற்றிலுள்ள ஐ என்ன ஆனது? எங்கே போனது? தந்தய் _தந்தாய் என வருவது இயல்பாக உள்ளதல்லவா? இதே போலத்தான் பின்வரும் சில சொற்களும் விளியி(அழைப்பி)ல் திரிபடைகின்றன.
தங்கை-> தங்கய் -> தங்காய்!
அன்னை -> அன்னய் -> அன்னாய்
கோதை -> கோதய் -> கோதாய்!
பாவை -> பாவய் -> பாவாய்.
கருத்து மயக்கம் களைய...
பின்வரும் தொடர்மொழியைப் படிப்போம். அவன் என்னையா சொன்னான்? பொருள்: 1. (என்னய் + ஆ) என்னையா சொன்னான்?
பொருள்: 2. (என்ன + அய்யா) என்ன அய்யா சொன்னான்?
மேற்கண்ட தொடர் கருத்து மயக்கத்திற்கு இடம் தருகிறதல்லவா? காரணம்? ஐதானே!
யாப்பிலக்கண அமைதிச் சிறப்பு
இல்லையென மாட்டார் இசைந்து என்னும் வெண்பாவின் ஈற்றடியை அலகிட்டு அசைபிரித்தால்,
இல்/லை/யென - என்று பிரித்து அலகிடும்போது, நேர் நேர் நிரை என்று ஆகி தேமாங்கனி - எனும் வாய்ப்பாட்டில் அமைகிறது.
வெண்பாவில் கனிச்சீர் வருதல் கூடாது என்பது வெண்பா இலக்கண விதி.
இப்பொழுது இப்படி எழுதி அலகிட்டும் பார்ப்போமா?
இல்லயென - இல்/லயெ/ன
நேர் நிரை நேர்
கூ விளங் காய்
வெண்பாவில் காய்ச்சீர் வரலாம். இது யாப்பிலக்கண விதி. மற்றொரு செய்யுள் யாப்பமைதி.
ஐயுணர் வெய்திய கண்ணும் பயமின்றே மெய்யுணர் வில்லா தவர்க்கு (குறள் -354)
இக்குறட்பாவில், ஐயுணர்வு - என்ற சீரின் எதுகை (இரண்டாம் எழுத்து) யு - வருகிறது. இரண்டாம் அடி முதற்சீரின் எதுகை. மெய்யுணர்வு - ய் வருகிறது. இது எதுகைத் தொடை இலக்கண விதிக்கு மாறானது.
அய்யுணர்வு _ மெய்யுணர்வு என்று சீர்களில் இரண்டடிகளிலும் முதற்சீர்களிலும் ய் எதுகை வந்து யாப்பிலக்கண விதியமைதி பெறுகிறது.
எழுதினால் என்னவாம்?
ஐ, ஔ - இவற்றின் வடிவம் அய், அவ் என்று இருத்தல் வேண்டும் என்று, அரசு முதலில் அறிவிப்பாணை வெளியிட்டது. பிறகு அந்த ஆணையை மாற்றி பழையபடியே ஐ, ஔ என்றுதான் எழுத வேண்டும் என்று அரசு கூறிவிட்டது.
அதேசமயம், அதனைச் சார்ந்தவர்கள் அப்படி எழுதுகிறார்களே? எழுதலாமா? என வினவுகிறார் புலவர் அய்யா! அலுவல் நிலையில் (Officially) அப்படி எழுத வேண்டாம் என்பது ஆணை. ஆனால், அய், அவ் என்று எழுதுவது எழுத்துச் சீர்திருத்தத்தை ஏற்பவரின் விருப்பம். அதை எப்படித் தவறென்று கூறலாம்?
ஐ, ஔ என்ற வரிவடிவத்தைத்தான் கையாள வேண்டும் என்று இதற்கு முன் எந்த அரசு ஆணையிட்டுள்ளது? புலவர் புகல்வாரா? எல்லாம் ஒரு மொழி மரபுதானே? - என்ற வடிவம் லை என்று எழுத்துச் சீர்மை அடிப்படையில் மாற்றப்பட்டதே அதையும் எதிர்க்கிறாரா புலவர்?
உயிர் எழுத்தின் மேல் புள்ளியா?
மெய்யெழுத்துகள் புள்ளி பெறும் - எனச் சொன்ன தொல்காப்பியர் எகர ஒகரமும் புள்ளி பெறும் என விதி வகுத்தார்.
மெய்யின் இயற்கை புள்ளியோடு நிலையல் - எழுத்ததிகாரம் நூற்பா - 15.
எகர ஒகரத்(து) இயற்கையும் அற்றே. - எழுத்ததிகாரம் நூற்பா - 16 என்பன நூற்பாக்கள்.
புள்ளி பெறாத எகர, ஒகரம் நெடில் எழுத்துகளாம் (இன்றைய ஏ,ஓ).
தொல்காப்பியர் காலத்தில் எட்டு _என எழுதினால் அது ஏட்டு எனப் படிக்கப் பெறும். எட்டு - என எழுதினால் அது எட்டு என ஆகும். இதுபோலத்தான் ஒகரமும்.
ஒட்டு - இன்றைய ஒட்டு
ஒட்டு - இன்றைய ஓட்டு ஆகும்.
இந்தக் குழப்பத்தை நீக்க, எகரத்தின் கீழே இடப் பக்கமாகச் சாய்த்து நீட்டி (ஏ) அதனை நெடிலாகவும், ஒகரத்தின் அடிப்பகுதியில் சுழித்து (ஓ) நெடிலாகவும் திருத்தினார்; மாற்றம் செய்தார் கி.பி. 18ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த அறிஞர் வீரமாமுனிவர் என்னும் இத்தாலியர்.
அந்த மாற்றத்தை இன்னும் நாம் ஏற்று வழக்காற்றில் (நம் புலவர் அய்யா உட்பட) பயன்படுத்தவில்லையா? தொல்காப்பியர் எ, ஒ புள்ளி பெறும் எனச் சொல்லிவிட்டார் என்று அவர் சொன்னபடியே எழுதி வருகிறோமா? இல்லையே! புலவர் அய்யா எண்ணிப் பார்க்க வேண்டுகிறோம்.
இலக்கணக் குற்றம் இல்லை
இது மட்டுமின்றி, மற்றொரு புரட்சிக் கருத்தையும் நாம் நினைவு கூர்தல் இன்றியமையாதது. அது, அய்யா பெரியாரின் புரட்சிக் கருத்து. தமிழ் உயிர் எழுத்துகளில் ஐ, ஔ ஆகிய இரண்டு எழுத்துகளைக் குறைத்துவிடலாம். இவை கூட்டெழுத்துகளே ஒழிய தனி எழுத்துகள் அல்ல. இவை இல்லாமல் எந்தத் தமிழ்ச் சொல்லையும் எழுதலாம்; ஒலிக்கலாம். இதனால், பொருளிலோ, இலக்கணத்திலோ எவ்வகைக் குற்றமும் ஏற்பட்டு விடும் எனத் தோன்றவில்லை என்கிறார் தந்தை பெரியார்.
இவற்றிற்கு மட்டும் இணை இல்லையா?
குறில் இருந்தால்தானே அதற்கு நெடில் இருக்க முடியும்? அதுதானே இயற்கை? தமிழில், குறில் 5க்கும் நெடில் 5 உள்ளன. அ - ஆ; இ - ஈ; உ - ஊ; எ - ஏ; ஒ - ஓ. குறில் இல்லாமலேயே ஐ, ஔ நெடில்கள் இருக்கின்றனவே! இவற்றிற்கு இணைகளாகக் குறில்கள் இல்லையே! இது எப்படிச் சரியாகும். இதுபற்றியும் தந்தை பெரியார் கூறுவதைப் பார்ப்போம். அகங்கை இரண்டிருக்க, புறங்கையும் இரண்டு இருக்க வேண்டும். அதுபோல, குறில் அய்ந்தும் நெடில் அய்ந்தும் இருக்க வேண்டும். ஐ, ஔ இரண்டும் வடமொழியின் திணிப்பே!
பழந்தமிழில் 10 உயிர்கள் மட்டுமே இருந்தன. ஐ, ஔ இல்லை - என இரசியத் தமிழாய்வு அறிஞர் எமனேவ் தன் நூலில் குறிப்பிட்டுள்ளதாக திரு. ச.அகத்தியலிங்கம் கூறுகிறார் _ நூல்: தமிழ் எழுத்துச் சீர்திருத்தமும் திராவிடப் பொது எழுத்தும்.)
கல்லெழுத்தில் காணவில்லையே?
அதுமட்டுமன்றி, இரண்டாம் உலகத் தமிழ் மாநாட்டில் (1968) வெளியிடப்பட்ட கையேடு நூலிலும், தொல்லியலறிஞர் திரு. நடன.காசிநாதனின் கல்லெழுத்துக் கலை என்ற நூலிலும் கி.மு., கி.பி. 1, 2ஆம் நூற்றாண்டுத் தமிழ் எழுத்துகள் எனக் காட்டப்பட்டுள்ளவற்றுள் ஐ, ஔ தொல்காப்பியத்தில் குறிப்பிடப்பட்டிருந்தும் காணப்படவில்லை.
காலத்தின் கட்டாயம்
மொழியின் வரிவடிவ மாற்றம் - நீக்கம் காலத்தின் கட்டாயம். இருப்பதை எந்தக் காரணத்தைக் கொண்டும் மாற்றக் கூடாது என்பது வளரும் இனத்தின் வாழ்க்கைத் தத்துவமாக முடியாது. (முனைவர் மு.வரதராசனார்)
மாறாத பொருள் எதுவும் வளர்வதில்லை வையத்தின் விதி! இதற்கு மாற்றம் இல்லை! - பாவலர் குலோத்துங்கன்.
மாற்றம் என்பது மானுடத் தத்துவம் - கவிஞர் கண்ணதாசன்.
ஒரு மொழியின் வடிவடிவம் அது தோன்றிய காலத்தில் இருந்தது போலவே என்றும் மாறாமலேயே இருத்தல் வேண்டும் என்று எண்ணும் தேக்க மனப்பான்மை முதலில் நம் தமிழ்ப் புலவர் பெருமக்களிடமிருந்து மாறவேண்டும். மாறுமா?
காரணம் இல்லாமல் காரியமா?
எக்காரணம் கொண்டும் ஐ_யை அய்_என்று எழுதக் கூடாது. அது குற்றம் என்கிறார் நம் புலவர் ப. அரங்கசாமி அவர்கள். காரணம் இருந்தாலும் அது வேண்டாம் என்கிறாரே புலவர்?
இது என்ன தருக்க வாதம் (Logic)?? காரணம் இன்றிக் காரியம் ஏது?
எது குற்றம்?
ஐ_யை அய்_என எழுதுவது குற்றமாமே? இவ்வண்ணம் பழைமையான தேக்க மனப்பான்மை - இல்லை பிற்போக்கு மனப்பான்மையோடு புலவர் அய்யா கூறுவதுதான் குற்றம்!
இப்படிக் கூற இதுவரை நாம் காட்டி வந்த சான்றுகளே போதுமானவை என நினைக்கிறோம்.
பாட்டிக்கதை வீரர்கள்!
நிறைவாக, தந்தை பெரியாரின் சொற்களை எடுத்துக்கூறி நிறைவு செய்கிறோம். நமது தமிழ்ப் பண்டிதர்கள் இம்மாற்றங்களுக்கு ஒப்புக்கொள்ள வேண்டுமே? அதுவன்றோ பெரிய கஷ்டம். மேல்நாடுகளில் பண்டிதர்கள் என்றால் புத்துலகச் சிற்பிகளாக இருப்பார்கள். நம் நாட்டிலோ பழைமைக்கு இழுத்துக் கொண்டு போகும் பாட்டிக்கதை வீரர்களாக இருக்கிறார்கள். - (நூல்: எழுத்துச் சீர்திருத்தம்.)
----------------பேராசிரியர் ந.வெற்றியழகன் "உண்மை" மார்ச் 16-31 2012 இதழில் எழுதிய கட்டுரை
0 comments:
Post a Comment