திராவிடர் கழகத் தலைவரின் இணையர் தன்னைச் சந்தித்ததாக ஜெயேந்திர சரஸ்வதி கூறுவதா?: ஜெயேந்திரருக்கும், தினமலருக்கும் வழக்கறிஞர்கள் நோட்டீசு:
தலைமை நிலையச் செயலாளர் வீ.அன்புராஜூக்காக வழக்கறிஞர்கள் அனுப்பிய நோட்டீசு
திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்களின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் காஞ்சி சங்கராச்சாரியாரை - ஆன்மீக நோக்கத்துக்காக சந்தித்ததாக காஞ்சி சங்கராச்சாரியார் பேட்டி ஒன்றில் கூறியதையும், அதனைத் தினமலர் நாளேடு வெளியிட்டது தொடர்பாக இருவருக்கும், தலைமை நிலையச் செயலாளர் வீ.அன்புராஜ் சார்பாக கழக வழக்கறிஞர்கள் அனுப்பியுள்ள நோட்டீசு வருமாறு:
ஜெயேந்திர சரஸ்வதி 10.5.2012 அன்றைய தினமலர் நாளிதழில் (திருச்சி பதிப்பு) திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்களின் இணையர் மற்றும் குடும்பத்தார் பற்றி அவதூறு கட்டுரை எழுதியதற்காக அவருக்கும், நாளிதழ் ஆசிரியருக்கும் 15.5.2012 அன்று வழக்கறிஞர்கள் த. வீரசேகரன், ஜெ.துரைசாமி ஆகியோர்மூலம் நோட்டீசு அனுப்பப்பட்டுள்ளது.
அந்த நோட்டீசில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
சென்னை-7 வேப்பேரி, ஈ.வி.கே.சம்பத் சாலை, 50 ஆம் எண்ணில் உள்ள திராவிடர் கழக அமைப்பின் தலைமை நிலையச் செயலாளராக உள்ள திரு.வீ.அன்புராஜ் (திரு.கி.வீரமணி அவர்களின் மகன்) அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க இந்த நோட்டீசு அனுப்பப் படுகிறது.
திரு.கி.வீரமணி அவர்களின் மகனும், எங்களது கட்சிக்காரர் மற்றும் அவரது குடும்பத்திற்கும் உள்ள நற்பெயருக்குக் களங்கம் கற்பிக்கும் உள்நோக்கத்துடன் காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி பேட்டி, 10.5.2012 நாளிட்ட தினமலர் ஏட்டில் (திருச்சி பதிப்பு) வெளியிடப்பட்டுள்ள செய்திபற்றி தந்தை பெரியார் அவர்களின் தொண்டர்களையும், எங்களது கட்சிக் காரரின் குடும்பத்தாரையும் இழிவுபடுத்துவதாக உள்ளது.
அந்த செய்தியில் திரு.வீரமணி அவர்களின் இளைய சகோதரரும்கூட ஜெயேந்திர சரஸ்வதியை சந்தித்துப் பேசியதாகவும், ஆன்மீகத்தில் உள்ளதாகவும் கூறப் பட்டுள்ளது. திரு. வீரமணிக்கு இளைய சகோதரர் எவருமில்லை என்பதை ஒரு மடத்தின் தலைவராக இருக்கும் ஜெயேந்திரர் நன்கறிவார். திருமதி வீரமணி தன்னைச் சந்தித்தார் என்று சங்கராச்சாரியார் கூறியிருப்பது முற்றிலும் தவறான செய்தி என்பதுடன், அதில் எந்தவித உண்மையும் இல்லை.
10.5.2012 அன்று தமிழ் நாளிதழ் தினமலரில் (திருச்சி பதிப்பு) எங்களது கட்சிக்காரரைப் பற்றி இழிவுபடுத்தும் வகையில், கீழ்க்குறிப்பிட்டவாறு செய்தி வெளியிடப்பட்டு உள்ளது.
கருணாநிதி எதிர்த்தாலும் ஸ்டாலின் சந்தித்தார். ஆன்மீக நாட்டம் குறித்து சங்கராச்சாரியார்பேட்டி
...ஆனால் தி.மு.க. தலைவர் கருணாநிதியும், தி.க. தலைவர் வீரமணியும் ஆன்மிகத்துக்கு எதிராகவே செயல்பட்டு வருகின்றனர்; பேசி வருகின்றனர். ஆனால் கருணாநிதி மகன் ஸ்டா லின் 3 முறை என்னை வந்து சந்தித்துள்ளார்.
வீரமணியின் மனைவியும், மத்திய அமைச்சர் அழகிரி மனைவியும் என்னை வந்து சந்தித்துப் பேசியுள்ளனர். கருணாநிதியும், வீரமணியும் ஆன்மீகத்துக்கு எதிராக செயல் பட்டாலும், அவர்கள் குடும்பத்தினர் ஆன் மீகத்துக்கு ஆதரவாகவே உள்ளனர்...
எங்களது கட்சிக்காரரின் கட்சித் தொண்டர்களும், அனுதாபிகளும், நலம் விரும்பிகளும், திருச்சி தினமலர் ஆசிரியர் வெளியீட்டாளரான திரு. ஆர்.ராகவன் 10.5.2012 அன்று தினமலர் இதழில் தமிழகம் - டூர் - ஊர் என்ற பகுதியில் கருணாநிதி எதிர்த்தாலும், ஸ்டாலின் சந்திக்கிறார் - ஆன்மிக நாட்டம் குறித்து காஞ்சி சங்கராச்சாரியார் பேட்டி என்ற தலைப்பில் எங்களது கட்சிக்காரரின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் உள்நோக்கத்துடன் வெளியிடப்பட்ட இந்த செய்தியைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
அக் கட்டுரையில் 10.5.2012 அன்று கிருஷ்ணகிரியில் காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி பேட்டி அளித்தார் என்றும் கூறப்பட்டுள்ளது. எங்களது கட்சிக் காரரின் தந்தையும், திராவிடர் கழகத் தலைவருமான திரு. கி.வீரமணி அவர்களும் மற்றும் தி.மு.க. தலைவர் திரு. மு.கருணாநிதி அவர்களும் நாத்திகம் பேசுவதாகவும், ஆனால் அவர்களது குடும்பத்தினர் கடவுள் இருக்கிறார் என்று கூறும் தனது கருத்துகளை ஆதரிக்கின்றனர் என்றும் அக்கட்டுரை தெரிவிக்கிறது.
இவ்வாறு வெளியிடப்பட்டுள்ள செய்தி முழுக்க முழுக்க தவறானது என்றும், அவதூறானது என்றும், எங்களது கட்சிக்காரரின் குடும்பத்திற்கு உள்ள சமூக அந்தஸ்துக்குக் களங்கம் கற்பிக்கும் ஒரே நோக்கத்துடன் வெளியிடப்பட்டது என்றும் எங்களது கட்சிக்காரர் கூறுகிறார். ஏழை மற்றும் தாழ்த்தப்பட்ட மக்களின் உரிமைகளுக்காகப் போராடுபவர் எங்களது கட்சிக்காரர்.
மதவாதிகள் உரு வாக்கிய மூடநம்பிக்கைகளைத் தவறு என்று மெய்ப்பித்து அவற்றின் மோசடிகளை அவர் வெளிப் படுத்தி வருகிறார். இத்தகைய சூழ்நிலைகளில் எங்களது கட்சிக்காரரின் தாயார், காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதியை எப்போதுமே சந்தித்ததில்லை. உள்நோக்கத்துடன் வெளியிடப்பட்ட தவறான செய்தி இது.
அவதூறு செய்தி!
தினமலர் நாளிதழ் ஆசிரியர் வெளியீட்டாளரான திரு. ஆர்.ராகவன் எப்போதுமே எங்களது கட்சிக்காரருக்கு எதிராகவே செயல்பட்டு வருபவர் ஆவார். எங்களது கட்சிக்காரரின் தாயாரும், அவரது தந்தை கி.வீரமணி அவர்களின் இளைய சகோதரரும் தன்னை சந்தித்ததாக, தன்னைத் தூய்மையானவர் என்று கூறிக் கொள்ளும் காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி அந்தப் பேட்டியில் கூறியுள்ளார்.
இந்த செய்திகள் முற்றிலும் தவறானவை என்பதை நன்கு அறிந்தே அவர் இந்த அவதூறு அறிக்கையை வெளியிட்டுள்ளார். ஜெயேந்திர சரஸ்வதியும், பத்திரிகை ஆசிரியர் ஆர். ராகவனும் உள்நோக்கத்துடன் இக் கட்டுரையை எழுதி வெளியிட்டுள்ளனர்.
எங்களது கட்சிக்காரரின் தாயார் ஒருபோதும் காஞ்சி சங்கராச்சாரியர் ஜெயேந்திர சரஸ்வதியைச் சந்தித்தது இல்லை; அவரது தந்தை திரு. கி.வீரமணிக்கு இளைய சகோதரர் எவருமே இல்லை. வெளியிடப்பட்டுள்ள செய்தி எங்களது கட்சிக்காரருக்கும், அவரது குடும்பத்திற்கும், அவர் சார்ந்திருக்கும் கட்சிக்கும் கெட்ட பெயர் உண்டாக்கும் என்பதை நன்கு அறிந் திருந்தும் தினமலர் ஆசிரியர் அதனை வெளியிட்டு உள்ளார்.
சங்கராச்சாரியார் மற்றும் தினமலர் ஆசிரியர்- வெளியீட்டாளர் - அச்சிட்டோர் ஆகியோர் வெளியிட் டுள்ள செய்தி அவதூறானது என்பதால், இந்தியத் தண் டனைச் சட்டம் 500 ஆவது பிரிவின் கீழ் குற்றம் இழைத்த தாக உங்கள் இருவர் மீதும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. எங்களது கட்சிக்காரர் மற்றும் அவரது குடும்பத்தின் கடந்த கால வரலாற்றை நன்கு அறிந்துள்ள தினமலர் ஆசிரியர் வேண்டுமென்றே காஞ்சி சங்கராச்சாரியாருடன் சேர்ந்து சதி செய்து இக்கட்டுரையை உள்நோக்கத்துடன் வெளியிட்டுள்ளார்.
அதனால் அவர்கள் இருவரும் சட்டத்தைப் பற்றியும், சட்டத்தை மீறுவதால் ஏற்படும் விளைவுகளைப் பற்றியும் அறியாமல் மேற்படி கட்டுரையை உள்நோக்கத்துடன் எழுதி வெளியிட்டுள்ளனர்.
இத்தகைய ஒரு தவறான அறிக்கையை வெளியிட்டு எங்களது கட்சிக்காரருக்கும், அவரது குடும்பத்திற்கும் உலகம் முழுவதிலும், குறிப்பாக தமிழ்நாட்டிலும், கட்சி உறுப்பினர்களிடையேயும் உள்ள புகழுக்குக் களங்கம் ஏற்படுத்திய தற்காக சங்கராச்சாரியார் மற்றும் தினமலர் ஆசிரியர் இருவர் மீதும் குற்றவியல் வழக்கு தொடரப்பட இயலும் என்று எங்களது கட்சிக்காரர் கருதுகிறார்.
அவதூறு விளைவித்தது பற்றி அவர்கள் இருவர் மீதும் இந்திய தண்டனைச் சட்டத்தின்கீழ் வழக்குத் தொடுக்கவும் மற்றும் இழப்பீடு கேட்டு வழக்கு தொடரவும் எங்களது கட்சிக்காரருக்கு எல்லா உரிமையும் உள்ளது.
நிபந்தனையற்ற மன்னிப்பு!
அதனால், மேற்படி இருவரும் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்கவேண்டும் என்றும், அந்தச் செய்தியை தினமலர் நாளிதழில் முன்பு 10.5.2012 அன்று அவதூறு செய்தி வெளியிடப்பட்டது போன்றே, அதே அளவில் நன்கு தெரியும்படி, இந்த நோட்டீசு கிடைத்த நாளிலிருந்து ஏழு நாள்களுக்குள் வெளியிடப்பட வேண்டும் என்று எங்களது கட்சிக்காரர் சார்பாக அவர்கள் இருவரும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
தவறினால் எங்களது கட்சிக்காரரால், தனது குடும்பம் மற்றும் கட்சியின் புகழுக்குக் களங்கம் ஏற்படுத்தியதற்காக மேற்படி இருவர் மீதும் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடரப்படும் என்றும் நோட்டீசில் கூறப்பட்டுள்ளது.
------------"விடுதலை” 16-5-2012
0 comments:
Post a Comment