அம்பேத்கர் அவமதிப்பு
இந்திய அரசமைப்புச் சட்டத்தின் சிற்பி என்று போற்றப்படும் அண்ணல் அம்பேத்கரை அவமதிப்பது என்பது உயர்ஜாதி வர்க்கத்திற்கு வாடிக்கையாகவே இருந்து வருகின்றது.
தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த அம்பேத்கர் சட்ட வரைவுக் குழுவுக்குத் தலைவராக இருந்ததால்தான் இந்திய அரசமைப்புச் சட்டத்தில் ஏராளமான குறைபாடுகள் ஏற்பட்டன என்று பூரி சங்கராச்சாரியார் என்ற பார்ப்பனர் கூறியதுண்டு.
பார்ப்பன எழுத்தாளரான அருண் ஷோரியும் அம்பேத்கரை அவமதித்து எழுதியதுண்டு. அதனைக் கண்டித்துத் திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள் இரண்டு நாள் தொடர் சொற்பொழிவுகளை சென்னை பெரியார் திடலில் ஆற்றினார்.
அம்பேத்கர் அவர்களே ஒரு முறை மிக அழகாக அதே நேரத்தில் ஆழமான கருத் தினைக் கூறினார்.
பார்ப்பனர்களுக்கு இராமாயணம் தேவைப்பட்டது. ஒரு வால்மீகியை அழைத் தனர் - வால்மீகி பார்ப்பனர் அல்லர்; பார்ப்பனர்களுக்கு ஒரு மகாபாரதம் தேவைப் பட்டது; வியாசரை அழைத்தனர்- வியாசர் பார்ப்பனர் அல்லர்; அவர்களுக்கு அரசமைப்புச் சட்டம் தேவைப் பட்டது - என்னை அழைத்தனர் என்று குறிப்பிட்டுள்ளார்.
பார்ப்பனர்களுக்குத் தேவைப்படும் பொழுது நம் மக்களைப் பயன்படுத்திக் கொள்வார்களே தவிர, மற்றபடி அங்கீகரித்துவிட மாட்டார்கள்.
முதல் சட்ட அமைச்சராக - காங்கிரஸ்காரராக இல்லாத அம்பேத்கரை நியமித்துக் கொண்டார்கள். இந்துத் திருத்தச் சட்டத்தைக் கொண்டு வர அவர் முயற்சித்த போது, தொடக்கத்தில் அவருக்குப் பச்சைக் கொடி காட்டிய பிரதமர் நேரு அவர்கள் - கடைசி நேரத்தில் பின்வாங்கிவிட்டாரே! தனக்குக் கொள்கைதான் பெரிதே தவிர பதவியல்ல என்று சட்ட அமைச்சர் பதவியைத் தூக்கி எறிந்து விட்டு வெளியேறிய இலட்சியவாதியல்லவா அண்ணல் அம்பேத்கர்.
இவ்வளவுக் காலத்திற்குப் பிறகு சி.பி.எஸ்.ஈ. பாடத் திட்டத்தில் 11 ஆம் வகுப்புப் பாடத்தில் கேலிப்படம் போட்டு, அவரை இழிவு படுத்துகின்றனர் என்றால் எவ்வளவு ஆணவம் இருக்க வேண்டும்?
நத்தை மீது அம்பேத்கர் அமர்ந்து செல்வது போலவும், சாட்டை கொண்டு நேரு அவரை விரட்டுவது போலவும் கேலி சித்திரம் தீட்டுகின்றனர் என்றால் இதன் உள்நோக்கம் என்ன?
என்.சி.ஈ.ஆர்.டி. என்பது பொதுவாக இந்துத்துவாவாதிகள் ஊடுருவி இருக்கும் அமைப்புதான். தலைவர் பிற்படுத்தப்பட்டவராக இருந்தாலும் அவ்வமைப்புக்குள் ஊடுருவி யிருக்கும் பார்ப்பன சக்திதான் இந்த வேலையைச் செய்திருக்க முடியும்.
தலைவர் பதவி விலகிவிட்டார் என்பதோடு விட்டு விடாமல், இதற்குக் காரணமான பொறுப்பாளர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்திடுவது அவசியமாகும்.
ஆர்.எஸ்.எஸ். நடத்தும் கல்வி நிறுவனங்களிலும் இந்துத்துவா வெறியைப் பிஞ்சு உள்ளங்களில் திணிக்கும் வேலை இன்னொரு பக்கத்தில் நடந்து கொண்டு தானிருக்கிறது.
இந்திய வரலாற்று ஆய்வுக் கழகத்தை (Indian Counsil for Historical Research) முற்றிலுமாகக் காவிமயமாக்கப்பட்டது பா.ஜ.க. ஆட்சியில் - இந்திய வரலாறு தலைமுறைகளை அழிக்கும் குண்டுகளைத் தயாரிக்கும் ஆலைகளாக (Bomb Factories) மாற்றப்பட்டு விட்டது என்று ஃப்ரண்ட் லைன் ஏட்டில் விரிவான கட்டு ரைகளே வெளிவந்தன என்றால் தெரிந்து கொள்ளலாமே! ஃபாசிஸ்டுகள் எங்கிருந்தாலும் கல்வியில் நஞ்சைக் கக்குவார்கள் எச்சரிக்கை!
------------------"விடுதலை”தலையங்கம் 15-5-2012
0 comments:
Post a Comment