Search This Blog

2.5.12

பாகவதம் ஓர் ஆராய்ச்சி - புராணங்கள் - 2



புராணங்கள் என்பவை எவை?அவை எப்படி உருவாயின என்பதை சென்ற இதழில் பார்த்தோம். அதில் 18 புராணங்களை அறிந்துகொண்டோம். அதனைத்தொடர்ந்து

16 உபபுராணங்கள் பின்வருமாறு:

சனற்குமாரர், நரசிம்ம, நந்த, சிவதர்ம, துர்வாச, நாரதீய, கபில, வாமன, உசனஸ், மானவ, வருணகலி, மகேஸ்வர, சாம்ப, சௌர, மரீச, பார்க்ம புராணங்கள்.

அரச பரம்பரைச் செய்திகள்

புராணங்களிலே புராதன அரச பரம்பரை பற்றிய செய்திகள் காணப்படுகின்றன. ஆதி அரசர் சந்திர, சூரிய வம்சத்தினர் என வம்சாவளியாகக் கூறப் படுகின்றது. பின்னர் மகாபாரத வீரர்வரை வம்ச பரம்பரை கூறப்பட்டு, வருங்கால அரசைப் பற்றிய செய்திகள் தீர்க்க தரிசனமாகவும் கூறப்படுகின்றன.

கலியுக அரசரைப் பற்றிக் கூறுமிடத்து, சிசுநாகவமிசம், நந்தவமிசம், மௌரியர், சுங்கர், ஆந்திரர், குப்தர் என்ற சரித்திரப் பிரசித்தி பெற்ற வமிசங்களும் குறிப்பிடப்படுகின்றன. கௌதமர், மகாவீரர் (கி.மு.5 ஆம் 6 ஆம் நூற்றாண்டு) ஆகிய சமயத் தலைவர்களின் காலத்திலே வாழ்ந்த சிசுநாக வமிசத்தைச் சேர்ந்த பிம்பிசாரன், அஜாதசத்துரு என்ற அரசர் பெயர்களும், கி.மு. 322 இல் அரசு கட்டிலேறிய சந்திரகுப்த மௌரியச் சக்ரவர்த்தி பெயரும் கூறப்படுகின்றன.

பிற்கால நூல்களிற் புராணம்

முற்பட்ட புராணங்கள் எல்லாம் கி.பி. ஏழாம் நூற்றாண்டுக்கு முன்னரே நூல் வடிவைப் பெற்றிருக்கவேண்டும். ஏனெனில், அரசர் அட்டவணையிலே குப்தருக்குப் பிற்பட்ட அரசப் பரம்பரைகளோ அரசரோ குறிப்பிடப்படவில்லை. ஹர்ஷ சக்கரவர்த்தியின் பெயர் காணப்படவில்லை.

மகாயான புத்தமத நூலான லலித விஸ்தரம் கி.பி. முதலாம் நூற்றாண்டைச் சேர்ந்தது. அந்நூல் புராணம் என்றே தன்னைக் கூறிக் கொள்கிறது. சத்தர்மபுண்டரீகம், கரண்ட வியூகம், மகாவஸ்து போன்ற பௌத்த நூல்களும் புராணங்களைப் போன்றவை. பக்தியைப் பெரிதும் போற்றுபவை.

பாணர் தமது ஹர்ஷ சரித்திரத்திலே தாம் தமது கிராமத்திற் புராண படனம் கேட்கப் போனதாயும், அங்கே வாயு புராணம் படிக்கப்பட்டதாயும் கூறுகிறார். இது கி.பி. 625 வரையில் நிகழ்ந்திருக்கவேண்டும். நீதிக்குப் பிரமாணமாகப் புராணக் கூற்றுக்களைக் கொள்ளலாமென்று குமாரிலர் என்ற தத்துவ அறிஞர் (750 கி.பி.) கூறுகிறார். ஒன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்த சங்கரரும், 12 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இராமானுஜரும் தம் மதங்களை நிறுவப் புராணங்களை மேற்கோளாகக் காட்டுகின்றனர்.

பிற நாட்டவரின் புராண அறிவு

அராபியப் பிரயாணியான அல்பெருனி (கி.பி.1030) 18 புராணங்களைக் குறிப்பிடுகிறார். விஷ்ணு தருமோத்தரமென்ற பிற்பட்ட புராணத்தைக் கூட அவர் நுணுக்கமாகப் படித்துள்ளார். ஆதித்திய புராணம், வாயு புராணம், மச்ச புராணம், விஷ்ணு புராணமென்பவற்றிலே பரிச்சயமடைந்திருக்கிறார். இவற்றிலிருந்து புராணங்கள் மிகப் பழங்காலந்தொட்டு இருந்திருக்கின்றன என்பது தெரிகின்றது.

வேதங்களோடு ஒத்த பெருமையுடைய புராண இதிகாசங்கள், சூத்திரரும், பெண் பாலரும் படிப்பதற்கேற்பட்டவை என்பர். இவை பாபங் களைப் போக்குமியல் புடையன என்கிறார் இராமானுஜர். இந்து சமயத்தின் சகல விதமான அமிசங்களையும் அறிவதற்கு இவை உதவியாயிருக்கின்றன.

பிரமண புராணம்

புராணங்களில் முதலாவதாக இது குறிக்கப்படுகின்றது. சில சமயம் ஆதிபுராணம் எனவும் கூறப்படும். இது பிரமனால் தக்கனுக்குக் கூறப்பட்டது. இன்று ஒரிசா என வழங்கும் உத்கலைப் பிரதேசத்திலுள்ள மூர்த்தி, தலம், தீர்த்தமென்பவற்றைப் பற்றிக் குறிப்பிடுகிறது. இப்புராணம் ஆறு காண்டங்களை உடையது. சிருட்டிகாண்டத்திலே உலகின் தோற்றம், அரசரின் பரம்பரை என்பன கூறப்படுகின்றன. பூமி காண்டத்திலே பூமியின் பகுதிகளைப்பற்றியும், புண்ணியத் தலங்களைப்பற்றியும் கூறப்படுகிறது. சுவர்க்க காண்டம் சுவர்க்கத்தைப்பற்றிக் கூறுகின்றது. பாதாள காண்டத்திலே பாதாள உலகைப்பற்றிக் கூறப்படுகின்றது.

பதும புராணம்

இங்கே இராம கதை சொல்லப்படுகிறது. உத்தரகாண்டத்திலே விரதானுஷ்டானங்களைப் பற்றிக் கூறப்படுகிறது பிரமன் தோன்றிய காலத்தைப் பற்றி இங்கே குறிப்பிடப்படுவதால் இதற்குப் பதும புராணமெனப் பெயர் ஏற்படலாயிற்று. வைஷ்ணவ பக்தர்கள் அனுட்டிக்கவேண்டிய இயமநியமங்கள், விரதானுட்டானங்கள் எல்லாம் இங்கே காட்டப்பட்டுள்ளன. காளிதாசர் எழுதிய இரகுவம்சம், சாகுந்தலமென்பவை சம்பந்தமான கதைகள் இங்கே காணப்படுகின்றன. அதனாற் சில அறிஞர் இது காளிதாசருக்குப் பிற்பட்ட புராணமெனக் கூறுவர். திருவரங்கம், வேங்கடமலை என்ற புண்ணியதலங்களைப் பற்றிய செய்திகள் இங்கே உண்டு.

விஷ்ணு புராணம்

புராணத்துக்குரிய பஞ்ச லட்சணமும் பொருந்தவே இந்தப் புராணம் எழுதப்பட்டுள்ளது. அதனால் இதுவே புராணங்களுள் முற்பட்டதெனக் கூறுவர். விஷ்ணுவின் பத்து அவதாரங்களைப்பற்றி இது விவரிக்கிறது. சிறந்த பாகவதத்துக்கு அடுத்தாற்போலப் பிரபலமடைந்துள்ள பழம் புராணம் இதுவே. சங்கரர் இப்புராணத்திலிருந்தே அதிகமாக மேற்கோள் காட்டுகின்றார். இங்கே மௌரிய வமிசத்தைப் பற்றிய செய்திகளும் உண்டு.

வாயு புராணம்

இது வாயு தேவனால் உரைக்கப்பட்ட புராணம், மகாபாரதம், ஹரிவம்சம் என்பவற்றுக்கு இதற்கும் சில இடங்களிலே அநேக ஒற்றுமை உண்டு. குப்த அரசரைப்பற்றி இப்புராணங் குறிப்பிடும். இது சைவ சமயத்தைப் பற்றியும் சிவ வழிபாட்டைப் பற்றியுமே விதந்து கூறும்.

பாகவத புராணம்

இதுவே புராணங்களுள் மிகப் பிரபலமானது. விஷ்ணு புராணத்தைப் பின்பற்றியே இது எழுதப்பட்டது. இப்புராணம் ஸ்கந்தங்களாகப் பிரிக்கபப்ட்டுள்ளது. விஷ்ணுவின் தசாவதாரங்களைப் பற்றிக் கூறுகிறது. இந்நூலிலேதான், விஷ்ணுவின் அவதாரங்களாகக் கபிலரும், புத்தரும் குறிக்கப்படுகின்றனர். கிருஷ்ணனுடைய வரலாற்றைக் கூறும் பத்தாம் காண்டம் பிரசித்த மானது. நடை, யாப்பமைதி, வருணனையமைதி என்பவற்றில் இப்பகுதி சிறந்து விளங்குகிறது. இப்புராணத்தை 1260 தொடக்கம் 1309 வரை வாழ்ந்த போபதேவரே எழுதினார் எனக் கூறுவர். ஆனால், இது ஆராய்ச்சிக்குரிய விஷயம். மத்துவாச்சாரியர் பாகவதத்தை மகாபாரதத்துக் கொப்பிட்டு அநேக மேற்கோள்களை அந்நூலிலிருந்து எடுத்துக் காட்டுவார். ஆனால், இராமானுஜர் பாகவதத்தைக் குறிப்பிடாதிருப்பதால் அது அவர் காலத்திலே அத்துணை பிரபலமடையவில்லை என்பது தெரிகிறது.

அக்கினி புராணம்

இது அக்கினி தேவரால் வசிட்டருக்கு உரைக்கப்பட்டதால் இப்பெயர் பெற்றது. விஷ்ணு பரமாத்மாவைப் பற்றியும் இப்புராணம் குறிப்பிட்ட போதிலும், இது சைவ புராணமே. இலிங்க வழிபாடு, துர்க்கை வழிபாடு என்பவற்றைப் பற்றி இங்கே கூறப்படுகின்றன. வைத்தியம், சோதிடம், சிற்பம், யாப்பு அணி, நாடகம் என்ற விஷயங்களைப் பற்றியெல்லாம் இதிலே கூறப்படுகின்றது.

கருட புராணம்

விஷ்ணுவானவர் கருடனுக்கு உபதேசித்த புராணமாதலால் இப்பெயரை இது பெற்றது. இதிலும் வைத்தியம் யாப்பு, சோதிடம் முதலிய பல விஷயங்களும் கூறப்படுகின்றன. பல வைணவ விரதங்களைப்பற்றியும் சமயானுட்டானங் களைப்பற்றியும் குறிப்பிடப்பட்ட போதிலும், சிவ வழிபாடு, பார்வதி வழிபாடு, சூரிய வழிபாடு, விநாயகர் வழிபாடு என்பனபற்றியுங் கூறப்படுகின்றது. மற்றும் இப்புராணத்தில் உயிர் உடலை விட்ட பின் செல்லும் சுவர்க்க நரகங்களைப்பற்றி இதன் பிற்பகுதி கூறுகிறது. நரகத்திலே பாவிகள் அடையும் கொடுமைகள் இங்கே விஸ்தரிக்கப்படுகின்றன. அந்திமக் கிரியைகளும் அவற்றால் உடலைப் பிரிந்த ஆன்மாவுக்குண்டாகும் நன்மைகளும் விரிக்கப்படுகின்றன.

மார்க்கண்டேய புராணம்

புராணங்களுள் இது மிகப் பழையது. சிருட்டி, பிரளயம் என்பவற்றைப் பற்றி விவரமாக இப்புராணம் கூறும் சூரிய தேவனைப் பற்றிப் பல வரலாறுகளுண்டு. இங்கே கூறப்படும் கொள்கைகள் வைதிகச் சார்புடையன. இப்புராணம் அநேகமாக கி.பி. மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்ததாயிருக்கலாம்.

நாரத, பவிஷ்ய புராணம்

வைஷ்ணவ பக்தியின் விசேடத்தைப்பற்றி நாரதர் இப்புராணத்தில் சனற்குமாரருக்கு எடுத்துக் கூறுகிறார். இதன் வாயிலாகப் பல புராணக் கதைகள் கூறப்படுகின்றன. எதிர்காலத்தில் நிகழக்கூடிய சம்பவங்களையும், வரலாறுகளையம் பற்றி இப்புராணம் தீர்க்கதரிசனமாகக் கூறுகிறது. சூரிய வழிபாடு, அக்கினி வழிபாடு, நாக வழிபாடு போன்ற பிற்கால சிறு தெய்வ வழிபாடு என்பவற்றைப்பற்றி இதில் விவரமாகக் கூறப்படுகிறது.

பிரம்மவைவர்த்த புராணம்

விஸ்வம் முழுவதும் பிரமத்தின் தோற்றமே (விவர்த்தம்) என்ற கொள்கையைக் கூறும் புராணமாதலால், இப்பெயரைப் பெற்றது. முதலாம் காண்டமான பிரம காண்டத்திலே பிரமன் உலகைப் படைக்கும் வரலாறு கூறப்படுகிறது. இரண்டாவது பிரகிருதி காண்டம். துர்க்கை, லக்ஷ்மி, சரஸ்வதி, இராதை என்ற வடிவிற் பிரகிருதி தோற்றமளிக்கின்றது. மூன்றாம் காண்டமான கணேஷ காண்டம், கணேசர் பராக்கிரமத்தைக் கூறும். கடைசிக் காண்டமான கிருஷ்ண ஜன்ம காண்டம் கண்ணபிரான் வரலாற்றையும், இராதாகிருஷ்ண நிகழ்ச்சிகளையும் கூறும்.

பிரமாண்ட புராணம்

விஸ்வமாகப் பரிணமித்த பிரமாண்டத்தின் செய்தியை இப்புராணங் கூறும். இந்த விசுவம் ஆரம்பத்திலே பொன்மயமான முட்டையாயிருந்தது. இப்புராணத்திலே அத்தியாசத்ம ராமாயணம் ஒரு முக்கிய பகுதியாகக் காணப்படுகிறது.

இலிங்க புராணம்

இது சிவபெருமான் லிங்கமயமாக இருந்து உபதேசித்த புராணம். சிவனுடைய 28 அவதாரங்கள் இதிற் கூறப்படுகின்றன.

கந்த புராணம்

இது முருகக் கடவுளின் தோற்றம், பராக்கிரமம் என்பனவற்றைக் கூறுவது. தாரகன் என்ற அசுரனைக் கொன்று முருகன், தேவர்களைச் சிறை மீட்ட செய்தி இதிலுண்டு. காளிதாசருடைய குமாரசம்பவத்தை இது நினைவூட்டும். சிவத்தலங்கள் பலவற்றை இது விவரமாக வருணிக்கிறது. சைவசமயக் கோட்பாடுகள், தத்துவங்கள் என்பன இங்கே ஆராயப்படுகின்றன. இதிலே சூதசம்மிதை என்ற பகுதி காணப்படுகிறது.

வாரஹ, கூர்ம, மச்ச, வாமன புராணங்கள்

விஷ்ணு, வராஹம், கூர்மம், மீன், வாமனன் என்ற அவதாரங்களையெடுத்தார். இந்த அவதாரங்களைக் கூறும் புராணங்களானபடியால், இவை இப்பெயர்களைப் பெற்றன. இங்கே இயமநியமங்கள், விரதானுஷ்டானங்கள், மூர்த்தி, தலம், நீர்த்தம் கூறப்படுகின்றன.

------------------------ தொடரும் === - கி.வீரமணி அவர்கள் ஏப்ரல் 16 -30 2012 “உண்மை” இதழில் எழுதிய கட்டுரை


0 comments: