Search This Blog

22.5.12

தொழிலாளர் நிலை - பெரியார்

ழைப் பாட்டாளி மக்கள், தொழிலாளி மக்கள் கூலி போதாதென்று பட்டினி கிடந்து, போலிகாரன் குண்டுகளுக்கு இரையாகிச் சொத் பொத்தென்று கீழேவிழுந்து உயிர்விடும் போது, அவன் பெண்டு பிள்ளைகள் கஞ்சிக்கு ஆலாய்ப் பறக்கும் போது, பட்டேலுக்கும்? நேருவுக்கும், பிரசாத்துக்கும், ஆசாத்துக்கும், சரோஜினிக்கும் மாதம் 5000, 6000 வீதம் சம்பளமும், அரசபோக மாடமாளிகை, அரண்மனை வாசமும், நேரு தங்கை விஜயலட்சுமிக்கும், சுற்றத்தாருக்கும் மாதம் 8000 சம்பளமும், அரசபோக வாழ்க்கையும், அடிக்கடி ஆகாயக் கப்பல் போக்குவரத்துப் பிரயாணமும் என்றால் இந்தத் தலைவர்கள் எல்லாம் மக்கள் பிரதிநிதிகளா? நாட்டு மக்களுக்காகப் பாடுபடும் தியாகிகளா? அல்லது டர்பிள்வீப் என்னும் லாட்டரியில் முதல் பிரை அடித்த பாக்கியசாலி லட்சுமி புத்திரர்களா? ஏழைப் பாட்டாளி மக்கள் முதலாளிகளின் கொடுமையால் வேலைவிட்டு, வீடு வாசல் விட்டு, நாடு முழுவதும் பிச்சை எடுக்கத் துணிந்து அலையும்போது முதலாளிகள் நிலைமை எப்படி இருக்கிறது? பணத்தைக் குவிக்கிறார்கள், மாட மாளிகைகளை உயர்த்துகிறார்கள், பஞ்சனையில் கொஞ்சி விளையாடுகிறார்கள், மந்திரிகளோடு சல்லாபமாய் உலவுகிறார்கள். முதலாளிகளும் மந்திரிகளும் காதலர் காதலிகளாய் உல்லாசக் கிரீடைகள் நடத்துகிறார்கள். டீ பார்ட்டி, நாட்டியக் கச்சேரி, இசையரங்கு, சாமி தீபாராதனைபோல் என்ன வேடிக்கை எவ்வளவு கேளிக்கையாய் வாழ்கிறார்கள். சுயராஜ்ய நாட்டில், சமதர்மவாதி - பொது உடமைவாதி - ஏகாதிபத்திய எதிர்ப்புவாதி என்றெல்லாம் தப்பட்டை அடித்து விளம்பரம் செய்யப்பட்டு பேர் பெற்ற பண்டித ஜவஹர்லால் நேருவின் (முதல் மந்திரி) தலைமையில் ஏழை பாட்டாளி மக்கள் கதி இதுதானா?

நூற்றுக்கணக்கான நாட்களாக கோவை மில்லுகளில் போராட்டங்கள் நடக்கின்றன. நாட்டில் பல நூற்றுக்கணக்கான வேலை நிறுத்தங்கள் ஏற்பட்டு தொழிலாளிகளும் மக்களும் அல்லல் பட்டு மிருக ஜீவன் போல் படாத பாடுபடுகின்றனர். இவைகளையெல்லாம் பார்த்தும், தங்களால் இவைகளை அடக்க முடியாமல் பரிகாரம் செய்ய முடியாமல் போயும் கூட தொழில் தாபனங்களையெல்லாம் சர்க்கார் ஏன் ஏற்று நடத்தாமல் இருக்கிறார்கள்? இதற்குச் சமாதானம் சர்க்கார் அல்லது மந்திரிகள் முதலாளிகளின் ஆசை வலையில் சிக்கி அழுந்தி விட்டார்கள் என்பதைத் தவிர, அல்லது இந்த மந்திரிகள் நிலையில்லாதவர்கள் ஆனதால் கிடைத்த வரை சுருட்டுவோம் என்கின்ற வேலைத் திட்டத்தைக் கையாளுகிறார்கள் என்பதைத் தவிர வேறு எதைச் சொல்ல முடியும்? என்று கேட்கின்றேன். இந்நாட்டுத் தொழிலாளிகள் இப்படி அல்லல் படுகிறார்கள் என்றால் இந்த ஆட்சி முதலாளிகள் ஆட்சி என்றுதானே ஆகிறது?

---------02.05.1948 அன்று தூத்துக்குடியில் நடைபெற்ற திராவிடர் கழக 19ஆம் மாகாண மாநாட்டில் தந்தை பெரியார் உரையிலிருந்து....

-----------------------

ம்யூனிஸ்ட் கட்சியார், மில்லிலும் எஞ்சினிலும் வேலை செய்யும் தொழிலாளர் களையே தொழிலாளர்களாகக் கருதுகின்றார்கள். சரீரத்தினால் பாடுபடும் சூத்திரப் பட்டம் தாங்கிய நாலுகோடி மக்களும் தொழிலாளர்களல்லவா? சூத்திரனைக் கூலி இல்லாமல் பார்ப்பனன் வேலை வாங்கலாம் என்று மனுதர்ம சாதிரம் சொல்லுகின்றதே. இது கடவுளின் கட்டளையாம். திராவிடச் சங்கம் என்றால் சூத்திரன் சங்கம் என்று தானே கருத்து. இதற்குத்தானே, இப்படிச் சொல்ல வெட்கப்பட்டுத்தானே பார்ப்பனரல்லாதார் சங்கம் என்றும் சொன்னோம். ஏன் இந்த இழிவான பெயர்கள் நமக்கு? பார்ப்பனன் வேண்டுமென்றால் தம் சங்கத்தைச் சூத்திரனல்லாதான் சங்கம் என பெயர் வைத்துக் கொள்ளட்டுமே. நாம் ஏன் நம்மைப் பார்ப்பனரல்லாதான் என்று அழைத்துக் கொள்ள வேண்டும்? நமக்குச் சொந்தப் பெயரில்லையா? நாம் திராவிடர்கள் அல்லவா? பிராமணன் உயர்வானவனென்று யஞ்யவல்யர், நாரதர், பராசரர் சொன்னது இன்று இந்து சட்டமாகக் காட்சியளிக்கின்றதே. சட்டத்திலே, சாதிரத்திலே, நடத்தையிலே, பிறவியிலே நாம் சூத்திரராயிற்றே. கடவுளாலே கொடுக்கப்பட்டது என்று சொல்லப்படும், இந்த சூத்திரப் பட்டத்தைத் தாங்கி நிற்பவர்கள் கஷ்டப்பட்டு வேலை செய்யும் தொழிலாளர்களாகிய திராவிடர்களல்லவா? நாம் எப்பொழுது இந்தச் சூத்திரப்பட்டத்தை ஒழிப்பது?

தொழிலாளிகளுக்கு எங்கள் கொள்கை தெரியுமா? கூலிகொடுப்பது, கூலி உயர்வது, போன பெறுவது அல்ல எங்கள் கொள்கை. ஆனால் தொழிலாளிகள் முதலாளிகளிடத்தில் பங்கு பெற வேண்டும். ரயில்வே தொழிலாளர்களென்றால் அவர்கள் அதன் முதலாளிகளிடத்தில் பங்கு பெற வேண்டும். மிஷினுடைய தேவைக்கு எப்படிக் கரியும் எண்ணெயும் உபயோகப்படுத்தப்படுகின்றதோ அதைப்போல தொழிலாளியின் உழைப்புக்குத் தகுந்தபடி செலவுக்குக் கொடுக்கப்படவேண்டும். கரியும் எண்ணெயும் எப்படி மிஷினுக்கு இன்றியமையாதவையோ அதைப்போல தொழிலாளிக்குக் கூலியும் இன்றியமையாதது. முதலாளி கணவனும் தொழிலாளி மனைவியுமாவார்கள். இவர்களுக்குப் பிறக்கின்ற பிள்ளைதான் லாபம். ஆகவே லாபம் என்பது இருவருக்கும் பொது. இதைப் போலவே, நிலத்திலே வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு ஒருபடி இரண்டு படி கூலி அதிகம் கிடைப்பதால் நாங்கள் மகிழ்ச்சியடைந்து விட மாட்டோம். வேலைக்குத் தகுந்த கூலி கிடைப்பதுடன் விளைவிலேயும், தொழிலாளர்களுக்கு மில்லில் பூமியில் பங்கு வேண்டும். எங்கள் திட்டம் நிறைவேறினால் யந்திரச் சாலை தொழிலாளர்களுக்கு வந்துவிடும். இதுதான் நியாயமான நீதியான ஆட்சிமுறை. இதில் யாரும் எந்தப் பஞ்சாயத்தும் செய்யத் தேவையில்லை. நாங்கள் பதவியேற்று மந்திரிகளாக வந்தால் வயது வந்த எல்லா மக்களுக்கும் ஓட்டுரிமை அளிப்போம்; கட்டாயக் கல்வியைக் கண்டிப்பாக அமலுக்குக் கொண்டு வருவோம்; சொத்துக்களில் லாபத்தில் யாவருக்கும் சமஉரிமை அளிப்போம்.

காங்கிரஸ் தோழர்களே, கம்யூனிஸ்ட் தோழர்களே! எங்களை ஏன் குறை சொல்லுகிறீர்கள். பிறவியிலே, மதத்திலே, கடவுளிலே இருக்கின்ற முதலாளித் துவத்தை ஒழிக்க நாங்கள் பாடுபடுகின்றோம். தனி ஒருவனுக்கு உணவில்லையேல் ஜெகத்தினை அழித்திடுவோம் என்று கம்யூனிட் தோழர்கள் சொல்லுகின்றார்கள். உற்பத்தியைக் கொடுக்கின்ற உலகத்தை ஏன் அழிக்க வேண்டும்? இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து கெடுக இவ்வுலகு இயற்றியான் என்று எங்கள் பொதுவுடைமைத் தலைவர் வள்ளுவர் பொன்னெழுத்துக்களால் பொறித்திருக்கின்றாரே, உணவில்லாத ஒருவனையும் படைத்து, உற்பத்தியைத் தருகின்ற உலகத்தையும் படைத்த அந்தக் கடவுளையல்லவோ அவர் ஒழிக்கச் சொல்லுகின்றார். கடவுள் வேண்டுமானால் நல்ல கடவுளாக இருக்கட்டுமே. எனதருமை வாலிபத் தோழர்களே! எங்கள் கொள்கைகளை உணருங்கள். இனி ஒரு கலகம்கூட வரக்கூடாது. வேண்டுமானால் பார்ப்பனர்களுக்குத் துணிவிருந்தால் எங்களை உதைக்கட்டும். கம்யூனிட் திராவிடத் தோழர்களே நீங்கள் ஒதுங்கி நில்லுங்கள். ஆதிதிராவிடர்கள் முஸ்லிம்கள் போராட்டம் ஆரம்பிக்கப் போகின்றார்கள். அந்தப் போராட்டத்திற்கு நீங்கள் உதவி புரியுங்கள். பூணூலும் உச்சிக்குடுமியும் போய்விடுமென்று பார்ப்பான் பயப்படுவான். பிறகு சண்டையே இருக்காது. உண்மையான நாட்டுப்பற்று சுயமரியாதைப் பற்றுடன் நான் சொல்லுகின்றேன். சூத்திரப்பட்டம் ஒழிய வேண்டுமென்றால் கருப்புச் சட்டையை அணியுங்கள். கருப்புச் சட்டையின் மூலம்தான் நமது இழிவை ஒழிக்க முடியும். உங்களால் முடிந்ததைச் செய்யுங்கள். சிந்தியுங்கள், கம்யூனிட் தோழர்களே எங்களை நம்புங்கள்.

--------------18.08.1946 அன்று கும்பகோணத்தில் மாலை பார்க்கில், தோழர் கே.கே.நீலமேகம் அவர்கள் தலைமையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பெரியார் ஆற்றிய சொற்பொழிவிலிருந்து..." குடிஅரசு" -19.10.1946

5 comments:

தமிழ் ஓவியா said...

உலகத் தலைவர் பெரியார் பற்றியும், தமிழர் தலைவர் பற்றியும் தினத்தந்தி தீட்டியுள்ள தலையங்கம்


இன்று காலை 11 மணிக்கு பிளஸ்-2 தேர்வு முடிவுகள் வெளியிடப் படுகின்றன. இந்த தேர்வை தமிழ் நாட்டிலும், புதுச்சேரியிலும் சேர்த்து 8 லட்சத்து 22 ஆயிரம் மாணவ-மாணவிகள் எழுதினர். இதில், 3 லட்சத்து 53 ஆயிரத்து 6 பேர்கள்தான் மாணவர்கள். 4 லட்சத்து 7 ஆயிரத்து 969 பேர்கள் மாணவிகள். 100 ஆண்டுகளுக்கு முன்பே பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார், பெண்கள் முன்னேற்றத்துக்காக மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கு, இப்போது நல்ல பலன் கிடைத்துக் கொண்டிருக்கிறது. "பெண்களின் உயர்வே நாட்டின் உயர்வு'' என்று அவர் அன்று விதை விதைத்துவிட்டு சென்றார். அந்த விதை முளைத்து செடியாகி, மரமாகி, இன்று நல்ல கனிகளைத் தந்து கொண்டிருக்கிறது. அவர் விதைத்து முளைத்த செடிகளுக்கு, பல தலைவர்கள் தண்ணீர் ஊற்றினர், உரமிட்டனர் என்பதையும் யாரும் மறுக்கவும் முடியாது, மறைக்கவும் முடியாது. அந்த பழத்தோட்டத்தின் காவல்காரராக திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி அதேவழியில் பெரியாரின் கொள்கைகளை உலகம் முழுவதிலும் பரப்பும் பணியும் போற்று தற்குரியது.

தேர்வு முடிவுகள் மகிழ்ச்சியும், வருத்தமும், சலிப்பும் கலந்த கலவையாக இருக்கலாம். சிலருக்கு நினைத்த மதிப்பெண்கள் கிடைத்து விட்டது என்று மகிழ்ச்சியைக் கொடுக் கலாம். சிலருக்கு எதிர்பார்த்த மதிப்பெண்கள் கிடைக்கவில்லையே என்று பலத்த ஏமாற்றத்தை தரலாம். ஆனால் எதையும் தாங்கும் இதயமாக, எல்லாவற்றையும் ஒன்றுபோல ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவத்தைக் கொண்டவர்களாக, நமது மாணவச் செல்வங்கள் இருக்க வேண்டும். எந்த மதிப்பெண்கள் பிளஸ்-2 தேர்வில் எடுத்தாலும், வளமான எதிர்காலத் துக்கு வழி இருக்கிறது. உயர்ந்த மதிப்பெண் கிடைத்தால்தான், ஒளி மயமான எதிர்காலம், மற்றவர்களுக்கு இனி அவ்வளவுதான் என்று சோர்ந்து விடக்கூடது. பெற்றோர்களும், உற் றோர்களும் அவர்களை சோர்வடைய வைத்துவிடக்கூடாது. பிளஸ்-2 மார்க் என்பது, வாழ்க்கையின் முடிவல்ல. எதிர்காலத்தின் தொடக்கமேதானே தவிர, அதுவே முடிவாகிவிட முடியாது. வாழ்க்கையை ஒரு சாலையாக கருதினால், இது சாலையின் முடிவல்ல, சாலையில் ஒரு வளைவுதான். பண்டித ஜவகர்லால் நேரு சொன்னதுபோல, இன்னும் போகவேண்டிய மைல்கள் ஏராளம். இந்தப் பரந்த உலகில் என்ன படிப்பு படித்தாலும், எல்லா வாய்ப்பு களும் இருக்கின்றன. இந்த ஆண்டு அய்.ஏ.எஸ் தேர்வில், கேரளாவைச் சேர்ந்த ஆனிஸ் கண்மணி ஜாய் என்ற நர்சு சிறப்பாக தேர்வு பெற்று இருக் கிறார். அடுத்த ஒருசில ஆண்டுகளில் இந்த நர்சம்மா, கலெக்டராக வலம் வரப்போகிறார். சிறு வயது முதல் டாக்டராக வேண்டும் என்று நினைத்து இருந்தார். பிளஸ்-2வில் போதிய மதிப்பெண்கள் கிடைக்கவில்லை. அதற்காக அவர் மனம் தளர்ந்து விடவில்லை. பி.எஸ்சி. நர்சிங் படித் தார். அய்.ஏ.எஸ். ஆவேன் என்று மன உறுதியுடன் படித்தார், அந்த சாதாரண விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த நர்சு. இன்று ஐ.ஏ.எஸ். தேர்வில் பெருமை யான வெற்றியைப் பெற்றுள்ளார்.

ஆக, இன்று தேர்வு முடிவு வந்தவுடன், அனைத்து மாணவர்களும், இனி நான் என்ன ஆவேன்? என்று ஒரு உறுதி எடுத்துக்கொள்ள வேண் டும். அப்துல்கலாம் சொன்னதுபோல கனவு காணுங்கள். அந்தக் கனவை நனவாக்க ஒரு இலக்கை நிர்ண யித்துக் கொள்ளுங்கள். அதை நோக்கி வேகமாகச் செல்லுங்கள். அதற்கு எல்லா படிப்புகளும் துணை செய்யும், எந்தப் படிப்பில், சேர்ந்தாலும், இன்று முதல் அந்தப் படிப்பில் முதல் இடத்தைப் பிடிப்பேன், வெற்றி பெறுவேன், உயர்ந்து நிற்பேன் என்று உறுதி எடுத்துக்கொள்ள வேண்டும். எந்தப் படிப்பும் சமுதாயத்தில் குறைந்தது அல்ல. ஆனிஸ் கண்மணியால் முடியும் என்றால், நிச்சயமாக என்னாலும் முடியும் என்று வைராக்கியம் கொள்ள வேண்டும். என்னால் முடியுமா? நான் அவ்வளவு உயரத்துக்கு போக முடியுமா? என்று மனதின் ஓரத்தில்கூட ஒரு கடுகளவு சந்தேகம் வந்து விடக்கூடாது. ஐ.ஏ.எஸ். அதிகாரி இறையன்பு அடிக்கடி ஆங்கிலத்தில் ஒரு வாசகம் கூறுவார். "வென் யூ ஆர் அப்ரெய்டு ஆப் பாலிங் டவுன், ஹவ் வில் யு கெட் அப் அண்டு வாக்''? என்பார். அதாவது கீழே விழுந்து விடுவோமோ என்று பயந்து கொண் டிருந்தால், எப்படி எழுந்து நடக்கப் போகிறாய்? என்பதுதான். இதுதான் மாணவர்களுக்குக் கூறும் அறிவுரை என்கிறார், இறையன்பு. எழுந்து ஓடுங்கள் வெற்றி உங்கள் காலடியில்!'

(நன்றி: தினத்தந்தி 22.5.2012)'

தமிழ் ஓவியா said...

மே 19,20 நாட்களில் மலேசியாவில் தமிழர் தலைவர் பங்கேற்ற நிகழ்ச்சிகள்


மலேசியாவில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி பங்கேற்ற நிகழ்ச்சிகள் வருமாறு:-

19.05.2012

காலை 10:30 மணி - சிங்கப்பூரில் இருந்து புறப்பாடு. உடன் சிங்கப்பூர் பெரியார் சமூக மன்ற தலைவர் கலைச்செல்வம்.
காலை 11:45 மணி - கோலாலம்பூர் விமான நிலையம். மலேசிய திராவிடர் கழக தேசிய தலைவர் பி.எஸ். மணியம், பொதுச்செயலாளர் கே.ஆர்.அன்பழகன், துணைப் பொதுசெயலாளர் பிரகாஷ், மு.சு.மணியம் மற்றும் கழக தொண்டர்கள் வரவேற்றனர்.

மதியம் ஒரு மணி - சீன உணவகத்தில் மதிய உணவு

மதியம் 2:30 மணி - தங்கும் விடுதியை அடைதல்

2:45 மணி - விழா நடைபெறும் அரங்கை சுற்றி பார்த்தார்

3 மணி முதல் 4 வரை - கழக பொறுப்பாளர்களுடன் கழக செயல்பாடுகள் பற்றி உரையாடல்

5 மணி வரை ஓய்வு.

6 மணி - உடல் நலமின்றி இருக்கும் முன்னாள் அமைச்சர் டத்தோ சுப்பிரமணியத்தின் இல்லத்திற்கு சென்று அவரின் உடல் நலத்தினை விசாரித்தார் (He spoke to his wife)

இரவு 7 மணி - முன்னாள் அமைச்சர் டத்தோ சாமிவேலு அவர்களுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு உரையாடினார்.
7:15 முதல் 8 வரை - மலேசிய வெளியுறவுத்துறை துணை அமைச்சர் டத்தோ கோகிலனுடன் சந்திப்பு

8 மணிக்கு விழா அரங்கம் சென்றடைந்தார். 11:50 வரை அரங்கத்தில் இருந்தார்.

தலைமை உரை, புத்தக வெளியீடு, பெரியார் பெருந்தொண்டர்களுக்கு பாராட்டு. வந்திருந்த முக்கிய பிரமுகர்களுடன் உரையாடல். கழக பொறுப்பாளர்களுடன் பேச்சு, குடும்பத்தினருடன் புகைபடம் எடுத்தல். நள்ளிரவு அறையை அடைந்தார். கழக பொறுப்பாளர்களுடன் உரையாடிய பிறகு சுமார்1 மணிக்கு உறங்க சென்றார்.

20.05.2012

9 மணி கழக பொறுப்பாளர்களுடன் காலை உணவு. கழக கட்டத்தினை எவ்வாறு மீட்டு எடுப்பது, கழக நிகழ்ச்சிகளை எவ்வாறு நடத்துவது, பொது மக்களிடம் பெரியாரின் கொள்கைகளை எவ்வாறு கொண்டு சேர்ப்பது என்பதை பற்றி ஆசிரியர் வகுப்பு எடுத்தார்.

10:30 மணி முதல் ஒரு மணி வரை கோலாலம்பூரில் இருக்கும் கழக கட்டத்தினை சென்று பார்த்தல். புத்தக கடை செல்லுதல், பழனி புள்ளையன் இல்ல நிகழ்ச்சிக்கு தொலைபேசி மூலம் வாழ்த்து தெரிவித்தல்.

மதியம் ஒரு மணி மதிய உணவு. லோட்டஸ் உணவகம். உணவக உரிமையாளர்களும், அங்கு பணி புரியும் ஊழியர் களும் தமிழர் தலைவரை அன்போடு உபசரித்தனர்.

மதியம் 2:30 மணிக்கு அறைக்கு திரும்பினார்.

அரை மணி நேர ஓய்விற்கு பின்பு 3 மணி அளவில் மலேசிய திராவிடர் கழக தேசிய தலைவர் பி.எஸ்.மணியம் இல்லத்திற்கு சென்றார். 4 மணி நெகிரி செம்பிலாமன் மாநிலத்தில் உள்ள மங்தின் என்ற ஊருக்கு பயணம். அங்கு கெய்ரோ தமிழ் பள்ளியில் தேர்வில் நன்கு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு பரிசு அளிக்கும் விழா. செல்லும் வழியில் சாலையின் முன் செல்லும் வாகனத் தினை கூட பார்க்க முடியாத அளவிற்கு கடும் மழை.

5 மணி முதல் இரவு 7 மணி வரை விழா நிகழ்வு:

7 மணிக்கு மலாக்கா மாநிலம் ஜாசின் நகருக்கு பயணம். சுமார் 9 மணி அளவில் விழா நடைபெறும் அரங் கிற்கு சென்றார்.

9 முதல் 11 வரை விழா.

11 மணிக்கு மலாக்கா நகருக்குப் பயணம்.

11:30 மணிக்கு டத்தோ பாலகிருஷ்ணனுடன் இரவு உணவு.

இரவு 12:15 மணிக்கு சிங்கப்பூருக்கு சாலை வழியாக பயணம்.
அதிகாலை 3:15 மணி அளவில் வீடு திரும்பினார்.22-5-2012

தமிழ் ஓவியா said...

கிரிக்கெட் சூதாட்டமோ சூதாட்டம்!


புதுடெல்லி, மே 22- அய்பிஎல் டி20 கிரிக்கெட் போட்டியில் ஏராளமான கறுப்புப் பணம் புழங் குவதாக வெளியாகியுள்ள தகவல் பற்றி விரிவான விசாரணை நடத்த நிதி அமைச்சகத்தை கேட்டுக்கொண் டுள்ளதாக விளையாட்டுத் துறை அமைச்சர் அஜய் மாக்கன் கூறி யுள்ளார். மக்களவையில் நேற்று பேசிய அஜய் மாக்கன் இது குறித்து கூறியதாவது:
அய்பிஎல் போட்டியில் ஒப்பந்தம் செய்யப்படும் உள்ளூர் வீரர்களுக்கு, ஒப்பந்தத் தொகைக்கு மேலாக கணக்கில் வராத கறுப்புப் பணம் ஏராளமாகக் கொடுக்கப்படுவதாக டிவி சேனல் ஒன்று தகவல் வெளி யிட்டது. இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி, மத்திய நிதித்துறையின் வருவாய் துறை செயலருக்கு கடந்த வாரம் கடிதம் அனுப்பியுள்ளேன். மேலும், இந்த சம்பவம் பற்றி அமலாக்கப் பிரிவு இயக்குநரகம் விரிவான விசா ரணை நடத்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ளேன்.
மேலும், ரூ.1,077 கோடிக்கு அன் னிய செலாவணி மோசடி நடந் திருப்பது பற்றி இந்திய கிரிக்கெட் வாரியம் (பிசிசிஅய்) மற்றும் இந்தியன் பிரிமியர் லீக் (அய்பிஎல்) நிர்வாகி களுக்கு இதுவரை 19 தாக்கீது அனுப்பப்பட்டுள்ளது. மேலும், இந்த அமைப்புகளை தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கொண்டுவர தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அய்பிஎல் போட்டியில் நடக்கும் முறைகேடுகள் பற்றி ஒவ்வொரு நாளும் புதுப் புது தகவல்கள் வெளியாவது, உலக அளவில் நமது நாட்டுக்கு அவப் பெயர் உண்டாக் குவதாக உள்ளது.
இவ்வாறு அஜய் மாக்கன் கூறினார்.22-5-2012

தமிழ் ஓவியா said...

ஆம், அதே திருத்துறைப் பூண்டி வட்டத்தில்தான்


- மின்சாரம் -

ஆம், அந்தத் திருத்துறைப் பூண்டியில்தான் வரும் 27ஆம் தேதி வட்டார மாநாடு - வேதாரண்யம் ஆயக் காரன்புலத்தில் நடைபெற உள்ளது.

திராவிடர் இயக்க நூற்றாண்டை ஒட்டி, தமிழ் நாடெங்கும் திராவிடர் கழகம் மண்டல மாநாடுகளை நடத் திக் கொண்டு வருகிறது; தஞ்சாவூர், நாகர்கோவில், துறையூர், சிதம்பரம் என்று அடுக்கடுக்காக நடைபெற்றும் உள்ளன - இன்னும் நடக்கவும் உள்ளன.

நவம்பர் 29ஆம் நாளன்றோ அன்னை மணியம் மையார் அவர்களை ஈன்றுப் புறந்தந்த வேலூர் மாநகரில் புத்துலகப் பெண்கள் மாநில மாநாடு வரலாற்று மகுடங் களைத் தரிக்கும் வகையில் விரிவான ஏற்பாடுகளுடன் நடந்திட உள்ளது (அதுபற்றி பின்னர் எழுதுவோம்)

இதற்கிடையில் திருத்துறைப் பூண்டி வட்டார மாநாடு வரும் 27ஆம் தேதியன்று.

நீதிக்கட்சி, சுயமரியாதை இயக்கம் காலம் தொட்டு இந்தப் பகுதி தன்மானக் கழனியாகச் செழித்து வளர்ந்ததுண்டு.

எத்தனை எத்தனையோ இயக்க வீரர்கள் வீறு நடைபோட்ட கோட்டம் இப்பகுதி. நூறு வயதைக் கடந்து 101அய் முத்தமிடும் எல்லோராலும் அண்ணன் என்று பாசத்தோடு அழைக்கப்படும் ஆயக்காரன்புலம் மானமிகு க.சுந்தரம் அவர்களின் பிறந்த நாள் விழாவும், இணைந்து இம்மாநாடு நடைபெற உள்ளது.

வேதாரண்யத்தில் வாழையடி வாழையாகத் தன்மானத் தருவாக வளர்ந்த குடும்பத்தின் சிறப்புமிக்க சீலர் மா.மீ என்று அன்போடு அழைக்கப்படும் மீனாட்சிசுந்தரம் அவர்களுக்கும் பாராட்டு!

எதற்காக? அவ்வூரின் மய்யப் பகுதியில தந்தை பெரியார் சிலையையும், பெரியார் படிப்பகத்தையும் நிறுவி, அவை என்றென்றைக்கும் தடைபடாது பகுத்தறிவுப் பாடங்களை நடத்திக்கொண்டே இருக்க வேண்டும் என்பதற்கான ஏற்பாடுகளையும் செய்து வைத்துள்ள அந்த ஏந்தலைப் பாராட்டாமல் இருக்க முடியுமா?

அரசியலில் தி.மு.க.வாக இருந்தாலும் அடிப்படையில் தன்மான இயக்கத்தின் தளகர்த்தர் அவர். எப்பொழுதும் அந்தக் கறுப்புத் துண்டுதான் தோளில், தந்தை பெரியார் உருவம் பொறித்த மோதிரம்தான் விரலில் - அவர்தான் நம் மா.மீ.
திருத்துறைப் பூண்டி என்கிறபோது அந்த 1936 அய் மறக்க முடியுமா? 1936 மார்ச் 21, 22 நாட்களில் அவ்வூர் அல்லோலக கல்லோலப்பட்டதுண்டே!

தந்தை பெரியார் பொதுவுடைமைத் தத்துவத்தைக் கைவிட்டுவிட்டாராம் - ஜரிகைக் குல்லா ஜஸ்டிஸ் கட்சிக் காரர்களோடு கைகுலுக்கி விட்டாராம் - போச்சு, போச்சு எல்லாம் போச்சு என்று பொழுதுபோக்கு அரசியல் வாதிகள் சலாம் வரிசை ஆடிய அந்தக் கால கட்டத்தில் நடைபெற்ற - தஞ்சை வட்ட 5 ஆவது சுயமரியாதை மாநாடு அது. அந்த மாநாட்டில் அறிவுலக ஆசான் அவர்கள் அதிதீவிரவாதம் பேசுபவர்களுக்கு நன்கு சவுக்கடி கொடுத்தார்.

அண்மைக் காலத்தில் கூட ஜீவாவைப் பற்றி எழுதி வந்த சில அவசரக்குடுக்கைக்காரர்கள் அய்யாவைச் சீண்டியதுண்டு. அன்றே அந்த அரிய அறிவு விளக்கம் கொடுத்து இயக்கத்தையும் லட்சியத்தையும் காப் பாற்றினார் பெரியார் என்பதுதான் உண்மை. பொதுவுடைமைப் பூங்காவான ருசியாவிற்குத் தந்தை பெரியார் சென்று வந்த நிலையில், சமதர்மத் திட்டத்தினை வகுத்துப் பிரச்சாரம் செய்தார். இன்னும் சொல்லப் போனால் ருசியா செல்லு முன்பே மார்க்ஸ்-ஏங்கல்சின் அறிக்கையைத் தமிழில் மொழிபெயர்த்து முதன் முதலாக இந்தியத் துணைக் கண்டத்திலேயே வெளியிட்டவர் வெண்தாடி வேந்தர்.

1933இல் இந்தியாவில் கம்யூனிஸ்டுக் கட்சியைத் தடை செய்ததைத் தொடர்ந்து, சுயமரியாதை இயக்கத் தையும் தடை செய்ய பிரிட்டீஷ் அரசு வாயைப் பிளந்து கொண்டு நின்ற நிலையில், குறைந்த பட்சம் சுயமரியாதை இயக்கக் கொள்கையையாவது பிரச்சாரம் செய்யும் வாய்ப்பினை இழந்து விடக் கூடாது என்ற தொலை நோக்கில் தந்தை பெரியார் எடுத்த அந்த முடிவைத்தான் சிலர் குறை கூறினர்.

திருத்துறைப் பூண்டி மாநாட்டில் அதற்குத் தந்தை பெரியார் அவர்கள் அறிவார்ந்த முறையில் பிரத்தியட்சக் கண்ணோட்டத்தோடு பதில் கூறினார்.

தமிழ் ஓவியா said...

நமக்குப் பார்ப்பான், பணக்காரன், அரசாங்கம் என்ற மூன்று எதிரிகள் உண்டு. மூன்று பேரையும் ஒரே காலத்தில் ஒழிக்கச் சட்டம் குறுக்கிடுமானால், முறையாக ஒவ் வொன்றாக ஒழிப்போம்! (குடிஅரசு, 29.3.1936) என்றார்.

எந்த ஒரு கட்சிக்கும் அல்லது அமைப்புக்கும் இப்படி ஒரு நெருக்கடி வருவதும், அந்த கால கட்டத்தில் புத்திசாலித்தனமான சில முடிவுகளை எடுப்பதும் தவிர்க்க முடியாததுதானே!

தந்தை பெரியார் அன்று எடுத்த முடிவினால்தானே சுயமரியாதைக் கொள்கைகள் பட்டிதொட்டிகளில் எல்லாம் பரவி, திராவிடர் இயக்கமாக வளர்ச்சி பெற்று, தமிழ் நாட்டின் வரலாற்றிலேயே ஜாதி ஒழிப்பு, மூடநம்பிக்கை ஒழிப்பு, பெண்ணடிமைத் தகர்ப்பு, சமூக நீதி என்கிற விளைச்சலை - கண்டு முதல்களைக் காணமுடிகிறது - மறுக்க முடியுமா?

தந்தை பெரியார் அவர்களின் பெருந்தன்மையும் பொறுப்புணர்வும் எந்தத் தகைமையில் ஒளிவிட்டன என்பதற்கு ஒரே ஒரு எடுத்துக்காட்டுப் போதுமே!

இந்த ஆட்சி ஏன் ஒழிய வேண்டும்? என்று குடி அரசு இதழில் தந்தை பெரியார் எழுதிய தலையங்கத் துக்காக தந்தை பெரியாருக்கு 9 மாத சிறைத் தண்டனை, 300 ரூபாய் அபராதம் - குடிஅரசு வெளியீட்டாளர் என்ற முறையில் அவரின் தங்கை எஸ்.ஆர். கண்ணம்மாள் அவர்களுக்கு ஆறுமாதத் தண்டனை ரூபாய் 300 அபராதம்.

இதனைத் தொடர்ந்து தோழர் ப.ஜீவானந்தம் அவர்கள் பகத்சிங்கின் நான் ஏன் நாத்திகனானேன்? என்ற நூலை மொழி பெயர்த்ததற்காக ஜீவா, வெளியிட்ட தற்காக தந்தை பெரியார் அவர்களின் அண்ணன் ஈ.வெ.கிருஷ்ணசாமி ஆகியோர் மீது இந்தியன் பினல் கோட் 124-ஏ பிரிவின்படி வழக்குத் தொடரப்பட்டு சிறைபோக நேரிட்டது.

ஈ.வெ.கி. அவர்களும், தோழர் ஜீவா அவர்களும் மன்னிப்புக் கேட்டுக் கொண்ட நிலையில் வழக்குக் கைவிடப்பட்டது.

ஜீவா ஏன் மன்னிப்புக் கேட்டார் என்று யாரும் பேசுவ தில்லை. பெரியார் சமதர்மத்தைக் கைவிட்டார் என்று பேசும் தீவிரவாதிகள் இன்று போல் அன்றும் இருந்தனர். அதன் எதிரொலிதான் அந்த 1936 திருத்துறைப் பூண்டி மாநாடு.

இதில் கவனிக்கத் தக்கது. இரண்டு தோழர்களும் மன்னிப்புக் கேட்டு விடுதலை அடைந்தார்கள் என்பதற்கு அவர்களே முழு ஜவாப்தாரிகள் அல்லர் என்பதையும், பெரும்பான்மையான அளவிற்கு நானே ஜவாப்தாரி என்பதையும் முதலில் தெரிவித்துக் கொள்கிறேன் என்றாரே தந்தை பெரியார் - இதில்தானே உண்மையான வீரமே அடங்கி இருக்கிறது.

திருத்துறைப்பூண்டி என்கிறபோது, ஓர் இயக்கம் - அதன் லட்சியம் - சோதனை - அதனைக் கடந்து மீண்டும் எழுவது என்பவற்றிற்கெல்லாம் பாடம் சொல்லும் சங்கதிகள் நிரம்பவே உண்டு.

வாருங்கள் தோழர்களே! வரலாறு சொல்லும் ஊருக்கு வாருங்கள் - வட்டார மாநாடு என்றாலும், வளமான கொள்கை முழக்கங்கள் உண்டு சிந்தனை விருந்தும் உண்டு வேதாரண்யம் - ஆயக்காரன்புலம் நோக்கி சிறகடித்து வாரீர்! வாரீர்!!