நாம் இங்கு கூடி இருப்பது நண்பர் திரு. நட்சத்திரம் அவர்களின் புதுமனை புகுவிழாவின் பொருட்டு குழுமி இருக்கின்றோம். இப்படி புதுமனை புகுவது எல்லோரும் செய்கின்றார்கள். மற்றவர்கள் செய்வதற்கும் நண்பர் நட்சத்திரம் செய்வதற்கும் ரொம்ப வித்தியாசம் உள்ளது.
சாதாரணமாக ஒரு புதுமனையில் வாசம் செய்ய முற்படுபவர்கள் இது மற்றவர்களுக்குத் தெரியும்படி செய்ய வேண்டியுள்ளது. இப்படிப் பட்ட நிகழ்ச்சி இல்லாமல் இருந்தால் ஜனங்கள், இவர் பழைய வீட்டில் இருப்பதாகத்தான் எண்ணுவார்கள். திருமணம் கூட இப்படித்தான். இன்னார் இதுவரை தனியாக இருந்தார்கள். இதுமுதல் இருப்பவரும் சேர்ந்து வசிக்கின்றார்கள் என்பதை மற்றவருக்கு உணர்த்தவே யாகும். ஒருவர் புதுக் கடை வைத்தால் கூட விளம்பரப்படுத்தி அனைவருக்கும் அழைப்புக் கொடுத்து திறப்பது விளம்பரத்துக்காகவே தான் இது மிகவும் அவசியமாகும்.
இம்மாதிரி காரியங்களுக்கு ஏராளமாக செலவு செய்வதைக் கூட நான் கண்டித்து வருகின்றேன். இப்படிப்பட்ட நிகழ்ச்சியைக் கூட மதத்தோடு புகுத்திப் பிணைத்து விட்டார்கள். இப்படி வீடு அமைக்க நிலை இப்படி இருக்க வேண்டும். மனை இப்படி இருக்க வேண்டும், ஜன்னல் இப்படி இருக்க வேண்டும் என்று கூறி இதற்காக மனை சாஸ்திரம் என்ற ஒன்றை ஏற்படுத்தி உள்ளார்கள். நம்முடைய சாஸ்திரம் கிறிஸ்துவனுக்கு, முஸ்லிமுக்குப் பொருந்தாது. அவன் சாஸ்திரம் நமக்குப் பொருந்தாது என்பார்கள். எல்லோருக்கும் வாழக் கூடியதாக ஒன்றை நிர்ணயிக்கும் போது ஏன் இப்படிப்பட்ட முட்டாள்தனம்.
நாள், நட்சத்திரம் பார்த்து அஸ்திவாரம் போடுவது, முகூர்த்தம் பார்த்து நிலை வைப்பது இப்படி எல்லாம் செய்கின்றனர். நான் 40, 50க்கு மேல் வீடுகள், கட்டிடங்கள் கட்டி இருப்பேன். இன்னும் கட்டிடம் கட்டிக் கொண்டுதான் இருக்கின்றேன். ஒன்றுகூட நாள், நட்சத்திரம், முகூர்த்தம் பார்த்து கட்டவே இல்லை. எல்லா வீடுகளும் எல்லாமும் நல்ல நிலையில்தான் உள்ளன. ஆனால், நாள், நட்சத்திரம் பார்த்து கட்டிய எங்கள் சொந்தக்காரர்கள் வீடுகள் இன்று கடனுக்குப் போனதையும் காண்கின்றேன். எனவே, இப்படிப்பட்ட செய்கைகள் எல்லாம் மிக மிக முட்டாள்தனமானதாகும்.
எங்கள் இயக்கம் சொல்லுவது எல்லாம் மனிதன் பகுத்தறிவுப்படி நடக்கணும். முட்டாள்தனமாக அர்த்தமற்ற சடங்குகள் செய்யக் கூடாது என்பது தான். இப்படிப்பட்ட சடங்குகள் செய்து முட்டா ளாக, ஓட்டாண்டியாக ஆனவர்கள்; எல்லாம் நாம்தான் இதனால் பலன் அடைந்து வருபவன் எல்லாம் பார்ப்பானேயாகும். அரசாங்கம் கூட முட்டாள்தனமாக கப்பல் கட்டிவிட வேண்டுமானால் கூட நாள், நட்சத்திரம் பார்த்து தேங்காய் உடைத்து விடுகின்றான். பார்ப்பான் ஆதிக்கம் இருப்பதால் இப்படி செய்கின்றார்கள்.
தோழர்களே, இப்படி பகுத்தறிவுப்படி இந்த விழாவை ஏற்படுத்திய நண்பர் நட்சத்திரம் அவர்களை நாம் பாராட்டி யாக வேண்டும். இந்த புதுமனையில் திருவள்ளுவர் படத்தை திறந்து வைத்துள்ளார். இது மிகவும் புத்திசாலித்தனமான செய்கையாகும். இல்வாழ்க்கையைப் பற்றி திருவள்ளுவர் சிறப்பித்துக் கூறியுள்ளார். இப்படிப்பட்ட படம் இல்லாமல் சிவன் படம், விஷ்ணு படம், காளி படம் போன்றவைகளை வைத்தால் என்ன பிரயோசனம்? வீடுகளை அலங்கரிக்க படங்கள் வைக்க வேண்டும் என்று கருதினால் அறிவுக்குப் பொருத்தமான இதுபோன்ற படங்களை வைக்க வேண்டும்.
எங்களுக்கு வாழ்த்தில் நம்பிக்கையில்லை. வாழ்த்தில் நம்பிக்கை வைத்து வாழ்த்து கண்டு சந்தோஷப்பட்டால் வசவு கண்டு, விசனப்படவும் வேண்டுமே. நாங்கள் ஆசைப்படுவதெல்லாம், நண்பர் நட்சத்திரம் அவர்கள் எப்படி மூட நம்பிக்கையை ஒழித்து இப்படி அறிவுக்குப் பொருத்தமான காரியத்தை செய்துள்ளாரோ, அதுபோலவே மேலும் மேலும் நடந்து பொதுத் தொண்டுக்கும் உதவ வேண்டும் என்பதே என்று கூறி முடித்தார்.
---------------------18.7.1962 அன்று வள்ளியூர் ஸ்டார் இல்லத் திறப்பு விழாவில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய பேருரை - "விடுதலை" 28.7.1962
1 comments:
அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை என்னவாயிற்று?
தமிழ்நாடு சட்டப்பேரவையில் இந்து சமய அற நிலையத்துறை மானியக் கோரிக்கை எண் 47 பற்றிய கொள்கை விளக்கக் குறிப்பு (பக்கங்கள் 93) அத் துறை அமைச்சர் மாண்புமிகு எம்.எஸ்.எம்.ஆனந்தன் அவர்களால் வைக்கப்பட்டது.
93 பக்கங்களைக் கொண்ட கொள்கை அறிக்கை யில் அனைத்து ஜாதியினருக்குமான அர்ச்சகர் உரிமை சட்டம் பற்றி ஏதாவது ஓரிடத்திலாவது குறிப்பிடப்பட்டுள்ளதா என்று துருவித் துருவிப் பார்த்தும் ஏமாற்றம்தான் மிச்சமானது.
இதற்குமுன் எம்.ஜி.ஆர். அவர்கள் முதலமைச் சராக இருந்தபோது இந்து அறநிலையத் துறை கொள்கைக் குறிப்பில் கீழ்க்கண்டவாறு குறிப்பிடப் பட்டிருந்தது.
சாதிப் பாகுபாடற்ற ஆகமப் பயிற்சிப் பள்ளி ஆரம்பித்து, திருக்கோயில் அர்ச்சகராகப் பயிற்சி பெற விரும்புகிறவர்கட்கு இந்த ஆண்டில் சாதிப் பாகுபாடு இன்றி பயிற்சி அளிக்க அரசு முடிவுசெய்துள்ளது.
(10.4.1984 அன்று தமிழ்நாடு சட்டப் பேரவையில் இந்து அறநிலையத்துறை மானியக் கோரிக்கையின் போது வைக்கப்பட்ட கொள்கைக் குறிப்புகள், பக்கம் எண்.20, பத்தி 24)
9.4.1992 அன்று தமிழ்நாடு சட்டப்பேரவையில் இந்து அறநிலையத்துறை மானியக் கோரிக்கையின் மீது அன்றைய தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு செல்வி ஜெயலலிதா உரையாற்றுகையில் குறிப்பிட்ட தாவது:
தமிழ்நாடு அரசு சார்பில் திறக்கப்பட உள்ள வேதாகமக் கல்லூரியில் வேதங்கள், ஆகம சாஸ் திரங்கள், உபநிடதங்கள், பன்னிரு திருமுறைகள், மற்றும் நாலாயிர திவ்யப் பிரபந்தங்கள் ஆகியவற்றைக் கற்பிப்பதற்கான பாடத்திட்டங்களையும், பிரிவுகளையும் உருவாக்குவது பற்றி 2.3.1992 அன்று நடைபெற்ற கோயில் நிர்வாக வாரியக் கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டது. இது குறித்த ஆலோசனைகளையும் வழங்குமாறு வாரிய உறுப்பினர்களும், சமயச் சான்றோர்களும் கேட்டுக் கொள்ளப்பட்டிருக்கின்றனர்.
இந்தக் கல்லூரியை அமைப்பதற்கான நிலம் மற்றும் நிதி உதவி அளிக்க சில பெரியோர்களும் முன் வந்திருக்கின்றனர் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தக் கல்லூரியை அமைதி சூழ்ந்த இடத்தில், ஆன்மிகத்துக்குத் தகுந்த இயற்கைச் சூழலில் அமைத்திட வேண்டும் என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது. அந்த அடிப்படையில் இதற்குத் தேவைப்படும் 40 ஏக்கர் நிலத்தையும் தேர்வு செய்யும் பணி நடைபெற்று வருகிறது.
தமிழகத்தில் கல்வி நிறுவனங்களில் தற்போது பின்பற்றப்பட்டு வரும் இட ஒதுக்கீட்டு முறை இந்தக் கல்லூரிகளிலும் பின்பற்றப்படும். இட ஒதுக்கீட்டு முறை அதாவது ஆதிதிராவிடர்களுக்கு 18 விழுக்காடு இடங்களும், பழங்குடியினருக்கு ஒரு விழுக்காடு இடங்களும், பிற்படுத்தப் பட்டோருக்கு 30 விழுக்காடு இடங்களும், மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு 20 விழுக்காடு இடங் களும் ஒதுக்கப்படும் என்பதை மீண்டும் தெளிவு படுத்த விரும்புகிறேன் என்று அன்று பேசிய முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாதான் இப்பொழுதும் முதலமைச்சராக இருக்கிறார்.
1991-1996 காலகட்டத்தில் இவர் முதலமைச்சராக இருந்தபோது திருச்சி மாவட்டம் கம்பரசன்பேட்டை யில் அர்ச்சகர் பயிற்சி தொடங்கப்பட்டு, அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் பயிற்சி அளிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.
இந்தப் பிரச்சினைக்காக 1970 ஜனவரி 26 ஆம் நாள் கோயில் கர்ப்பக்கிரக நுழைவுப் போராட்டம் தொடங்கப்படும் என்று தந்தை பெரியார் அறிவித்த நிலையில், அன்றைய முதலமைச்சர் மாண்புமிகு கலைஞர் அவர்களின் தலைமையிலான ஆட்சி. தந்தை பெரியார் அவர்களின் பிள்ளைகளான நாங்கள் ஆட்சி செய்யும்போது தந்தை பெரியார் போராட்டத்தில் ஈடுபடுவதா? என்று கூறி இதற்கான மசோதா ஒன்று ஒருமனதாக தமிழ்நாடு சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்டது (2.12.1970)
பார்ப்பனர்களின் சூழ்ச்சிகளால் அவ்வப்பொழுது உச்சநீதிமன்றத்தால் தடுக்கப்பட்டு வருகிறது.
இந்தப் பிரச்சினைக்கு தி.மு.க., அ.தி.மு.க., இரண்டு கட்சிகளும் ஆட்சியில் இருந்த நிலையில் ஆதரவு தெரிவிக்கப்பட்டு, செயல்பாட்டிலும் இறங்கப் பட்டது.
இந்த நிலையில் இந்த மிக முக்கியப் பிரச்சினை யில் இந்து அறநிலையத்துறை கொள்கை விளக்கக் குறிப்பில் முழுக்க முழுக்க நிராகரிக்கப்பட்டது ஏன்? என்பதுதான் நமது கேள்வி.
இதன் மீது எதிர்க்கட்சி உறுப்பினர்களும் வலியுறுத்தவேண்டும். சி.பி.எம். உறுப்பினர் பேசி இருப்பது வரவேற்கத்தக்கது. சம்பந்தப்பட்ட அமைச்சர் மற்றும் முதலமைச்சர் அவர்களும், பதில் உரையிலாவது உகந்த வகையில் அறிவிக்க வேண்டும் என்றும் வலியுறுத்துகிறோம். 9-5-2012
Post a Comment