மதத்திற்காகச் சண்டையிட்டு மாளும் மனிதர்களைத் தியாகிகள் என்று வருணித்து அடிப்படை வாத, தீவிரவாத, பயங்கரவாதச் செயல்களுக்கு ஆள் பிடித்து வருகிறார்கள். ரிச்சர்டு டாகின்ஸ் கூறுவது போல, ஒன்றும் அறியாதவர்கள் இதனை நம்பி, தியாகி ஆகி, எளிதில் சொர்க்கம் போகலாம் என்று மனித குண்டுகளாக மாறுகிறார்கள். (முஜாஹிதீன், அல்கொய்தா போன்ற பயங்கரவாத அமைப்புகள் இப்படித்தான் ஆள் சேர்க்கிறார்கள். இந்து மதத்தில் யக்ஞம் (வேள்வி) நடத்துவதும் அதில் விலங்குகளைப் போட்டு பொசுக்குவதும் எதற்காக என்று கேட்டால், அவை சொர்க்கம் போகின்றன எனப் பித்தலாட்டம் பேசினார்கள். அப்போதுதான் சார்வாகர்கள் (வேத கால நாத்திகர்கள்) கேட்டார்கள் உங்கள் பெற்றோரைப் போட்டுப் பொசுக்கினால், அவர்களும் சொர்க்கம் போவார்களே! என்று. இதே கேள்வியைத் தூண்டிவிடும் மதத்தலைவர்களைப் பார்த்துக் கேட்கவேண்டும்.
இம்மாதிரியான நிலை ஆப்கானிஸ்தான் நாட்டில் நிலவுகிறது. 1983 முதல் சூடான் நாட்டில் தொடர்ந்து நடக்கிறது. இந்நாட்டின் மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்கினர் முஸ்லிம் அல்லாதவர்கள், என்றாலும் இசுலாமியச் சட்டம் அமல்படுத்தப்பட்டதால் அவர்கள் கொடுமைப்படுத்தப்பட்டு 5 லட்சம் பேர்களுக்கு மேல் கொல்லப்பட்டுள்ளனர். இந்தோனேஷியாவிலும் இதே கதை. 1965 முதல் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை சுமார் 4 லட்சத்திற்கும் மேலே. மனிதர்களின் காதுகளை அறுத்து மாலையாகக் கழுத்தில் அணிந்து கொண்டு வரும் முசுலிம் போராளிகளைப் பற்றி கார்டியன் வார ஏடு தன் 23.9.1990 இதழில் எழுதியது.
அய்ரோப்பா ஆனாலும் ஆசியா ஆனாலும், கிறித்துவர்கள் ஆனாலும், முசுலிம்கள் ஆனாலும், பயங்கரமான கொடுமைகளைச் செய்தவர்களே! ஆனால், அதே நேரத்தில், அதே பகுதிகளில் வாழும் ஆயிரக்கணக்கான நாத்திகர்கள் அப்பழுக்கற்ற வாழ்க்கையை நடத்துவதோடு தம் சகமனிதர்களின் (எந்த நம்பிக்கை கொண்டவர்கள் ஆனாலும்) நல வாழ்வுக்காக உழைக்கும் உன்னத நிலையில் உள்ளனர் என்பதை உணர்கிறேன்.
இசுலாமில் நிறைய கடமைகள் - முடிவற்ற கடமைகள்- கடைசிவரை கடைப்பிடிக்கவேண்டிய கடமைகள்- கடவுளுக்காகச் செய்யப்படவேண்டிய கடமைகள் - அறிவுக்கெட்டாத கடவுளால் விதிக்கப்பட்ட கடமைகள்- மனிதர்களால் கடைப்பிடிக்கப்பட்டே தீரவேண்டிய கடமைகள் அப்படிச் செய்யாவிட்டால் அவற்றிற்காகப் பதில் சொல்லித் தீர வேண்டிய (அதாவது தண்டனை அனுபவிக்க வேண்டிய) கடமைகள் ஏராளமாக உள்ளன. ஏன் அந்த நிலை? இந்த மதத்தின் தொடக்க காலத்தில், இறைத் தூதராகவும் அரசியல் வாதியாகவும் செயல்பட்டு ஒரு புதிய சமுதாயத்தைக் கட்டியதோடு ஒரு அரசையும் நிறுவினர். இந்த அரசிலிருந்து மதம் பிரிக்கப்படாமல் ஒன்றாக இருந்ததுதான் இதற்குக் காரணம்.
மாத்யூ எழுதிய பைபிளில் (22.-17) சீசருக்குத் (அரசன்) தொடர்பானவற்றைக் கடவுளுக்குத் தொடர்பானவற்றை சீசருக்கும் கடவுளுக்குத் தொடர்பானவற்றைக் கடவுளுக்கும் செய்யவேண்டும் எனக்கட்டளையிடப்பட்டுள்ளது. அதாவது அரசும் மதமும் தனித்தனி. அதனால் முகமது நபியின் அரசோடு மதமும் இணைந்தே இருந்தது. அதனால் முசுலிம்களின் அன்றாட வாழ்க்கை முறை (மார்க்கம்)யான சன்னா (Sunna) என்பதே குர் ஆன் கருத்துகளின் அடிப்படையிலேயே அமைந்துள்ளது. இசுலாமியச் சட்டங்களும் குர்ஆன்படியேதான். இவற்றிற்கு விளக்கம் கூறும் பொறுப்பை ஏற்றுக் கொண்டவர்கள் ஃபகிஹ் (Faqih) எனப்பட்டார்கள்.
ஆளாளுக்கு விளக்கம் கொடுக்க முற்பட்டு, இன்றைய அளவில் நான்கு பேர்களின் விளக்கங்கள் மட்டுமே நிலை பெற்றுள்ளன. பழைமையான இசுலாமி எனப்படும் சன்னி பிரிவில் இந்த நான்குமே சமமாகக் கருதப்படுகின்றன.
(1) மாலிக் இப்ன் அப்பாஸ் எழுதியவை முவட்டா (Muwatta) எனப்படும், அவை ஆப்ரிக்க நாடுகளில் உள்ள முசுலிம்களால் கடைப்பிடிக்கப்படுகின்றன. ஆனாலும் எகிப்தின் கீழ் பகுதி, ஜான்சியார், தென் ஆப்ரிக்காவில் பின்பற்றுவோர் இல்லை.
(2) ஈராக்கில் பிறந்த அபு அனீபா என்பவரின் விளக்கங்கள் ஹனிபி எனப்படுகின்றன. இவை இந்தியா, துருக்கி ஆகிய நாடுகளில் பின்பற்றப்படுகின்றன.
(3)அல்ஷஃபி என்பாரின் விளக்கங்களின்படி இந்தோனேஷியா, எகிப்தின் கீழ் பகுதி, மலேசியா, ஏமன் நாடுகளில் உள்ள முசுலிம்கள் வாழ்கின்றனர்.
(4) அகமது இப்ன் ஹன்பால் என்பவர் பாக்தாது நகரைச் சேர்ந்தவர். அல் ஷஃபியின் சொற்பொழிவுகளைக் கேட்டவர். என்றாலும் குர்ஆன் படைக்கப்பட்டது என்பதை ஏற்க மறுத்துப் பலவித கொடுமைகளுக்கு ஆளாக்கப்பட்டவர். இவரது விளக்கங்களைத்தான் தற்கால சவூதி அரேபியாவில் பின்பற்றுகிறார்கள். அவர்கள் வஹாபி (பிரிவினர்) என்று அழைக்கப்படுகின்றனர்.
எனவே குர்ஆன்படி ஒழுகுவதாகக் கூற முடியாதவாறு, நான்கு பிரிவுகள் உள்ளன.
இன்னொரு பக்கத்தில், இறைத் தூதரான முகமதுவின் கூட்டாளிகளின் வழியைப் பின்பற்றுவதா, அல்லது அவரின் வாரிசுகளின் வழியைப் பின்பற்றுவதா என்பது ஒரு சிக்கலான கேள்வி. கி.பி. 900இல் இசுலாமியச் சட்டம் மிகவும் (கெட்டிப்படுத்தப்பட்டு) கடுமையாகக்கப்பட்டு விட்டது. அதை இனி யாராலும் மாற்ற முடியாது என்றாகி விட்டது. குர் ஆனின் வாசகங்கள் அமைக்கப்பட்ட எழுத்துகளின்படிதான் நடக்க வேண்டுமே தவிர, என்ன பொருளில் அவ்வெழுத்துகள் எழுதப்பட்டன என்றே பார்க்கக் கூடாது. அய்ரோப்பிய நாடுகளின் சட்டங்கள் (கிறித்துவ நாடுகளின் சட்டங்கள்) மனிதர்களுக்கா என்றும் மாறுதலுக்கு உட்பட்டவை என்றும் உள்ளன. ஆனால் (இசுலாமிய) ஷிரியா சட்டங்கள் தெய்வீகமானவை, மாற்ற முடியாதவை. அறிவுக்குப் புலப்படாத அல்லாவினால் மட்டுமே அவை மாற்றப்படக்கூடியவை.-(அந்தப் பூனைக்கு யார் மணி கட்டுவது?)
அப்படிப்பட்ட அவை,7 மற்றும் 9 ஆம் நூற்றாண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில், டால்முடிக் யூதம், சந்தேகத்திற்கிடமான கிறித்துவம் (பாரசீக) ஜொராஷ்ட்ரிய மதம் ஆகியவற்றுடன் இசுலாம் உருவாவதற்கு முன்பிருந்த அரேபியப் பண்புகள் முதலியவை கலந்து உருவாக்கப்பட்டுள்ளன என்றே அறிவார்ந்த ஆய்வாளர்கள் கருதுகின்றனர். அதில், வரலாற்றுப் பிழைகள், அறிவியல் தவறுகள், முரண்பாடுகள், இலக்கணப் பிழைகள் மலிந்துள்ளன என்கின்றனர். முரண்பாடுகள் நிறைந்து ஒன்றுக்கொன்று எதிர்மறையான கருத்துகள் மலிந்துள்ள அந்நூல் அருளாளன் எனப்படும் இறைவனுக்குப் பொருத்தமான நூலாக இல்லை என்கிறார்கள். அதை எப்படி நம்பி ஏற்பது?
0 comments:
Post a Comment