ஈழத் தமிழர்களின் வாழ்வுரிமை வேண்டி திராவிடர் கழகத்தின் சார்பில் சென்னையில் நேற்று (16.2.2010) திராவிடர் கழகத் தலைமையில் ஆர்ப்பாட்டம் வெகு எழுச்சியுடன் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் தமிழர் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள் தெரிவித்த கருத்துகள் மிக முக்கியமானவை.
தீவிரவாதத்தினை எதிர்ப்பதுதான் எங்களின் நோக்கமே தவிர, ஈழத் தமிழர்களை சங்கடப்படுத்தும் எண்ணம் எங்களுக்குக் கிடையாது என்று ராஜபக்சே சொன்னாரே அது உண்மையென்றால், அவர்களின் கூற்றுப்படியே தீவிரவாதிகளைத்தான் ஒழித்துக் கட்டிவிட்டார்களே. அதன் அடுத்த கட்ட நடவடிக்கையாக, போரினால் பல்வேறு இன்னல்களுக்கு ஆளான ஈழத் தமிழர்களின் வாழ்வுரிமைக்கான நலத் திட்டங்களை மேற்கொண்டிருக்க வேண்டாமா?
முள்வேலி முகாமுக்குள் சிறை வைக்கப்பட்ட தமிழர்களை அவர்களின் சொந்த வாழ்விடங்களில் மீள் குடியேற்றம் செய்திருக்க வேண்டாமா?
இராணுவத் தீர்வுக்குப் பின் அரசியல் தீர்வை நோக்கி அடியெடுத்து வைத்திருக்க வேண்டாமா?
உலகம் பூராவும் போர் நடந்து முடிந்தவுடன், மக்களின் சுமூக வாழ்க்கைக்கான முயற்சிகளில், நலத் திட்டங்களில்தானே எந்த அரசும் ஈடுபடும். ஆனால் இலங்கையில் நடப்பது என்ன? போர் முடிந்தும் அம் மக்களைப் பழிவாங்கும் வேலையில்தானே அரசு ஈடுபட்டுக் கொண்டிருக்கிறது.
தமிழர்களில் இளைஞர்களாக இருக்கக் கூடியவர்களை விடுதலைப் புலிகள் என்று முத்திரை குத்தி, அவர்களை யுத்த நெறிமுறைகளுக்கு மாறாக நிர்வாணப்படுத்தி சுட்டுக் கொல்லுவது எந்த நியாயத்தில் ஏற்றுக் கொள்வது?
இரண்டாவதாக இந்தப் பிரச்சினையில் இந்திய அரசின் கடமை என்ன? அரசியல் தீர்வு காண வேண்டும் என்று வெறும் வார்த்தையளவில் இந்திய அரசு சொன்னால் போதுமா? போதுமான அழுத்தத்தைக் கொடுக்க வேண்டாமா?
சீனா அளிக்கும் தைரியத்தில், பாகிஸ்தானின் பக்க பலத்தில் இந்திய அரசின் குரலை, இலங்கை அரசு கேட்கத் தயாராக இல்லை என்பதையாவது இந்தியா காலந்தாழ்ந்தாவது உணருமா?
இலங்கைக்கு இந்திய அரசைவிட அதிக உதவி செய்தவர்கள் வேறு யார்? எவ்வளவு ஆயுதங்களை இந்திய கொடுத்து உதவியது? இவ்வளவும் கொடுத்து உதவிய நாடு என்ற முறையில், இலங்கையை வற்புறுத்த இந்தியாவுக்கு உரிமை இருக்கிறதே.
ஏன் வலியுறுத்தவில்லை? இந்தியாவுக்கு மனமில்லை என்ற முடிவுக்குதானே தமிழர்கள் முன்வருவார்கள்?
அப்படியானால் இந்தியாவின் தென்கோடியில் உள்ள தங்களின் தொப்புள்கொடி உறவு கொண்ட ஈழத் தமிழர்களைக் காப்பாற்ற இந்திய அரசுக்கு விருப்பம் இல்லை என்று பொருள்படாதா?
இந்தியா என்றால் அங்கு தமிழர்களுக்குப் பாதுகாப்பு கிடையாது என்ற எண்ணம் தமிழர்களிடத்தில் உருவாக இடம் கொடுப்பது புத்திசாலித்தனம்தானா?
மற்ற மற்ற நாடுகள் ஈழத் தமிழர் பிரச்சினையில் காட்டும் அக்கறை கூட இந்தியா காட்டுவதில்லையே, ஏன்?
போர் முடிந்த பிறகு கூட அந்த மக்களின் அடிப்படை வாழ்வுரிமை பற்றி இந்தியாவுக்கு அக்கறை பிறக்கவில்லை என்பது கண்டனத்திற்கு உரியதாகும். இந்த வகையில் தமிழர்களின் உணர்வுகளை இந்திய அரசுக்கு உணர்த்தவே இந்த ஆர்ப்பாட்டம்.
தமிழர்கள் மத்தியில் ஈழப்பிரச்சினை என்பது கூட அரசியலாக்கப்படுவது வேதனைக்குரியதாகும். அதனால்தான் வேண்டாம், வேண்டாம் அரசியல் வேண்டாம்; ஈழத் தமிழர் பிரச்சினையில் அரசியல் வேண்டாம் என்ற முழக்கம் ஆர்ப்பாட்டத்தில் எழுப்பப்பட்டது.
இந்த அரசியலும் கூட ஈழத் தமிழர்கள் பாதிக்கப்பட்டதற்கான காரணங்களுள் முக்கியமானது என்பதை ஒதுக்கி விடமுடியாது.
பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் படுகொலைக்கு ஆளான பிறகும் கூட, இன்னும் நமக்குத் தமிழர்கள் என்ற இனவுணர்வு, பொறுப்புணர்வு வரவில்லை என்றால் அதிலும் அரசியல்தான் என்றால், தமிழர்களின் எதிர்காலமே கேள்விக்குறியாகிவிடாதா? இந்த ஆர்ப்பாட்டத்தின் மூலம் தமிழர்களின் சிந்தனைக்கு திராவிடர் கழகம் இந்த வினாக்களை முன்வைக்கிறது.
-----------------------"விடுதலை” தலையங்கம் 17-2-2010
2 comments:
இந்தியாவுக்கு கடமை வேறு உள்ளதா?
ஏன் திமுக-காங்கிரஸ் கூட்டணி உடையப் போகிறதா?
கி.வீரமணி ஐயா உரத்து குரல் கொடுக்கிறாரெ!?
கூட்டணி மீண்டும் வலுவாகிவிட்டால் வாய் திறக்க மாட்டார் என்பது தெரியும்!
அதைத்தானே இவ்வளவு நாளும் பார்த்துவருகிறோம்!
நியாயமான கேள்விகள்
ஆனால் யார்தான் ஈழத்து பிரச்சனையை தீர்க்க முன்வருவாரோ ?...
Post a Comment