Search This Blog

25.2.10

ஒடுக்கப்பட்ட கிராமப்புற மக்களை வஞ்சிக்கும் புதிய கல்வித் திட்டம்



மாணவர்கள் மத்தியில் ஒரு பூகம்பம்!

சென்னையில் அனைத்து மாணவர்கள் கூட்டமைப்பின் சார்பில் பேரணி ஒன்று நேற்று நடத்தப்பட்டது.

கட்சி எல்லைகளைத் தாண்டி பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த மாணவர்கள் அதில் பங்கெடுத்துக் கொண்டது குறிப்பிடத்தக்கதாகும்.

மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் கபில்சிபல் சில நாள்களுக்குமுன் அறிவித்த உயர்கல்விக்கான தேசிய உயர்கல்வி ஆணையம் என்ற சட்டம் மாணவர்கள் மத்தி-யிலும், பெற்றோர்கள் மத்தியிலும், கல்வியாளர்கள் மத்தியிலும் அதிர்ச்சிப் பேரலைகளை எழுப்பி விட்டது.

இந்தியாவில் கல்வி என்பது பிறப்பின் அடிப்படையிலான உயர்ஜாதிக்காரர்களின் பிறவி உரிமையாக இருந்து வந்த வரலாற்று உண்மையை மறந்துவிட்டு அல்லது மறைத்துவிட்டு கொண்டு வரப்படும் எந்தத் திட்டமானாலும் அது பெரும்பான்மையான ஒடுக்கப்பட்ட மக்கள் என்னும் சீற்றமிக்க புலி வாலை மிதித்த விபரீதமாகும்.

கல்வித் துறையில் மாநில அரசிலும் சரி, மத்திய அரசிலும் சரி பார்ப்பனர்களை நியமிப்பது நண்டைச் சுட்டு நரியைக் காவல் வைப்பதாகும்.

கபில்சிபல் என்னும் அக்கிரகார படித்த மேதை இந்தியாவின் சமூகச் சூழலைப் படிக்காத அறிந்திராத அல்லது படித்திருந்தும், அறிந்திருந்தும், பார்ப்பன ஆதிக்க உணர்வுடன் செயல்படும் மனிதராகவே கணிக்கப்படுகிறார்.

மத்திய அமைச்சரவை ஒப்புதலின்றியே கல்வியைப்பற்றி அவ்வப்போது அவர் தெரிவிக்கும் கருத்துகள், வீண் சர்ச்சைகளை ஏற்படுத்தி மத்திய அரசுக்குத் தாங்க முடியாத தலைவலியை உண்டாக்கி வருகின்றன.

1938 இல் ராஜாஜி சென்னை மாகாணத்தின் பிரதமராக வந்தபோது 2500 கிராமப் பள்ளிகளை இழுத்து மூடினார். 1952 இல் முதலமைச்சராக வந்தபோதும் 6000 பள்ளிகளுக்கு மூடுவிழா நடத்தினார்.

சூத்திரனுக்கு எதைக் கொடுத்தாலும் கல்வியைக் கொடுக்காதே என்னும் மனுதர்ம சிந்தனையிலிருந்து பார்ப்பனர்கள் விடுபடுவதில்லை. இப்பொழுதும் அதுதான் நடந்திருக்கிறது.

வழக்கம்போல் தந்தை பெரியார் பிறந்த தமிழ் மண்தான் இந்தியாவுக்கே இதில் வழிகாட்டியாக வேண்டும். திராவிடர் கழகம் வழக்கம்போலவே மிக முக்கியமான ஒடுக்கப்பட்ட மக்களை, கிராமப்புற மக்களை வஞ்சிக்கும் புதிய கல்வித் திட்டத்தினை எதிர்க்கும் கடமையினைக் கையில் எடுத்துக் கொண்டுவிட்டது.

1950 இல் சமூகநீதிக்குச் சாவு மணி அடித்தபோதும், தந்தை பெரியாரும், திராவிடர் கழகமும் எரிமலையாக வெடித்துக் கிளம்பியது. தமிழ்நாட்டின் கொந்தளிப்பினால், முதலாவது திருத்தம் அரசமைப்புச் சட்டத்தில் கொண்டுவரப்பட்டது என்பதை பிரதமர் நேரு அவர்களே நாடாளுமன்றத்தில் ஒப்புக்கொண்டார்.

தமிழ்நாட்டில் 1979 இல் எம்.ஜி.ஆர். அவர்கள் முதலமைச்சராக இருந்தபோது, கொண்டு வந்த வருமான வரம்பு அறிக்கையை எதிர்த்து முதல் குரல் கொடுத்து, அனைத்துத் தரப்பினரையும் ஒருங்கிணைத்து களம் கண்ட கடமையினை திராவிடர் கழகமே செய்தது. தமிழர் தலைவர் வீரமணியே வழிகாட்டி நின்றார்.

மத்திய அரசுத் துறைகளில் பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டுக்காக மண்டல் குழுப் பரிந்துரைகளை செயல்படுத்த வேண்டும் என்பதற்காக திராவிடர் கழகம்தான் 42 மாநாடுகளையும், 16 போராட்டங்களையும், அதன் பொதுச்செயலாளர் மானமிகு கி. வீரமணி அவர்களின் தலைமையில் நடத்தி, இந்தியத் துணைக் கண்டத்தின் கண்களையெல்லாம் தந்தை பெரியார் அவர்களின் தமிழ் மண்ணை அகல விரித்துப் பார்க்கும்படிச் செய்தது. நீதிமன்றங்கள் குறுக்கிட்டும் இறுதி வெற்றி சமூகநீதிக்கே ஆனது.

சமூகநீதியில் கை வைக்கும் எந்த ஆட்சியும் நிலைத்ததில்லை _ நிலைக்க விடுவதும் இல்லை.

மத்தியில் கூட்டணியில் உள்ள தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் புதிய திட்டத்தை செயல்படுத்த விடாது என்பதை நாம் அறிவோம்.

என்றாலும், மாணவர்களின் எதிர்காலத்தைப் பாதிக்கச் செய்யக்கூடிய இந்தப் பிரச்சினையில் மாணவர்கள் களம் அமைத்து போர்க் குரல் கொடுக்கவேண்டியது அடிப்படைக் கடமையாகும். அந்தக் கடமையைச் சென்னையில் ஆற்றிய மாணவச் செல்வங்களைப் பாராட்டுகிறோம்_ வாழ்த்துகிறோம்.


----------------------- “விடுதலை” தலையங்கம் 24-2-2010

0 comments: