Search This Blog

3.2.10

இருபெரும் பகுத்தறிவாளர்களின் நினைவு நாள்


அண்ணா

இந்நாள் இருபெரும் பகுத்தறிவாளர்களின் நினைவு நாள். ஒருவர் அறிஞர் அண்ணா (1969); இன்னொருவர் பெர்ட்ரண்ட் ரஸல் (1970).

1927 ஆம் ஆண்டு மார்ச் 6 ஆம் தேதி லண்டனில் பாட்டர்ஸீ டவுன் ஹாலில் ரஸல் ஆற்றிய உரை கிறித்துவ உலகத்தை கிறுகிறுக்கச் செய்தது. (நான் ஏன் கிறிஸ்தவன் அல்ல?) லண்டன் வாட்ஸ் நிறுவனத்தார் அந்த வுரையை நூலாக வெளியிட்டனர். நான்கு ஆண்டுகளில் அந்நூல் 25,000 பிரதிகள் விற்பனையானது என்பது அந்தக் காலகட்டத்தில் மகத்தான சாதனையாகும்.

பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவனம் தமிழில் 1968 இல் வெளியிட்டது.

உலகம் தோன்றியதற்கு ஒரு சக்தி இருக்கவேண்டும் அல்லவா? அந்த சக்திதான் கடவுள் என்று விவாதிப்போருக்கு இந்து மதத்தின் நம்பிக்கையாளர் சொன்ன ஒரு கருத்தினை எடுத்துச் சொல்லிக் கேலி செய்தார் அந்த உரையில்.

ஒரு ஹிந்து சொல்வது என்னவென்றால், பூமியானது யானையின் மேல் இருப்பதாகவும், அந்த யானை ஓர் ஆமையின் மேல் இருப்பதாகவும் சொல்லுகிறான். அப்படியானால், அந்த ஆமை எதன்மேல் இருக்கிறதய்யா? என்று கேட்டால், அது கிடக்கிறது, வேறு விஷயத்தைப்பற்றிப் பேசுவோம் என்று ஒரு ஹிந்து சொல்லி விடுகிறான் என்று நையாண்டி செய்யும் அளவுக்கு ரஸல் மாபெரும் பகுத்தறிவாளர் ஆவார்.

அறிஞர் அண்ணா திராவிட இயக்கத்தின் மூலக் கருவான தந்தை பெரியார் அவர்களின் தலைசிறந்த சீடர். தலைவர் தந்த தத்துவத்தைத் தனக்கே உரித்தான பாணியில் எழுதுகோலாலும், நாவாலும் நாட்டு மக்களிடம் எடுத்துக் கூறி அவர்களைப் பம்பரமாகச் சுற்றச் செய்த சாதனையாளர் அண்ணா.

அவர் ஆட்சித் தலைவராகக் குறுகிய காலம் இருந்ததுண்டு; அந்த நிலையிலும் நான் கண்ட கொண்ட ஒரே தலைவர் தந்தை பெரியாரே என்று கூறி, தன் ஆட்சியையே தமது தலைவர் பெரியார் அவர்களுக்குக் காணிக்கையாக்கியவர்.

அரசியலுக்காக அவர் ஒருவனே தேவன் என்று சொன்னாலும், அவர் எந்தத் தேவனையும் கூப்பிக் கும்பிட்டதில்லை; எந்தக் கோயிலின் நிழலிலும் மழைக்காகக் கூட ஒண்டியதில்லை. அரசியலுக்காக அண்ணா சொன்னதை ஒரு சிலர் தவறான முறையில் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு அந்த ஒருவனே தெய்வம் என்பதை அய்யப்பனாகவும், மதுரை மீனாட்சியாகவும் தவறாகக் கற்பித்துக் கொண்டதுண்டு.

ஆனால், மானமிகு கலைஞர் அவர்கள் தன்னை வெளிப்படையாக நாத்திகன் என்று வாய்ப்பு கிட்டும் பொழுதெல்லாம் பிரகடனப்படுத்தி வருவதோடு, மூட நம்பிக்கை நோயால் தடுமாறுவோர் யாராக இருந்தாலும் அது தம் கட்சித் தோழர்களாக இருந்தாலும் கூட சுட்டிக் காட்டவும் ஏன், தலையில் குட்டவும் கூடத் தயங்கியதில்லை.

அண்ணா நினைவு நாளில் அவர் நிலை நிறுத்த விரும்பிய அய்யாவின் கொள்கைகளை நிலை நிறுத்த உறுதி கொள்வோம்!

------------------- மயிலாடன் அவர்கள் 3-2-2010 “விடுதலை” யில் எழுதிய கட்டுரை

0 comments: