Search This Blog

1.2.10

சேது சமுத்திரத் திட்டம் நிறைவேறுமா?


சேது சமுத்திரத் திட்டம்?

சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டம் தமிழ்நாட்டின் எதிர்காலத்திற்கு ஒளி தரும் உன்னதத் திட்டமாக எதிர்பார்க்கப்பட்டு வருவதாகும்.

ஒரு திட்டம் நிறைவேற்றப்பட்டதற்கு நூற்றாண்டு விழா கொண்டாடுவதைக் கேள்விப்பட்டுள்ளோம். ஆனால் ஒரு திட்டம் நிறைவேற்றப்படாமல் இருப்பதற்கு நூற்றாண்டு விழா நூற்று அய்ம்தாவது ஆண்டு விழா கொண்டாடும் அவலத்தை இங்கே பார்க்கிறோம்.

ஒரு திட்டம் நிறைவேற்றப்படாமல் முடக்கப்பட்டு வருகிறது என்பதைவிட தமிழ்நாட்டு மக்கள் உணர்வற்றுக் கிடக்கிறார்கள்; அவர்கள் எதையும் அரசியல் பண்ணக் கூடியவர்கள்; தமிழ்நாட்டு நலனை விட தங்கள் கட்சிகளின் அரசியல் நலனையே சுயநல வெறியோடு நோக்கக் கூடியவர்கள் என்ற நிலை வெட்கக் கேடானதாகும்.

தமிழன் யோக்கியதை இந்த நிலையில் இருந்தால் பக்கத்துத் தீவில் தமிழர்கள் அடிபட்டுச் சாகத்தான் செல்வார்கள்; அண்டை மாநிலத்துக்காரன் தமிழருக்கென்று உறுதியாக உள்ள உரிமைகளைக்கூடக் களவாடி, தமிழன் நெற்றியில் குழைத்து நாமம்தான் சாற்றுவான். காவிரி நீர்ப் பிரச்சினை அப்படித்தானே - முல்லை பெரியாறு நீர்ப் பிரச்சினையும் இந்தப் பட்டியலைச் சேர்ந்ததுதானே, பாலாறு பாழாய்ப் போவதும் எதைச் சேர்ந்தது? இந்த வரிசையில் சேது சமுத்திரக் கால்வாய் திட்டமும் சேர்ந்ததில் வியப்பேதும் இருக்க முடியாது.

தொடக்கத்தில் இந்தத் திட்டத்திற்கு 2437 கோடி ரூபாயாக இருந்த திட்டச் செலவு இப்போதைய நிலையில் ரூ.4500 கோடி என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இன்னும் காலம் கடத்த கடத்த எத்தனைக் கோடியில் போய் முடியுமோ தெரியாது.

விஞ்ஞான மனப்பான்மையை வளர்க்க வேண்டும் என்று இந்திய அரசமைப்புச் சட்டத்தின் ஒரு பக்கத்தில் எழுதி வைத்துக் கொண்டு, இன்னொரு பக்கத்தில், 17 லட்சம் ஆண்டுக்கு முன் ராமன் என்ற ஒரு கற்பனைப் புராணப் பாத்திரம் அணில்களையும் குரங்குகளையும் கொண்டு பாலம் கட்டியது என்றும், அந்தப் பாலத்தை இடிக்கக் கூடாது என்றும் ஒரு அகில இந்திய கட்சியே சொல்லுவதும், (பா.ஜ.க.) திராவிட இயக்கப் பாரம்பரியம் என்று கூறிக் கொண்டும், அண்ணா நாமம் வாழ்க என்று உச்சரித்துக் கொண்டும் ஆமாம், ஆமாம், ராமன் பாலத்தை இடிக்கக் கூடாது என்று கூறி (அஇஅதிமுக) உச்சநீதிமன்றம் செல்லுவதும், அந்த உச்சநீதிமன்றமும் இந்த மவுடிகத்தின் உச்சக் கட்ட மூடத்தனத்தையும் பொருட்படுத்தி, வேறு பாதையில் திட்டத்தை நிறைவேற்ற ஆய்வு செய்யுமாறு ஆணை பிறப்பிப்பதும், நாம் 2010ஆம் ஆண்டில்தான் வாழ்கிறோமா அல்லது காட்டு விலங்காண்டிக் காலத்தில் சஞ்சரிக்கின்றோமா என்ற அய்யத்தைத்தான் ஏற்படுத்துகிறது.

பாக் ஜலசந்தி பகுதியில் ஏற்கெனவே 80 விழுக்காடு பணிகள் முடிந்துவிட்ட நிலையில், அதற்காக 800 கோடி ரூபாய் வரை செலவிடப்பட்ட ஒரு சூழ்நிலையில், வேறு ஒரு பாதையில் திட்டத்தை நிறைவேற்றுவது குறித்து ஆலோசனை என்றால், மக்கள் வரிப்பணம் இப்படியா கடலில் வாரி இறைக்கப்படவேண்டும்?

நர்மதா அணை திட்ட வழக்கில் இதே உச்சநீதிமன்றம் என்ன கூறியது? ஒரு திட்டத்தை அரசு மேற்கொண்டு குறிப்பிட்ட அளவு செயல்பாடுகள் நடந்துவிட்ட நிலையில், அதனைத் தடை செய்ய முடியாது என்று கூறவில்லையா? அதே கண்ணோட்டம் சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டத்தில் இல்லாமல் போனது ஏன்? தமிழன் என்றால் ஏமாளி என்ற நினைப்பா? புதிய வழித்தடம் சரியாக வராது என்று முடிவு செய்தால் மறுபடியும் பழைய வழித் தடத்தைத் தானே பின்பற்ற வேண்டியிருக்கும்? அப்பொழுதும் ராமன் பாலத்தைக் காரணம் காட்டி இந்தத் திட்டமே கூடாது என்று கூச்சல் போடும் ஒரு கூட்டம் இருக்கத்தானே செய்யும்? அதிமுக பொதுச் செயலாளர் செல்வி ஜெயலலிதா இந்தத் திட்டமே கூடாது என்று ஏற்கெனவே சொல்லியும் விட்டார். அதற்குத் தான் திருச்செந்தூர் இடைத்தேர்தலில் நாட்டு மக்கள் நல்ல தண்டனை கொடுத்து விட்டனர்.

தமிழர், தமிழ்நாட்டு உணர்வுக்கு எதிராகப் செயல்படும் கூட்டத்திற்கு அடுத்தடுத்த தேர்தலில் சூடு கொடுத்தே தீர வேண்டும்.

திராவிடர் கழகம் தொடர் பிரச்சாரத்தை மேற்கொண்டு தென் மாவட்டங்களில் உணர்ச்சித் தீயை ஊட்டியது; அடுத்து சிறை நிரப்பும் போராட்டத்தை எதிர்பார்க்கலாம்.

-------------------------- “விடுதலை” தலையங்கம் 1-2-2010

0 comments: