பொதிகையில்!
பொதிகைத் தொலைக்காட்சியில் தினமலர் வாரம் தோறும் திங்கள், செவ்வாய்க் கிழமைகளில் எப்படிப் பாடினாரோ என்ற ஆன்மிக இசை நிகழ்ச்சியை நடத்தி வருகிறது. (பக்தியைப் பரப்புவதிலும், பாமர மக்களை நம்பச் செய்வதிலும்தானே பார்ப்பனியத்தின் சூட்சமக் கயிறே இருக்கிறது?).
அதில் காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் கோயில், காமாட்சியம்மன் கோயில் அமைப்பு, வழிபாட்டு முறைகள், மாவடி பற்றிய அரிய செய்திகள், சாக்கிய நாயனாரின் பக்தி பற்றிய தகவல்கள் இங்குள்ள நதிகள் ஆகியவைபற்றிக் காணலாம் என்று தினமலர் ஒரு செய்தியை நேற்று (22.2.2010) வெளியிட்டுள்ளது.
காஞ்சிபுரம் சங்கராச்சாரியார் மடம் எப்படி போலியோ ஆதிசங்கரரால் நிறுவப்பட்டது அல்லவோ அது போன்றதுதான் இந்த ஏகாம்பரேஸ்வரர், காமாட்சியம்மன் கோயில் வண்டவாளங்களும்.
இது உண்மையான ஏகாம்பரேஸ்வரர் கோயிலா? அல்லது இதற்குமுன் இருந்த புத்தர் கோயில் உருமாற்றப்பட்டதா?
இது உண்மையிலேயே காமாட்சியம்மன் கோயில்தானா? அல்லது பவுத்தரின் தாராதேவி ஆலயமா?
இந்தக் கேள்விகளுக்கு நாத்திகர்களாகிய நாம் பதில் சொல்லப் போவதில்லை. மயிலை சீனி. வேங்கடசாமி என்னும் ஆராய்ச்சியாளர் பவுத்தமும் தமிழும் என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார்.
காஞ்சி ஏகாம்பரேஸ்வரர் கோயில் வெளி மதில்சுவரில் சில புத்த விக்கரகங்கள் பலவகை சிற்பமாக அமைக்கப்பட்டிருக்கின்றன. இந்த மதிற்சுவர் விஜய நகர அரசனான கிருஷ்ண தேவராயரால் 1509 இல் கட்டப்பட்டது. பழைய புத்தர் கோயில்களை இடித்து, அந்தக் கற்களைக் கொண்டு இந்த மதிற்சுவர் கட்டியிருக்கவேண்டும். அதனால்தான் இப்புத்த விக்கரகங்கள் இச்சுவரில் காணப்படுகின்றன. காஞ்சி ஏகாம்பர ஈசுவரர் கோயிலுக்குப் பக்கத்தில் உள்ள போலீஸ் ஸ்டேஷன் கட்டடத்தில் ஒரு புத்த விக்ரகம் இருக்கிறது. இது பூமியைத் தோண்டியபோது கிடைத்தது. புத்தர் பரி நிர்வாணம் அடையும் நிலையில் உள்ளது போன்ற கற்சிலையொன்று ஏகாம்பர ஈசுவரர் கோயில் மதிற்சுவரின் கீழே வைத்துக் கட்டப்பட்டிருக்கிறது. (பவுத்தமும், தமிழும், பக்கம் 54).
ஏகாம்பர ஈசுவரர் கோயிலில்தான் இந்தக் கதையென்றால், காமாட்சியம்மன் கோயில் மட்டும் என்ன வாழ்கிறது?).
காமாட்சியம்மன் கோயில் ஆதியில் பவுத்தரின் தாராதேவி ஆலயம் இவ்வாலயத்தில் பல புத்த விக்கரகங்கள் இருந்தன. அவைகளில் ஆறு அடி உயரம் உள்ள நின்ற வண்ணமாக அமைக்கப்பட்ட சாஸ்தா (இது புத்தர் உருவம்) என்னும் உருவம் இப்பொழுது சென்னைப் பொருட்காட்சி சாலையில் இருக்கிறது. காமாட்சியம்மன் குளக்கரையில் இருந்த புத்தச் சிலைகள் இப்போது காணப்படவில்லை. இக்கோயிலில் இருந்த வேறு புத்த விக்கரகங்கள் (கருங்கல் சிலைகள்) சில ஆண்டுகளுக்கு முன் நன்னிலையில் இருந்ததைக் கண்டேன். ஆனால், அவை பிறகு துண்டு துண்டாக உடைக்கப்பட்டுக் கிடந்ததைக் கண்டேன். காமாட்சியம்மன் கோயிலுக்கு அருகில் உள்ள ஒரு தோட்டத்தில் புத்த விக்கரகம் ஒன்று இப்போதும் நன்னிலையில் இருக்கிறது. இத்தோட்டத்தில் உள்ள மண்டபத்தைக் கட்டியபோது, அதன் அடியில் சில புத்த விக்கரகங்களைப் புதைத்து இருக்கிறார்களாம். (பவுத்தமும், தமிழும், பக்கம் 55).
புரிகிறதா? புத்தர் கோயில்களை எல்லாம் இந்துக் கோயில்களாக மாற்றியவர்கள் இப்பொழுது தொலைக்காட்சி வாயிலாகவும் இத்தகைய மாய்மாலங்களைச் செய்கிறார்கள் என்பதைக் கவனிக்கத் தவறக்கூடாது. இந்த யோக்கியர்கள்தான் ராமன் கோயிலை இடித்துவிட்டு மசூதியைக் கட்டினார் பாபர் என்று கயிறு திரிக்கிறார்கள்.
---------------- மயிலாடன் அவர்கள் 23-2-2010 “விடுதலை” யில் எழுதிய கட்டுரை
2 comments:
//புரிகிறதா? புத்தர் கோயில்களை எல்லாம் இந்துக் கோயில்களாக மாற்றியவர்கள் இப்பொழுது தொலைக்காட்சி வாயிலாகவும் இத்தகைய மாய்மாலங்களைச் செய்கிறார்கள் என்பதைக் கவனிக்கத் தவறக்கூடாது. இந்த யோக்கியர்கள்தான் ராமன் கோயிலை இடித்துவிட்டு மசூதியைக் கட்டினார் பாபர் என்று கயிறு திரிக்கிறார்கள்.//
இருக்கும் அனத்து மதங்களையும், வழிபாட்டுத் தளங்களையும் தகர்க்காமல் மனிதனுக்கு நிம்மதியும், வளர்ச்சியும் இருக்க முடியாது.
//புரிகிறதா? புத்தர் கோயில்களை எல்லாம் இந்துக் கோயில்களாக மாற்றியவர்கள் இப்பொழுது தொலைக்காட்சி வாயிலாகவும் இத்தகைய மாய்மாலங்களைச் செய்கிறார்கள் என்பதைக் கவனிக்கத் தவறக்கூடாது. இந்த யோக்கியர்கள்தான் ராமன் கோயிலை இடித்துவிட்டு மசூதியைக் கட்டினார் பாபர் என்று கயிறு திரிக்கிறார்கள்.//
இருக்கும் அனைத்து மதங்களையும், வழிபாட்டுத் தளங்களையும் தகர்க்காமல் மனிதனுக்கு நிம்மதியும், வளர்ச்சியும் இருக்க முடியாது.
Post a Comment