யேசு உண்மையில் வாழ்ந்தவர் அல்ல என்றும் அவரது வரலாறு பற்றி அய்யப்பாடு தெரிவித்தும் புரூனோ பாயர் (1809_1882) எம். ராபர்ட்சன் (1856_1933) ஆர்தர் ட்ரூஸ் (1865_1935) போன்ற பல ஆசிரியர்கள் எழுதியுள்ளனர். 1957, 1959, 1967 ஆகிய ஆண்டுகளில் இந்தக் கருத்தை விளக்கிய பல நூல்கள் பார்ஸ், நியூயார்க் ஆகிய ஊர்களில் வெளிவந்துள்ளன. லண்டன் பல்கலைக் கழகத்தின் பிர்க்பாக் கல்லூரிப் பேராசிரியர் ஜி.ஏ.வெல்ஸ் கிறித்து கட்டுக் கதை பற்றி எழுதியுள்ளார்.
யேசுவைப் பற்றிக் குர்ஆனில் உள்ளவை எல்லாமே மூடத்தனமானவையாகவும், அவர் நிகழ்த்திய அற்புதங்கள் பற்றியனவாகவுமே உள்ளன. இவற்றையெல்லாம் பேதைகளே நம்புவார்கள். இதில் எழுதப்பட்டிருக்கும் செய்திகள் உண்மை என்றால், யேசு உயிருடன் உலவிய சரித்திர மனிதன்தான் என்று எண்பிப்பதற்காக ஏன் கிறித்துவர்கள் குர்ஆனை ஆதாரமாகக் காட்டுவதில்லை? யேசுவின் காலத்திற்கு 600 ஆண்டுகளுக்குப் பின்னர் எழுதப்பட்டது என்பதாலா? பைபிள் கூட யேசு காலத்திற்கு 50_60 ஆண்டுகளுக்குப் பிறகு எழுதப்பட்டவைதானே!
அய்ரோப்பாவிலும் அமெரிக்காவிலும் யேசுவின் வாழ்வு கட்டுக்கதை என்கிறதும் உண்மையில் வாழ்ந்தவரல்ல என்கிறதும் ஆக கருத்துகள் கடந்த 150 ஆண்டுகளுக்கு மேலாகத் தெரிவிக்கப்பட்டு வருகின்றன. அதனை எழுதிய புருனோபாயர் 1842 இல் அவர் பணியாற்றிய பான் (ஜெர்மனி Bonn) பல்கலைக் கழக பதவியில் பேராசிரியர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார். ஆனால் மற்றொரு பேராசிரியர் வெல்ஸ், லண்டன் பல்கலைக் கழகத்தில் 1971 வரை பணியாற்றி இன்னமும் உயிருடன் (1994) இருக்கிறார்.
1835 இல் வெளிவந்த Life of Jesus - Critically Examined (யேசுவின் வாழ்வு - பகுத்தறியும் ஆய்வு) எனும் நூலில் டேவிட் ஸ்ட்ராஸ் எழுதும்போது, பைபிளில் எழுதப்பட்டிருப்பவற்றை வரலாறாக ஏற்க முடியாது என்றும் அவை செயற்கையான மதக் கட்டுக் கதைகள் என்றே கூறிவிட்டார்.
யூத, கிரேக்க, ரோமானிய மக்கள் கருத்தின் கலவைதான் கிறித்துவம் என்றும் அது முதல் நூற்றாண்டில்தான் உருவானது என்றும் பாயர் கூறியுள்ளார். அனைத்தையும் படைக்கும் ஆற்றல் பெற்றதாகக் கிரேக்கச் சொல்லான லோகோஸ் (Logos) குறிக்கிறது; அதனையே கடவுளுக்குச் சமமாக ஆக்கி செயின்ட் ஜான் எழுதிய மறைநூலில் குறிப்பிடப்பட்டு அதன் அவதாரமாக யேசு ஆக்கப்பட்டார் என்று கூறியுள்ளார். டயனாவின் அப்பல்லோனியஸ் என்பார் யேசுவுக்கு முன் பிறந்தவர்; அவரது வாழ்வைப் போலவே யேசுவின் வாழ்க்கைச் சம்பவங்களையும் அமைத்துள்ளார்கள். நாடோடியாகத் திரிந்து தனக்கு அற்புதங்கள் செய்யும் சக்தி இருப்பதாகக் கூறித் திரிந்தவர்; நீரோ மற்றும் டாமிடியன் போன்ற ரோம மன்னர்களின் காலத்தில் உயிருக்கு ஆபத்து ஏற்படும் நிலை ஏற்பட்டு அஞ்சி வாழ்ந்தவர். அவரைப் பின்பற்றியவர்கள் அவரைக் கடவுளின் மகன் என்றே கூறி இறந்தபின் உயிர்த்தெழுந்து தங்களின் கண்முன்னால் சொர்க்கத்திற்குப் போனதாகப் பேசிக் கொண்டிருந்தார்கள். (யேசுவின் கதையோடு எல்லா வகையிலும் ஒத்து வருகிறதே!)
இதே கருத்தை வ்ரெட் (Wrede) கல்தாஃப் (Kalthoff) ஆகிய ஆசிரியர்களும் தெரிவித்திருக்கின்றனர். ரோமானிய மன்னர்களின் காலத்தில் ஏறக்குறைய அறுபது சரித்திர ஆசிரியர்கள் வாழ்ந்திருக்கின்றனர். யேசுவின் கதையை உறுதிப் படுத்துகிற மாதிரி ஒருவர் கூட எழுதவில்லையே!
யேசுவைக் கொன்ற 40 முதல் 80 ஆண்டுகளுக்குப் பிறகு பைபிள்கள் எழுதப்பட்டுள்ளன. அவற்றையும் மாத்யூ, மார்க், லூக், ஜான் ஆகியோர் எழுதவில்லை; பெயர் தெரியாத எழுத்தாளர்கள் எழுதியுள்ளனர். மாத்யூ, மார்க், லூக் ஆகியோர் எழுதியவை சுருக்கமான பைபிள்கள் (Synoptic Gospels) என்று அழைக்கப்படுகின்றன. காரணம் அவற்றின் பொருளடக்கமும், வார்த்தைகள் அமைக்கப்பட்டுள்ள விதமும் ஒரே மாதிரியாக அமைந்துள்ளன. மார்க் எழுதிய பைபிள்தான் முதலில் வந்தது.
அக்காலத்தில் நிலவிய பழக்க வழக்கங்களின் தொகுப்பாக வேண்டுமானால் பைபிளைக் கருதலாமே தவிர, வரலாற்று நூலாக ஏற்கமுடியாது எனத் திட்டவட்டமாக ஹாஃப்மேன் கூறியுள்ளார்.
மார்க் முதன் முதலில் பைபிள் எழுதுவதற்கு முன்பாகவே எழுதப்பட்டவை (பவுல்) பால் எழுதிய கடிதங்கள். யேசுவின் வாழ்க்கை சம்பவங்கள் என்று பைபிளில் வருபவை ஒன்றைப் பற்றிக் கூட இந்தக் கடிதங்களில் குறிப்பு இல்லை. யேசுவின் பெற்றோர் பற்றி சிறுகுறிப்புகூட இல்லை. கன்னிமேரி குழந்தை பெற்றது பற்றியும் இல்லை. யேசு பிறந்த நாசரேத் பற்றியோ, ஜான் (யோவான்) நடத்தி வைத்த ஞானஸ்தானம் பற்றியோ ஜுடாஸ், பீட்டர் (பேதுரு) பற்றியோ கூட எதுவும் கிடையாது. இந்த விவரங்களை பேராசிரியர் ஜி.ஏ. வெல்ஸ் ஆய்ந்து வெளியிட்டுள்ளார். பலரும் கூறுவது போல மார்க் எழுதிய (முதல்) பைபிள் யேசு பிறந்த 70 ஆம் ஆண்டில் எழுதப்படவில்லை என்றும் 90ஆம் ஆண்டில்தான் எழுதப்பட்டது என்றும் நிறுவியுள்ளார்.
அப்பேர்ப்பட்ட யேசுவைப் பற்றி குர்ஆன் விசேஷமாகக் குறிப்பிடவேண்டிய தேவை என்ன? குறிப்பிட்டிருந்தாலும் கூட யேசுவைத் தேவகுமாரன் என்று குறிப்பிடவில்லை; கடவுளின் பணியாளர் என்று தான் (சூரா 19_-30, 35) குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த இரண்டு மதங்களும் தொடக்கத்தில் தொடர்பும் பிளவும் கொண்டு சமுதாயத்தில் நிலவி, அவரவர் கொள்கைகளை அவரவர் நிலப் பகுதியின் அடிப்படையில் அராபிய, பாலஸ்தீன என்று தெரிந்தெடுத்துக் கொண்டு விட்டனர். யூத, கிரேக்க, ரோமானியக் கருத்துகளின் அடிப்படையில் கிறித்துவம் என்றால் டால்முட் பிரிவு யூதம், சிரியா கிறித்துவம் ஆகியவற்றுடன் மறைபொருளாக கிரேக்க, ரோமன் கருத்துகளும் சேர்ந்த கலவையாக இசுலாம் விளங்குகிறது என்பதே அறிஞர்களின் கருத்து.
சிரியா கிறித்துவத்திலிருந்து இறுதித் தீர்ப்பு நாளை இசுலாம் எடுத்துக் கொண்டது. அதை அப்படியே படிப்படியாக சித்திரமாக வரைந்து காட்டுவது போன்று விளக்குகிறது. எக்காளம் ஊதுவது, சொர்க்கத்தில் பிரித்து நிறுத்துவது, மலைகள் பொடிப் பொடியாக உடைந்து தூளாகுதல், வானம் இருட்டாவது, கடல் நீர் சூடாகிக் கொதிப்பது, பிணம் புதைத்த இடங்கள் திறந்து அதன் வழியே மனிதர்களும், ஜிண்களும் கணக்கு பார்க்கப்பட அழைக்கப்படல், அவரவர் செய்த பாவ, புண்ணியங்கள் நியாயத் தராசில் நிறுத்தி எடை பார்த்தல், பிறகு கடவுள் சொர்க்கமோ, நரகமோ அளித்தல் என்பவை எல்லாமே அதன் பிரதி பலிப்புகள்தாம்.
இதிலும் கூட குர்ஆன் வாசகங்களில் சில சிக்கல்கள். அல்லாவின் பாதையில் போரிட்டுக் கொல்லப்பட்டவர்களை மரித்தவர்கள் என்று நிச்சயமாக எண்ணாதீர்கள். தம் ரப்பினிடத்தில் அவர்கள் உயிருடனேயே இருக்கிறார்கள்- (அவனால்) அவர்கள் உணவளிக்கப்படுகிறார்கள் (சூரா 3-_169) என எழுதப்பட்டுள்ளது. எனவே இறந்தவர்கள் எல்லாம் இறந்தவர்களல்லர்; மதச் சண்டையில் செத்தவர்கள் மரிப்பதில்லை, வாழ்கிறார்கள், மேல் உலகத்தில் அவர்கள் கடவுளின் கையால் சாப்பிடுகிறார்கள்.
---------------தொடரும்
0 comments:
Post a Comment