Search This Blog

17.2.10

இராஜாஜியும் - பாகவதமும்


பாகவதம்

ராஜாஜி ஃபவுண்டேஷன் சார்பில் சென்னையில் நடைபெற்ற ராஜாஜியின் 131 ஆவது ஆண்டு பிறந்த நாள் விழாவில் பங்கேற்ற இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா சில கருத்துகளை உதிர்த்துள்ளார்.

பெண் கல்வி, பெண்களுக்கு அதிக அதிகாரமளித்தல் போன்றவற்றில் சிறப்பாகச் செயல்பட்டவர் ராஜாஜி என்று கூறினாரே பார்க்கலாம்.

பார்ப்பனர் அல்லாதார் படித்துவிடக் கூடாது என்பதிலே மிகக் கவனமாக இருந்த பெரிய மனுஷர் அவர்.

இரண்டு முறை தமிழ்நாட்டின் முதல் அமைச்சராக இருந்திருக்கிறார். இரண்டு முறையும் அவர் செய்த ஒரு காரியம் பள்ளிகளை இழுத்து மூடியதுதான்.

1937_39 இல் 2500 பள்ளிகளையும் 1952 இல் 6000 பள்ளிகளையும் இழுத்து மூடிய மகானுபாவர்; அதுவும் 1952 இல ஆட்சிக்கு வந்தபோதே பாதி நேரம் படித்தால் போதும், பாதி நேரம் அப்பன் தொழிலைச் செய்யவேண்டும் என்ற நவீன குலத்தொழில் திட்டத்தைத் தீட்டிய மனுதர்மவாதி என்பதும் நாடறிந்த ஒன்று.

இந்த நிலையில் பெண் கல்வி, பெண்கள் அதிகாரத்துக்கு வருவதற்கு ராஜாஜி அதிகம் பாடுபட்டுள்ளார் என்று கூறியுள்ளாரே அதற்கான ஆதாரங்களைச் சொன்னால் நன்றாக இருந்திருக்கும். 1952 இல் அவர் ஏற்படுத்திய அமைச்சரவையில் மருந்துக்கும்கூட பெண் ஒருவர் கிடையாது. இவர்தான் பெண்கள் அதிக அதிகாரத்திற்கு வருவதற்குப் பாடுபட்டவராம்.

இராமாயணம், மகாபாரதம், பாகவதம் போன்ற நூல்களை மொழி பெயர்த்து வெளியிடுவதன் மூலம் ராஜாஜியின் ஆன்மீக ரீதியிலான கல்விச் சிந்தனையை அறியலாம் என்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் பேசியுள்ளார்.

இதிலும் கொஞ்சம் இடிக்கிறது. கல்கி இதழ் தரும் தகவல் இதோ:

வியாசர் விருந்து என்ற தலைப்பிலும், சக்கரவர்த்தித் திருமகன் என்ற தலைப்பிலும் மகாபாரதத்தையும், ராமாயணத்தையும் கல்கியில் தொடராக ராஜாஜி எழுதி வந்தது அன்பர்களுக்குத் தெரியும். அதன் பின்னர் பாகவதத்தை எளிய தமிழில் எழுதலாமே என்று சதாசிவம் தமது யோசனையை ராஜாஜியிடம் வெளியிட்டார். அதற்கு ராஜாஜி கூறிய பதில் சிந்திக்க வைப்பதாகும்.

சதாசிவம்! எனக்கு பாகவதத்தை எழுதுவதில் நாட்டமில்லை. அதில் பக வானின் லீலைகளும், அற் புதங்களும் மிகுதியாக உள்ளன என்று குறிப்பிட்டுள்ளார். (கல்கி,- 4.10.2009 பக்கம் 72)

ராஜாஜியே பொறுத்துக் கொள்ள முடியாத அளவுக்கு பாகவதத்தில் பகவானின் அசிங்கங்கள் (லீலைகள்) குமட்டிக் கொண்டு வருகின்றன என்பதை பக்தர்கள் புரிந்து கொள்வார்களாக!

----------------- மயிலாடன் அவர்கள் 17-2-2010 “விடுதலை” யில் எழுதிய கட்டுரை

0 comments: