பத்தாயிரம் பேர் மட்டுமே உள்ள ஜாதியை சேர்ந்த கருணாநிதி அய்ந்து முறை தமிழ் நாட்டின் முதல் அமைச்சர் ஆகி விட்டார்.
பல கோடி எண்ணிக்கையில் உள்ள வன்னியர்களிலிருந்து ஒருவர் முதல் அமைச்சராகிட முடியவில்லை; காரணம், வன்னியர்களிடத்தில் ஒற்றுமை இல்லை என்ற கருத்தினை பா.ம.க., நிறுவனர் மருத்துவர் ச. இராமதாசு அவர்கள் கூறி வருகிறார்.
பார்ப்பன ஆதிக்கத்தின் காலடியில் நசுங்கிக் கிடந்த தமிழ்நாட்டில் அதனைத் தூக்கி எறிந்து பார்ப்பனரல்லாதார் கையில் அனைத்தும் வர வேண்டும்; பிறவியின் அடிப்படையில் நான்காம் ஜாதியாக, அய்ந்தாம் ஜாதியாக மிதிபட்டுக் கிடந்த மக்கள் மத்தியிலே விழிப்புணர்வு ஏற்பட வேண்டும்.
கொடிய ஆரிய வருணாசிரமத்தின் முதலைப் பிடியிலிருந்து இந்நாட்டுக்குரிய மக்கள் மீட்கப்பட வேண்டும் என்று போர்க் குரல் கொடுத்து பூமிப் பந்தையே அதிரச் செய்தவர் தந்தை பெரியார்; பாடுபட்டது தன்மான இயக்கம் _ திராவிடர் கழகம்.
அதற்குமுன் நீதிக்கட்சி என்ற தென்னிந்திய நலவுரிமைச் சங்கம் பார்ப்பனர்களின் சமுதாய ரீதியான - மத ரீதியான ஆதிக்க நங்கூரத்தைப் பற்றிக் கவலைப்படாமல் கல்வி, வேலை வாய்ப்புகளில் பார்ப்பனர் அல்லாதாரின் எழுச்சிக்கு மட்டும் வித்திட்டுப் பாடுபட்டது.
ஆட்சிக் கட்டிலிலும் அமர்ந்து ஆன பணிகளை செய்தது. வகுப்புவாரி உரிமை சட்டம் வருவதற்குக் காரணமாகவிருந்தது. கல்வியிலும் வேலை வாய்ப்புகளிலும் பார்ப்பனர் அல்லாதார் தலையெடுக்க அடிக்கல்லை நாட்டியது.
பார்ப்பன ஆதிக்கத்தை எதிர்த்தவர்கள் பார்ப்பனியத்திற்கு அடிமைப்பட்டுக் கிடந்தனர். நீதிக்கட்சித் தலைவர்களின் வீடுகளில் நடந்த நிகழ்ச்சிகளுக்கு புரோகிதப் பார்ப்பனர்கள் அழைக்கப்பட்டனர். நீதிக்கட்சியின் இந்த நிலைப் பாட்டிலிருந்து மாறுபட்டவர் தந்தை பெரியார். பார்ப்பன ஆதிக்கத்துக்கு வேர்க்கருவிகளாக இருக்கக் கூடிய மூலபலத்தோடு போர் புரியாமல் அதனை முட்டி மண்ணும் மண்ணடி வேருடன் சாய்க்காமல், உண்மையான முறையில் பார்ப்பன ஆதிக்கத்தை வீழ்த்திவிட முடியாது என்று வீறு கொண்டெழுந்தது தன்மான இயக்கம்.
ஜாதி அதனைக் கட்டிக் காக்கும் கடவுள், மதம், வேதம், இதிகாசப் புராணக் குப்பைகளுக்கெல்லாம் கொழுந்துத் தீயை ஊட்டி சொக்கப்பானை நடத்தியது.
1929 செங்கற்பட்டு முதல் மாகாண சுயமரியாதை மாநாடு தொடங்கி ஒவ்வொரு மாநாட்டிலும் ஜாதி ஒழிப்புக்கான சங்கநாதம் தீர்மானமாக வடிவெடுத்தது. ஜாதிப் பட்டங்களைத் துறந்தது. மாநாட்-டிலேயே ஜாதிப் பட்டங்களைத் துறந்து அறிவித்த தீரர்கள் வெடித்துக் கிளம்பினார்கள்.
இந்திய அரசமைப்புச் சட்டத்தில் ஜாதியைப் பாதுகாக்கும் பகுதியை எரிக்கும் போராட்டத்தில் பத்தாயிரம் கருஞ்சட்டைத் தொண்டர்கள் ஈடுபட்டனர். மூன்று மாதம் முதல் மூன்றாண்டு வரை கடுங்காவல் தண்டனைக்கு ஆளானவர்களும் உண்டு. சிறையிலே சிலர் செத்து மடிந்தனர். நோய் வாய்ப்பட்டு, விடுதலையாகி வெளியில் வந்த குறுகிய நாள்களிலேயே கண்களை மூடிய கருஞ்சட்டையினர் எண்ணற்றோர்.
இந்தியாவிலேயே பெயருக்குப் பின்னர் ஜாதி வாலை ஒட்டிக் கொள்ள வெட்கப்படும் நிலையைத் தமிழ்நாட்டில்தான் காண முடியும்.
பா.ம.க., நிறுவனர் மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு இந்த வரலாற்றுப் பின்னணியும் தெரிந்திருக்கக் கூடும்.
இடஒதுக்கீடுக்காக ஜாதி என்ற அளவுகோலை, மருந்தில் குறிப்பிட்ட சதவிகிதம் விஷம் கலப்பதுபோல பயன்படுத்திவந்தது மருத்துவர் அவர்களுக்குத் தெரியாமல் இருக்க முடியுமா?
இடஒதுக்கீட்டில் ஜாதி அளவுகோல் தேவை என்று அழுத்தமான குரல் கொடுக்கும் திராவிடர் கழகத்தினரைவிட, ஜாதி ஒழிப்புச் சிந்தனையாளர்கள், ஜாதி ஒழிப்பைத் தங்கள் வாழ்வில் நாணயத்துடன் பின்பற்றுபவர்கள் வேறு யாரும் இருக்க முடியாது. ஜாதி ஒழிப்பையும், இடஒதுக்கீட்டில் ஜாதியை பயன்படுத்துவதையும் ஒன்றோடு ஒன்று போட்டுக் குழப்பிக் கொள்ளக் கூடாது.
நமது இன எதிரிகள் இடஒதுக்கீட்டினால்தான் ஜாதி பாதுகாக்கப்படுகிறது _ வளர்கிறது என்று மட்டமாகப் பிரச்சாரம் செய்கிறார்களே, அந்தக் கண்ணி வெடிக்கு மருத்துவர் இராமதாசு அவர்கள் காரணமாகி விடக் கூடாது.
தந்தை பெரியார் அவர்களை பெரிதாக மதித்துப் போற்றக் கூடியவர் மருத்துவர் என்பது முக்காலும் உண்மை ஒரு கட்டத்தில் தமது கட்சித் தோழர்களைக் கருஞ்சட்டை அணியக் கூடச் செய்தவர் என்பதை நாம் அறிவோம்.
தந்தை பெரியார் அவர்களை மதிப்பது என்பது வேறு; புரிந்து கொள்வது என்பது வேறு.
பத்தாயிரம் பேர் மட்டுமே உள்ள ஜாதியைச் சேர்ந்த கருணாநிதி முதல் அமைச்சர் ஆகிவிட்டாரே என்று பேசுவது தந்தை பெரியாரைப் புரிந்து கொண்டதாக ஆகாது.
இனவுணர்வுக்கு எதிரானது ஜாதிய உணர்வு, ஜாதி உணர்வு வளர்ந்தால் இனவுணர்வு குன்றிப் போய் விடும். இனவுணர்வுக்குத் தடையாக இருப்பது ஜாதிய உணர்வு.
மருத்துவர் இராமதாசு ஜாதி உணர்வை வளர்க்க ஆசைப்படுகிறாரா? இனவுணர்வை வளர்த்தெடுக்க ஆசைப்படுகிறாரா?
தந்தை பெரியார் ஜாதி உணர்வை வளர்த்தவரா? இன உணர்வை வளர்த்தவரா?
என்ன காரணத்தாலோ இதுவரை இதுபற்றி சிந்திக்க அவர் மறந்திருந்தால், கண்டிப்பாக அவர் சிந்திக்க வேண்டிய தருணம் இதுதான்.
இசை வேளாளர் சமூகத்தில் பிறந்தவர் முதல் அமைச்சராக இருக்கும்போது, வன்னியர் ஒருவர் முதல்வராக வரக்கூடாதா என்று கேட்பதும், வன்னியர் ஒருவர் முதல் அமைச்சராக வந்தால் தேவர் ஏன் முதல் அமைச்சராக வரக் கூடாது என்று வினா தொடுப்பதும், தேவர் ஒருவர் முதல் அமைச்சராக ஆகும் பட்சத்தில் செட்டியார் ஒருவர் வரக் கூடாதா, நாங்கள் மட்டும் ஏமாந்த சோணகிரிகளா? எங்களில் ஒருவர் முதல் அமைச்சரானால் என்ன கெட்டு விடும் என்று பேச ஆரம்பிப்பதற்கும், அதன் காரணமான மோதல்களை உருவாக்குவதற்கும்தான் மருத்துவர் இராமதாசு அவர்களின் பேச்சு பயன்படும். நாம் எடுக்கும் எந்த ஒரு முடிவும் ஜாதியக் கிருமிகள் உற்பத்தியாவதற்குப் பயன்பட்டு விடக் கூடாது. அந்த ஜாதி நோய்தான் தமிழர்களைப் பல்லாயிரப் பிளவுகளாகக் கூறு போட்டு ஒருவருக்கொருவர் குருதி குடிக்க வைத்தது.
சுடுகாட்டில்கூட அந்தப் பேத நோய் தாண்டவமாடும் நிலை தானே! மனிதன் சாகிறான் ஆனால் அவனைப் பிறப்பில் பிடித்த ஜாதி மட்டும் சாவது கிடையாது. வாழ்நாள் முழுவதும் 95 வயதிலும் தொண்டை வறள வறள மூத்திர வாளியைச் சுமந்துகொண்டு மூச்சுக்கு மூச்சு ஜாதி ஒழிப்புக்காக சங்கநாதம் செய்த சரித்திர நாயகர் தந்தை பெரியார் அவர்களின் தொண்டின் தூய்மையை பெரியாரின் தொண்டர் என்று சொல்லிக் கொள்வதில் பெருமைப்படும் மருத்துவர் உணர வேண்டாமா?
தாழ்த்தப்பட்டவரை குடியரசுத் தலைவராக்கு! பிற்படுத்தப்பட்டவரை உச்சநீதிமன்ற நீதிபதியாக்கு என்று சொல்லுவதுகூட காலா காலத்திற்கும் பொருந்தும் என்றுகூட நாம் சொல்ல முன்வரவில்லை. அந்தக் குரல் எழுப்ப வேண்டிய அவசியமே இல்லாத அளவுக்குச் சமனிய சமத்துவ சமூக அமைப்பு பூத்துக் கமழ வேண்டும் என்பது தான் நமது கொள்கையின் உச்சமும்கூட!
அரசியல் கட்சிகள் தேர்தலில் தோல்வி காண்பது என்பது இயல்பு தான்; 234 இடங்களில் 232 இடங் கள் திமுக தோல்வியைக் கண்ட தில்லையா?
இதெல்லாம் இயல்பான ஒன்றுதானே! அதற்காக நமது கொள்கையின் அடி பீடத்தை நுனிக் கொம்பில் ஏறி நின்று வெட்ட முனையலாமா? வீறு கொண்டு நிற்கலாமா?
சங்கடப்படுத்துவதற்காக அல்ல சற்று நிதானமாக சிந்திப்பதற்காகத்தான். விழுப்புரத்திலே பாட்டாளிகள் மாநாடு கூட்டி முதல் அமைச்சர் நாற்காலியில் மானமிகு கலைஞர் அவர்களை உட்கார வைத்தபோது அவர் வெறும் பத்தாயிரம் பேர்களைக்கொண்ட ஒரு ஜாதியைச் சேர்ந்தவர் என்ற உண்மை மருத்துவர் அவர்களுக்குத் தெரியாமல் போயிற்றா? குறிப்பிட்ட ஜாதியைச் சேர்ந்தவர் என்பதால்தான் கலைஞர் அவர்கள் அய்ந்து முறை முதல் அமைச்சர் ஆனாரா? மிக மிகப் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த கலைஞர் அவர்கள் இந்த நிலை எய்தியமைக்கு எத்தனை எத்தனைப் பன்முகங்கள் உண்டு என்பதை அறிய மாட்டாரா அருமை மருத்துவர்?
18 சட்டமன்ற உறுப்பினர்களைக் கொண்ட ஒரு கட்சியின் தலைவருக்கு இந்தச் சின்னஞ் சிறு உண்மை கூடத் தெரியாமல் போய் விட்டதா என்று ஆலமரத்தடியில் அமர்ந்து அரசியல் பேசும் சாமானிய மனிதன் கூடக் கேட்க மாட்டானா?
சித்தாந்தத்தை வளர்த்துக் கொண்டால் இந்தச் சிந்தனைச் சிதறல்கள் ஏற்பட வாய்ப்பு இல்லை. மருத்துவர் இராமதாசு என்றால் அது ஒரு ஜாதி அரசியல் என்ற முத்திரை பொதுவாக விழுந்திருக்கிறது. அதிலிருந்து முற்றாக விடுபட்டவர் என்ற முத்திரை சந்தேகத்துக்கு அப்பாற்பட்ட முறையில் விழுந்தால்தான் அரசியலிலும் அவர் விரும்பும் இடம் கிட்டும். இது ஒரு பாலபாடமாகும். தமிழ்நாட்டில் ஜாதியைச் சொல்லி முகவரி காட்டப்பட்ட அரசியல் எல்லாம் முகவரி இழந்து போனது பா.ம.க. நிறுவனருக்குத் தெரியாதா, என்ன? பாடத்திலிருந்து பாடம் பெறுவதுதான் புத்திசாலித்தனம்.
தந்தை பெரியாரைத் தலைவராக ஏற்றுக் கொள்ளும் மதிப்பிற்குரிய மருத்துவர் அவர்களே, பெரியார் சிந்தனைகளை இன்னும் அதிமாகப் படியுங்கள். மேலும் மேலும் தெரிந்து கொள்ள முயற்சியுங்கள் -உள்வாங்கிக் கொள்ளுங்கள் அசை போடுங்கள் அப்பொழுது கிடைக்கும் சரியான தடமும் தளமும்!
--------------------" 13-2-2010 “விடுதலை” ஞாயிறுமலரில் மின்சாரம் அவர்கள் எழுதிய கட்டுரை
0 comments:
Post a Comment