இது ஒரு மக்கள் பல்கலைக் கழகம்
உங்கள் பங்களிப்பு என்ன?
கலி. பூங்குன்றன்,
பொதுச்செயலாளர், திராவிடர் கழகம்.
மக்கள் பல்கலைக்கழகம் என்று அழைக்கப்படும் பெருமைக்குரியது பெரியார் மணியம்மை பல்கலைக் கழகம். 1988 இல் உலகின் பெண்களுக்கென்றே பிரத்தியேகமாகத் தொடங்கப்பட்ட ஒரே பொறியியல் கல்லூரி இது. கல்லூரியாக இருந்த நிலையிலே பல சாதனைகளைப் பொறித்ததுண்டு.
2007 ஆகஸ்ட் முதல் நிகர்நிலைப் பல்கலைக் கழகமாக நிகரற்ற பல்கலைக்கழகமாகப் பூத்துக் குலுங்கிக் கொண்டு இருக்கிறது. இந்த நிறுவனத்தில் படித்த மாணவிகள் உலகின் பல நாடுகளிலும் பெருநிலையில், இந்த நிறுவனத்துக்குப் பெருமை சேர்க்கும் வகையில் பணிபுரிந்து வருகின்றனர்.
அண்மையில் இந்தோ _ ருசியா நல்லுறவு அடிப்படையில் ருசியாவுக்குச் சென்ற குழுவில் தொழில்நுட்ப ரீதியில் இந்தியாவில் இடம்பெற்ற ஒரே ஒருவர் பெரியார் மணியம்மை பல்கலைக் கழகத்தின் துணைவேந்தரே!
பெரியார் மணியம்மை கல்லூரியாக இருக்கும்-போதே அண்ணா பல்கலைக் கழகத்துக்கு உட்பட்ட 242 கல்லூரிகளில் 15 ஆவது இடம் இக்கல்லூரிக்குக் கிடைத்தது. மண்டல (zonal)அளவில் முதல் இடத்தைப் பிடித்த புகழ்பெற்ற நிறுவனம் இது.
2012 ஆம் ஆண்டுவரை இப்பல்கலைக் கழகத்திற்கு AICTE தரச் சான்று அளித்துள்ளது. தேசியச் சான்றிதழ் (NAAC) 2014 வரை அளிக்கப்பட்டுள்ளது. இது உலகளாவிய தரச் சான்றாகும். உலகச் சுற்றுச்சூழல் அமைப்பு இப்பல்கலைக் கழகத்துக்கு விருது அளித்து மகிழ்ந்ததுண்டு.
சுற்றுச்சூழல், பூமி வெப்பமாதல் பற்றியெல்லாம் உலகம் பூராவும் பேசப்படும் காலகட்டம் இது. இப்பல்கலைக்கழகத்தின் ஆய்வுகளும், செயல்பாடுகளும் உலகிற்கே தேவையானவை.
ஆண்டு ஒன்றுக்கு 575.83 டன் கார்பன் உற்பத்தி இப்பல்கலைக் கழகத்தால் தடுக்கப்பட்டு வருகிறது. 7000 புரா கிராமங்களில் இந்திய மொத்த கார்பன் உற்பத்தியில் 19 விழுக்காடு குறைப்புக்கு இடம் இருக்கிறது என்று நிறுவுகிறது இந்நிறுவனம். இப்படிப்பட்ட ஒரு நிறுவனத்திற்கு அங்கீகாரம் ரத்து என்பது உலகக் கண்ணோட்டத்தில்கூட நினைத்துப் பார்க்க முடியாத ஒன்றே!
உச்சநீதிமன்றம் முன்புள்ள நிலையே தொடர்ந்திட அனுமதித்துள்ளதுதான் நீதியின் நிழலாகும். இந்நிறுவனம் பெற்றுள்ள விருதுகள் ஒன்றல்ல, இரண்டல்ல, நீண்ட பட்டியலுக்கு உரியது. இப்பல்கலைக் கழகப் பேராசிரியர்கள் உலகளவில் பெற்றுள்ள பட்டங்களும், விருதுகளும் (FELLOW SHIPS AND AWARDS) சாதாரணமானவையல்ல.
முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் அப்துல்கலாம் அவர்கள் சென்ற இடமெல்லாம் இப்பல்கலைக் கழகத்தின் புரா திட்டம்பற்றி புகழ்பாடிக் கொண்டு இருக்கிறார்.
தந்தை பெரியார் கூறிய கிராமச் சீர்திருத்தம் என்ற அடிப்படையில் (1944) புரா திட்டத்தை இப்பல்கலைக்கழகம் அறிமுகப்படுத்தியுள்ளது. நகர்ப்புறங்களில் உள்ள அத்தனை வசதிகளும் கிராமப்புறங்களுக்கும் கிடைக்கவேண்டும் என்ற நோக்கத்தையும் கொண்டது இத்திட்டம். 65 சுற்று வட்டாரக் கிராமங்களை இணைத்து இப்பல்கலைக் கழகம் இந்தியாவுக்கே வழிகாட்டிக் கொண்டிருக்கிறது. டாக்டர் அப்துல்கலாம் அவர்களே நேரில் வந்து களப்பணி கண்டு இறும்பூதெய்தியுள்ளார்.
இந்தியாவில் 7000 புரா கிராமங்கள் உருவாகப் போகின்றன அதற்கு முன்மாதிரி இந்தப் பல்கலைக் கழகம்.
தந்தை பெரியார், அன்னை மணியம்மையார் பெயரில் இயங்கும் இந்தப் பல்கலைக் கழகத்துக்கு அனுமதி ரத்தா? கேள்விப்பட்டோர் அனைவரும் திடுக்கிட்டனர். எந்தக் காரணத்துக்காக இந்த நிலை? இதுவரையும் தெரியாது. விளக்கம் கேட்கப்பட்டதா ரத்து செய்ய முனைவோருக்கே வெளிச்சம்!
மாணவர்கள், மாணவிகள் எதைப்பற்றியும் கவலைப்படாமல் தங்கள் படிப்பில் கவனம் செலுத்தி வருகின்றனர். எவ்விதமான சலனமும், அதிர்வும் இப்பல்கலைக் கழகத்தைப் பொறுத்தவரையில் கிடையாது.
பெற்றோர்கள் தான் பெருந்துயரத்திற்கு ஆளாகியுள்ளனர். இவ்வளவு அருமையான பல்கலைக் கழகத்துக்கு இந்தச் சங்கடத்தையும் கொடுத்திருக்கிறார்களே என்ற வேதனைதான் அவர்களுக்கு.
நாங்கள் எத்தகைய உதவிகளைச் செய்யவேண்டும் என்று கேட்டு தாங்களாகவே முன்வந்துள்ளனர் பெற்றோர்கள்.
அந்த வகையில் உருவானதுதான் பெரியார் மணியம்மை பல்கலைக் கழக சட்டப் பாதுகாப்புக்கான வழக்கு நிதி திரட்டும் பெற்றோர்களின் அமைப்பு.
தஞ்சை பெருமகனார் திரு. கே.ஆர். பன்னீர்செல்வம் இதற்கான பொறுப்பை மாணவியின் தந்தையார் என்ற முறையில் எடுத்துக் கொண்டுள்ளார்.
தகவல் அறிந்தவர்கள் நன்கொடையை அளிக்கத் தொடங்கிவிட்டனர். எவ்வளவு தொகை என்பது முக்கியமல்ல; எத்தகைய பங்களிப்பு, ஆதரவுக்கரம் பெரியார் நிறுவனத்துக்கு என்பதுதான் முக்கியமானது.
மக்கள் பல்கலைக் கழகம் என்பது வெறும் வாய் வார்த்தையல்ல சிறுதுளி பெருவெள்ளமாக வளர்ந்ததுதானே இந்நிறுவனம்!
இப்பொழுது இன்னொரு கட்டம். இதையும் சந்திப்போம் - எதையும் சந்தித்துப் பழக்கப்பட்டவர்களாயிற்றே நாம்!
மக்கள் பல்கலைக் கழகத்திற்கு மக்களின் பங்களிப்பு, நிதியுதவி பெருகட்டும்! பெருகட்டும்!!
தோழர்கள் ஒல்லும் வகையில் செயல்படுவார்களாக!
-------------------"விடுதலை” 7-2-2010
0 comments:
Post a Comment