ஓம்
பிரபலமான ராமவங்கி போல காசியில் ஓம் நமசிவாய வங்கி செயல்பட்டு வருகிறதாம். ஆண்டு தோறும் சிவராத்திரியன்று இந்த வங்கி திறக்கப்படுமாம். வடமாநிலப் பக்தர்களிடையே இந்த வங்கி புகழ் பெற்று விளங்குகிறதாம்.
சென்னையில் ராமநாம வங்கி உள்ளது. ராம நாமத்தை எழுதி அதை சேமித்து வைப்பது இதன் பணி.
ஆண்டு தோறும் மகா சிவராத்திரியன்று இந்த வங்கி திறக்கப்படும். ஆண்டு முழுவதும் ஓம் நமசிவாய என்ற மந்திரத்தை எழுதி வைத்த நோட்டுப் புத்தகங்களை பக்தர்கள் இங்கு கொண்டு வந்து கொடுப்பார்கள்.
இதற்காக நோட்டுப் புத்தகங்களை பக்தர்கள் விலைக்கு வாங்கவேண்டியது இல்லையாம். கோவில் நிருவாகமே அவற்றைக் கொடுக்குமாம்.
எவ்வளவு அதிகமாக எழுதுகிறார்களோ, அவ்வளவுக்கவ்வளவு மகாதேவரின் அருள் கிடைக்குமாம்.
இப்படி தினமலர் (22.2.2010) ஒரு செய்தியை வெளியிட்டது.
கடவுள் மீது மக்களுக்கு இயல்பாகப் பக்தி வருவதில்லை. சிவ சிவ என்றும் ராம ராம என்றும் எழுதினால் பகவான் அருள் கிடைக்கும் என்ற ஆசையைத் தூண்டி இது போல எழுதச் செய்து பக்தியைத் திணிக்கிறார்கள் என்பதைக் கவனிக்க வேண்டும்.
பள்ளிக்கூடத்தில் மாணவர்களை (Imposition) இப்படி தண்டிப்பது உண்டு அல்லவா? அதே யுக்திதான் இதிலும்.
அதிலாவது பலன் உண்டு. இதில் நேரக்கேடும், புத்திக்கேடும்தான் உண்டு. ராம ராம என்று வைணவர்கள் எழுதிப் பக்தியைப் பரப்புவதைப் பார்த்து, சிவபக்தர்கள் சும்மா இருக்க முடியுமா? அதற்குத்தான் ஓம் நமசிவாய வங்கி எல்லாம் போட்டிக் கடைகள்தான்.
ராம ராம என்றோ, ஓம் நமசிவாய என்றோ அதிகம் எழுதினால் பலன் கிடைக்கும், பகவான் அருள் கிடைக்கும் என்றால் அரசாங்க அலுவலகங்களையெல்லாம் இழுத்து மூடிவிட்டு, அந்தக் கட்டடங்களையெல்லாம் பஜனை மடங்களாக்கி, மக்களைக் கூட்டி வைத்து இந்தச் சுலோகங்களை எழுதச் செய்யலாமே!
ராமன் கோயிலைக் கட்டவேண்டும் என்று ஏன் கோர்ட்டுக்குப் போகவேண்டும்? குந்திய இடத்தில் இருந்து கொண்டு ராம ராம எழுதிச் சாதிக்க வேண்டியதுதானே! ஏன் இரட்டை வேடம்?
சரி, ஓம் என்று எழுதச் சொல்கிறார்களே. அதன் பொருள் என்ன? வெளியே சொன்னால் வெட்கக்கேடு!
இந்து மதத்தில் தாந்திரீகம் என்ற வழிபாடு உண்டு. ஆண்- பெண் புணர்ச்சியின் குறியீடே இந்த ஓம் ஆகும். யோகம், போகம் இரண்டும் உருகிக் கலக்கும் உச்சக்கட்ட நிலையை அடையாளப் படுத்துவதுதான் இந்த ஓம்.
ஒரு ஆறுதல் இந்த வழிபாடு உலகில் வேறு பல நாடுகளிலும் உண்டு என்று வேண்டுமானால் சொல்லிக் கொள்ளலாம் (ஆதாரம்: கோல்டன் எஃப்டி கொலாபவாலா எழுதிய தந்திரா - காமம் சார்ந்த வழிபாடு (Tantra the Erotic Cult எனும் Orient Paper Backs நூல்).
உயிர்களில் ஆண் பெண் சேர்க்கை புணர்ச்சி என்பது இயற்கையானது. இரகசியத்தில் நடப்பதைப் பகிரங்கப்படுத்தி, உருவங்கொடுத்து, பக்தி மயமாக்குவது மதத்தின் ஆபாசத்தையும், நாகரிகமற்ற நிலையையும்தானே காட்டுகிறது? இந்தக் காட்டு மிராண்டிக் காலச் சிந்தனையை 2010 லும் புதுப்பிப்பது நாகரிகம்தானா?
இந்த அசிங்கத்தை எழுதி, சேர்த்து சேமித்து வேறு வைக்கிறார்களாம். அதற்குப் பெயர் வங்கியாம்! ஓ, அசிங்கமே, உன் பெயர்தான் இந்து மதமா?
---------------- மயிலாடன் அவர்கள் 28-2-2010 “விடுதலை” யில் எழுதிய கட்டுரை
குறிப்பு: 5.6.1990 அன்று நெல்லை அம்பாசமுத்திரத்தில் கழகத் தோழர் சுப்பிரமணியம் ஓம் என்பதற்கான விளக்கத்தை தட்டியில் எழுதி வைத்ததற்காக அவர்மீது காவல்துறை வழக்குப் புனைந்தது. மேற்கண்ட ஆத-ரத்தை வழக்கறிஞர் பாண்டி-வளவன் நீதிமன்றத்தில் எடுத்துக்-காட்டி வழக்கில் வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்-தக்கது.
0 comments:
Post a Comment