Search This Blog

8.2.10

உலகத் தமிழ் செம்மொழி மாநாடும் சங்கராச்சாரியும்


செம்மொழி மாநாடு

உலகத் தமிழ் செம்மொழி மாநாடு ஒரு சாரார் மட்டும் கலந்துகொள்வதாகவோ, குறிப்பிட்ட ஒரு கொள்கையைப் பிரச்சாரம் செய்வதற்காகவோ அமைந்துவிடக் கூடாது. சைவம், வைணவம் போன்ற சமயங்கள் போட்டி போட்டுக்கொண்டு தமிழை வளர்த்து வந்ததை யாரும் மறைத்துவிட முடியாது. ஆகையால், உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டுக்கு சமயச் சான்றோர்களையும், மடாதிபதிகளையும் அழைக்கவேண்டும்! என்று கூறியிருப்பவர் யார் தெரியுமா?

மடத்தைவிட்டு இரவோடு இரவாக ஒரு நாள் தலைமறைவானாரே கொலைக் குற்றச்சாற்று செய்யப்பட்டு, சிறையிலும் 61 நாள்கள் இருந்து இப்பொழுது பிணையில் உலவிக் கொண்டு இருக்கிறாரே சாட்சாத் ஜெயேந்திர சரஸ்வதி என்பார்தான் (இவரை சங்கராச்சாரியார் என்று ஏற்றுக்கொள்பவர்களும், ஏற்றுக்கொள்ளாதவர்களும் உண்டு).

இதே காஞ்சி சங்கராச்சாரியார்களின் கருத்துகள் என்ன? கோயிலுக்குள் தமிழில் வழிபாடு கூடாது; குட முழுக்குகளைத் தமிழில் நடத்தக் கூடாது என்று சொல்பவர்கள்தானே! தெய்வத்தமிழ் என்று சொன்னால் போதுமா? அதனை நடைமுறையில் ஏற்றுக்கொண்டு, செயல்படுத்தவேண்டாமா?

கரூர் மாவட்டம் திருமலை முத்தீஸ்வரர் கோயில் குடமுழுக்கு 9.9.2002 அன்று தமிழில் மந்திரம் சொல்லி நடைபெற்றது. இதனைக் கண்டித்து கோயில் பொறுப்பாளர்களுக்குக் கடிதம் எழுதிய ஜெயேந்திர சரஸ்வதி கும்பாபிஷேகங்களில் சமஸ்கிருத மந்திரங்கள் தொன்று தொட்டு ஓதிவரும் வழக்கத்தை கைவிடுவது முறையல்ல! (இந்தியா டுடே 2.10.2002) என்று கூறியவர்தான் சைவ, வைணவங்கள் தமிழை வளர்த்ததாக மூக்கால் அழுகிறார்.

திருக்குறளில் உள்ள அறத்துப்பாலை, அதிலும் முதலில் பத்து குறட்பாக்களை மட்டும் மாணவர்களுக்குச் சொல்லிக் கொடுத்துவிட்டு, பொருட்பால், காமத்துப்பாலை சொல்லிக் கொடுக்கவேண்டிய அவசியமில்லை என்று சொன்னவரும் இதே பெரியவாள்தான். என்னே இரட்டை வேடம்!

இவருடைய மூத்தார் சந்திரசேகரேந்திர சரஸ்வதி இருக்கிறாரே அவர் யார்?

தீக்குறளை சென்றோதோம் என்ற ஆண்டாளின் பாடலுக்கு தீய திருக்குறளையே படிக்கமாட்டோம் என்று கூறியவர்தானே (தீக்குறள் என்றால் தீயதான கோள் சொல்லுதலை செய்யமாட்டோம் என்பதுதான் உண்மையான பொருளாகும்).

இதையும் கடந்து தமிழை நீசபாஷை என்று சொன்னவரும் இதே மூத்த சங்கராச்சாரியார்தான். (ஆதாரம்: ஆட்சி மொழிக்காவலர் கீ. இராமலிங்கனார் பேட்டி, உண்மை, இதழ், 15.12.1980, பக்கம் 40).

இத்தகைய பார்ப்பனர்கள்தான் தமிழுக்காகப் பாடுபட்டவர்களாம் இவர்களைத்தான் உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டுக்குக் கண்டிப்பாக அழைக்கவேண்டுமாம்!

நிஜக் கண்ணீருக்கும், கிளிசரின் கண்ணீருக்கும் வேறுபாடு உண்டே!

-------------------- மயிலாடன் அவர்கள் 8-2-2010 “விடுதலை” யில் எழுதிய கட்டுரை

0 comments: