Search This Blog

22.2.10

மதவாதிகளே பதில் சொல்லுங்கள்! - 15




ஆறாவது குருவாக ஆக்கப்பட்டவர் குரு அர்ஜனின் மகன் ஹர்கோவிந்த். தன்னுடன் எப்போதும் இரண்டு வாள்களை வைத்துக் கொண்டிருந்தவர். ஒன்று சக்தி என்றும் மற்றொன்று பக்தி என்றும் விளக்கம் அளித்தார். துறவிக்குரிய தன்னலமறுப்பும் (Piri) அரசர்க்குரிய கம்பீரமும் (Miri) ஒருங்கே அமையப் பெற்றி-ருந்தவர். உண்மையான மன்னர் (Sacha Badshah) என்று அழைக்கப்-பட்டதற்கேற்ப, படை திரட்டி, குதிரைகளில் சவாரி செய்வதை அறிமுகப்படுத்தியவர். படை திரட்டியதோடு கோட்டை கொத்தளங்களையும் கட்டியவர். சுருங்கச் சொன்னால் சாமியார்களைப் போர் வீரர்களாக்கியவர் அகிம்சை என்பதைக் கோழைத்தனம் என்றவர்.

தனது 14 ஆம் வயதிலேயே ஏழாவது சீக்கிய குரு ஆனவர் ஹர் ராய். குரு ஹர்கோவிந்தின் மூத்த மகன் பாய்குர்டித்தாவின் மகன். இவரும் 1661 ஆம் ஆண்டில் தமது 30 ஆவது வயதில் காலமானார்.

தனது இரண்டாம் மகன் ஹரிகிருஷ்ணனை எட்டாவது குருவாக்கினார். ஒன்பதாவது குருவானவர் தேஜ்பகதூர். அவர் காலத்தில் காஷ்மீர்ப் பார்ப்பனர்கள் அமர்நாத் யாத்திரை போக விரும்பினார்களாம். அந்தப் பார்ப்பனர்களில் ஒருவரான கிர்பாராம் என்பவர் கனவு கண்டாராம்; அந்தப் பார்ப்பனர்களைச் சீக்கிய மதகுருவான தேஜ்பகதூர் மட்டுமே காக்க முடியும் எனக் கண்டாராம். காரணம் கலியுகக் காவலர் அவர்தானாம். உடனே பார்ப்பனர்கள் பஞ்சாபில் அனந்தபூர் வந்து குருவைச் சந்தித்தனராம். தங்களுக்குத் தேவைப்படுவதை எடுத்துக் கூறினார்களாம். இந்துக்களை முசுலிம்களாக மதம் மாறும்படி அவுரங்கசீப் ஆணையிட்டிருப்பதையும் அதற்கு ஆறுமாத காலம் அவகாசம் தந்திருப்பதையும் தெரிவித்தார்கள். நிலைமையைத் தெரிந்து கொண்ட தேஜ்பகதூர் பார்ப்பனர்களிடம் முதலில் தேஜ்பகதூர் மதம் மாறினால் நாங்களும் மதம் மாறத்தயார் எனக் கூறிவிடுங்கள் என்றாராம்.

இதையறிந்த முகலாய மன்னர் அவரை டில்லிக்கு வரவழைத்து சிறையில் அடைத்து விட்டார். சில நாள்களில் அவரைக் கொன்று விட்டனர். உயர் ஜாதிப் பார்ப்பனச் சின்னமான பூணூல் மனிதர்களிடையே ஏற்றத்தாழ்வை ஏற்படுத்துகிறது எனக் கூறி பூணூலையே அணிய மறுத்து ஜாதிப் பிளவுகளுக்குச் சம்மட்டி அடி கொடுத்தவர் குருநானக். ஜாதிப் பிரிவுகளை எதிர்த்து அவரால் புதிதாக உருவாக்கப்பட்ட மதம் சீக்கியம். ஆனால் அம்மதத்தின் ஒன்பதாவது குரு பூணூல் மேனிகளைக் காப்பதற்காகத் தம்முயிரைத் தியாகம் செய்கிறார். அந்த தியாகத்தின் பலன் என்ன? இனிமேல் நாங்கள் பூணூலை அணிய மாட்டோம் என்று பார்ப்பனர்கள் உறுதி மொழி ஏற்றனரா? அல்லது குறைந்த அளவு காஷ்மீர்ப் பார்ப்பனப் பண்டிட்டுகளாவது அம்மாதிரி அறிவித்தார்களா? இல்லையே! குரு தேஜ் பகதூரின் உயிர்த்தியாகம் விழலுக்கு இறைத்த நீராகிவிட்டதே! ஓர் இயக்கத்தின் நோக்கங்கள் நீர்த்துப் போனால் விளைவுகள் எப்படி ஆகும் என்பதை எடுத்துக் காட்டுகிறதே! ஜாதி ஒழிப்புக்காக உருவான மதம் ஜாதியாலேயே பிளவுபடும் நிலை வந்துவிட்டதே!

மதவாதிகளே, என்ன பதில்?

குழந்தைப் பேறு இல்லாத மன்னர் ஒருவர் குருதேஜ் பகதூரிடம் வந்தாராம். குழந்தை வேண்டும் என்றாராம். அப்படியே ஆகட்டும் என்று குரு ஆசீர்வதித்தாராம். அவருக்குக் குழந்தை பிறந்ததாம். இது போன்ற பல அற்புதங்களை அவர் செய்தாராம். மூட நம்பிக்கைகளைக் கண்டித்தும், அவற்றை ஒழிக்க வேண்டும் என்கிற நோக்கத்தோடும் உண்டாக்கப்பட்ட மதத்தின் கதி காலப்போக்கில் எப்படி ஆனது என்று கவனிக்க வேண்டும்.

பத்தாம் குருவாக வந்த கோவிந்த் ராய், பிகாரின் பாடலிபுத்திர நகரைச் சேர்ந்தவர். வில் வித்தை கற்று அடிக்கடி விலங்குகளை வேட்டையாடச் சென்றவர். 52 கவிஞர்களைக் கூட்டி வைத்து கவி அரங்குகளை நடத்தியவர். சமக்கிருதம், பாரசீகம் ஆகிய மொழிகளில் புலமை பெற்றவர், கவியரங்குகளில் மேற்கண்ட மொழிக் கவிதைகளைப் பாடியும் பாடச் செய்தும் மகிழ்ந்தவர். இந்த வகையில் இவர், தன் முன்னோர் குருக்களின் பாதையிலிருந்து விலகி வாழ்ந்தவர். மக்களின் மொழியில் மதக் கருத்துகள் இருக்க வேண்டும் என்று புத்தரைப் போலவே குருநானக்கும் மற்றவர்களும் உழைத்தனர். புத்தர் பாலிமொழியைப் பயன்படுத்தியதைப் போல சீக்கிய குருமார்கள் குருமுகி மொழியை வளர்த்தனர். அந்தப் பாதையை விட்டு மாறிய பத்தாம் குரு சமக்கிருதம், பாரசீக மொழிகளை வளர்த்துள்ளார். இம்மாதிரிச் செயலை புத்த மதத்தைச் சேர்ந்த நாகார்ஜுனன் என்பார் கூடச் செய்து புத்த வழியிலிருந்து பிசகினார். அத்துடன் நிறுத்தாமல் சீக்கிய குரு நாட்டில் நிலவி வந்த கட்டுக் கதைகளையெல்லாம் எழுத்தில் வடிக்கும் வேலையைச் செய்தார்.

1699 ஆம் ஆண்டில் சீக்கியர்களை எல்லாம் அனந்தபூர் நகருக்கு வரச் செய்து அவர்கள் முன்னிலையில் நின்றுகொண்டு தனது வாளுக்கு ரத்த அபிஷேகம் தேவைப்படுகிறது; தனது தலையைக் கொடுக்கும் துணிவுள்ளவர்கள் வாருங்கள் என அழைத்தார். ஒருவரும் வரவில்லை. (ஏமாற்றமும் எரிச்சலும் ஏற்பட்டிருக்கும்). மூன்றாம் முறையும் கேட்டபோது கத்ரி எனும் ஜாதியைச் சேர்ந்த தயாராம் எனும் 30 வயது இளைஞர் முன்வந்தார். மேடையில் மறைவான இடத்திற்கு அவர் அழைத்துச் செல்லப்பட்டார். கூட்டம் பதைபதைப்புடன் பார்த்துக் கொண்டிருந்தபோது குரு வெளியே வந்தார். அவரின் கையிலிருந்த வாளிலிருந்து ரத்தம் சொட்டிக் கொண்டிருந்தது. ஆனாலும் மறுபடியும் ஒரு வாலிபனைக் கேட்டார் குரு. கூடியிருந்தோர் மத்தியில் சலசலப்பு ஏற்பட்டது. என்ன ஆயிற்று குருவுக்கு என்று பலரும் முணுமுணுக்கத் தொடங்கினர். என்றாலும் இந்த முறை ஒரு ஜாட் இளைஞர் முன்வந்தார், உயிர்த்தியாகம் செய்ய! மூன்றாம் முறையும் ஓர் உயிரைப் பலி கேட்டார் குரு. ஒரு வாலிபர், துவாரகாவைச் சேர்ந்த மொக்கம்சந்த் என்பவர் முன்வந்தார். அவர் கதை முடிந்ததும் நான்காம் முறையாகவும் ஓர் ஆள் வேண்டும் எனக் கேட்டார் குரு.

கூடியிருந்தவர்களில் பெரும்பாலோர் ஓட்டம் பிடித்தனர். என்றாலும் ஹிம்மத்சந்த் எனும் வாலிபர் முன்வந்தார். அய்ந்தாம் முறையாகவும் உயிர்ப்பலி வேண்டும் என்ற போதும் ஒருவர் வந்தார். பலியிடும் இடத்திற்கு அவரை குரு அழைத்துச் சென்றபோது, மக்கள் குருவின் தாயாரையும் குருவின் ஆலோசகர்களையும் கூட்டி இந்தப் பிரச்சினையில் தலையிடுமாறு கேட்டுக் கொண்டனர். அவர்களும் மேடைக்கு வந்தபோது குருவும் உயிர்த்தியாகம் செய்ய ஒப்படைத்துக் கொண்ட 5 பேர்களும் மறைவிடத்தை விட்டு வெளியே வந்தனர். கூட்டம் மகிழ்ச்சியில் ஆரவாரித்தது. 5 முறையும் ஆடுகளை வெட்டி ரத்தம் தோய்ந்த வாளுடன் காட்சி அளித்து குரு நாடகம் நடத்தினார் என்ற விவரம் கூட்டத்திற்குக் கூறப்பட்டது.

ஓர் அண்டா நிறைய நீர் நிரப்பி அதனைக் கண்டா எனும் இருபுறமும் கூர் உள்ள கத்தியால் கலக்கி அது-தான் அமிர்தம் என்று கூறி, அய்ந்து இளைஞர்களையும் குடிக்க வைத்தார். அவர்கள் மதத்தில் சேர்த்துக் கொள்ளும் சடங்கு (Baptism) இதுதான். அதன்பின் அமிர்தத்தை அவரும் ருசித்தார். அந்த நொடி முதல் குருகோவிந்த் சிங் என்றாகிவிட்டார். அன்றைய நாளில் 20 ஆயிரம் பேர் சீக்கியர்களாகினர். வெட்டப்படாத தலை மயிர், தாடி, மீசை (கேசம் Kesh, இரும்பு வளையல் (கடகம் Kada), இறுக்கமான உள்ளாடை (கச்சம் Kangha) கையில் எப்போதும் சீப்பு (கங்கா முயபோய), கத்தி (கிர்பான் Kirpan) வைத்திருக்க வேண்டும் என்பது சீக்கியர்களின் அடையாளம் ஆக்கப் பட்டது. அந்த அமைப்பின் (கல்சா) அடையாளங்கள் என்றானது.

சீக்கியர்கள் புகைக்கக்கூடாது. போதை தரும் பானங்களைப் பருகக்கூடாது. காஷர் (இறைச்சியை) உண்ணக்கூடாது. மனைவியைத் தவிர வேறு பெண்களிடம் ஆசை வைக்கக்கூடாது. எல்லா சீக்கியர்களும் சமமானவர்கள் என்பதால் வேற்றுமை பாராட்டக்கூடாது. ஏற்றத் தாழ்வு என்ணுவதோ பார்ப்பதோ கூடாது. ஜாதிப் பிளவுகள் கூடாது. நிறைய கூடாதுகள் விதிக்கப்பட்டுள்ளன. ஆனால் கடைப்பிடிக்கப்படுகிறதா?

முக்கியமாக சமுதாயத்தைக் கூறு போட்டுப் பிளவுபடுத்தும் ஜாதி முறையை ஆதரித்து அனுஷ்டிக்கும் மதமாக இருப்பது குறித்து வெட்கப் படுவதேயில்லை. வெளிநாடுகளுக்குப் போனாலும் மத அடையாளத்தை ஜாதி பாகுபாடுகளின்படி வாழ்ந்து காட்டுகிற நிலை உள்ளதே! உணவு உண்பது தனி மனிதனின் விருப்பு, வெறுப்பு, பழக்கம், ருசி போன்றவை சம்பந்தப்பட்டது. அதில் மதம் குறுக்கிடுவதை எந்த மதமாக இருந்தாலும் ஏற்க முடியாது. உணவில் கட்டுப்பாடு விதிப்பதை இந்த மதமும் செய்துள்ளது. யூத மதத்தில் கோஷர் உணவு என்கிறார்கள். சீக்கிய மதத்தில் காஷர் (இறைச்சி) கூடாது என்கிறார்கள். கொல்லப்படும் கோழி, ஆடு, மாடு என்பவற்றைக் கழுத்தை அறுத்துக் கொல்ல வேண்டும் என்கிறது இசுலாம். ஒரே வெட்டாக வெட்டிக் கொல்ல வேண்டும் என்கிறது சீக்கியம்.

எல்லா மதங்களைப் போலவே, மறு உலகம், மறுவாழ்வு என்பதை சீக்கியமும் பேசுகிறது. இவ்வுலக வாழ்க்கையைப் பயணிகள் தங்கிச் செல்லும் சத்திரம் போல என்று பேசுகிறது.

குரு கோவிந்த்சிங்கிற்குப் பிறகு குரு பரம்பரை ஒழிக்கப்பட்டு கடைசி குரு எனப் புனித நூலை (ஆதி கிரந்தம்) அறிவித்து விட்டார்கள். 36 பேர்கள் எழுதிய பாடல்கள் இதில் இடம் பெற்றுள்ளன. காலையும் மாலையும் அதை வணங்கவேண்டுமாம். (கடைப்-பிடிக்க வேண்டியது அல்லவா முக்கியம்?) அதை விட வேடிக்கை, வெண்சாமரம் வீசிக்கொண்டேயிருப்பார்கள் புத்தகத்திற்கு (வேர்க்குமோ?)

கடைசியாக குருகோவிந்த் சிங் சொல்லிய வரிகள்தான் புனித நூலில் உள்ளனவாம். ஆறாயிரம் பாடல்களாம். 31 ராகங்களாம். கடவுள் ஒன்றுதான், அதன் பெயர் உண்மை. அதுதான் அனைத்-தையும் படைத்தது, அதற்குப் பிறப்பும் இல்லை, இறப்பும் இல்லை, தானே உருவானது, குருவின் அனுக்கிரகம் மூலம் மட்டுமே அதனை அடைய முடியும் என்று முக்கியமாகக் கூறுகிறது.

யூதத்திற்கு மோசே, கிறித்துவத்திற்கு யேசு, இசுலாத்திற்கு முகம்மது நபி, என்ற வகையில் சீக்கியத்திற்கு குரு. எனவேதான் அந்த மதத்தில் குரு ஆக வருவதற்கு இவ்வளவு போட்டிகளோ? சீக்கியர்களின் அடையாளமாகக் கருதப்படும் தலைப்பாகையில் கூட ஜாதி வேற்றுமை வெளிப்படுத்தப்படுகிறது. கூம்பு வடிவத் தலைப்பாகையைத் தாழ்த்தப்பட்டோர் அணியக்கூடாதாம். மேல்புறம் தட்டையாக இருக்கும் வகையிலான தலைப் பாகையைத்தான் அணிய வேண்டுமாம். இந்து மதம், தாழ்த்தப்பட்டவர்கள் தலைப்பாகையே கட்டக்கூடாது என்றது. அதற்கு இது பரவாயில்லை எனத் தோன்றுகிறது.

கொள்கைகளைப் பறக்கவிட்டுவிட்ட மதம் என்கிற பட்டியலில் சீக்கியமும் சேர்ந்து கொண்டு விட்டது!


------------------- சு. அறிவுக்கரசு அவர்கள் 22-2-2010 “விடுதலை” யில் எழுதிய கட்டுரை

0 comments: