Search This Blog

14.2.10

மதவாதிகளே பதில் சொல்லுங்கள் ! -8



பூமியைப் படைக்க இரண்டு நாள்கள். ஏழு சொர்க்கங்களைப் படைக்க இரண்டு நாள்கள். அனைவருக்கும் அனைத்து வகை உணவுகளையும் ஏற்பாடு செய்ய நான்கு நாள்கள். ஆக, எட்டு நாள்களில் அல்லா தன் படைப்புப் பணியை முடித்ததாக குர்ஆர் வசனங்கள்(சூரா 41) கூறினாலும் வேறொரு இடத்தில் (சூரா 50) ஆறே நாள்களில் அத்தனையும் முடித்துவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எந்தக் கணக்கை நம்புவது என்பது குழப்பத்தில் இருக்கிறது.ஆனாலும் நிறைய பேர் சலாம் சொல்லிக் கொண்டு உள்ளனர். நெற்றி வடு, தழும்பு யாருக்கு அகலமாக, அதிகமாக உள்ளது என்பதில் போட்டி போட்டுக் கொண்டுள்ளனர்.

குர் ஆனுக்கு மூலமான பழைய ஏற்பாடு நூலில் கடவுள் சும்மா பேசினார் அனைத்தும் ஆகின எனக் கூறப்பட்டுள்ளது. முதலில் சொர்க்கங்கள், பிறகு பூமி. இருளில் பூமி இருந்ததால் வெளிச்சத்தை உண்டாக்கியதாம். பகலும் இரவும் உண்டானதாம். இது முதல் நாளில்.

எங்கும் நீர். (எப்படி வந்தது? யார் படைத்தது?) நீரிலிருந்து நீரைப் பிரிக்க கர்த்தர் கட்டளையிட்டது. விரிந்த வானம் தோன்றியது இரண்டாவது நாளில்.

நீர் வானத்திலிருந்து ஓரிடத்தில் கூடட்டும்; வறண்ட தரை உண்டாகட்டும் என்று கர்த்தர் கூறியதும் அவ்வாறே ஆகின. நீரைக் கடல் என்றும் தரையை நிலம் என்றும் அழைத்தது. பின்னர் நிலத்தில் தாவரங்கள் முதலில் விதையுள்ளவை, அடுத்து மரங்களும் விதையுள்ள பழங்களும். இது நடந்தது மூன்றாம் நாளில்.

இரண்டு ஒளி விளக்குகள் ஆகின; நிறைய வெளிச்சம் தருவது பகலுக்கும், குறைந்த வெளிச்சம் தருவது இரவுக்கும் என்று ஆகின. பிறகு நட்சத்திரங்கள் வந்தன. இவை நான்காம் நாளில் நடந்தன.

கடல்வாழ் உயிரினங்கள், பறவைகள் அய்ந்தாம் நாளில் ஆகின.

கால்நடைகள், விலங்கினங்கள், கொடிய மிருகங்கள் எல்லாம் வந்தன.

பிறகு கர்த்தர் தன்உருவைப் போல, மனிதனைப் படைத்து எல்லா உயிரிகளையும் அவனே ஆளுமாறு ஆக்கியது. ஆறாம் நாளில். பெண் படைக்கப்பட்டதும் ஆறாம் நாளில் கடைசியாக!

ஆணையும் பெண்ணையும் ஆசீர்வதிக்க ஆண்டவன் செழிப்பாக வாழ்ந்து பல்கிப் பெருகுவீராக என்றும் வாழ்த்தியது. ஆறே நாள்களில் அனைத்தும் முடிந்து விட்டன. ஏழாம் நாளில் எந்த வேலையும் செய்யாமல் கர்த்தர் ஓய்வு எடுத்துக் கொண்டது (என்ன களைப்போ?) ஏழாம் நாள் புனித நாள், அது ஓய்வெடுத்த காரணத்தினால்.

இந்து மதத்தில், உலகப் படைப்பும் உயிர் உற்பத்தியும் ஒன்பது புராணங்களில் கூறப்படுகிறது. ஒரு புராணப்படி,தண்ணீரில் முட்டை, முட்டையில் விஷ்ணு, விஷ்ணுவால் பிரம்மா வந்தது, பிறகு பிரம்மா படைக்கத் தொடங்கியது எனக் கூறப்பட்டு உள்ளது. ஏழு கடல்கள், ஏழு நிலப் பகுதிகளைப் படைத்ததாம். அதன் உடலிலிருந்து பல வகை உயிர்கள் தோன்றினவாம். ஏழு உலகங்களும் ஒன்றின் மேல் ஒன்றாக தட்டுகள் போல் அமைத்ததாம். இப்படியாகப் போகிறது படைப்புத் தொழில்.

மதவாதிகள் அளந்தது இருக்கின்ற இந்த உலகம் பற்றியதும், இல்லாத மேல் உலகம் பற்றியதும்தான். ஆனால் பேரண்டம் (பிரபஞ்சம் - Universe) உலகத்தைப் போல் மிக, மிக, மிக(எத்தனை மிகவேண்டுமானாலும் சேர்த்துக் கொள்ளலாம்) பெரியது. 15 அல்லது 20 பில்லியன் (ஒரு பில்லியன் என்பது 100 கோடி) ஆண்டுகளுக்கு முன் உருவானது. பெருவெடி (Big Bang) எனப்படும் நிகழ்வுக்குப் பின் உருவானது என்கிறது அறிவியல்.

கலீலியோவின் கண்டுபிடிப்புகளைக் கண்டித்து, அவரைத் தண்டித்த கத்தோலிக்க மதத் தலைமை(போப்)1992 இல் தனது நிலையைச் சரி செய்து கொண்டு அவருடைய கருத்தை ஏற்றது. போப்ஜான் பால் II இதற்கான முன் முயற்சியை எடுத்தார். அண்டவெளி அறிவியலாளர்கள் பலரையும் அழைத்து ஒரு மாநாடு நடத்தப்பட்டது. அதன் முடிவில் போப் அவர்களைச் சந்தித்தார். பெரு வெடிக்குப் பிறகு,உலகின் பரிணாம வளர்ச்சி பற்றி ஆராயலாம்; ஆனால் பெருவெடி பற்றி மட்டும் ஆராய வேண்டாம், ஏன் எனில் அதுதான் படைப்பு தொடங்கியதும் கர்த்தரின் வேலை ஆரம்பமானதுமான நேரமாகும் எனக் கேட்டுக் கொண்டார் போப்!

என்ன அர்த்தம் இதற்கு? கடவுளின் மடியில் கை வைக்காதீர்கள், எங்கள் மதம் பிழைப்பு போய்விடும் என்றுதானே கவலை? மக்களைத் தொடர்ந்து மவுடீகத்தில் வைத்துக் கொண்டிருக்கிறோமே, என்கிற உணர்வேவரவில்லையே! ஸ்டீபன் ஹாகிங் தம்முடைய A Brief History of Time என்கிற நூலில் போப் விவ-காரத்தை (பக்கம் 122) எழுதி அம்-பலப்படுத்தி உள்ளார். இந்தப் பேரண்டத்தின்எல்லை, எல்லையில்லாதது (The Boundary condition of the Universe is that it has no boundary) எனக் குறிப்பிட்டுள்ள ஹாகிங், பேரண்டம் தன்னுள் அனைத்தையும் அடக்கியுள்ளது. வெளிப் பொருளுக்கு வேலையில்லை. பேரண்டம் படைக்கப் படவும் இல்லை, அழிக்கப்படவும் முடியாதது எனத் தெளிவாக நிறுவியுள்ளார்.

ஹாகிங் கேட்ட கேள்வி இதுதான்: படைத்தவனுக்கான இடம் எங்கே?

மதவாதிகளே பதில் சொல்லுங்கள்.

விஞ்ஞான ஆராய்ச்சியின் மூலம் கண்டு பிடிக்கப்படும் எல்லா உண்மைகளும், அவற்றிலிருந்து கிடைக்கும் எல்லா பயன்களும் இறைவனின் அருட்கொடைகளே ஆகும் என்று எழுதி மாய்மாலம் செய்யலாமா, மதவாதிகள்?

அறிவியல் ஆய்வுகளின்படி, பேரண்டம், உலகம், கடல்கள், மலைகள் போன்றவை எப்படி உருவாகின என்பதைப் பார்க்கலாம். பேரண்டம், 1500 அல்லது 2000 கோடி ஆண்டுகளுக்கு முன்பு ஒளிகூடப் புகமுடியாத குழம்பாக (Opaque Plasma) பிழம்பாக இருந்தது. இதனை ஆதி வெப்பப் பந்து (Primordial Fire Ball) என அறிவியல் குறிப்பிடும். இதில் மிக ஆற்றல் வாய்ந்த ஃபோட்டான், புரோட்டான், எலெக்ட்ரான் ஆகியவை முட்டி மோதிக் கொண்டிருந்தன. பெருவெடிக்கு பத்து லட்சம் ஆண்டுகள் கழிந்த பிறகு, புரோட்டான்களும், எலெக்ட்ரான்களும் இணைந்து ஹைட்ரஜன் அணுக்களாகியிருக்கின்றன. ஆயிரம் கோடி ஆண்டுகளுக்குப் பிறகு சூரிய வெளி உருவாகி இருக்கிறது. நூறு கோடி ஆண்டுகளுக்கு முன்பு மறைந்து போய்விட்ட விண்மீன்களிலிருந்து இது உருவாகியது. தற்போதுள்ள சூரியன் மிகவும் வயதில் குறைந்த நட்சத்திரம். சுமார் 500 கோடி ஆண்டுகள் வயதுள்ளது.

ஹைட்ரஜன், ஹீலியம் ஆகிய வாயுக்களைத் தவிர்த்த ஏனைய பொருள்கள் எல்லாம் ஆயிரம் கோடி ஆண்டுகளுக்கு முன்பிருந்த நட்சத்திரங்களால் உருவாக்கப்பட்டவைதான். சூரிய வெளி தூசும், வாயுவும் அடங்கிய வெளிதான். இதைத்தான் சூரிய நெபுலா என அறிவியல் அழைக்கிறது.

ஏனைய உள்கோள்களான மெர்க்குரி, வீனஸ், பூமி, செவ்வாய் ஆகியவை தூசுத் துகள்கள் ஒன்று சேர்ந்ததால் குளிரடைந்து கோள்களாக (Planetesimals) அதன் பின்னர் பெரும் கோள்களாக (Protoplanets) உருவாகின. வெளிப்புறக் கோள்களான ஜூபிடர், சனி, யுரேனஸ், நெப்டியூன், புளூட்டோ ஆகியவை நெபுலா உடைந்து வாயு வளையங்களாக வும் பனிக்கட்டித் தூசுகளாகவும் மாறி, பிறகு ஒன்றாகக் கூடி, பெரும் கோள்களாக மாறின. நெபுலாவின் மய்யத்தில் ஏற்பட்ட சேர்மானங்களினால் உருவானதுதான் சூரியன்.

----------------------தொடரும்..., சு.அறிவுக்கரசு அவர்கள் 12-2-2010 “விடுதலை” யில் எழுதிய கட்டுரை

0 comments: