Search This Blog

26.2.10

ஜாதி மறுப்பு-விதவை மறுமண ஏற்பு விழா

ஜாதி மறுப்பு-விதவை மறுமண ஏற்பு உடுமலை வடிவேல் - கி.மணிமேகலையைப் பாராட்டி தமிழர் தலைவர் பேச்சு

பெரியார் வலைக்காட்சி நிகழ்ச்சி இயக்குநர் உடுமலை வடிவேல், கி.மணிமேகலை வாழ்க்கை ஒப்பந்த விழாவை ஜாதி மறுப்பு, விதவை மறுமண விழாவாக தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் சென்னை பெரியார் திடலில் நடத்தி வைத்தார்.

ஜாதி மறுப்பு, விதவை மறுமணம் ஆகியவைகளை அய்யா சொன்னார்கள். நாம் நமது மாநாடுகளில் கூட பத்து கட்டளைகளை உறுதிமொழியாக ஏற்பதுண்டு. அதை உடுமலை வடிவேல் அவர்கள் தெளிவாகக் கடைப்பிடித்து இருக்கிறார் என்று தமிழர் தலைவர் கி.வீர-மணி அவர்கள் பெரியார் திடலில் நடைபெற்ற உடுமலை வடிவேல்_-கி.மணிமேகலை ஆகியோரின் இணையேற்பு விழாவில் குறிப்பிட்டு விளக்கவுரையாற்றினார்.

வலைக்காட்சி இயக்குநர் வடிவேல்

உடுமலைப்பேட்-டையைச் சேர்ந்த ஓ.வேலுசாமி, வே.அழகியம்மாள் ஆகியோரின் மகனும், இயக்கத் தோழரும் பெரியார் வலைக்காட்சியின் நிகழ்ச்சி இயக்குநருமான உடுமலை வடிவேல், நாகர்கோவிலைச் சேர்ந்த கிருஷ்ணன், கமலம் ஆகியோரின் மகள் கி.மணிமேகலை ஆகியோரின் இணை ஏற்பு விழா 23.2.2010 செவ்வாய்க்கிழமை அன்று பெரியார் திடலில்உள்ள மணியம்மையார் அரங்கத்தில் சிறப்பாக நடைபெற்றது.

இவ்விழாவிற்கு கழக பொதுச்செயலாளர் கவிஞர் கலி.பூங்குன்றன் வரவேற்புரை வழங்கினார். பெரியார் சுயமரியாதை திருமண நிலையத்தின் மாநில அமைப்பாளரான திருமகள் இறையன் மணமக்களை அறிமுகப்படுத்தி உரையாற்றினார். முன்னிலை வகித்த கழக பொருளாளர் வழக்குரைஞர் கோ.சாமிதுரை மணமக்களை வாழ்த்திப் பேசினார். தொடர்ந்து பல்வேறு தவிர்க்க இயலாத பணிகளுக்கிடையே வந்திருந்த தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் தலைமை ஏற்று இணை யேற்பு விழாவை நடத்தி வைத்து உரையாற்றினார்.

தமிழர் தலைவர் உரை

அவர் தனது வழிகாட்டும் உரையில், பெரியார் திடல் குடும்பத்தில் இருந்து உடுமலை வடிவேல் மணவிழாவை ஏற்கிறார் என்பது நமக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. இங்கே எப்படி திருமகள் இந்த மணவிழாவிற்கு காரணமோ, அதே போல அங்கே என்.ஆர்.சந்திரன் காரணமாக இருந்து இந்த திருமண விழாவை பெரியார் சுயமரியாதை திருமண நிலையத்தின் மூலமாக ஏற்பாடுசெய்திருக்கிறார்கள். இது நல்ல முயற்சி, பாராட்டத் தகுந்த முயற்சி, திருமகள் அம்மையார் சொன்னார் உடுமலை வடிவேல் எவ்வளவு தெளிவாக எனக்கு விதவைப் பெண்தான் வேண்டும்; அதுவும் குழந்தையுடன் இருந்தால் இன்னும் மகிழ்ச்சி என்று கருதி இந்த மணவிழாவை ஏற்றிருக்கின்றார். எத்தனை பேருக்கு இந்தத் துணிச்சல் வரும். அவர் குறிப்பிட்டதைப் போலவே , குழந்தையுடன் கூடிய விதவை மறுமணம், ஜாதி மறுப்பு என்று இந்த இணையேற்பு நிகழ்ச்சி சிறப்பாக அமைந்திருக்கிறது. ஜாதி மறுப்பு, விதவை மறுமணம் ஆகியவைகளைப் பற்றி அய்யா அவர்கள் சொன்னார்கள்.

மாநாடுகளில் உறுதிமொழிகள்

நமது மாநாடுகளில் கூட உறுதிமொழியாக பத்து கட்டளைகளை தவறாமல் எடுத்துக்கொள்வதுண்டு. அதை உடுமலை வடிவேல் கடைப்பிடித்துக்காட்டி உள்ளார். மேலை நாடுகளில் விதவைகள் இருக்கின்றனர். ஆனால், விதவைத் தன்மை அங்கு கிடையாது. ஆங்கிலத்தில் ‘widow’ என்று பெண்ணைக் குறிப்பது போல ‘widower’ என்று ஆணுக்கும் இருக்கிறது. ஆனால், இங்கே கைம்பெண் என்ற வார்த்தைதான் உண்டு. ஆணுக்கு அந்த நிலை கிடையாது. இது எப்படி வந்தது, மதச்சிந்தனையாலும், கடவுள் சிந்தனையாலும் இந்த மூடநம்பிக்கையாலும் வந்தது.

மனச்சுமைக்கு ஆளாவது

சமுதாயத்தில் முதலில் மனச்சுமைக்கு ஆளாவது பெண் என்றால், அதைவிட மனச்சுமைக்கு ஆளாவது பெற்றோர்தான். உடுமலை வடிவேலை பாராட்டுவதைவிட மணப்பெண்ணின் பெற்றோரைத் தான் முக்கியமாகப் பாராட்ட வேண்டும். பல நேரங்களில் பெற்றோர்கள்தான் தடையாக இருக்கிறார்கள்.

மற்றவர்களுக்கு எடுத்துகாட்டாக

ஆகவே, இருவரும் எந்தவிதமான மனவேறுபாடோ மாறுபாடோ இல்லாமல் அன்பாக, மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாக வாழவேண்டும். வாழ்வார்கள் என்று உறுதியாக நம்புகிறேன் என்று வாழ்த்திப் பேசினார்.

தமிழர் தலைவர் உரைக்கு முன்னதாகப் பேசிய பேராசிரியர் மு.நீ.சிவராசன், சுயமரியாதைத் திருமணத்தைப் பற்றியும் மக்களின் சிறப்புகளைப் பற்றியும் குறிப்பிட்டு பேசினார். அவரைத் தொடர்ந்து பேசிய இனமான நடிகரும் மாநில கலைத்துறை அமைப்பாளருமான மு.அ.கிரிதரன் ஜாதி மறுப்புத் திருமணத்தின் அவசியம் பற்றி பேசினார். நிகழ்ச்சியை பிரின்சு என்னாரெசு பெரியார் நெறிப்படுத்தினார்.

மோதிரங்கள் அணிவிப்பு

மணமக்கள் இணையேற்பு உறுதிமொழி ஏற்றவுடன் நாகர் கோவில் பெரியார் பெருந் தொண்டர் மணமக் களுக்கு அன்பளிப்பாக இரண்டு மோதிரங்களையும் பொன் நகையும் அளித்திருந்தார். அதை மணமக்கள் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்களின் முன்னிலையில் அணிவித்துக் கொண்டனர். மணமகன் பொன்நகையை மணமக்களுக்கு அணிவித்தார். மணமகன் சார்பில் வே.திருமூர்த்தி, ஆறுமுகம் ஆகியோரும் மற்றும் இயக்கத்தோழர்களும், மணமகள் சார்பில் அவரது பெற்றோர் கிருஷ்ணன், கமலம் மற்றும் உறவினர்களும் கலந்துகொண்டனர்.

திராவிடன் நலநிதியில் ரூ.3000 மணமக்கள் சார்பில் நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூபாய் 1000 தலைமை நிலையச் செயலாளர் வீ.அன்புராஜ் அவர்களிடம் கொடுக்கப்பட்டது. அதே சமயம், தலைமை நிலையச் செயலாளரும் மணமக்களுக்கு திராவிட நலநிதியில் ரூ.3000க்கான வைப்பு நிதி சான்றிதழை வழங்கினார்.

தொடர்ந்து, பெரியார் திடலின் மேலாளர் ப.சீதாராமன், மாநில பகுத்தறிவாளர் கழக பொதுச்செயலாளர் வீ.குமரேசன், வடசென்னை மாவட்ட பகுத்தறிவாளர் கழக செயலாளர் தமிழ்ச்செல்வன், துணைத் தலைவர் கோபால், இனமான நடிகர் மு.அ.கிரிதரன் ஆகியோர் மணமக்களுக்கு அன்பளிப்பு அளித்தனர்.

தோழர்கள் க.பார்வதி, தங்கமணி, வெற்றிச்-செல்வி, பண்பொளி, கண்ணப்பன், இசையின்பன், பசும்பொன், பெரியார் மாணாக்கன், சு.நயினார், இறைவி, மீனாட்சி, கண்ணம்மாள, பல்சர் பாபு, வை.கலையரசன், ராஜூ, ஜோதி, மணிவண்ணன், விழிவேந்தன், தஞ்சை பிரபாகரன், லாரன்ஸ், மகேஷ், தமிழ்மணி, வடசென்னை மாவட்ட செயலாளர் தி.வே.சு திருவள்ளுவர், ரவிக்குமார் ஆர்.சாமூண்டூஸ்வரி, ஆர்.சரோஜினி, ராஜசேகர், தாஸ் ஆகியோர் மணமக்களுக்கு வாழ்த்துத் தெரிவித்தனர்.

வெற்றிச்செல்வன்

நான்கு வயது பெரியார் பிஞ்சு வெற்றிச்செல்வன் கடவுள் மறுப்பில் தொடங்கி, மணமக்களுக்கு அறிவுரையும், நன்றியும் தெரிவித்து உரையாற்றினார்.


----------------"விடுதலை” 27-2-2010

0 comments: