Search This Blog

20.2.10

தந்தைபெரியாரும் - சிந்தனைச்சிற்பி சிங்காரவேலரும்

சிங்காரவேலருடைய அறிவை உலகுக்கு வெளிப்படுத்தியவர் தந்தை பெரியார்- குடிஅரசு இதழ்

அந்தக் காலத்தில் சிங்காரவேலருடைய ஆற்றலை, அறிவை வெளிப்படுத்தியவர் தந்தை பெரியாரும், அவரது குடிஅரசு இதழும் என்று கூறி விளக்கிப் பேசினார் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள்.

தமிழர் தலைவர் உரை

சிந்தனைச் சிற்பி ம.சிங்காரவேலரின் 150 ஆவது ஆண்டு பிறந்த நாள் விழாவில் (சென்னை தேவநேயப் பாவாணர் அரங்கில் 18.02.2010 மாலை 6.30 மணி) திராவிடர் கழகத் தலைவர், தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் ஆற்றிய உரையில் கூறியதாவது:

குடிஅரசின் மாபெரும் புரட்சி

சிந்தனைச் சிற்பி சிங்காரவேலரின் 150 ஆவது ஆண்டு நிறைவு விழாவில் கலந்து கொள்வதில் பெருமையடைகிறோம்.

சிங்காரவேலர் அவர்களுடைய பெயரில் ஒரு அறக்கட்டளையை உருவாக்கி அதன் சார்பில் இந்த நிகழ்ச்சி சிறப்பான நிகழ்ச்சியாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

அந்தக் காலத்தில் தந்தை பெரியார் அவர்களுடைய இதழான குடிஅரசு ஒரு மாபெரும் புரட்சியை ஏற்படுத்தியிருக்கிறது. ஓர் இனத்தின் பாதுகாப்பு ஏடாக குடிஅரசு விளங்கியது.

சங்கரய்யா கேட்டார்

தோழர் சங்கரய்யா அவர்கள் இங்கே மேடையிலே அமர்ந்திருக்கின்ற பொழுது ஒரு செய்தியை எங்களிடம் கேட்டார்கள்.

பழைய குடிஅரசு ஏடுகள் இருக்கிறதா? அதிலிருந்து சில குறிப்புகளைப் பார்க்க முடியுமா? எடுக்க முடியுமா? என்று என்னிடத்திலே கேட்டார்கள்.

நான் அவர்களிடத்திலே சொன்னேன். அந்தக் காலத்து பழைய குடிஅரசு ஏடுகள் இன்னமும் பாதுகாத்து வைக்கப்பட்டிருக்கின்றன; பெரியார் திடலில் உள்ள பெரியார் பகுத்தறிவு ஆய்வக நூலகத்தில் அவைகள் எல்லாம் பத்திரப் படுத்தி, பாதுகாத்து வைக்கப்பட்டிருக்கிறது. ஆராய்ச்சி செய்யக் கூடிய மாணவர்கள் வசதியாக அமர்ந்து படித்து, குறிப்புகளை எடுத்து பிரதிகளை எடுக்கின்ற அளவுக்கு நூலகத்தில் வைக்கப்பட்டு இருக்கின்றது. தாராளமாகப் பார்க்கலாம், குறிப்புகளை எடுக்கலாம் என்று சொன்னேன்.

தந்தை பெரியார் அவர்களுடைய குடிஅரசு ஏடு சமுதாயத்தைச் சூழ்ந்த நோய்களைப் போக்கி இருக்கிறது. அதையும் தாண்டி நோய்க்குரிய அறுவை சிகிச்சைகளையும் செய்யக்கூடிய பல செய்திகளை மக்களுக்குத் தந்து சமுதாயத்தில் ஒரு மாபெரும் மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அகன்ற, ஆழமான சிந்தனைகளைக் கொண்டது. அந்த ஏடு இருபெரும் அறிஞர்களின் ஆற்றலை வெளிக் கொண்டு வந்து அவர்களைப் பெரிய அளவுக்கு இந்த சமுதாயத்திற்கு அறிமுகப்படுத்தியிருக்கிறது.

இரு பெரும் அறிஞர்கள்

அந்த வரிசையில் வந்த இரு அறிஞர்களில் ஒருவர் சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர். இன்னொருவர் கைவல்யம்சாமி அவர்கள். இந்த இரு பெரும் அறிஞர்களுடைய கட்டுரைகள், கருத்துகள் ஏராளமாக அந்தக் காலத்தில் குடிஅரசில் வெளி வந்திருக்கின்றன.

அவர்கள் எழுதிய நூல்கள் கொள்கைகள் தெளிவுபடுத்தப்பட்டு வெளிவந்திருக்கின்றன. சிங்கார வேலர் எழுதியது விஞ்ஞான முறையும், மூட நம்பிக்கையும் என்ற தலைப்பில் நூலாகவே நாங்கள் வெளியிட்டிருக்கின்றோம்.

மூடநம்பிக்கைகளை குறி சொல்வதிலிருந்து, சோதிடத்திலிருந்து இப்படி எல்லா மூடநம்பிக்கைகளுக்கும் அறிவியல் ரீதியான விளக்கங்களை சிங்காரவேலர் அவர்கள்எழுதியிருக்கின்றார்கள்.

அறிவார்ந்த வெளிச்சத்தை தந்திருக்கிறது. ஒரு கலங்கரை விளக்கம் போல சிந்தனைகளைக் கொண்ட நூல் அது. அது போல கடவுளும், பிரபஞ்சமும் என்ற நூல். இப்படி குடிஅரசில் வந்த செய்திகளை எல்லாம் சிங்காரவேலருடைய கருத்துகளை எல்லாம் நூலாக வெளியிட்டிருக்கின்றோம். நமக்கு வேண்டியது சுயராஜ்யமா? அல்லது சமதர்ம ராஜ்யமா? என்று இப்படி பல கருத்துகள் சிறப்பாக குடிஅரசில் எழுதி இருக்கின்றார் சிங்காரவேலர்.

தேசத்துரோகம், மக்கள் துரோகம் என்று இப்படி எல்லாம் வசைமாரி பொழியப்பட்ட அந்தக் காலத்தில் இவைகளைப் பற்றி எல்லாம் கவலைப்படாமல் துணிச்சலோடு எதிர்த்து கருத்துகளைச் சொன்னவர்கள், எழுதியவர்கள்.

பெரியாரையும் சிங்காரவேலரையும் இணைத்தது குடி அரசு

அந்த வகையிலே தந்தை பெரியாரையும் சிங்காரவேலரையும் இணைத்தது குடிஅரசு ஏடாகும். ஏதோ விழா நடத்தினோம், வெளிச்சம் போட்டுக் கொண்டாடினோம் என்றில்லாமல், சிங்கார வேலருடைய கருத்துகளை எடுத்துச் சொல்லுகின்ற விழாவாக, அதுவும் சிந்தனைச் சிற்பி சிங்கார வேலரின் சமூகச் சிந்தனையும், பன்முக ஆளுமையும் என்ற ஒரு கட்டுரைத் தொகுப்பு கொண்ட மலரை வெளியிட்டு, பயனுள்ள பணிகளைச் செய்திருப்பது பாராட்டத்தக்கது. இவைதான் ஆக்கபூர்வமான பணிகளாகும். அதற்காக எனது நெஞ்சார்ந்த நன்றியை இந்த விழாக் குழுவினருக்குத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

இந்தியாவின் மிகச் சிறந்த நாடாளுமன்ற வாதியாகத் திகழ்ந்தவர் கம்யூனிஸ்ட் கட்சியைச் சார்ந்த ஹிரேன் முகர்ஜி அவர்கள். நாங்கள் ஒவ்வொரு வருடமும் விடுதலை மலர் வெளியிட்டு வருகின்றோம். விடுதலை மலருக்குக் கட்டுரை தாருங்கள் என்று நானே அவருக்குக் கடிதம் எழுதி வாங்கியிருக்கின்றேன்.

ஹிரேன் முகர்ஜி பற்றி அண்ணா

ஹிரேன் முகர்ஜியைப் பற்றி பேரறிஞர் அண்ணா அவர்கள் சொல்லியிருக்கின்றார். கே.டி.கே.தங்கமணி அவர்களும், ஈ.வெ.கி. சம்பத் அவர்களும் அவருடன் பழகியவர்கள். தந்தை பெரியார் அவர்கள் ஒரு மாபெரும் சீர்திருத்தவாதி. அவர் உங்களுக்குத் தமிழ் நாட்டிற்குக் கிடைத்திருக்கிறார்.

வங்காளத்தில் செய்ய முடியவில்லையே!

தந்தை பெரியார் அவர்கள் தமிழ்நாட்டில் சுயமரியாதைத் திருமணத்தைக் கொண்டு வந்து பெரும் புரட்சியைச் செய்திருக்கின்றார். எங்களுடைய வங்காளத்தில் நாங்கள் எவ்வளவுதான் புரட்சி செய்தாலும் இன்னமும் பழைய வைதிக முறையில்தான் திருமணம் நடத்த வேண்டியிருக்கிறது என்று சொன்னார்கள்.

இன்னும் ஒரு நூறு ஆண்டுகளுக்கு இவர்களைப் போன்ற சீர்திருத்தவாதிகளைப் பார்க்க முடியாது. ஒருவர் கம்யூனிச இயக்கத் தலைவர் சிங்காரவேலர். இன்னொருவர் பகுத்தறிவுச் சிந்தனைகளுக்குத் தலைவரான தந்தை பெரியார் அவர்கள் என்று சொல்லியிருக்கின்றார்.

சிங்காரவேலரின் கருத்துகள் பரவ, தந்தை பெரியார் அவர்களின் குடிஅரசு ஏடு களமாக அந்தக் காலத்தில் அமைந்தது. பழைய குடிஅரசு தொகுதிகளைத் தொகுத்து வருகிறோம். குடிஅரசின் முதல் தொகு தியை நாங்கள் வெளியிட்டிருக்கின்றோம். அடுத்தடுத்த தொகுதிகளையும் கொண்டு வரவிருக் கின்றோம். எல்லா இடங்களிலும், எல்லோர் வீடுகளிலும் குடிஅரசு தொகுதிகள் இருக்க வேண்டும். அது மக்களிடையே பரவவேண்டும் என்ற அளவில் தொடர்ந்து அதற்கான பணிகளில் ஈடுபட்டுக் கொண்டு வருகின்றோம். சிங்கார வேலரைப் பற்றிய பல அரிய கட்டுரைகளை குடிஅரசில் இருந்து தொகுத்துக் கொடுத்திருக்கின்றோம். கம்யூனிஸ்ட் பார்ட்டியின் மேனிஃபெஸ்ட்டோ, கம்யூனிஸ்ட் கட்சியின் கொள்கையை இந்தியாவில் முதன் முதலில் தமிழில் மொழி பெயர்த்து வெளியிட்டவர் தந்தை பெரியாரும் அவருடைய குடிஅரசு இதழுமே. அந்தப் பெருமை அவர்களையே சாரும்.

சிங்காரவேலர்

சுயமரியாதை இயக்கத்தின் பணி என்ன என்பதை சிங்காரவேலரே எழுதியிருக்கின்றார். சிங்கார வேலர் பேசுகிறார். அவருடைய கருத்தைக் கேட்போம்.

நமது குடிஅரசு யாதொரு சுயநலமும் கருதாது, தேச நலத்திற்காக உழைத்து வந்ததின் முக்கிய பயன்களில், நமது நாடு முழுமையும் சமதர்மப் பேரொலி முழங்குவதே பெரும்பயனாகும்.

ஒரு காலத்தில் உலகம் முழுமையுமே பரவப் போகிற சமதர்ம இயக்கத்தைத் தமிழ் நாட்டில், இவ்வளவு சிறிய காலத்தில் நாடு முழுமையும் விளங்கச் செய்து வருவது குடிஅரசின் மகத்துவமேயாகும். நமது காலத்தில் இதற்கு இணை இல்லையென்றே சொல்லலாம்.

தேசிய பத்திரிகைகளும், அயல்நாட்டான் பத்திரிகைகளும் ஒரு கூட்டத்தார் நலத்தைக் கோரி, அவர்களை ஆதரித்து வந்திருக்கிற நேரத்தில், குடிஅரசு ஒன்றே ஏழைத் தொழிலாளர்கள் பாலும், விவசாயிகள் பாலும், திக்கற்றவர் பாலும், தாழ்த்தப் பட்டவர்கள் பாலும் பரிந்து பேச வந்திருக்கின்றது. சுருங்கச் சொல்ல வேண்டுமானால் பாமர மக்களை ஆதரித்துப் பேச தமிழ்நாட்டில் குடிஅரசு ஒன்றே உள்ளது. எங்கும் பல்லாயிரம் மக்களது அறிவை விசாலப்படுத்தியும் பகுத்தறிவைத் தூண்டியும் மதப் பற்றையும் மத வைராக்கியத்தையும் குறையச் செய்து வந்திருக்கிறது. உயர்ந்த சீர்திருத்தங்களுக்கெல்லாம் உதவியாக நின்று வருவது நம் குடிஅரசே!

மதங்களின் மேல் வைத்துள்ள பற்று, குடிஅரசின் கட்டுரைகளால் குறைவு பெற்று வருவதற்குச் சந்தேகமில்லை.

இன்று நமது இயக்கம், தமிழ்நாட்டிற்கு ஒரு பெரும் சண்டமாருதமெனக் கருதும்படி ஆயிற்று!

(30-4-1933 குடிஅரசு இதழில் சிங்காரவேலனார்)

பெரியார் கருத்து

1953 ஆம் ஆண்டு செப்டம்பர் 26 ஆம் நாள் திருச்சி பொன்மலை ரயில்வே தொழிலாளர் தோழர்கள் மாநாட்டில் சிங்காரவேலர் படத்தை தந்தை பெரியார் திறந்து வைத்து பேசியிருக்கிறார்.

வாராவாரம் குடிஅரசில் சிங்காரவேலர் எழுதிய கட்டுரைகள் ஆதாரபூர்வமாக வெளிவரும் என்றும், சிங்காரவேலரின் அருமை, பெருமைகளையும் எடுத்துச் சொல்லியிருக்கிறார்.

கோரிக்கைகளை வழிமொழிகிறேன்

இங்கே தலைமை உரை ஆற்றிய தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்க முன்னாள் தலைவர் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர், சிங்காரவேலர் அறக்கட்டளை ஆலோசகர். ச.செந்தில்நாதன் மாநில மத்திய அரசுகளுக்கு கோரிக்கைகளை வைத் தார்.

சிந்தனைச் சிற்பி ம.சிங்காரவேலருடைய பெயரில் தமிழக அரசு பொருத்தமான ஒரு விருதினை அறிவிக்க வேண்டும். அதே போல தோழர் ஜீவானந்தம் பெயரில் ஒரு விருதை அறிவிக்க வேண்டும் என்று கூறினார். அதே போல சிங்காரவேலர் பெயரில் ஒரு தபால் தலையை மத்திய அரசு வெளியிடவேண்டும். அவருடைய உருவம் பொறித்த நாணயம் வெளியிட வேண்டும் என்ற கோரிக்கை வைத்தார்.

அவர் முன் மொழிந்ததை அப்படியே நான் வழிமொழிகிறேன். சிங்காரவேலருடைய கருத்துகள், பகுத்தறிவுக் கருத்துகள், சுயமரியாதைக் கருத்துகள், சீர்திருத்தக் கருத்துகள், பொதுவுடைமை கருத்துகள் எங்கும் பரவிட வேண்டும்.

இவ்வாறு தமிழர் தலைவர் கி. வீரமணி பேசினார்.


--------------------- "விடுதலை” 19-2-2010

0 comments: