Search This Blog

3.2.10

மதவெறியைத் திணிக்க ஒரு லட்சம் ஆசிரியர்களாம்!



மாணவர்கள், இளைஞர்கள் மத்தியில் தங்களின் இந்துத்துவா நஞ்சை, வெறியை விதைக்க சங் பரிவார்க் கும்பல் ஓர் அபாயகரமான திட்டத்தில் இறங்கியுள்ளது. ஒரு லட்சம் ஆசிரியர்களை இந்துத்துவா வெறியோடு தயார் செய்து பணிகளில் அமர்த்தி, பிஞ்சுப் பருவத்தி-லேயே தங்களின் பார்ப்பனீய பாசிச நச்சு விதைகளை ஊன்றுவதுதான் அவர்களின் ஆபத்தான குரூரத் திட்டமாகும்.

ஏற்கெனவே 14 ஆயிரம் பள்ளிகளையும், 60 கல்லூரிகளையும் மேற்படிப்புக்கான 25 கல்வி நிறுவனங்களையும் நடத்தி வருகின்றனர். 18 இலட்சம் மாணவர்கள் இவர்கள் நடத்தும் கல்வி நிறுவனங்களில் பயின்று வருகின்றனர். ஆர்.எஸ்.எஸ். வன்முறைப் பயிற்சியும் முக்கியம் உண்டு.

நேருவின் பிறந்த நாளை குழந்தைகள் தினம் என்று அரசு அறிவித்தால், இவர்கள் இந்து மத ஆபாசக் கடவுளான கிருஷ்ணன் பிறந்த நாளை அவ்வாறு கொண்டாடுகின்றனர்.

ஆசிரியர்கள் நாள் என்பது டாக்டர் ராதாகிருஷ்ணன் பிறந்த நாள் அல்ல அவர்களுக்கு; மாறாக, வேதகால முனிவரான வியாசரின் பிறந்த நாளைத்தான் ஆசிரியர் நாளாகக் கொண்டாடுகிறார்கள்.

பாடத் திட்டங்களில் எல்லாம் அப்பட்டமான இந்துப் பாசிசம்தான். முலாயம்சிங் யாதவ் இக்கால இராவணன் என்று ஏன் அழைக்கப்படுகிறார்?

பாபர் மசூதியை இடிக்கும் முயற்சி நடந்தபோது முலாயம்சிங் யாதவைச் சேர்ந்த ஆட்களின் துப்பாக்கிக் குண்டுகளால் எத்தனை இந்துக்கள் கொல்லப்பட்டனர்? (அவுட்லுக், 10.5.1999). இவையெல்லாம் உத்தரப்பிரதேசத்தில் சங் பரிவார் நடத்தும் சரஸ்வதி மந்திர் பள்ளியில் ஏழாம் வகுப்புப் பாடத் திட்டத்தில் இடம்பெற்ற மதவாத நஞ்சுகளில் ஒரு துளிதான்.

இவை போதாது என்று ஒரு லட்சம் ஆசிரியர்-களுக்குப் பயிற்சி அளித்து, நாடெங்கும் கல்வி நிறுவனங்களை உருவாக்கி, இளம் பிஞ்சுகளை பயங்கரவாதத்தின் கைப்பிள்ளைகளாக உருவாக்கும் நாசகாரப் பணியில் ஈடுபட உள்ளனர்.

சங் பரிவாரின் மாணவ அமைப்பான அகில பாரதீய வித்யார்த்தி பரிசத்தின் (ஏபிவிபி) நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட ஆர்.எஸ்.எஸின் தலைவர்களுள் ஒருவரான ராம் மாதவ் இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளார்.

பாசிச முடைநாற்றம் வீசும் பரிவார்க் கும்பல் நடத்தும் இத்தகு கல்வி நிறுவனங்கள் எல்லாம் இந்த நாட்டில் இருக்கும் ஊடகக்காரர்களுக்கும், சில அதிமேதாவிகளுக்கும் தெரியவே தெரியாது.

வனவாசி கல்யாண் ஆசிரமம் என்ற பெயரில் பழங்குடி மக்கள் மத்தியில் ஓராசிரியர் பள்ளிகளை ஆர்.எஸ்.எஸ். நடத்தி வருகிறது. குஜராத் வன்முறையில்கூட இந்த அப்பாவி மக்களை நரேந்திர மோடி பயன்படுத்தினார் என்பது இந்த இடத்தில் சுட்டிக்காட்டத்தக்கதாகும்.

பெரியார் பெயரில் நடக்கும் கல்வி நிறுவனங்கள்தான் கண்களை உறுத்தும். சங் பரிவார் நடத்தும் கல்வி நிறுவனங்களுக்கு அரசு அங்கீகாரம் உண்டா? அங்கு இடம் பெற்றுள்ள பாடத் திட்டங்களை அரசு கண்காணிக்கிறதா? இதுபோன்ற கேள்விகளுக்கு விடை கிடையாது.

பெரியாரியலை சான்றிதழ், டிப்ளோமா, இளங்கலைப் பட்டம், முதுகலைப் பட்டம், ஆய்வுப் பட்டம் (பிஎச்.டி.,) இவற்றின்மூலம் மாணவர்களிடம் கொண்டு செல்லும் பெரியார் மணியம்மை பல்கலைக் கழகத்தை மட்டும் பதம் பார்க்கத் துடிக்கும் சக்திகளை மக்கள் அடையாளம் காணவேண்டும்.

பாரதீய ஜனதா அரசியல் ரீதியாக வீழ்த்தப்பட்ட நிலையில், அக்கட்சிக்குள் உள்கட்சிப் பிரச்சினைகள் தலை வெடிக்கும் அளவுக்குச் சிதறிக் கிடக்கும் சூழ்நிலையில், தனது மதவாத வெறியின் பக்கம் கவனம் செலுத்தியுள்ளது. விரக்தியின் உச்சத்தில் வெறித்தனத்தில் ஈடுபடுவது ஒரு வகையான பலகீனத்தின் வெளிப்-பாடேயாகும்.

எந்த வகையில் சங் பரிவார் தனது உத்தியைக் கடைபிடித்தாலும், அதனைச் சந்தித்து முறியடிக்கவேண்டியது மதச் சார்பற்ற சக்திகளின் முக்கிய கடமையாகும்.


-------------------”விடுதலை” தலையங்கம் 2-2-2010

0 comments: