Search This Blog

5.2.10

சர்ச்சை -மும்பை யாருக்குச் சொந்தம்?


மும்பை சர்ச்சை!


மும்பை யாருக்குச் சொந்தம் என்ற சர்ச்சை சூட்டைக் கிளப்பி விட்டது. மும்பை மகாராட்டியர்களுக்கே சொந்தம் என்பது சிவசேனாவின் இரும்புப் பிடி. இல்லை, இல்லை, மும்பை இந்தியாவுக்கே பொதுவானது என்பது இன்னொரு தரப்பினரின் கருத்துப்பிடி!


சிவசேனா அதன் தலைவர் பால்தாக்கரேயைப்பற்றி அறிந்தவர்களுக்கு இந்தப் பிரச்சினையில் அவர் இப்படி நடந்துகொள்வதில் ஒன்றும் வியப்பு இல்லை.
அவருடைய பலமும், பலகீனமும் அதுவாகத்தான் இருந்து வருகிறது. அதுவும் அவர் குடும்பத்தில் இருந்தே ஒரு தலைவர் கிளம்பி சிவசேனாவைவிட, பால்தாக்கரேயைவிட எங்கள் கட்சிதான் அதிதீவிரம் என்று காட்டிக்கொள்ளும் அவசியத்தில் இருந்து வருகிறார். மராட்டிய நவநிர்மாண் சேனாவின் தலைவர் ராஜ்தாக்கரேதான் அவர்.


இரு வெறியர்களில் யார் வெறிக்கு டிகிரி அதிகம் என்ற பந்தயம் அங்கு நடந்துகொண்டு இருக்கிறது.


சிவசேனாவுடன் எப்பொழுதும் உறையும், கையுமாக இருக்கும் பாரதீய ஜனதா கட்சி இந்தப் பிரச்சினையில் சிவசேனாவை உதறிவிட்டது. மும்பை இந்தியாவுக்கே சொந்தம் என்ற கட்சியில் அது சேர்ந்துகொண்டு விட்டது.


ஏக இந்தியா, ஏக தேசியம் பேசக்கூடியவர்கள் ஆயிற்றே அவர்கள்! மாநிலங்களே கூடவே கூடாது என்ற கொள்கை உடையவர்களாயிற்றே இந்த நிலையில், பால்தாக்கரேயுடன் எப்படி கட்டிப் பிடித்துக்கொண்டு நடனம் ஆட முடியும்?


2008 நவம்பர் 26 அன்று தீவிரவாதிகளால் மும்பையின் முக்கிய பகுதிகளான தாஜ் ஓட்டல், நாரிமன் இல்லம், சத்ரபதி சிவாஜி ரயில் நிலையம் முதலியவை தாக்கப்பட்டபோது, மும்பையில் உள்ளவர்கள் மட்டும்தானா காப்பாற்றினார்கள்? மற்ற மாநிலங்களைச் சேர்ந்தவர்களும் சேர்ந்துதானே காப்பாற்றினார்கள் என்று இராகுல்காந்தி வினா எழுப்பியதைப் பிடித்துக்கொண்டு, ராகுல் காந்தி மகாராட்டிரர்களை அவமதித்துப் பேசிவிட்டார்! என்று வெறியைக் கக்க ஆரம்பித்து விட்டனர்.


ஒரு காலகட்டத்தில் மும்பையில் இதே சிவசேனா கும்பல் தமிழர்களைக் குறி வைத்துத் தாக்கியதுண்டு. இவ்வளவுக்கும் தமிழர்கள் அங்கொன்றும் ஆதிக்கக்காரர்கள் அல்லர். கூலித் தொழிலாளர்கள்தான். ஆசியாவிலேயே மிகப்பெரியதான தாராவி குடிசைப் பகுதிகளிலே முடங்கிக் கிடந்தவர்கள்தான். அந்த நேரத்தில் எல்லாம் தந்தை பெரியார் எதிர்குரல் கொடுத்தார். திராவிடர் கழகம் கொந்தளித்து எழுந்ததுண்டு.

இப்பொழுது ஆட்டைக் கடித்து, மாட்டைக் கடித்து கடைசியில் மனிதர்களைக் கடித்த கதைபோல, மகாராட்டிரத்தைத் தவிர்த்த, உத்தரப்பிரதேசம், பிகார்காரர்களையும் மும்பையிலிருந்து தூக்கி வீசி எறியுங்கள் என்று கூறும் அளவுக்கு சிவசேனாவின் குரல் வெப்பமாகி விட்டது.
தொடர்ந்து அரசியல் களத்தில், தேர்தல் களத்தில் தோல்வியின் தாக்குதலைத் தாங்கிக் கொள்ள முடியாத விரக்தியின் விளிம்பில் நிற்கும் நிலையில், இதுபோன்ற வெறியூட்டும் நடவடிக்கைகளில் ஈடுபடுவதைப் புரிந்துகொள்ள முடிகிறது.


தமிழ்நாட்டைப் பொறுத்தவரை வடநாட்டார் ஆதிக்கம் கொடிகட்டிப் பறக்கிறது. தலைநகரில் முக்கிய பகுதிகள் எல்லாம் அவர்களின் கோட்டைகளாகத் திகழ்கின்றன. மொத்த வியாபாரம் எல்லாம் மார்வாடிகளின் கைகளில்தான்! அவர்களின் அடுக்கு மாடி குடியிருப்பு வீடுகளில் தமிழ்நாட்டவர் எவருக்கும் கண்டிப்பாகவே இடம் கொடுப்பதில்லை.


இதையெல்லாம் தெரிந்துகொள்ளாமல், வாலாட்டினால், அதன் எதிர்விளைவு எத்தகையதாக இருக்கும் என்பதை சம்பந்தப்பட்டவர்கள் புரிந்துகொள்ளவேண்டும்.


கண்ணாடியில் முகம் பார்த்துக்கொள்ள வேண்டுமே தவிர, கண்ணாடி வீட்டிலிருந்து கல்லெறிய ஆசைப்படக் கூடாது!


----------------------- “விடுதலை” தலையங்கம் 5-2-2010


1 comments:

vignaani said...

ஒரு சிறு தகவல் :
மார்வாரிகள் என்பவர் ராஜஸ்தானைச் சேர்ந்த வணிக குல (பனியா ) நபர்கள் ஆவார்கள் ; அவர்கள் மராட்டி மாநிலத்தைச் சேர்ந்தவர் என்னும் பொருளில் எடுத்துக்கொண்டு எழுதி இருப்பது போல் இருக்கிறது . அந்த அளவு மட்டும் தெளிவாக்க இந்த பின்னூட்டம்